ரத்த மகுடம்



பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 24

வடநாட்டு சக்கரவர்த்தியான ஹர்ஷவர்த்தனை தென்னாட்டில் அடியெடுத்து வைக்க முடியாமல் போரில் முறியடித்த மேலை சாளுக்கிய மாமன்னன் இரண்டாம் புலிகேசியின் மகனும், பல்லவர்களின் பரம வைரியும், பரம ரசிகன் என்று வடமொழிப் பாவலரால் பெரிதும் போற்றப் பெற்றவரும், இரண்டு வாட்களைக் கரங்களில் ஏந்தி போர் புரியும் வல்லமை படைத்தவரும், முதலாம் விக்கிரமாதித்தனாக சாளுக்கியர்களுடைய மணிமுடியைத் தரித்தவரும், பல்லவ காஞ்சியைக் கைப்பற்றியிருப்பவருமான விக்கிரமாதித்த சத்யாச்சரயனைக் கண் கொட்டாமல் சில தருணங்கள் பார்த்துக் கொண்டே நின்றான் கரிகாலன்.

அவரை வணங்கிவிட்டு அரண்மனை ஸ்தானிகர் வெளியேறியதைக் கூட அவன் கவனிக்கவில்லை. ஆறடிக்கும் மேலாக நல்ல உயரத்துடன் இருந்த விக்கிரமாதித்தன், அப்புறமோ இப்புறமோ சாயாமல் சிம்மாசனத்தின் நடுவே அமர்ந்திருந்தார். நீண்ட அவர் கால்கள் கூட அசதி காட்டி வளைந்து கிடக்காமல் உறுதியுடன் அடியில் கிடந்த பட்டுத் தலையணையின் மேல் பதிந்து கிடந்தன. எந்த இடத்திலும் அதிகப் பருமனோ இளைப்போ இல்லாமல் ஒரே சீராக இருந்த அவருடைய தங்கநிற மேனியில், சதை அழுத்தமாகப் பிடித்து திடகாத்திரமான உருவத் தோற்றத்தை அவருக்கு அளித்திருந்தது.

திண்மையான அவர் கைகள் முழுவதும் அங்கியால் மூடப்படாததால் முழங்கைக்குக் கீழேயிருந்த பகுதியில், வெட்டுக் காயங்கள் பல தெரிந்து, அவர் பல போர்களைக் கண்ட மாபெரும் வீரர் என்பதைப் பறைசாற்றின. சற்று நீளமான முகம்தான். இருந்தாலும் பரம்பரையாக வந்த ராஜ களை அதில் ஜொலித்துக் கொண்டிருந்தது. நடுத்தர வயதை அவர் லேசாகத் தாண்டிவிட்டதையும், ராஜரீகத்தில் அவருக்கிருந்த தொல்லைகளால் ஏற்பட்ட கவலையையும் அறிவுறுத்த அவர் தலையில் ஓடியிருந்த ஓரிரு நரைமுடிகளும் மற்ற கேசங்களின் கருமையில் கலந்து நின்றமையால் அவரது முகம் உள்ள வயதை விட ஒன்றிரண்டு ஆண்டுகளைக் குறைத்தே காட்டியது.

கம்பீரமான அந்த முகத்தில் காணப்பட்ட பெரும் மீசை கூட அவர் அழகைக் குறைக்க சக்தியற்றிருந்தது. அவருடைய விசாலமான நெற்றியும், கூர்மையான நீண்ட நாசியும் சாளுக்கியர்களை ஆளப் பிறந்தவர் அவரே என்பதை நிரூபித்தன. பருந்தின் கண்களைவிடக் கூர்மையாகப் பார்க்கும் சக்தி வாய்ந்த அவர் கண்களில் ஏதோ ஒரு புதிய ஒளி இருந்து கொண்டே இருந்தது. அவரிடம் பேசும்போது எச்சரிக்கையுடனேயே பேசவேண்டுமென்பதைக் கரிகாலன் தீர்மானித்துக் கொண்டான். தன்னைக் கண்டு கரிகாலன் அதிர்ச்சியடையவில்லை என்பதை சாளுக்கிய மன்னர் மனதுக்குள் குறித்துக் கொண்டார்.

போலவே இயல்பாக தன்னை அவன் ஆராய முற்பட்டதைக் கண்டு அவர் இதழ்களில் புன்னகை பூத்தது. அதை வெளிக்காட்டாமல் மீண்டுமொரு முறை தன் கேள்வியை வீசினார். ‘‘கரிகாலா! சிவகாமியின் இடுப்பில் இருந்த சின்ன மச்சத்தை அந்த வனத்தில் கண்டாயா..?’’சாளுக்கிய மன்னரை ஏறெடுத்துப் பார்த்து அவரை ஓரளவு எடை போட்டுக் கொண்டதால் அதிகப் பொய் அவரிடம் பலிக்காது என்பதைக் கவனித்த கரிகாலன், பொய்யையும் உண்மையையும் கலந்து பேச முற்பட்டான். அதன் ஆரம்பமாக அதிர்ச்சியடைவது போல் பாவித்து,

‘‘கரிகாலனா..? யாரைச் சொல்கிறீர்கள் மன்னா... பல்லவ இளவரசர் ராஜசிம்மரின் சிநேகிதரையா..?’’ என்று கேட்டான்.‘‘ஆம்!’’ ஒரே வார்த்தையில் வந்தது விக்கிரமாதித்தரின் பதில்.‘‘அந்த கரிகாலன், பல்லவ இளவலுடன்தானே இருப்பான்..? எனக்கென்ன தெரியும் மன்னா... நானோ பெரு வணிகன்...’’‘‘அது சாளுக்கிய வீரர்களை ஏமாற்றி காஞ்சி மாநகரத்துக்குள் நீ நுழைய புனைந்த வேடமல்லவா..?’’‘‘இல்லை மன்னா! உண்மையிலேயே நான் பெரு வணிகன்!’’‘‘அப்படியா..? பெயர் என்ன..?’’‘‘மாசாத்துவான்!’’

இதைக் கேட்டு கண்களால் நகைத்தார் சாளுக்கிய மன்னர். ‘‘அப்படியானால் சிவகாமி யார்..? மாதவியா... கண்ணகியா..?’’‘‘சிவகாமியார் மன்னா..?’’ ‘‘அதைத் தெரிந்துகொள் என்றுதானே சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபரும், கதம்ப இளவரசரும், நாக நாட்டு மன்னரான ஹிரண்ய வல்லபரும் உன்னிடம் கேட்டுக் கொண்டார்கள்! அவர்கள் பேச்சைக் கேட்காமல் நீயோ அவளது அவயவங்களை நோட்டமிடுகிறாய். அப்படியாவது அவளது இடுப்பில் இருந்த சின்ன மச்சத்தைக் கண்டாயா என்று கேட்டால் பேச்சை மாற்றுகிறாய்...’’ என்றபடியே கரிகாலனின் கண்களை ஊடுருவினார்.

இந்த நேரத்தில் அவர் பார்வையை, தான் தவிர்த்தால் அது தவறாகிவிடும் என அவன் உள்ளுணர்வு சொன்னதால் திடத்தை வரவழைத்தபடி அந்தப் பார்வையை கரிகாலன் எதிர்கொண்டான். விக்கிரமாதித்தரின் முகமும் மலர்ச்சியைக் கைவிடவில்லை. புன்னகையுடனேயே தன் உரையாடலைத் தொடர்ந்தார். ‘‘பல்லவ இளவல் இருக்குமிடம் உனக்குத்தான் தெரியும். அவரிடம் செல்ல வேண்டிய நீ எதற்காக காஞ்சி மாநகருக்குள் பெரு வணிகன் வேடமிட்டு நுழைந்திருக்கிறாய்..?’’ சாளுக்கிய மன்னரின் பேச்சில் இருந்த அழுத்தம் கரிகாலனுக்கு பல உண்மைகளை உணர்த்தியது.

அதில் முக்கியமானது, தன்னை இன்னார் என அவர் கண்டுகொண்டார் என்பது. இரண்டாவது, தனது நடமாட்டத்தை எல்லாம் கண்காணித்து அறிந்திருக்கிறார் என்பது. மூன்றாவது, வனத்துக்கு வெளியே தங்களை புலவர் தண்டியின் அந்தரங்க ஒற்றனான காபாலிகன் சந்தித்து ஓலை கொடுத்ததை இன்னமும் அவர் அறியவில்லை என்பது. ஆக, காபாலிகன் மேல் இப்போதைக்கு சாளுக்கியர்கள் கண் வைக்க மாட்டார்கள்... தேவைப்பட்டால் அவனை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், சத்திரத்தில் இருக்கும் சிவகாமியின் நிலை..? சாளுக்கிய மன்னரிடம் பேச்சுக் கொடுத்துதான் அறியவேண்டும்.

அதற்கு அவர் போக்கிலேயே உரையாடலைத் தொடரவேண்டும். முடிவுக்கு வந்த கரிகாலன், அவருக்குத் தெரிந்த உண்மையை வெளிப்படுத்தினான். ‘‘இன்னார் என்று என்னை இனம் கண்ட பிறகும் எதற்காக மன்னா சிறையில் அடைக்காமல் விருந்தோம்பல் செய்தீர்கள்..?’’‘‘இப்போது தமிழகத்தின் பகுதியை நான் ஆள்கிறேன் அல்லவா..? அதனால் தமிழர்களின் வழக்கத்தைப் பின்பற்றுகிறேன்... குறிப்பாக உங்கள் பழமொழியை...’’‘‘எது மன்னா..?’’‘‘பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே!’’‘‘அப்படியானால் என்னைத் தாக்க வீரர்களை எதற்காக அனுப்ப வேண்டும்..?’’

‘‘மாளிகைக்கு வெளியில் நடந்ததைக் குறிப்பிடுகிறாயா..? அது சாளுக்கியர்களுக்கு விசுவாசமான போர் அமைச்சரின் ஏற்பாடு...’’‘‘அமைச்சரின் ஏற்பாட்டுக்கு மாறான ஒன்றை மன்னர் செய்யலாமா..?’’‘‘அவசியப்பட்டால் செய்யலாம்! அதனால்தான் அவர்கள் கையில் உன்னை சிக்கவிடாமல் என் மெய்க்காவலர்களைக் கொண்டு உன்னை மயக்கமடைய வைத்து இங்கு அழைத்து வந்தேன்!’’ சொன்ன விக்கிரமாதித்தர் இறங்கி வந்து கரிகாலனின் செவியில் கிசுகிசுத்தார். ‘‘கவலைப்படாதே! ஸ்ரீராமபுண்ய வல்லபரிடம் சத்திரத்தில் இருக்கும் சிவகாமி சிக்கவில்லை. அவளையும் காப்பாற்றிவிட்டேன்!

இப்போது என் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறாள்!’’ முதல் முறையாக கரிகாலனின் மனோதிடம் ஆட்டம் கண்டது. எப்பேர்ப்பட்ட ராஜதந்திரியின் முன், தான் நின்றுகொண்டிருக்கிறோம் என்பதும், இப்பேர்ப்பட்ட மனிதரிடம் இருந்து எப்படி பல்லவ நாட்டை மீட்கப் போகிறோம் என்ற வினாவும் ஒருசேர எழுந்தது. பெருமூச்சாகவும் அது வெளிப்பட்டது.‘‘சொல் கரிகாலா... பல்லவ இளவலைச் சந்திக்கச் சென்ற நீ, எதற்காக காஞ்சிக்கு வந்திருக்கிறாய்..?’’ கேட்ட சாளுக்கிய மன்னரின் பார்வை கணத்துக்கும் குறைவான நேரத்தில் கரிகாலனின் கச்சைக்குச் சென்று திரும்பியது.

கரிகாலனின் உள்ளம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. தன் கச்சைக்குள் ஓலை இருப்பதை அவர் அறிந்திருக்கிறார்... ஆனாலும் அதைப் பிரித்துப் படிக்காமல் விட்டிருக்கிறார்... அதாவது, தானே அதை எடுத்து அவரிடம் தரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்... மறுக்க முடியாது. ஆனால், சமயோசிதமாக ஓலையை அவரிடம் கொடுப்பதன் வழியாக மீள முடியும். மெல்ல தன் கரங்களை கச்சைக்குக் கொண்டு சென்ற கரிகாலன், அதிலிருந்த ஓலையை எடுத்து அவரிடம் கொடுத்தான். இமைகளைச் சிமிட்டியபடி விக்கிரமாதித்தர் அதை வாங்கிப் படித்துவிட்டு அவனிடம் திருப்பிக் கொடுத்தார்.

‘‘கடிகைக்கு வரும்படி உனக்கு உத்தரவு... இட்டது யார்..?’’கரிகாலன் அமைதியாக நின்றான்.‘‘பாதகமில்லை... சொல்ல வேண்டுமென்று அவசியமும் இல்லை... ஆனால், சாளுக்கிய வீரர்களின் அரணையும் மீறி வனத்துக்குள் புகுந்து பல்லவ ஒற்றன் ஒருவன் இந்த ஓலையை உன்னிடம் கொடுத்திருக்கிறான் என்றால் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்பது பொருள். அந்த பலவீனத்தை நான் சரி செய்கிறேன்...’’ சொன்ன சாளுக்கிய மன்னர், கரிகாலனின் தோளைத் தட்டினார். ‘‘கட்டளைக்கு அடிபணிந்து இந்தப் பெரு வணிகன் வேடத்துடனேயே கடிகைக்குச் செல்.

 உன்னை யாரும் தடுத்து நிறுத்த மாட்டார்கள்...’’‘‘மன்னா...’’‘‘கவலைப்படாதே. கடிகை என்பது நம் பாரதத்தின் சொத்து. பல்லவ மன்னர் பின்பற்றிய அதே முறையை இம்மி பிசகாமல் நானும் கடைப்பிடிக்கிறேன். கடிகைக்குள் எந்த கண்காணிப்பும் இல்லை! அங்கு யாரைச் சந்திக்க வேண்டுமோ அவரைச் சந்தித்துவிட்டு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக காஞ்சியை விட்டு வெளியேறு...’’‘‘மன்னா...’’‘‘செல்வதற்கு முன் இந்த அரண்மனைக்கு வா! சிவகாமி உனக்காகக் காத்திருப்பாள்... அழைத்துச் செல். பல்லவ இளவலிடம் சொல்ல அவளிடமும் செய்தி இருக்கிறதே!’’

‘‘மன்னா...’’‘‘ஸ்ரீராமபுண்ய வல்லபரோ அல்லது வேறு சாளுக்கிய வீரர்களோ வீரனோ இனி உன்னைப் பின்தொடர மாட்டார்கள்! ஒருவேளை யாராவது அப்படி வழிமறித்தால் இந்தா இதைக் காட்டு!’’ என்றபடி தன் முத்திரை மோதிரத்தை கரிகாலனிடம் கொடுத்தார் சாளுக்கிய மன்னர். அப்படியே திக்பிரமை பிடித்து நின்றான் கரிகாலன். ‘‘மன்னா...’’ அழைக்கும்போதே அவன் நா தழுதழுத்தது. ‘‘எனக்குள் பழி உணர்ச்சி பொங்கி வழிகிறது கரிகாலா... வாதாபியை நீங்கள் எரித்தது போல் காஞ்சியை எரிக்க கை துடிக்கிறது.

ஆனால், பல்லவ மன்னன் பரமேஸ்வரன் போலவே நானும் கலா ரசிகன்தான். கலைச்செல்வங்களை அழிப்பதில் எனக்கும் உடன்பாடில்லை. அதனால்தான் காஞ்சிக்குள் போர் புரிய வேண்டாமென்று நினைத்து ராஜ்ஜியத்தையே எனக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டுச் சென்ற பல்லவனை மதிக்கிறேன். ஆனால், மன்னிக்கத் தயாராக இல்லை! படைகளைத் திரட்டிக் கொண்டு பல்லவ மன்னன் தன் மகனுடன் வரவேண்டும்!

அப்படைகளை சாளுக்கியர்களான நாங்கள் நிர்மூலமாக்க வேண்டும்! அதுதான் எங்களுக்குப் பெருமை. போர்க்களத்தில் சந்திப்போம்! சென்றுவா. பரமேஸ்வரனையும் ராஜசிம்மனையும் சந்திக்கும்போது சிவகாமியை நம்பவேண்டாமென்று சொல்...’’சொல்லிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் நிதானமாக அரண்மனைக்குள் சென்றார் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர். அவரையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கரிகாலன்! சாளுக்கியர்களின் முத்திரை மோதிரம் அவனைப் பார்த்துச் சிரித்தது!

(தொடரும்)  

- கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்