COFFEE TABLE



ஸ்மார்ட் டிவி

மொபைல் நிறுவனங்கள் எல்லாம் ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் இறங்கி அடிக்கும் காலம் இது. தன் பங்குக்கு ‘மைக்ரோமேக்ஸ்’ நிறுவனமும் 40 இன்ச் ஸ்மார்ட் டிவியை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபுல் ஹெச்டி டிஸ்பிளே, 2 யூஎஸ்பி போர்ட்ஸ், வைஃபை வசதி என கம்ப்யூட்டரைப் போல இந்த டிவியை நாம் பயன்படுத்த முடியும். ஸ்மார்ட் போனை டிவியில் கனெக்ட் செய்துகொண்டு ஃபேஸ்புக்கில் பிடித்தமான தோழிக்கு ஹார்ட்டின்களை வீசியடிக்கலாம். யூடியூப்பில் வீடியோக்களைப் பார்க்கலாம். விலை ரூ.18,499.

பூரிக்கும் பூஜா

மிஷ்கினின் ‘முகமூடி’ ஹீரோயின் பூஜா ஹெக்டேவை ஞாபகமிருக்கிறதா? இப்போது இந்தி, தெலுங்கில் அவர் செம பிசி. சமீபத்தில் தன் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தவருக்கு இன்னொரு ஹேப்பி நியூஸ் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்திருக்கிறது. டோலிவுட்டில் ஜூனியர் என்.டி.ஆருடன் அவர் நடித்த ‘அரவிந்த சமேத வீர ராகவா’ நூறு கோடி கலெக்‌ஷனைத் தாண்டியதுதான் அந்த நியூஸ்! ஆனந்தத்தில் பூரித்த பூஜா, பிறந்தநாள் கொண்டாட்ட க்ளிக்கை இன்ஸ்டா பக்கத்தில் தட்டிவிட, ஒரே நாளில் மூன்று லட்சம் ஹார்ட்டின்கள் குவிந்து விட்டன.

ஐஸ் நைஸ்

முகமெல்லாம் பற்கள் தெரிய சிரிக்கிறார் அமலாபால். அவரது சந்தோஷத்திற்குக் காரணம், ஐஸ்வர்யா ராய்! சமீபத்தில் சென்னையில் நடந்த கபடிப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தார் அமலாபால். அங்கே பாலிவுட் கெஸ்ட் ஐஸ்வர்யா ராயையும் அவரது மகளையும் பார்த்து குஷியாகிவிட்டார். அந்த சந்தோஷ தருணத்தை சோஷியல் மீடியாவில் தட்டிவிட, வைரலாகிவிட்டது அந்தப் புகைப்படம்.

கோபம்

நம்மைக் கவனிக்காமல் ஸ்மார்ட்போனில் மூழ்கிக் கிடப்பவர்களைப் பார்க்கும்போது, போனைப் பிடுங்கி குப்பையில் வீசிவிடலாம் என்று மனதுக்குள் தோன்று மல்லவா... அந்த மாதிரியான ஒரு சம்பவம் இது. ஹோட்டல் அறையில் இளைஞர் ஒருவர் தன் செல்ல நாயைக் கவனிக்காமல் ஸ்மார்ட்போனில் மூழ்கியிருக்கிறார். கோபம் தலைக்கேறிய நாய் அந்த போனைத் தட்டிவிட்டிருக்கிறது. இந்தக் காட்சியை ஹோட்டல் ஊழியர் ஒருவர் படமாக்கி இணையத்தில் தட்டிவிட லைக்குகள் குவிகின்றன.

#Metoo


‘‘இந்தியாவில் வேலை செய்யும் இடங்களில் பெண்களின் மீதான பாலியல் துன்புறுத்தல் 54% அதிகரித்திருக்கிறது...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது மத்திய அரசின் புள்ளிவிவரம். இந்தியா முழுவதும் பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமாக 2014ல் 371 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017ல் 570 வழக்குகள். ஆனால், 2018ன் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 2535 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தில்லியில் மட்டுமே 369 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘Metoo’ இயக்கம் சூடுபிடித்திருப்பதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். பாலியல் துன்புறுத்தல் புகார்களைத் தெரிவிக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அமைச்சகஅமைப்பு ‘Shebox’ எனும் ஆன்லைன் வசதியையும் செய்திருக்கிறது.                                                                           


- குங்குமம் டீம்