பகவான்



நீ எந்த மதம் என்று நீதான் சொல்லவேண்டும்!

டிசம்பர் 11, 1931.
பகவான், உலகத்தில் அவதரித்த தினம். குழந்தையின் முகத்தில் ராஜகளையை அவரது பாட்டனார் தரிசித்தார். ‘ராஜா’ என்று பரவசத்தோடு  அழைத்தார்.தங்களது மகளுடைய வயிற்றில் அரசன் பிறந்திருப்பதாக பிறந்த வீடு கொண்டாடியது. புகுந்த வீடான திமார்னிக்கு எடுத்துச் செல்ல இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

“இவன் ராஜா. இவனை ராஜமரியாதையோடு நாங்களே வளர்க்கிறோம்!”சரஸ்வதி அம்மையாரின் புகுந்த வீட்டுக்கு மறுப்பேதுமில்லை. அப்போது குடும்பமே சிரமதசையில் இயங்கிக் கொண்டிருந்த காலம் வேறு. இருந்தாலும், தங்கள் வாரிசை ஒருமுறையாவது காணவேண்டுமென்று புகுந்த வீட்டார் துடித்துக் கொண்டிருந்தார்கள்.ஆறுமாதக் குழந்தையாக இருந்தபோது பகவான், தன் தந்தையாரின் வீட்டுக்கு விஜயம் செய்தார்.

சித்தப்பா ஷிகார்சந்துக்கு தெய்வீகக்களை பொருந்திய அந்தக் குழந்தைக்கு தானே பெயர் வைக்க வேண்டுமென்று ஆசை. ‘ரஜனீஷ் சந்திரமோகன்’  என்று மூன்று முறை அழைத்தார்.அன்றிலிருந்து ராஜா, ரஜனீஷ் ஆனார்!பள்ளியிலும் கூட சித்தப்பா வைத்த பெயரையும் சேர்த்து ‘ராஜா ரஜனீஷ் சந்திரமோகன்’ என்று சொல்லி சேர்த்தார்கள். அந்தக் காலத்து ஸ்கூல் அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் பெயர் எழுதுவதற்கான இடம் ரொம்ப குறைச்சல். எனவே ஆசிரியர்களே அவரது பெயரைச் சுருக்கி ‘ரஜனீஷ்’ ஆக்கிவிட்டார்கள்.

குச்வாடாவில் ஏழு வயது வரை பாட்டனாரின் பராமரிப்பில்தான் வளர்ந்தார். அங்கே பள்ளிக்கூடம் இல்லை என்பதால், அதன்பின்னர் திமார்னிக்கு  அழைத்துவரப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டார்.பள்ளியில் அவர் கற்றதைவிட, குச்வாடாவில் இயற்கையிடம் பெற்ற ஞானம் அதிகம். சிறுவனாக இருந்தபோது ரஜனீஷ், தனிமையையும் அமைதியையும் வெகுவாக விரும்பினார். அவரது வயது குழந்தைகள் ஓடியாடி விளையாட, இவர் மட்டும் அமைதியாக எந்நேரமும் எதையோ யோசித்துக் கொண்டிருப்பாராம்.

அவர் வீட்டில் இருக்கும் பட்சத்தில் தாத்தாவும், பாட்டியும் கூட ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள மாட்டார்களாம். தங்களுடைய பேரன் விரும்பும்  அமைதி கெட்டுவிடுமோ என்கிற அச்சத்தின் காரணமாக.குச்வாடாவில் ஒரு பெரிய ஏரி இருந்தது. எப்போதுமே கரைகள் தளும்பத் தளும்ப நீர் நிறைந்திருக்கும்.

ஏரிக்கரை முழுக்க பசுமையான அடர்ந்த மரங்கள் வளர்ந்து தோப்புகளுக்கு மத்தியில் நீர்நிலை என்பது மாதிரி அம்சமான இயற்கை ஏற்பாடு. மரங்களில் புள்ளினங்கள் எழுப்பும் இனிமையான கானத்தைத் தவிர வேறு சந்தடியே அங்கு இருக்காது.

குச்வாடாவில் வசித்தவர்கள் பெரும்பாலும் வணிகர்கள். பகல் முழுக்க அக்கம்பக்கத்து நகரங்களுக்குச் சென்று வியாபாரம் செய்வார்கள். இரவில்  வீடுகளை விட்டு வெளியே வரமாட்டார்கள்.ஊரே அமைதியாகத்தான் இருக்கும் எனும்போது, ஊருக்கு வெளியே இருக்கும் ஏரி எப்படி இருக்கும்?

அந்த ஏரிதான், குழந்தை ரஜனீஷின் துணை! காலை உணவு ஆனதுமே ஏரிக்கரைக்கு வந்துவிடுவார். நேரம் போவதே தெரியாமல் ஏரியைப் பார்த்துக் கொண்டிருப்பார். நீரில் மலர்ந்திருக்கும் தாமரைகளின் அழகில் மனம் லயிப்பார்.

கரைகளில் காற்றின் காரணமாக மரங்கள் ஏற்படுத்தும் ‘உஸ்’ஸென்ற ஓசையும், நீரில் மீன்கள் துள்ளுவதால் ஏற்படும் ‘சிலிங்’கென்ற சிறு ஓசையும்  அவருக்குப் பிடித்தமானவை. இயற்கையோடு உறவாட அவருக்கு இந்த ஏரி போதுமானதாக இருந்தது.ஏரியில் மீன்களைக் கொத்த வரும் கொக்குகளை வேடிக்கை பார்ப்பார். ஒற்றைக்காலில் அமைதியாகத் தவமிருந்து கச்சிதமான நேரத்தில் மீன்களை அவை கவ்வும் லாவகத்தை ரசிப்பார்.

பின்னாளில் தியானத்துக்குப் பேர் போன ஓஷோ, அதைக் கற்றது குச்வாடா ஏரி கொக்குகளிடமிருந்து என்று சொன்னால் கொஞ்சம்  ஆச்சரியமாகத்தான் இருக்கும்.மனதை ஒருமுகப்படுத்தும் கலை, அந்தச் சிறுவயதிலேயே அவருக்கு வசப்பட்டதற்குக் காரணம், அந்தக் கொக்குகளை பல மணி நேரங்கள் ஆராய்ந்ததில் கிடைத்த அனுபவ அறிவுதான்.பகவான் ஆனபிறகு தன் பக்தர்களுக்கு அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தியது ‘தன்னுணர்வோடு வாழுங்கள்’ என்பதுதான்!

மனிதன், இயற்கையின் ஓர் அங்கம். ‘இயற்கையை உணர்ந்து, அதன் இயல்போடு இணைந்து வாழுங்கள்’ என்பதே ‘தன்னுணர்வோடு வாழுங்கள்’  என்பதற்குப் பொருள்.இந்தத் தெளிவினை குழந்தைப் பருவத்திலேயே அவர் அடைந்துவிட்டார்.ரஜனீஷின் தாய்வழி தாத்தா கல்வியறிவு மிகுந்தவர். தன் பேரனுக்கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டுமென விரும்பினார். ஊரில் பள்ளிக்கூடம் இல்லாத நிலையில் ஆசிரியர் ஒருவரை வீட்டுக்கே வரவழைத்து கல்வி போதிக்க ஏற்பாடுகள் செய்தார்.

ஆனால், பாட்டி அவரைத் தடுத்து விட்டார். “இவன் மற்ற குழந்தைகளைப் போல இல்லை. பிறப்பிலேயே ஞானி. அவன் விரும்பினால் கற்கட்டும்.  இல்லாவிட்டால் அப்படியே விட்டுவிடுங்கள்!”ரஜனீஷுக்கு அப்போது கல்வி கற்பதில் ஆர்வமும் இல்லை. இருந்தாலும், தாத்தாவுக்கு மனக்குறை இருந்து கொண்டேதான் இருந்தது.

தன் மகனுக்கு மாமனார் கல்வி கற்பிக்கவில்லை என்று நாளை மருமகன் குற்றம் சாட்டினால் என்ன பதில் சொல்லுவது என்று பதற்றம் அடைந்தார்.
தாத்தா, கோயிலுக்குச் செல்லும்போது பேரனையும் அழைத்துச் செல்வதுண்டு. கோயிலில் எதிர்ப்பட்டவர்களிடம் ‘கடவுள்’ குறித்த கேள்விகளை  ரஜனீஷ் எழுப்புவார்.

ஒரு குழந்தையிடமிருந்து அறிவுபூர்வமான கேள்விகளை எதிர்பாராத அவர்கள் திணறிவிடுவார்கள்.ரஜனீஷுடையது சமண மதத்தைச் சார்ந்த குடும்பம். பிராகிருத மொழியில் அமைந்த ஒரு ஜைன மந்திரத்தை பாட்டி, குழந்தை ரஜனீஷுக்கு சொல்லிக் கொடுத்தார்.

நமோ அரிஹந்தானம் நமோ நமோ
நமோ சித்தானம் நமோ நமோ
நமோ உவஜ்ஜயனம் நமோ நமோ
நமோ லோயே சர்வ சகுனம் நமோ நமோ
ஏசோ பாஞ்ச் நம்முகரோ
சவ்வ பாவப்பநனோ
மங்களம் ச சவ்வேசம்
பதம் ஹவய் மங்களம்
அரிஹந்தே சரணம் பவஜ்ஜாமி
நமோ அரிஹந்தனம் நமோ நமோ
நமோ சித்தானம் நமோ நமோ
நமோ உவஜ்ஜயனம் நமோ நமோ
ஓம் ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி…

- மந்திரத்துக்கு முழு அர்த்தத்தையும் பாட்டி, பேரனுக்கு எடுத்துச் சொல்லிவிட்டு திரும்பத் திரும்பப் பாராயணம் செய்வார். பாட்டியுடனேயே சேர்ந்து  சொல்லிச்  சொல்லி இம்மந்திரத்தில் ரஜனீஷுக்கு ஈர்ப்பு உண்டானது.

குறிப்பாக அவருக்கு மிகவும் பிடித்தது, ‘நமோ லோயே சர்வ சகுனம் நமோ நமோ’ என்கிற வரி. ‘மெய்யுணர்ந்த ஒவ்வொருவரையும் வணங்குகிறேன்’ என்று இந்த வரிக்குப் பொருள். ‘மெய்யுணர்ந்தவன் வணங்கத் தக்கவன்’ என்கிற எண்ணமே அவருக்குள் சிலிர்ப்பை உண்டாக்கியது.

 உலகில் பிறந்த ஒவ்வொருவரும் வணங்கத் தக்கவராக ஆகவேண்டும். அதுவே வாழ்வின் லட்சியமாகவும் அமையவேண்டும் என்று விரும்பினார்.சமண மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ரஜனீஷின் குடும்பத்தார், பெரும் மதப்பற்று கொண்டவர்களாக இல்லை. நம் மண்ணில் நிலவிய மற்ற  மதங்களையும் மதிக்கக்கூடிய பண்பு கொண்டவர்களாக இருந்தார்கள்.

பெரும்பான்மை இந்துக்கள் மத்தியில் வாழ்ந்த ரஜனீஷுக்கு தன் மதம் எதுவென்ற குழப்பம் கூட சிறுவயதில் இருந்தது. பாட்டியிடம் கேட்டார்.“நான் எந்த மதம் பாட்டி?”அதிகம் கல்வி கற்காத பாட்டி சொன்ன பதில்தான், பிற்காலத்தில் மதங்கள் குறித்து நிறைய கேள்விகளைக் கேட்க அவரைத் தூண்டியது.“நீ எந்த மதம் என்று நீதான் சொல்லவேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் எந்த மதத்தையும் சேர்ந்தவள் அல்ல!”

பத்தொன்பதாம் நூற்றாண்டில், கல்வியறிவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த பாட்டி, எண்பது ஆண்டுகளுக்கு முன்பு  இப்படியொரு உறுதியான பதிலைச் சொல்லியிருக்கிறார் என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.பாட்டியின் இந்த பதிலால் திகைப்படைந்த குழந்தை ரஜனீஷ், மதம் குறித்து ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களிடம் பேசி மேலும் தெளிவு பெறவேண்டும் என்று விரும்பினார்.அவரிடம் வகையாகச் சிக்கினார் ஜைனத்துறவி ஒருவர்.

இயல்போடு வாழுங்கள்!

“மனிதனின் துன்பத்துக்குக் காரணம், அவன் இயற்கையின் இயல்பை இழந்துவிடுவதே...” என்கிறார் ஓஷோ.“தன்னைச் சுற்றி என்ன நிகழ்ந்தாலும் ஓர் ஆறு, தன் பாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது. ஓடுவது அதன் இயல்பு. எனவேதான் ஆறு மகிழ்ச்சியாக இருக்கிறது.மனிதன் தன்னை இன்னொரு மனிதனோடு ஒப்பிட்டுப் பார்த்து துன்பம் கொள்கிறான்.

தன் இயல்பை மறந்து மற்றவனின் இயல்பை ஏன் மனிதன் மட்டும் பிரதியெடுக்க வேண்டும்?ஒரு பூ, வேறொரு பூவைப் பார்த்து அதுபோல தான் மணம் வீசவேண்டும், நிறம் கொள்ளவேண்டும் என்று கருதுமா? அது பாட்டுக்கு தன்னுடைய இயல்பில் மலர்ந்து, மணம் வீசி தன் வாழ்க்கையின் அர்த்தத்தைப் பெறுகிறது அல்லவா?ஒரு மனிதன் இயேசுவாகவோ, புத்தராகவோ ஆகவேண்டியதில்லை. ஆகவேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை. அவன், அவனாகவே இருந்தால்தான் இன்பமாக வாழமுடியும்!” என்று மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எளிமையாக வழிகாட்டி இருக்கிறார் ஓஷோ.

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா