ரத்த மகுடம் - 28



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

பெரு வணிகன் வேடம் தரித்திருந்தாலும் இடுப்பில் இரு குறுவாள்களை மறக்காமல் கரிகாலன் மறைத்து வைத்திருந்தான். என்றாலும் அந்தச் சூழலில் அதைப் பயன்படுத்த அவன் விரும்பவில்லை.
கடிகை என்பது ஆலயத்துக்கு சமம். அங்கு வாட்களை உருவுவதும், ஆயுதங்களால் சண்டையிடுவதும் தடை செய்யப்பட்டிருந்தது. பல்லவர் கால வழிமுறையை சாளுக்கியர்களும் பின்பற்றுகிறார்கள் என்பதில் அவனுக்கு துளியும் சந்தேகமில்லை.

ஏனெனில் அவனைச் சூழ்ந்து நின்ற நால்வரும் கூட தங்களது கரங்களையும் கால்களையும் புஜங்களையும்தான் பயன்படுத்த முற்படுகிறார்கள் என்பதை ஒரே பார்வையில் உணர்ந்துகொண்டான்.ஆக, சூழ்ந்திருப்பவர்களின் நோக்கம் குறிப்பிட்ட சுவடிக் கட்டை, தான் கைப்பற்றாமல் இருப்பதுதான் என்ற தீர்மானத்துக்கு வந்த கரிகாலன் தன் கண்களை அரைவாசி மூடினான். நிலவறைக்குள் யாருமில்லை என்பதைக் குறித்துக் கொண்டான். தன்னைப் போலவே வேடம் தரித்திருக்கிறார்கள்.

 என்ன... வணிகன் தோற்றத்துக்குப் பதில் கடிகையில் பயிலும் மாணவர்களின் தோற்றம். ‘தேவையெனில் பயன்படுத்திக்கொள்...’ என சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் தன்னிடம் கொடுத்த முத்திரை மோதிரத்தை எடுக்கலாமா என ஒரு கணம் கரிகாலன் யோசித்தான். வேண்டாம். எதன் பொருட்டோ தனக்கு உதவ சாளுக்கிய மன்னர் முற்படுகிறார். அப்படிப்பட்டவர் நிச்சயமாகத் தன்னைப் பின்தொடர கடிகைக்கு ஆட்களை அனுப்பியிருக்க மாட்டார். எனில், சூழ்ந்திருப்பவர்கள் யார்..?

அரைவாசி திறந்த கண்களுடன் தன்னைச் சுற்றிலும் ஆராய்ந்தான். சூழ்ந்தவர்களின் உடல்களும் ஊன்றி நின்ற கால்களின் அழுத்தங்களும் அவர்கள் சாளுக்கியர்கள் அல்ல என்பதை மெய்ப்பித்தன.

அப்படியானால் இவர்கள் யார்..? எதற்காக குறிப்பிட்ட சுவடிக் கட்டுகளை, தான் எடுக்கவே கூடாது எனப் பார்த்துப் பார்த்து தடுக்கிறார்கள்..? இதன் வழியாக சிவகாமி குறித்த எந்த உண்மையை தன்னிடம் இருந்து மறைக்கிறார்கள்..? இவர்களுக்கும் சிவகாமிக்கும் என்ன தொடர்பு..? சாளுக்கிய மன்னருக்குத் தெரியாமல் எப்படி கடிகைக்குள் நுழைந்தார்கள்..?

சூழ்ந்த கேள்விகளை உள்வாங்கியபடியே சில தீர்மானங்களுக்கு கரிகாலன் வந்தான். தாக்குதல் கூடாது. தற்காப்புக் கலையை மட்டுமே பயன்படுத்தி  தப்பிக்க வேண்டும். சாளுக்கிய மன்னர் தன்னிடம் வழங்கிய முத்திரை மோதிரத்தை கச்சையிலிருந்து எடுக்கவே கூடாது. முக்கியமாக சிவகாமி குறித்த  உண்மையை வெளிப்படுத்தும் குறிப்பிட்ட அந்தச் சுவடிகளின் கட்டை எடுத்தே தீரவேண்டும்.

இப்போதைய தேவை அதுதான். நடக்கவிருக்கும் பல்லவ - சாளுக்கியப் போருக்கும் சிவகாமிக்கும் நிச்சயமாகத் தொடர்பிருக்கிறது. இந்தப் பிணைப்பின்  ஆணிவேரை அறியாமல் எந்த வியூகம் வகுத்தும் பயனில்லை.முடிவுக்கு வந்த கரிகாலன், தன் வலது காலை முன்நகர்த்தி அரைவட்டமாகக் கோடு கிழித்தான். இதை எதிர்கொள்ளும் விதமாக அந்த நால்வரும் தம் கால்களை நகர்த்தினார்கள்.

அதிலிருந்து அவர்களது தாக்குதல் எப்படியிருக்கும் என்பதை ஊகித்த கரிகாலன் அதற்கேற்ப குனிந்து நிமிர்ந்து கால்களின் வீச்சு தன் மீது படாதபடி  நிலவறையின் அந்தப் பக்கம் வந்து சேர்ந்தான்.இப்போது நால்வரும் நிலவறையின் வாயில் பக்கம் நின்றார்கள். புன்னகையுடன் தன் பின்பக்கம் சாய்ந்தான்.

மேல்தளத்தில் அடுக்கப்பட்டிருந்த - சிவகாமியின் உருவம் தீட்டப்பட்ட ஓவியங்கள் அடங்கிய - சுவடிகள் மீது சாய்ந்தான். மேல்தளம் போலவே இங்கும் அச்சுவடிகள் அடுக்கப்பட்டிருந்தன. தன்னிடம் பேச்சுக் கொடுத்து இடப்பக்கம் குறித்த குறிப்பை வெளிப்படுத்திய பாலகனின் வேலையாகத்தான் இதுவும் இருக்க வேண்டும். யார் அந்த பாலகன்..? எதற்காகத் தனக்கு உதவ முற்படுகிறான்..?

யோசிக்க நேரமில்லை. கரங்களைக் கோர்த்தபடி நால்வரும் தன்னை நோக்கி வருகிறார்கள். நல்லது.சட்டென்று குனிந்த கரிகாலன் இமைக்கும் பொழுதில் இடப்பக்கம் இருந்த - சிவகாமியின் சித்திரத்தின் இடுப்புப் பகுதியில் இருந்த - ஐந்து சுவடிகளை ஒரே இழுப்பில் இழுத்தான். கையோடு அவை வந்தன. அவற்றை அப்படியே தன் இடுப்பு வஸ்திரத்தில் கட்டிக்கொண்டு கால்களை உயர்த்தினான்.

ம்ஹும். எதிரே வந்தவர்களை நோக்கி அல்ல. மாறாக, பக்கத்தில் இருந்த சுவரில் தன் கால்களைப் பதித்து ஒரே தாவாகத் தாவி அந்நால்வரையும்  கடந்தான்.அதன்பிறகு திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. நிலவறையின் வாசலை நோக்கி ஓடி படிக்கட்டில் ஏறி மேலே வந்தான். பின்னால் எட்டுக் கால்களின் ஓசைகள் கேட்டன. நிலவறைக்கு மேலேயும் ஆட்கள் இல்லை.

ஆக, நால்வர் மட்டும்தான் தன்னைத் தாக்க வந்திருப்பவர்கள்...என கரிகாலன் முடிவு செய்வதற்கு முன்பே திசைக்கு இருவராக வேறு சிலர் அவனை நோக்கி ஓடி வந்தார்கள். அனுப்பியவர்கள் யாராக இருந்தாலும் தன்னைக் குறித்து அறிந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் தன் பலம் அறிந்து தன்னை வீழ்த்த பலரை அனுப்பியிருக்கிறார்கள்.

சுற்றிலும் கரிகாலன் ஆராய்ந்தான். பத்துக்கும் மேற்பட்டவர்கள். சாதாரணமாக ஓடித் தப்பிக்க முடியாது. குரங்காக மாற வேண்டும். மாறுவோம்!

பல்லவ இளவல் ராஜசிம்மனின் சீன நண்பர்களிடம், தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தினான். நான்கடி தொலைவில் மூங்கில் கொட்டகை.  பார்வையால் அளந்த கரிகாலன் தன் பாதங்களை ஊன்றாமல் கால் கட்டை விரலை மட்டும் ஊன்றி ஒரு தாவு தாவினான். மறுகணம் மூங்கில்  கொட்டகையின் மேல் இருந்தான். அங்கிருந்து அடுத்த கூரை. பிறகு மற்றொன்று.

இதற்குள் அவனைத் துரத்தி வந்தவர்கள் கூரைகளின் மேல் ஏறத் தொடங்கினார்கள். கடிகையில் பயிலும் மாணவர்களும் என்ன ஏது என்று புரியாமல்  சூழ ஆரம்பித்தார்கள். இதற்கேற்ப, நிலவறையில் அவனைத் தாக்க முற்பட்டவர்கள் ‘‘கள்வன்... கள்வன்... சுவடிகளை எடுத்துக்கொண்டு ஓடுகிறான்...’’  என அலறினார்கள்.

கரிகாலன் எதையும் பொருட்படுத்தவில்லை. தாவித் தாவி கடிகைக்கு வெளியே வந்தான். இப்போது புரவி வீரர்களும் அவனைச் சூழத் தயாரானார்கள்.  சிக்கினால் பல கேள்விகள் எழும். பரிசோதித்தால் சாளுக்கிய மன்னரின் முத்திரை மோதிரம் அகப்படும்.

ஒரு முடிவுடன் தன் வேகத்தை அதிகரித்து குதிரைகளைவிட வேகமாக ஓடினான். கடிகையிலிருந்து காஞ்சி மாநகருக்குச் செல்லும் பாதையோரம்  இருக்கும் தோப்புக்குள் நுழைந்து தன்னை மறைத்தபடியும் மரங்கள் மீது ஏறி மறைந்தும் காஞ்சி மாநகரின் பிரதான சாலையை அடைந்தான்.

நகரின் ஒவ்வொரு இண்டு இடுக்கும் அவனுக்குத் தண்ணீர் பட்ட பாடு. எனவே பிரதான சாலையில் இருந்து குறுக்குச் சாலைக்குள் நுழைந்து  அங்கிருந்து இன்னொரு சந்துக்குள் ஊடுருவி வணிகர்களின் வீதியை அடைந்தான்.

குழல்கள் ஊதப்பட்டன. எதிரி ஊடுருவி இருக்கிறான் என்பதற்கான எச்சரிக்கை ஒலி இது. எனில், நகருக்குள் இருக்கும் அனைத்து சாளுக்கிய  வீரர்களும் தேடுதல் வேட்டையில் இறங்குவார்கள். அதற்குள் மறைய வேண்டும்...

சிந்தித்தபடியே வணிகர் வீதியில் இருந்த மாளிகைகளின் ஓரம் யாருக்கும் எந்த சந்தேகமும் எழாதபடி நடந்தான்.ஒரு கரம் அவனை இழுத்தது. யாரென்று திரும்பிப் பார்த்தான். சிவகாமி!அவன் இடுப்பில் இருந்த சுவடிக் கட்டின் மீது அவள் பார்வை பதிந்தது. உதட்டிலும் புன்னகை பூத்தது!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்