ஹோம் அக்ரி-33



பஞ்சாங்கம் பார்த்து செடி வளர்ப்பது நல்லது!

சில விசேஷமான இடுபொருள் தயாரிப்புகள் ‘Bio-dynamic’ முறையில் எந்த அளவுக்கு அவசியமானதாகவும், தவிர்க்கமுடியாததாகவும் உள்ளதோ  அதைவிட முக்கியமானதாக இருப்பது நாள் நட்சத்திரம் பார்த்து விவசாய வேலைகளைச் செய்வது!தோட்டத்தில் நாம் செய்யும் அனைத்து செயல்களும், அதாவது களை எடுப்பது, விதைப்பது, அறுப்பது, உரமிடல், மருந்து தெளித்தல், பால் கரத்தல், சாணி அள்ளுதல், கால்நடைகளுக்கு உணவிடல் போன்ற எந்த வேலையாக இருந்தாலும் அதைச் செய்வதற்கென்று இருக்கும் சரியான வேளையிலேயே அதைச் செய்யவேண்டும்.

‘Bio-dynamic’ முறை நம் செயல்களைவிட நம் மேலிருக்கும் கோள்களும், அவற்றின் கதிர்களும் பெருமளவில் தாவரங்களின் ஆரோக்கியத்தை பாதிப்பதாக  நம்புகிறது. இதற்காக ‘Bio-dynamic Calendar’ ஒன்றை நியூசிலாந்தில் உள்ள ‘Bio-dynamic  Association’ வருடா வருடம் வெளியிடுகிறது. இந்த Calendar நமது  தமிழ்ப் பஞ்சாங்கத்தை பெருமளவு பிரதிபலிக்கிறது.

இந்த முறையின் நம்பிக்கைகளும் ஒருசில அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகளும் நமது பஞ்சாங்கத்தையும், நம்பிக்கைகளையும் போலவே உள்ளன. குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி, கீழ்நோக்கு நாள், மேல் நோக்கு நாள், கிரக நாட்கள், வளர்பிறை, தேய்பிறை, ராசிகள் நிலைகள் இவற்றைப்  பொறுத்து என்ன விவசாய வேலைகளைச் செய்யலாம் என்கிற கோட்பாட்டைப்  பொறுத்தே இந்த பஞ்சாங்கம் அமைக்கப்படுகிறது.
சில முக்கிய கோட்பாடுகள் பின்வருமாறு:

பவுர்ணமி: பவுர்ணமிக்கு 48 மணி நேரத்திற்கு முன்பிருந்து மண்ணின் ஈரப்பதமும், செடிகளின் வளரும் தன்மையும், விதைகள் முளைப்பதற்கான  திறனும் அதிகரிக்கிறது. செடிகளைத் தாக்கும் பூச்சிகளின் வீரியமும், பூஞ்சை வளர்வதற்கான சாதகமான சூழலும் நிலவுகின்றன.
இதனால் பவுர்ணமி மற்றும் அதற்கு முன்னும் பின்னுமான ஐந்து நாட்களில் விதைப்பது, பூச்சி, பூஞ்சாண கொல்லிகள் தெளிப்பது, திரவ உரங்கள்  அளிப்பது போன்ற வேலைகளைச் செய்யலாம்.

அமாவாசை: அமாவாசை நாட்களில் வளர்ச்சிக்கான வேலை குன்றி இருக்கும். இந்த நாட்களில், மரங்களை வெட்டுதல், கவ்வாத்து எடுத்தல்,  தானியங்களை உலர வைத்து சேமித்தல் போன்ற வேலைகளைச் செய்யலாம்.வளர்பிறை மற்றும் மேல்நோக்கு நாட்கள்: விதைத்தல், திரவ பயிர் ஊக்கிகளைத் தெளித்தல் போன்ற செடி வளர்ச்சிக்கான வேலைகளைச் செய்யலாம்.

 இந்த நாட்களில் செடிகள் நன்றாக நீரை மண்ணிலிருந்து உறிஞ்சும் சக்தியைப் பெறுகின்றன.தேய்பிறை மற்றும் கீழ்நோக்கு நாட்கள்: இந்த நாட்களில் மண்ணுக்குள் இருக்கும் பாகங்கள் நல்ல முறையில் வளர்ச்சி அடைகின்றன. வேர்ப்பகுதி பலம் பெறுகிறது. இந்த நாட்களில் அறுவடை செய்தல், நிலத்திற்கு உரங்கள் தருதல், களை எடுத்தல் போன்ற காரியங்களைச் செய்யலாம்.

இதுபோலவே கிரகணத்தன்று செய்யக்கூடாத செயல்கள், நிலவு பூமிக்கு மிக அருகாமையிலும், தூரத்திலும் இருக்கும் நாட்களில் செய்யக்கூடிய,  செய்யக்கூடாத செயல்கள், பூமி பல்வேறு நட்சத்திர கூட்டங்களைக் கடந்து வரும்போது இருக்கும் ராசிகளின்போது செய்யக்கூடிய செயல்கள் என்று  பல்வேறு  விஷயங்களுக்கு இந்த விவசாய முறை முக்கியத்துவம் தருகின்றது.

அத்துடன் கோள்களின் நிலைகள், பஞ்சபூதம் இவற்றை தாவரங்களின் பாகங்கள் மற்றும் செயல்களுக்கும் தொடர்பு படுத்தியிருக்கிறார்கள். இந்த முறை  நமது சித்த வைத்திய கோட்பாடுகளுக்கு சமமாக இருக்கிறது. இந்த இயற்கை உயிராற்றல் முறையின் மேலும் இரண்டு இடுபொருள் தயாரிப்புகளைப்பற்றி இப்போது பார்ப்போம்.

கொம்பு சிலிகா உரம்: கொம்பு சாண உரத்தைப் போன்றே இந்த உரமும் தயாரிக்கப்படுகிறது. சாணத்திற்கு பதில் நல்ல படிக அமைப்புள்ள சிலிக்கா  (கல் தூள்) உபயோகிக்கப்படுகின்றது. முதலில் கல்தூளை நன்றாக தூளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நீரிட்டு தூளை கூழ்மமாக்கி கொம்பினுள் ஊற்ற வேண்டும். கூர்மையான பகுதி கீழ் இருக்கும்படி சிறிது நேரம் வைத்திருந்தால் அதிகப்படியான நீர் வெளியேறி விடும்.

பிறகு கொம்பின் அடிப்பகுதி கீழிருக்கும் படி நிலத்துக்குள் வைத்திருந்து 5 மாதம் கழித்து எடுத்து உபயோகப்படுத்தலாம். இந்த உரம் ஏக்கருக்கு 1 கிராம்  போதுமானது. இந்த உரத்தை ‘Mist Sprayer’ கொண்டு பனிபோல இலைகளில் படும்படி தெளிக்க வேண்டும். ஆனால், குறைந்தது இரண்டு முறை கொம்பு சாண உரம் தெளித்த நிலங்களிலேயே இந்த மருந்தை தெளிக்க வேண்டும்.

செடிகள் திடமாக, நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் வளர இந்த உரம் உதவுகிறது. அபரிமிதமான வளர்ச்சியையும் காணலாம். இந்த மருந்தை  விடியற்காலையிலோ, மாலை நேரங்களிலோ தெளிக்கலாம். வெயில் நேரங்களில் தெளிப்பதால், இலைகள் வாடுவதற்கும், கருகுவதற்கும் வாய்ப்புகள்  உள்ளன.யாரோ உரம்: இந்த உரம் யாரோ (Yarrow) என்ற செடியின் பூக்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஒரு வட அமெரிக்க செடி. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், முசௌரி, உத்தராஞ்சல், இமாச்சல் பகுதிகளில் காணப்படுகிறது.

தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் வளர்க்கலாம். இந்த செடியின் அமைப்பு ஆண் மானின் கொம்பு போல இருக்கும். இதன் முற்றிய பூக்களை நிழலில் உலர்த்தி பின் ஆண் மானின் சிறு நீரகப் பையில் வைத்து தைக்க வேண்டும். பின்னர் வெயில் படுமாறு துளைகளுள்ள மூங்கில் கூடையில் சில மாதங்கள் காற்றோட்டமாக தொங்க விட வேண்டும். பிறகு 3 மாதங்கள் வளமான மண்ணுள்ள தொட்டியிலிட்டு மண்ணில் புதைத்து, நன்றாக மக்கியவுடன் எடுத்து பயன்படுத்தலாம்.

யாரோ செடி சுக்கிரனுடன் தொடர்புடைய செடியாகக் கருதப்படுகிறது. இந்தச் செடியில் செலினியம் அதிக அளவில் உள்ளது. காற்றில் தொங்க
விடும்போது பல கிரகங்களின் சக்தியையும் இது பெறுவதாக கருதப்படுகிறது. இந்த உரத்தை பயன்படுத்தும்போது செடிகள் சாம்பல் மற்றும் கந்தக  சத்தை நன்றாக கிரகித்துக் கொள்ள உதவுகிறது.

(வளரும்)

Q & A

ஒரு தனியார் இடத்தில் வேலை பார்த்துக்கொண்டு 2 ஏக்கர் நிலம் வாங்கி அதில் இயற்கை முறையில் காய்கறி பயிரிடுகிறேன். நிறைய இயற்கை  விவசாயப் பயிற்சிகளில் கலந்துகொண்டு எல்லா இடுபொருள் தயாரிப்பு குறித்தும் கற்றுக்கொண்டதால், அவைகளையும் தவறாமல் பயன்படுத்தி  வருகிறேன்.

மாதச் சம்பளத்திற்கு ஒருத்தரை அமர்த்தியிருக்கிறேன். ஆனாலும் ஒருபோதும் மகசூல் லாபகரமானதாக அமையவில்லை. விவசாயத்தில் நிச்சயம் வெற்றி  பெறுவதற்கான வழிமுறை ஏதும் உள்ளதா?
- முனிரத்தினம், வேலூர்.

உள்ளது. நிலமும், பயிர்களும் உங்களோடு இணக்கமாக இல்லாமல், பிணக்குடன் இருப்பது காரணமாக இருக்கலாம். நிலம், சுற்றுச்சூழல், தட்ப  வெப்பம், நீர் அனைத்தும் சாதகமாக இருந்தாலும் சில சமயங்களில் தாவரங்கள் நல்ல விளைச்சலைத் தருவதில்லை. இதற்குக் காரணம் பெற்றோரால்  தாங்கள் சரியாக கவனிக்கப்படவில்லை என அவை நினைப்பதால் கூட இருக்கலாம்!

விவசாயத்திற்காக வளர்க்கப்படும் பயிர்கள் செல்லப்பிராணிகளையும், சிறு குழந்தைகளையும் போன்றவை. இயற்கையாக வளரும் தாவரங்களும்,  விவசாய நிலங்களில் வளரும் களைகளும் காடுகளில் வளரும் விலங்கினங்களை ஒத்தவை. செல்லப்பிராணிகளும், குழந்தைகளும் வளர்ப்பவர்கள் / பெற்றோர் தங்களை நன்றாக கவனித்துக்கொள்ளவேண்டும் என்றும் எதிர்பார்க்கக்கூடியவை.

வெறுமனே உணவையும் ஊட்டச்சத்துகளையும் கொடுத்துவிட்டு அவை நன்றாக வளரவேண்டும், நம்முடன் பாசமுடன் இருக்கவேண்டும் என்று  எதிர்பார்த்தால் அது நடக்காது. இது மிகவும் இயல்பான நடைமுறை உண்மை. இந்த உண்மை பயிர்களுக்கும் பொருந்தும். ஆக, தேவையானவற்றை மட்டும் கொடுத்துவிட்டு, பயிர் நன்றாக வளர வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது தவறு. பயிர்கள் நாம் அவற்றை பார்க்க வரவேண்டும் என்று ஹாஸ்டலில் வளரும் குழந்தைகளைப் போல எதிர்பார்க்கின்றன. இதை நீங்கள் நம்ப வேண்டும்.

அடிக்கடி அவைகளைப் பார்த்து நலம் விசாரித்து, உரையாடி, உறவாடி, ஊக்கப்படுத்திப் பாருங்கள். நிச்சயமாக பலன் கிடைக்கும்!
மற்ற களைச்செடிகளும், இயற்கையாக வளரும் தாவரங்களும் அப்படி அல்ல. அவை ஏன் நன்றாக, பூச்சிகளை எதிர்த்து வளருகின்றன என்று  கேட்கக்கூடாது. ஏனென்றால் அந்த செடிகள் உங்கள் வருகையை எதிர்பார்க்கவில்லை; நீங்கள் அதை வேண்டி வளர்க்கவில்லை.

சொல்லப்போனால், காட்டு விலங்குகளைப்போல அவை உங்கள் வருகையை வெறுக்கின்றன. அதனால் நாம் கவனிக்காமலே அவை நன்றாக  வளர்கின்றன. விவசாயி தினமும் நிலத்திற்கு செல்லவேண்டும்; ‘தினமும் என்னைக் கவனி’ என்ற பயிர்களின் எதிர்பார்ப்பை பின்வருமாறு திருவள்ளுவர்  மிக அழகாகசெல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்துஇல்லாளின் ஊடி விடும்
- என்று சொல்லியிருக்கிறார். அதாவது தினமும் சென்று நீங்கள் கவனிக்காத பயிரும் நிலமும், அக்கறை இல்லா கணவனிடம் பிணங்கும் மனைவியைப்  போன்றது என்கிறார்.

ஒளிக்கவர்ச்சி

பொறியின் அமைப்பு

Q & A

ஒளிப்பொறியை எப்படிச் செய்வது என்று விளக்கமுடியுமா?
- காவியா, தேரெழுந்தூர்.

ஒரு மஞ்சள் நிற பிளாஸ்டிக் தொட்டியில் நீரை முக்கால் பாகம் நிரப்பிக் கொள்ள வேண்டும். அதில் சில துளி எண்ணெய் இடலாம். பின்னர் அந்த  நீரில் ஒளி படும்படி ஒரு டார்ச் லைட்டையோ, குண்டு பல்பையோ எரிய விட வேண்டும். இதைப் பயிர்கள் உள்ள பகுதியில் அமைக்கவேண்டும். மற்ற விளக்குகள் அருகில் இருந்தால் அணைத்துவிட வேண்டும்.

உயரமான பயிர்கள் இருந்தால், நம் தோளுயரத்தில் அமைக்கலாம். இல்லையென்றால் தரையிலேயே வைக்கலாம். பூச்சிகளுக்கு வெளிச்சம் தெரிவது மாதிரி இருக்கவேண்டும். புரிந்து கொள்ள படத்தைப் பார்க்கவும்.

 மன்னர் மன்னன்