#metoo முதல் கிறுஸ்துவப் மதப் பாடல்கள் வரை



மனம் திறக்கிறார் நித்யஸ்ரீ மகாதேவன்

அவரது குரல் அனாயாசமாக வானத்தில் பருந்துபோல வட்டமடித்துவிட்டு துளிக்கூட சேதாரமில்லாமல் பூமிக்குத் திரும்பும். அவ்வளவு ஸ்ருதி சுத்தம்!  ஞானம். நித்யஸ்ரீ மகாதேவன் கர்நாடக சங்கீதம், திரை இசை என இரண்டு குதிரைகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்யும் அசாத்திய பாடகி!
சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அவரது ரம்மியமான புதுவீட்டுக்கு ஒரு மாலையில் சென்றிருந்தபோது ஆபேரி ராகத்தை அமர்க்களமாக சாதகம்  செய்து கொண்டிருந்தார். டிசம்பர் சீசன் நெருங்கிவிட்டதே!

முப்பதாண்டு கால சங்கீதப்பயணம்... திரும்பிப் பார்க்கும்போது திருப்தியளிக்கிறதா? வருத்தங்கள் உண்டா?

இதே சென்னையில் மியூஸிக் அகடமி மினிஹாலில் பதினாலு வயதில் மேடை ஏறினேன்! முன் வரிசையில் என் பாட்டி டி.கே.பட்டம்மாள், அவரது  சகோதரர் வித்வான் டி.கே.ஜெயராமன், அன்றைய முன்னணி வித்வான் கே.வி.நாராயணசாமி, என் அம்மா லலிதா சிவகுமார், என் தந்தை மிருதங்க வித்வான் சிவகுமார்… உள்பட பல ஜாம்பவான்கள் அமர்ந்திருந்த காட்சி இப்போதும் மனசில் பசுமையா ஞாபகம் வருகிறது.

முப்பது வருஷம் வேகமா ஓடிப்போச்சு. இடையில் சினிமாவிற்கும் பாடப் போனேன். என்னைப் பொறுத்தவரை சாதிச்சேனா, உயரங்களைத்  தொட்டேனா என்பதைப் பற்றியெல்லாம் என்றுமே நினைச்சதில்லை. நான் இசையில் ஈடுபட்டதே பரமானந்தம். அது பெரிய கொடுப்பினை. என்  அப்பா வழி பாட்டி பட்டம்மாள் என்றால் அம்மா வழி தாத்தா நாடறிந்த மிருதங்க மேதை பாலக்காடு மணி அய்யர்.

இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்ததே எனக்குப் பெரிய ஆசீர்வாதம்! வேறு என்ன வேண்டும்? அந்த ஜீன்தான் என்னைப் பாடகியாக்கி சங்கீத உலகத்தில் நிறுத்தியுள்ளது.சங்கீதத்தில் நாம் நினைச்சு செய்யறது ஒருபுறம்..

அமையறது என்பது வேறு. ‘நான்’ என்று ஒரு ஈகோ வந்துட்டால் போச்சு. அது நம்மை சின்னதாக்கிவிடும். அமையறது என்பது கடவுளின் கருணை. இன்று கச்சேரியில் ஒரு கல்யாணியை பிரமாதமா பாட நினைச்சாலும் அது  அமையணுமே! ஆக, எம்.எஸ். அம்மா பிரபலப்படுத்திய பாட்டு வரியில் என் இசை வாழ்வை சொன்னால், ‘குறையொன்றும் இல்லை... மறை மூர்த்தி  கண்ணா..!’

இன்று கர்நாடக சங்கீத உலகம் கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் உள்ளது. பணம் படைத்த ஸ்பான்ஸர்கள் ஏற்பாடு செய்யும் கச்சேரிகளில் பாட  ஆர்வம் காட்டும் உங்களைப் போன்ற கலைஞர்கள் கலாசார மையங்களிலும் கோயில்களிலும் பாட வருவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

தவறான குற்றச்சாட்டு. சங்கீதத்தை நிஜமாக நேசிப்பவர்கள் பணம் மட்டுமே குறியாக நினைத்து அலைவதில்லை. குறிப்பாக நான் என்றுமே அப்படிச்  செய்வதில்லை. சபாக்களில் அறுபது சதவிகிதம் கச்சேரி என்றால் கோயில்களில் முப்பது சதவிகிதம் பாடுகிறேன். அதெல்லாம் போகத்தான் தனியார்  மற்றும் வெளிநாட்டுக் கச்சேரிகள். தவிர இப்போதெல்லாம் கோயில்களில் கூட ஸ்பான்ஸர் செய்கிறார்களே!

‘மற்ற மதத்தினர் ஏற்பாடு செய்யும் கச்சேரிகளில் இப்போது கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் அதிகம் பாடுவது கூட பெரிய தொகைக்காகத்தான்.  உங்களை வைத்து மக்களை மதமாற்றம் செய்யப் பார்க்கிறார்கள்..’ என்று அண்மையில் இந்து அமைப்புகள் வெகுண்டு எழுந்தனரே?
அபாண்டமான பேச்சு. அப்படி மாறிவிடுவார்களா? நியாயமான நல்ல காரியங்களுக்காகக் கூப்பிட்டால் பாடுகிறோம். அவ்வளவே.

இன்னொரு விஷயம் - சங்கீதம் என்பது எல்லைகளைக் கடந்தது. அவர்களைக் குறுகிய வட்டத்திற்குள் யாரும் கட்டுப்படுத்தக் கூடாது. கிறிஸ்துவப் பாடல்களா, இந்து பக்திப் பாடல்களா என்பதைவிட பாட்டை சரியா, உணர்வுபூர்வமா பாடறோமா எனப் பார்க்கணும்! இசைக்கு ஏது மதம், மொழி, இனம் வேறுபாடெல்லாம்?

அதற்காக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகள் சாயலிலேயே அப்பட்டமாக கிறிஸ்துவ தோத்திரப் பாடல்களை அமைத்துப் பாடலாமா..?

அப்படிப் பாடவில்லை. பாடவும் மாட்டேன். எனக்குத் தெரிந்து அப்படி யாரும் பாடியதாகத் தெரியவில்லை. ஏதாவது ஒரு வார்த்தையை வைத்துக்  கொண்டு வம்புக்கு வருகிறார்கள். தவிர, நமது கரகரப்ரியா, காம்போதி, கமாஸ் போன்ற சாஸ்திரீய சங்கீத ராகங்களை கிறிஸ்துவ மதப் பாடல்களில்  பயன்படுத்தினால்கூட தப்பு என்றால் எப்படி? அவை இந்த மண்ணின் ராகங்கள்! எல்லோருக்கும் சொந்தம்!

‘மீடூ’ இயக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? அண்மையில் குற்றம் சாட்டப்பட்ட கலைஞர்களில் சிலர் அப்பாவிகள்; வேண்டுமென்றே உள்நோக்கத்துடன்  பழிவாங்கப்பட்டுள்ளதாக சங்கீத உலகில் பேசப்படுகிறதே?

ஒரு பெண் இப்படி அநியாயமாக பழி சுமத்த மாட்டாள். காரணம், இதில் அவளது மதிப்பும், மரியாதையும் இருக்கு. ஏதோ ஒரு வற்புறுத்தலில் கூட  அப்படிச் செய்யமாட்டாள்.அடுத்தது, பெண்கள் சந்திக்கும் இந்தப் பாலியல் கொடுமை தலைமுறைகளா இங்கே இருக்கு. சங்கீதம் மட்டுமல்ல... எல்லா துறைகளிலும் இருக்கு.

இன்று பெண்கள் தைரியமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ‘மீடூ' இதற்கு வழிவகை செய்கிறது. இது எங்களுக்கு பெரிய பாதுகாப்புதானே. மோசமான ஆட்கள் இனி எவ்வளவு மிரட்டினாலும் நாம் ‘அனுசரித்து’ப் போகக் கூடாது என்ற உறுதி பெண்களுக்கு வந்துவிட்டது.
 
இது நல்ல விஷயம். அதே சமயம், இதில் ஒரு சதவிகிதம் கூட அப்பாவி ஆண்கள் பாதித்து விடக்கூடாது என்ற கவலையும் என் மனதின் ஓரத்தில்  இருக்கு!‘கர்நாடக சங்கீதம் ஒரு சாராரிடமே சுற்றிக்கொண்டிருக்கிறது. மற்ற சமூக ரசிகனும் அங்கே வரும் சூழ்நிலை இல்லை. மற்ற சமூகக் கலைஞனும்  வாய்ப்புக்குப் போராட வேண்டியுள்ளது...’ என்ற பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணாவின் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்?

முழுவதுமாக மறுக்கிறேன். பல சபாக்காரர்கள் கூட்டமே வரவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். எந்த சபா வாசலிலாவது ‘இந்த சாதிக்கு மட்டும்’ என போர்டு போட்டுள்ளதா? அவர்களுக்கு வேண்டியது டிக்கெட் வாங்கவேண்டும்! தவிர, இலவச கச்சேரிக்கும் கூட்டம் வரவில்லையே!

நாம் முதலில் சங்கீதத்தைக் கொண்டு போகணும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. கூவிக் கூவியா விற்க முடியும்? இசை மேல் உண்மையான  ஈர்ப்பு இருந்தால், சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி ஓடிவந்துவிடுவார்கள். இசையைக் கேட்டுக் கேட்டுப் பழகணும். லயிக்கணும். நிர்ப்பந்தம் பண்ணி கற்றுத் தர முடியுமா?

அப்புறம், எந்த சாதியாக இருந்தாலும், நல்ல கலைஞர்களுக்கு பாடவோ, வாசிக்கவோ என்ன தடை? ரசிகன் விரும்பினால் யார் தடுக்க முடியும்? ஜான்  பி.ஹிக்கின்ஸ் என்ற வெள்ளைக்காரரே கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டு இங்கே பாடியுள்ளார். வரவேற்றுள்ளோம்.

அவ்வளவு ஏன்... ஷேக் சின்னமௌலானா நாதஸ்வரத்தில் மயங்கியவர்கள் நாம். இப்போது ஷேக் மெஹபூப் சுபானி, காலிஷாபி மெஹபூப் ஜோடியின்  நாதஸ்வரத்தை ரசிக்கவில்லையா? திருவையாறு ஆராதனையில் அவர்கள் ஜாம் ஜாமென்று வாசிக்கவில்லையா? திறமைதான் முதல் அளவுகோல்! சாதி  பேச்செல்லாம் சும்மா!

வாரிசுகளை சங்கீதத்தில் கொண்டு வர விருப்பமா?

என் விருப்பமிருக்கட்டும். அவர்கள் இருவரும் விரும்பணும். என்னிடமும், என் அம்மாவிடமும் கற்கிறார்கள்! மூத்தவள் தேஜஸ்ரீ. இளையவள் தனுஜஸ்ரீ.  மேலே வர உழைப்பு வேண்டுமே. பார்க்கலாம். என் அக்கா மகள் லாவண்யா சுந்தரராமன் என் வழியில் மேடைக் கச்சேரிகள் நிறைய செய்கிறார். எந்த  சிப்பியில் எந்த முத்து இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்?