ஆசியாவின் முதல் ஆசிரியர்கள் கல்லூரி!



சென்னை சைதாப்பேட்டையிலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் பாதையில் மறைமலையடிகள் பாலத்தின் அருகேயே இருக்கிறது அந்த ஆசிரியர்  பயிற்சிக் கல்லூரி. ஆங்கிலேயர் காலத்து அழகான கட்டடங்கள் ஒருபுறமும், இப்போதைய புதிய கட்டடங்கள் மறுபுறமுமாக இயங்கும் இந்தக் கல்லூரியை, பரபரத்துக் கிடக்கும் மெட்ரோவால் நிச்சயம் கவனித்திருக்க மாட்டோம்.

ஆனால், வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லூரி இது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

அன்று கல்வியில் மெட்ராஸ் எப்படி சிறந்து விளங்கியது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ஆம்; இந்தியாவில் முதன்முதலாக உயர்நிலைக் கல்விக்கான,  அதாவது செகண்டரி ஸ்கூல் எஜுகேஷனுக்கான ஆசிரியர்களை உருவாக்கிய முதல் கல்வியியல் கல்லூரி இதுவே!

1856ம் வருடம் வேப்பேரியில்  ஆசிரியர்களுக்கென ஒரு சாதாரண அரசுப் பள்ளியாகத்  திறக்கப்பட்டு பின்னாளில் சைதாப்பேட்டையில் கல்லூரியாக  வளர்ந்த வரையில் பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
ஆனால், இதை ஒரு புதிய முயற்சி என்று சொல்ல முடியாது. ஏனெனில், இதற்கு முன்பே சர் தாமஸ் மன்றோ காலத்திலும், சர்.ஹென்றி போட்டிங்கர் காலத்திலும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கென முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

மெட்ராஸில் கல்வி வளர்ச்சி என்பது 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மேலோங்கியது. உள்நாட்டுக் கல்வி மீது அதிக அக்கறை செலுத்திய  கவர்னர் சர் தாமஸ் மன்றோ மாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஓர் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியும், மாவட்ட கலெக்டர் உள்ள இடங்களில் இரண்டு  முதன்மை பள்ளிகளும், தாசில்தார் உள்ள இடங்களில் ஒரு சாதாரண பள்ளியும் அமைக்க வேண்டுமென தீர்மானித்தார்.

இப்படியாக மெட்ராஸில் ஆசிரியர்களை உருவாக்கும் பயிற்சிப் பள்ளிக்கான விதை 1826ம் வருடமே தூவப்பட்டது.பின்னர், 1856ம் வருடம் அரசு சாதாரணப் பள்ளி (normal school) தொடங்கப்பட்டு, அதற்கு ஜே.எஃப்.ஃபவ்லர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்தப் பள்ளியின் அடிப்படை நோக்கம் ஆங்கில மொழிப் பள்ளிகள் மற்றும் உள்ளூர் பள்ளிகளுக்குத் திறமையான ஆசிரியர்களை வழங்குதல் ஆகும்.

இப்படி ஆரம்பமான நார்மல் ஸ்கூலில் அன்று 13 மாணவர்களே சேர்ந்தனர்.இவர்களுக்கு படிப்புடன், பயிற்சியும் தேவையல்லவா? அதனால், இதற்கு ஒருவழிமுறை செய்யப்பட்டது. அதாவது, வேப்பேரியில் இருந்த அரசு உயர்நிலைப் பள்ளியின் முக்கிய பிரிவை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இந்த வளாகத்தில் அமைத்தனர்.

பின்னர் மாதிரி வகுப்பு, பயிற்சி வகுப்பு என இரண்டு பிரிவுகள் உருவாக்கப்பட்டன. பயிற்சி வகுப்பில் மாணவர்கள், வளாகத்தில் அமைக்கப்பட்ட  அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து பயிற்சி மேற்கொண்டனர். மாதிரி வகுப்பில் உதவி ஆசிரியர்களால் ஆசிரியப் பயிற்சிப்  பாடங்கள் கற்பிக்கப்பட்டன.

இத்துடன், தயார்படுத்தும் வகுப்பு மற்றும் வட்டார மொழி கற்பிக்கும் வகுப்பு என மேலும் கூடுதலாக இரண்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இந்தத்  தயார்படுத்தும் வகுப்பில் அடிப்படைப் பாடங்கள் போதிக்கப்பட்டன. இதிலுள்ள மாணவர்களுக்கு மாதம் நான்கு ரூபாய் உதவித் தொகையும்  வழங்கப்பட்டது. வட்டார மொழி கற்பிக்கும் பிரிவு என்பது தாலுகா பள்ளிகளுக்கான ஆசிரியர்களை உருவாக்கவே தொடங்கப்பட்டது.

1862ம் வருடம் இந்த ஆசிரியர் பள்ளி மவுண்ட் ரோட்டில் கொஞ்சம் விரிவான கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. கூடவே, பாடத்திட்டமும் மாற்றி  அமைக்கப்பட்டது. தவிர, வட்டார மொழி கற்பிக்கும் பிரிவு நீக்கப்பட்டதுடன் மாதிரி பிரிவையும், பயிற்சிப் பிரிவையும் ஒன்றிணைத்தனர். தேர்வுகள்  எல்லாம் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தால் மதிப்பீடு செய்யப்பட்டன.

தொடர்ந்து அடுத்த கட்ட வளர்ச்சி 1885ம் வருடம் நடந்தது. காரணம், 1882ம் வருடம் சர் வில்லியம் வில்சன் ஹண்டர் கல்வி ஆணையம் அளித்த  பல்வேறு பரிந்துரைகள்தான். ஆசிரியர் பயிற்சிக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்றது இந்த ஆணையம்.

இதன்பிறகு, இந்தச் சாதாரணப் பள்ளி மறுசீரமைப்பைக் கண்டது. அதாவது, மெட்ராஸ் பல்கலைக்கழகத்துடன் இந்தப் பள்ளி இணைக்கப்பட்டு L.T  (Licentiate in Teaching) என்ற டிகிரி வழங்கப்பட்டது. மட்டுமல்ல. பள்ளியும் ஆசிரியர் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது.

இதிலிருந்து இரண்டு வருடங்கள் கழித்து 1887ம் வருடம் சைதாப்பேட்டை மாதிரி விவசாயப் பண்ணையில் இருந்த வேளாண் கல்லூரியின் முதல்  தளத்திற்கு இந்த ஆசிரியர் கல்லூரி மாற்றப்பட்டது. பின்னர், இந்தப் பண்ணை வளாகத்திலேயே ஆசிரியக் கல்லூரிக்கென புதிய கட்டடமும் கட்டப்பட்டது.

1889ம் வருடம் இந்தப் புதிய கட்டடத்திற்கு மாறியது கல்லூரி. இதுவே, ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் ஆசிரியர் பயிற்சி நிறுவனமாகும். 1892ம்  வருடம் முதல்முறையாக இரண்டு மாணவிகள் இந்த எல்.டி கோர்ஸில் சேர்க்கப்பட்டனர்.

பின்னர், ஸ்மார்த்த பிராமண மாணவர்களுக்காக விடுதி ஒன்று கட்டப்பட்டது. தொடர்ந்து 1899ம் வருடம் வைஷ்ணவ பிராமண மாணவர்களுக்காகவும், இந்திய கிறிஸ்துவ மாணவர்களுக்காகவும் தனித்தனியே இரண்டு விடுதிகள் கட்டப்பட்டன. அன்று மொத்தம் அறுபது மாணவர்களுடன் கல்லூரி விடுதி செயல்பட்டு வந்தது.

இந்த ஆசிரியக் கல்லூரியில் மெட்ரிக்குலேஷன் அல்லது அதற்கு இணையான உயர்கல்வி முடித்த மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.  இவர்களுக்கு இயற்கை அறிவியல், வரலாறு, புவியியல் உள்ளிட்ட சிறப்புப் பாடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டன. தவிர,  மரப்பொருட்கள் மற்றும்  நெசவு போன்ற கைவினை பயிற்சிப் படிப்பும் தொடங்கப்பட்டது.

1918ம் வருடம் டி.வி.சிவகுமார சாஸ்திரியார் என்பவர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டார். இவரே கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர்.அன்று இந்தக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பு, உயர்நிலைப்படிப்பு, கைவினை படிப்பு என மூன்றுவிதமான படிப்புகள் கற்றுத் தரப்பட்டன.

1944ம் வருடம் இந்த எல்.டி. படிப்பு இளங்கலை பயிற்சி என மாற்றப்பட்டது. அதாவது, B.T என்றானது. இது ரெகுலர் கோர்ஸாக செயல்பட்டது.

தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் பல்வேறு மாற்றங்கள் நடந்தன. முதலாவதாக ஐந்து மாத தமிழ் பண்டிட் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.

 பின்னர், 1949ல் டிகிரி முடித்திருக்கும் இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்காக, ‘கல்லூரி ஆசிரியர்கள் சான்றிதழ் படிப்பு’ ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் படிப்பே மெட்ராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு சுருக்கமான ‘B.T’ கோர்ஸ் என அழைக்கப்பட்டது. அதாவது, Shortened B.T.  என்றனர். பின்னர் 1953ம் வருடம் எம்.எட் படிப்பும் தொடங்கப்பட்டது. 1956ல் இந்தக் கல்லூரி தனது நூற்றாண்டைக் கொண்டாடியது.

பின்னர், 1972ம் வருடம் மெட்ராஸ் பல்கலைக்கழகம் மறுசீரமைப்பு செய்து பி.டி என்பதை பி.எட் என மாற்றியது. அன்றிலிருந்து பி.எட் டிகிரி  வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து எம்.எட் மாலை நேர வகுப்புகளும் தொடங்கப்பட்டன. 1986ம் வருடம் எம்.பில் கோர்ஸும், 1988ம் வருடம்  பிஎச்.டியும் ஆரம்பிக்கப்பட்டன.

தொடர்ந்து 1990ல் மத்திய அரசின் உதவித் தொகை கிடைக்க,மேம்பட்ட கல்வியியல் கல்வி நிறுவனம் என தரம் உயர்ந்தது. அதாவது, Institute of  Advanced Study in Education என்று மாறியது. என்றாலும்கூட, சென்னைவாசிகளுக்கு அது இன்றும் டீச்சர்ஸ் காலேஜ்தான். கடந்த 2005ம் வருடம் பல்கலைக்கழக மானியக் குழு இந்தக் கல்லூரிக்குத் தன்னாட்சி அந்தஸ்து அளித்தது.இப்போது 162 வருடங்களைக் கடந்து கல்வியியல் கல்வியில் ஓர் ஆராய்ச்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது இந்தக் கல்லூரி!                            
சில தகவல்கள்...

* இந்தக் கல்லூரியின் அமைவிடம் தொடக்கத்தில் பிரிட்டிஷ் அரசின் மாதிரி விவசாயப் பண்ணையாக இருந்தது. ஆனால், 1880களில் பண்ணைக்கான  செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அதை மூடிவிட்டு இடத்தை வேளாண் கல்லூரியிடம் அளித்தது அரசு. வேளாண் கல்லூரி 1905ம் வருடம்  கோயமுத்தூருக்கு மாறியதும் ஆசிரியர்கள் கல்லூரி தனித்து இயங்கத் தொடங்கியது.

* முன்னாள் குடியரசுத் தலைவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன், இந்திய லோக்சபாவின் முதல் சபாநாயகர் அனந்தசயனம்  ஐயங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் னிவாச சாஸ்திரி ஆகியோர் இந்தக் கல்லூரியில் படித்தவர்கள்தாம்.

* இந்தக் கல்லூரி வளாகத்திலே தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆய்வு மற்றும் விரிவாக்க மையம்,  அரசு மாடல் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்டவையும் இப்போது இருக்கின்றன.

பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்

ராஜா