சர்கார் தீபாவளி



இந்த தீபாவளி, ‘சர்கார்’ தீபாவளி! தரமான படங்களை பிரமாண்டமாக தயாரிக்கும் சன் பிக்சர்ஸ், மோஸ்ட் வான்டட் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், திரையுலக தளபதி விஜய், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என அசத்தல் காம்போ இணைந்திருப்பதால், ‘சர்கார்’ எதிர்பார்ப்பு உலமெங்கும் டாப் கியரில் எகிறியிருக்கிறது. சரவெடி பொறி பறக்கவிருக்கும் ‘சர்காரி’ன் அதிரடி வெடி சிதறல்கள் இங்கே...

* ‘துப்பாக்கி’, ‘கத்தி’க்குப் பிறகு மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணைந்திருப்பதால் நான் ஸ்டாப் சரவெடி நிச்சயம்.
* ‘மெர்சல்’ படத்தில் ஒருசில இடங்களில்தான் அனல் தெறிக்கும் அரசியல் பன்ச்சுகள் இடம்பெற்றன. ஆனால், ‘சர்கார்’ இன்னும் டாப். ‘மெர்சல்’ வெடியையும் தாண்டும் தவுசண்ட் வாலா! ‘சர்காரி’ன் கதைக்களமே அரசியல் பின்னணியில் இருப்பதால் விஜய் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆட்டம்பாம்ரகம்.
* அமெரிக்க நிறுவனம் ஒன்றில் சி.இ.ஓ.வாக இருக்கும் விஜய், தன் சொந்த மண்ணுக்கு வருகிறார். இங்கிருக்கும் அரசியல்வாதிகளால் அவர் பாதிக்கப்பட, சீறியெழும் விஜய்யின் சிக்ஸர் அட்டாக்குகள்தான் படம் என்கிறார்கள்.
* இயக்குநர் முருகதாஸ், எழுத்தாளர் ஜெயமோகனின் தீவிர வாசகர். எனவே ‘சர்கார்’ வசனங்களை ஜெயமோகனையே எழுத வைத்திருக்கிறார்.
* விஜய்யின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அரசியல்வாதியாக ராதாரவி, பழ.கருப்பையா, விஜய்யின் அம்மாவாக ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் நடித்த துளசி, காமெடிக்கு யோகிபாபு, திருப்புமுனை கேரக்டரில் வரலட்சுமி... என ‘சர்காரை’ அமைக்கத் தேவையான நட்சத்திரங்கள் உள்ளனர். டெக்னிக்
கலாகவும் முருகதாஸிற்கு பலமான டீம் அமைந்திருக்கிறது. மலையாளப் படங்களான ‘அங்கமாலி டைரீஸ்’, ‘ஹே ஜூட்’ படங்களின் ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரன், முதன்முறையாக கோலிவுட்டுக்கு அடியெடுத்து வைக்கிறார்.

* ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு கறி விருந்து காத்திருக்கிறது. ‘துப்பாக்கி’யை விட இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அசத்த வேண்டும் என்பதால் டோலிவுட்டில் இருந்து இரட்டையர் ஸ்டண்ட் மாஸ்டர்களான ராம் - லக்‌ஷ்மணை அழைத்து வந்திருக்கிறார் முருகதாஸ்.
* ஆக்‌ஷன், பாலிடிக்ஸ் வெடிகள் ஒரு பக்கம் என்றால் விஜய் - யோகிபாபு வரும் சீன்களில் சிரிப்புகள் வெடித்து திரையரங்கை அதிர வைக்கும்.   
* பாடல்களில் எல்லா ரசிகர்களும் எழுந்து ஆட வேண்டும் என்று நினைத்த ஏ.ஆர்.முருகதாஸ், இசைப்புயலிடம் நேரடியாகவே டான்ஸ் மாஸ்டர் தரையும் அழைத்துச் சென்று கம்போஸிங்கில் அமர வைத்திருக்கிறார். பாடலில் தெறிக்கும் ஆட்டத்துக்குத் தேவையான பிஜிஎம்களை ரகுமானும் அள்ளி வீசியிருக்கிறார்.
* அமெரிக்கா, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அமெரிக்கா, கொல்கத்தாவில் தலா ஒரு டூயட்டும், கொல்கத்தாவில் ஆக்‌ஷன் போர்ஷன்களும் படமாக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதியாக நடிக்கும் ராதாரவியும், பழ.கருப்பையாவும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்துள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் நிகழ்கால போலி அரசியல்வாதிகளின் முகங்களை தோலுரித்துக் காட்டும் என்கிறார்கள்.
* ‘‘விஜய் சார் படங்கள்ல நடிக்கறதே, பெரிய வரம். ஒவ்வொருநாளும் அவரை பார்க்கிறப்ப மரியாதை கூடுது. சக நடிகர்களுக்கும், ஹீரோயினுக்கும் ஈகோ இல்லாம ஸ்க்ரீன்ல ஸ்பேஸ் தர்றார்...’’ என நெகிழ்கிறார் கீர்த்தி சுரேஷ்.
* ‘‘நான் விஜய் சாரோட ஃபேன். அவரோட ஒரு படத்திலாவது நடிச்சிடணும்னு நினைச்சேன். அந்த கனவு ‘சர்கார்‘ல நனவாகியிருக்கு. முதல் நாள் ஷூட் அப்ப கொஞ்சம் நெர்வஸா இருந்தேன். ஆனா, அவரோட சிம்பிள் அண்ட் ஹம்பிள்னஸைப் பார்த்து அடுத்த நிமிஷமே இயல்பாகிட்டேன். முருகதாஸ் சார், விஜய் சார் சேர்ந்து இருந்தாலே ஸ்பாட் கலகலனு இருக்கும்...’’ என சந்தோஷ சிறகு விரிக்கிறார் வரலட்சுமி.
* விஜய்யின் அம்மாவாக நடித்திருக்கும் துளசி, ‘‘ஆஃப் ஸ்கிரீனில் கூட விஜய் சார் என்னை அம்மான்னு தான் கூப்பிடுவார். சந்தோஷமா இருந்தது..’’ என நெகிழ்கிறார்.

- மை.பாரதிராஜா