சித்து விளையாட்டு - 5



ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் துறை இது!

இந்த இடத்தில்தான் ஒரு தாடி வைத்த ஐயா கொடுத்த விசிட்டிங் கார்ட் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. அதில் அவர் எம்.டி ஆல்டர்னேட்டிவ் மெடிசின் படித்ததாகப் போட்டிருந்தது. ஒருத்தரை மருந்து கொடுத்து கொன்ற குற்றத்தில் சிக்கி, சித்தா மெடிக்கல் கவுன்சில் வரை போய், ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து தப்பித்து வந்த அவருடன் இணை பிரியாது தோன்றும் பெண்கூட அதைப் படித்திருக்கிறார்.

இந்தப் படிப்புகளின் நதிமூலத்தைத் தேடிப் போனால், அது 33, சௌரங்கி தெரு, கல்கத்தா என்கிற முகவரியில் போய் நிற்கிறது!

யூ.ஜி.சி அமைப்பால் போலியானது என அறிவிக்கப்பட்ட மருத்துவ பல்கலைக் கழகம் அது. அங்கு போகாமலேயே 6000 ரூபாய் கொடுத்தால்  பி.ஏ.எம்.எஸ் பட்டத்தை வாங்கிவிடலாம் என்றார் சந்தித்த ஒருத்தர்.

தமிழகத்தில் முறையாகப் படித்து இந்தப் பட்டத்தை வாங்கிய மருத்துவர் ஒருத்தர் இப்படியெல்லாம் வாங்க முடியாது என்று சொன்னதைச்  சொன்னேன். அதற்கு பதிலாக, “யார் சொன்னது? கல்கத்தா யுனிவர்சிட்டியில் பணம் கட்டியவுடன் ஃபார்ம் ஒன்றை அனுப்புவார்கள்.

சில  புத்தகங்களை அனுப்புவார்கள். ஆறுமாதம் கழித்து நேரில் போகாமலேயே பட்டயத்தை அனுப்பி விடுவார்கள்!” என்றார் வேறு ஒரு மருத்துவர்.
இதில் கொடுமை என்னவென்றால் கஷ்டப்பட்டு அந்தப் படிப்பை படிக்கும் உண்மையான மருத்துவர்களுக்கும் இதனால் பெயர்க்கேடு.

இது ஒன்றும் புதிய விஷயமில்லை. சில வருடங்களுக்கு முன்பு இலங்கையில், சீனாவில் படித்த மாதிரி சர்டிபிகேட் விற்றுக் கொண்டிருந்தார்கள்.  இப்போது நயமான சுத்த இந்திய போலிப் பட்டயங்களுக்குத் தயாராகி விட்டார்கள். காசு கொடுத்து காந்தி பெயரில் அரசாங்க அடையாள அட்டை  ஒன்றை வாங்கி, பத்திரிகையொன்றில் அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த என் நண்பன் ஒருத்தனை இந்த இடத்தில் நினைத்துக் கொள்கிறேன்.

கல்கத்தாவில் எம்.டி பட்டம் என்று ஆரம்பித்தாலே குமட்டில் குத்திவிட வேண்டும் உடனடியாக. 8000 ரூபாய் கொடுத்தால் எம்.டி பட்டத்தையும் 25000  கொடுத்தால் பிஹெச்.டி பட்டத்தையும் அந்தப் பல்கலைக் கழகத்தில் வாங்கிவிடலாம்! சந்தேகமிருந்தால் மேற்படி தொகையோடு சேர்த்து எனக்கான  கமிஷன் தொகையையும் தாருங்கள். எங்கேயும் போகாமல் வீட்டில் காலாட்டிக் கொண்டிருங்கள். சிந்தாமல் சிதறாமல் அந்தப் பட்டத்தை வாங்கிக்  கொடுத்து விடுகிறேன்!

சாம்பாரில் ஒரு கணக்கு வைத்து உப்பை அள்ளிப் போடுகிற மாதிரி காரீயத்தையும் தாமிரத்தையும் பாதரசத்தையும் அள்ளிப் போட்டு மருத்துவராய்ச்  சமாளித்துக் கரை சேர்ந்து விடலாம்.கரையென்ன கரை? படகே வாங்கி விடலாம்! ஏற்கனவே சொன்ன அந்த மருத்துவமனையில் இருந்த ரிசப்ஷனிஸ்ட் இப்போது ஆடி காரில் போய்க்கொண்டிருகிறார் என்று சொன்னால் மிகைப்படுத்துகிறேன் என சிரிப்பு வரலாம். ஆனால், இந்தத் துறையில் அதுதான் உண்மை.

அதிகாரபூர்வ கணக்கீட்டின் படி இல்லாமல், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் இந்தத் துறையில் அசலான, அங்கீகரிக்கப்பட்ட படிப்பு  படித்தவர்களைவிட போலியான இந்த மனிதர்களே அதிகமும் படகு போல வண்டிகளில் பயணிக்கிறார்கள். இந்தத் துறையில் இருக்கும் முதல் ஐந்து கம்பெனிகள் மட்டுமே நூறு கோடி ரூபாய்க்கு வணிகம் செய்கின்றன என்பதை வைத்து இந்தப் புள்ளிவிவரத்திற்கு நியாயம் சேர்த்து விட முடியும்!
ஆயிரம் கோடியில் அதிகமும் அள்ளிப் போவது இந்த வகையான போலி மருத்துவர்களே.

இந்த வகையான போலி மருத்துவர்கள்தான் இந்தத் துறையில் இயங்கும் தரமற்ற மருந்துக் கம்பெனிகளின் குறி. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களிடமும், இப்போது புதிதாகப் படித்து வெளியே வரும் பட்டதாரி மருத்துவர்களிடமும் போனால் இதில் என்னென்ன கலந்திருக்கிறது என ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். இவர்களுடைய சங்காத்தமே வேண்டாமென்று தாங்களாகவே மருந்துகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள் நேர்மையான சித்த மருத்துவர்கள் பலர்.

போலி மருத்துவர்கள் ஒரே வரியில் முடித்து விடுவார்கள். “மாசம் பத்து லட்ச ரூபாய்க்கு வியாபாரம் பண்ணித் தர்றேன். எனக்கு என்ன கமிஷன்  கொடுப்பீங்க?”அப்புறம் தரமற்ற கம்பெனிகள் யாரை மதிப்பார்கள்? என் லேபிளை ஒட்டி எனக்குக் கொடுத்துவிடு என போலி மருத்துவர்கள் இந்த மருந்துக் கம்பெனிகளைப் பணிக்கின்றன. அவர்களும் ஏற்கனவே சொன்ன மாதிரி வகை தொகையில்லாமல் இருபது மில்லி கிராமோ நாற்பது மில்லிகிராமோ போட்டு, போலிகள் கேட்கிற தரத்தில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் மருந்துகளை இறக்கித் தந்துவிடுகிறார்கள்.

பணம் எப்படிக் கொழிக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தைச் சுட்டிக் காட்டுகிறேன். நண்பர் ஒருவர் அவருடைய மகளுக்கு ஆஸ்துமா சிகிச்சை  எடுப்பதற்காக இந்த மாதிரியான போலி மருத்துவரை நாடிப் போனார். ஒரு மாத மருந்துகளுக்கு ஒன்பதாயிரம் ரூபாய் கேட்டிருக்கிறார்கள். ஏடிஎம்மில்  பணம் எடுக்க வந்தவர், தற்செயலாக தெரிந்த சித்த வைத்தியர் ஒருத்தருக்கு தொலைபேசி செய்திருக்கிறார். நியாயமான தயாரிப்பு நிறுவனங்களிடம்  வாங்கினால் அந்த மருந்துகள் அதிகபட்சம் மாதம் அறுநூறு ரூபாய் பெறுமானமுள்ளவை என்று கூறியிருக்கிறார்!

என்ன நடக்கிறதென்றால், பல்வேறு நிறுவன மருந்துகளை வாங்கும் போலிகள் அதிலிருக்கும் லேபிளைக் கிழித்துவிட்டு அதைத் தாங்களே சித்தர்கள்  போல அமர்ந்து உருக்கி உருவாக்கியதைப் போலச் சொல்லி அதிக விலைக்கு விற்கின்றனர். இது மாதிரியான போலி மருத்துவர் ஒருத்தர் பல்வேறு கம்பெனிகளில் இருந்து மாதம் பத்து லட்ச ரூபாய்க்கு மருந்துகள் வாங்கி அதை அறுபது / எழுபது லட்ச ரூபாய்க்கு விற்று விடுகிறார்.

ஐநூறு ரூபாய் பெறுமானமுள்ள மருந்துகளை லாட்ஜ்களில் அமர்ந்து கொண்டு பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய  மருந்து பாட்டில்களில் காலை - மாலை - இரவு என்பதைத் தவிர வேறு எந்தத் தகவல்களும் இருக்காது என்பதை ஒரு எட்டு நடந்து போய்ப்  பார்த்துவிட்டு வந்தாலே அறிந்துகொள்ள முடியும். இதுமாதிரி இவர்கள் காட்டில் மட்டுமல்லாமல், எல்லோரது தட்டிலும் அடை மழை.

இந்தத் துறையில் சுமார் ஆயிரம் கம்பெனிகள் இருக்கின்றன. அவற்றில் 600 கம்பெனிகள் மட்டுமே முறையான லைசென்ஸ் உள்ளவை. தரமான  மருந்துகளை உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப்புகிற நிறுவனங்கள் அவை. அதிலும் சில நிறுவனங்கள், ஐம்பது மருந்துகளுக்கு லைசென்ஸ் வாங்கி விட்டு  நூறு மருந்துகளை உற்பத்தி பண்ணித் தள்ளிக் கொண்டிருக்கின்றன!

மிச்சமிருக்கிற 400 உற்பத்தி நிறுவனங்களிடம் முறையான லைசென்ஸ் இல்லை. அவற்றைகம்பெனி என்றே சொல்ல முடியாது. குறைவான வாடகைக்குக்  கிடைக்கும் குடோன்கள் எனத் துணிந்து சொல்லலாம். சில கம்பெனிகளுக்கு குடோன்கள் கூட இல்லாமல் வெறும் முகவரி மட்டுமே இருக்கும். அந்த முகவரியைத் தேடிப் போனால், வழி தவறி சந்திர மண்டலத்திற்குப் போய்விடலாம்.

இந்த வகையான முறையற்ற கம்பெனிகளுக்கு குவாலிட்டியான லேப்கள் இல்லை. தரக்கட்டுப்பாடு லேப்கள் இல்லாவிட்டால் அனுமதியே கொடுக்க  முடியாது என்கிறது சட்டம். இதில் மிகப் பெரிய நகைச்சுவை ஒன்றிருக்கிறது தெரியுமா?

(போலிகளை துகிலுரிப்போம்)

- சரவணன் சந்திரன்