திருமண வயது ஆண்களுக்கு அநியாயம் நடக்கிறதா?



பெண்ணுக்கு திருமண வயது 18 என்றால், ஆணுக்கு மட்டும் ஏன் 21? ஆண் - பெண் சமத்துவத்துக்கு இது எதிரானது இல்லையா? இந்தக் கேள்வி தர்க்கரீதியாக சரியானது போலத்தான் தோன்றும். எனவேதான் இக்கேள்வியோடு உச்சநீதிமன்றத்தை அசோக் பாண்டே என்கிற வழக்கறிஞர் அணுகினார். ஆண்களின் திருமண வயதை 21லிருந்து 18 ஆக குறைக்கக் கோரி பொதுநல மனுவையும் தாக்கல் செய்தார். 18 வயதில் ஆண் வாக்களிக்கலாம். ராணுவத்தில் பணிக்கு சேரலாம். கல்யாணம் மட்டும் செய்துகொள்ளக் கூடாதா என்று அந்த மனுவில் உரிமைக்குரலும் எழுப்பியிருந்தார்.

இந்தியாவின் ஒட்டுமொத்த இளைஞர்களும் ஆவலாக எதிர்பார்த்த இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மனுதாரருக்கு 25,000 ரூபாய் அபராதமும் உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருக்கிறது. இதென்ன ஆணினத்துக்கு வந்த சோதனை? கல்யாண வயதில் ஆண்களுக்கு மட்டும் ஓரவஞ்சனை, அநியாயம் என்றெல்லாம் ஓர் ஆணாக நிறைய பேர் புலம்பித் தீர்க்கிறார்கள். வரலாற்றைப் புரட்டுவோம். உச்ச நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, ஏன் அபராதமும் விதித்தது என்பதின் நியாயம் புரியும்.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை ‘திருமணம்’ என்கிற ஒப்பந்தமே சமூகத்தில் இல்லாத நிலையும் இருந்தது. எந்தவொரு ஆணும், எந்தவொரு பெண்ணிடமும் மனமொத்து (கிட்டத்தட்ட லிவிங் டுகெதர் மாதிரி) வாழ்ந்து கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் பிரிந்துகொள்ளலாம். இதையெல்லாம் கட்டுப்படுத்துவதற்கோ, முறைப்படுத்துவதற்கோ உரிய ஏற்பாடுகள் அப்போது சமூகத்தில் இல்லை. நாகரிகம் வளரத் தொடங்கிய பிறகுதான் ‘திருமணம்’ என்கிற ஒப்பந்தத்தை உருவாக்கி, அதை ஆணுக்கும் பெண்ணுக்குமான பந்தமாக மாற்றினார்கள். ஒரு திருமண ஒப்பந்தத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டன.

இந்த வரையறைகளைச் செய்தவர்கள் ஆண்கள் என்பதால், பெண்களுக்குரிய உரிமைகள் பெரும்பாலும் பறிக்கப்பட்டன. ஒரு குடும்பத்தின் கவுரவம் என்பது பெண்களின் ஒழுக்கம் சார்ந்த (அதாவது ஆண்களால் வரையறுக்கப்பட்ட ஒழுக்கம்) செயல்பாடுகளைப் பொருத்ததாக உருவானது. காதல், கத்தரிக்காய், காந்தர்வ விவாகம் போன்ற ‘அடாத’ செயல்பாடுகளில் தங்கள் பெண் குழந்தைகள் ஈடுபட்டு விடுவார்களோ என்கிற அச்சத்தில் பெற்றோர், சம்பந்தப்பட்ட குழந்தை வயதுக்கு வருவதற்கு முன்பாகவே யாரோ ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கும் கலாசாரம் உருவானது. அந்த யாரோ ஒருவருக்கு வயது பதினெட்டோ, முப்பதோ, நாற்பதோ, ஐம்பதோ என்றெல்லாம் கவலைப்படவில்லை.

கிட்டத்தட்ட தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிடும் மனப்போக்கிலே அந்தக்காலத்து பெண் குழந்தைகளிடம் பெற்றவர்கள் நடந்துகொண்டார்கள். இப்படித்தான் பால்ய விவாகம் என்கிற குழந்தைத் திருமண முறை இந்தியாவில் பரவலாகியது. பால்மணம் மாறாத பருவத்தில் ஐந்து, ஆறு வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடக்கும் கொடுமை, கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சடங்காக தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தக் குழந்தை வயதுக்கு வந்த உடனேயே மிகவும் வயது மூத்த ஓர் ஆணோடு பாலுறவு கொள்ள வேண்டிய கட்டாயம்.

குழந்தையே ஒரு குழந்தையை வயிற்றில் சுமக்க வேண்டிய அவலம் போன்றவையெல்லாம் மிகவும் சகஜமான சமூகநிகழ்வாக இருந்தது. திருமணம் என்பது இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான கொடுக்கல், வாங்கலாகத்தான் இருந்தது. ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்குமான வாழ்க்கை ஒப்பந்தம் என்கிற எண்ணமெல்லாம் அப்போது எழவில்லை. இந்திய கலாசாரம் என்பது பழைய மூடநம்பிக்கைகள், காலாவதியாகிப்போன சடங்குகள் மற்றும் ஆண் - பெண் சமத்துவமற்ற கலாசார சமூக மதிப்பீடுகளோடுதான் இயங்கி வந்தது. திருமணம் என்பது முறைப்படுத்தப்பட்ட நிகழ்வாகவும், அறிவியல் பூர்வமானதாகவும்,

சமூகத்தை சிறந்த நிலைக்குக் கொண்டு செல்வதாகவும் அமையவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குரல் கொடுத்து வந்தனர். இதன் விளைவாக பிரிட்டிஷ் இந்திய சட்டமன்றங்களில் திருமணத்துக்கான ஆண் - பெண் வரையறையை வலியுறுத்தி நிறைய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டன. அவை பெரும்பாலும் சபை உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டன. இந்தியர்களின் சடங்கு, சம்பிரதாயங்களில் கைவைத்து ஆட்சிக்கு எதிரான மக்கள் கலகத்தை எதிர்கொள்ள பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் தயாராக இல்லை. உங்கள் பிரச்னையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று கையை விரித்துவிட்டனர்.

1927ல் ராய் சாகிப் ஹர்பிலாஸ் சர்தா என்பவர், குழந்தைத் திருமணத் தடுப்பு மசோதாவை மத்திய சட்டமன்றத்தில் (பிரிட்டிஷ் இந்தியாவில் அதுதான் மக்களவை மாதிரி) முன்வைத்தார். இந்த மசோதாவின் அடிப்படையில்தான் முதன்முதலாக திருமணத்துக்குரிய வயது வரையறை செய்யப்பட்டது. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று பல்வேறு ஆய்வுகளைச் செய்து பெண்ணுக்கு 14, ஆணுக்கு 18 என்று குறைந்தபட்ச திருமண வயதை நிர்ணயித்தது. இதுவே பிற்பாடு 1954ல் சிறப்பு திருமணச் சட்டம் மூலம் 18 மற்றும் 21 ஆக மாற்றியமைக்கப்பட்டது. சர்தா சட்டம் என்று அழைக்கப்பட்ட இச்சட்டம் 1930ல், ஒட்டுமொத்த
இந்தியாவிலும் அமலானது.

அமலுக்கு வந்த சமயத்தில் மக்களிடையே மிகவும் கடுமையாக எதிர்க்கப்பட்டதும், மீறப்பட்டதும் சர்தா சட்டம்தான். சட்டத்தை மதிக்கவில்லை என்பதை உணர்த்துவதற்காகவே வேண்டுமென்றே முன்பிலும் அதிகமாக குழந்தைத் திருமணங்கள் நடந்தன. காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டு குழந்தைத் திருமணங்கள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டு விட்டன. ஆங்காங்கே நடப்பவையும் கடுமையான சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. இருப்பினும் இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் கூட உரிய வயதுக்கு முன்பாக பெண்ணுக்கு நடக்கும் திருமணங்களில் உலகளவில் 40% திருமணங்கள், இந்தியாவில்தான் நடந்ததாக யூனிசெஃப் அமைப்பின் அறிக்கை ஒன்று எச்சரித்தது.

அதையடுத்து திருமண வயது வரையறையை தீவிரமாகக் கண்காணிக்க, முந்தைய சட்டங்கள் போதாத நிலையில் 2006ம் ஆண்டு குழந்தைத் திருமண ஒழிப்பு மசோதா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஏதேனும் பகுதியில் குழந்தைத் திருமணங்கள் நடந்தால் அப்பகுதியைச் சார்ந்த அதிகாரிகள், காவல்துறையினர், திருமணத்தை நடத்திவைக்கும் மதம் சார்ந்தோர் மீது சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது. எனினும் இன்றும்கூட 65% பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் நடைபெறுவதாக ஓர் அரசுக் கணிப்பு தெரிவிக்கிறது.

நகர்ப்புறங்களில் திருமணச் சட்டங்களைக் கடைப்பிடிக்குமளவுக்கு கிராமப் புறங்களில் போதிய விழிப்புணர்வில்லை. சரி, அதெல்லாம் இருக்கட்டும். டாபிக்குக்கு வருவோம். அதென்ன பெண்ணுக்கு திருமண வயது 18 என்றும், ஆணுக்கு 21 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது? 18 வயதை எட்டினாலே ஆணும், பெண்ணும் மேஜர் ஆகிவிட்டதாகத்தான் சட்டம். சொத்துரிமை உள்ளிட்டவை 18 வயதில் ஆண், பெண் இருபாலருக்கும் உரிமையாகிறது. திருமண வயதுக்கும், சட்டபூர்வமான ‘மேஜர்’ அந்தஸ்துக்கும் சம்பந்தமில்லை. தன்னைவிட வயதில் குறைந்த பெண்ணைத்தான் ஓர் ஆண் மணம் செய்துகொள்வது என்பது இந்தியாவில் காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் மரபு.

ஆணைவிட பெண் இளம் வயதிலேயே மனதளவிலும், உடலளவிலும் முதிர்ச்சி அடைகிறாள் என்பதே இதற்குக் காரணம். அறிவியல்ரீதியாகவே பெண்ணுக்கு 18 வயது வரையிலும், ஆணுக்கு 21 வயது வரையிலும்தான் உடல் வளர்ச்சி இருக்குமென்று சொல்லப்படுகிறது. டீன் ஏஜ் ஆணுக்கு பிரச்னைகளை எதிர்கொள்ளக் கூடிய மனமுதிர்வு அமைவதில்லை. அந்த வயதில் திருமணம் நடக்கும் பட்சத்தில் குழந்தைத்தனமான நடவடிக்கைகளால் திருமண முறிவு ஏற்பட்டுவிடக் கூடிய சாத்தியக்கூறு அதிகம். மேலும், இந்திய சமூக அமைப்பில் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை ஓர் ஆண்தான் பெரும்பாலும் சுமக்கிறான்.

17 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து, மேற்படிப்புக்கு மூன்று ஆண்டுகள் என்று கணக்கு வைத்தாலும், அவன் வேலைக்குச் செல்லக்கூடிய குறைந்தபட்ச வயது 21 என்பதும் முக்கியமான காரணம். அதாவது, சுருக்கமாகச் சொன்னால் ஒரு குழந்தையைப் பெற்று வளர்க்கக்கூடிய வயதாக பெண்ணுக்கு 18ம், குடும்பத்தை நடத்தக்கூடிய தகுதியை ஆண் பெறுவதாக 21 வயதையும் சட்டம் கருதுகிறது. இந்த குறைந்தபட்ச வரையறையை கேள்விக்கு உள்ளாக்க உங்களிடம் காரணங்கள் இருக்கலாம். இது ஒட்டுமொத்த சமூகத்தையும் உத்தேசித்து ‘இப்போதைக்கு’ இந்தியா ஏற்றுக் கொண்டிருக்கும் வயது வரம்பு. சமூக மாற்றங்களின் காரணமாக எதிர்காலத்தில் கூடவோ, குறையவோ செய்யலாம்.                 

- யுவகிருஷ்ணா