காற்றின் மொழி
தனக்கு விருப்பமான வேலையைத் தேடிச்செல்லும் பெண்ணின் அனுபவமே ‘காற்றின் மொழி.’குதூகலமும் கலகலப்பும், புரிதலுமாக வாழ்கிற தம்பதி விதார்த் - ஜோதிகா. ஒரு பண்பலை நிறுவனத்தில் கேட்ட கேள்விக்கு ேஜா நல்ல பதில் சொல்ல பரிசு கிடைக்கிறது.
 அதை வாங்கப்போன இடத்தில் அங்கேயே ஆர்.ஜே.வாக வேலைக்குச் சேர்கிறார். ஜோவிற்கு கிடைக்கிற அங்கீகாரத்தால் விதார்த் தாழ்வுமனப்பான்மையில் சிக்குகிறார். அதிலிருந்து பிரச்னை. நெருக்கடி சூழ வேலையைத் துறப்பதென முடிவெடுக்கிறார் ேஜா. பிறகான அவரின் வாழ்க்கைச் சூழலே மீதிக்கதை. அடர்த்தியும், அழுத்தமும் பெர்ஃபார்மன்ஸும் தேவைப்படும் இடத்தில் ஜோதிகாவின் நடிப்பு ஆல்டைம் மாஸ். வீட்டில் அக்காக்கள், அப்பா என அவரைக் குறை சொல்லும்போது ஆவேசமாக பதில் சொல்லும் விதமெல்லாம் ஆஸம்... ஆஸம்! கணவனும், மனைவியுமாக சினிமா பாடல்களை மறுபிரதியெடுத்து பாடுவதும், சந்தோஷப்படுவதும் உற்சாக நிமிடங்கள். இருவரில் ஜோ... முத்திரை பதிக்கிறார். அவர் பாடும் ‘நேத்து ராத்திரி யம்மா...’ சிரிப்பு சரவெடி. பண்பலையில் நேயர்களின் கேள்விக்கு பதில் சொல்வது ரசிக்க ரசிக்கக் குறையாத அழகு. துக்கமோ, சிரிப்போ, அழுகையோ, பரவசமோ, எளிதில் கடத்துகிறது ஜோவின் முகம்.
இயல்பான கணவன் - மனைவிக்கான கெமிஸ்ட்ரி இல்லையென்றாலும் அதற்குப் பிறகு நெடுக லீடெடுத்து சமாளிக்கிறார் விதார்த். ரேடியோ ஸ் ேடஷனின் உயர் அதிகாரியாக லட்சுமி மஞ்சு கன கச்சிதம். அமைதியாக இருந்துகொண்டே, உணர்வுகளைச் செதுக்கும் இடத்தில் அவருக்கான காஸ்ட்டிங் அப்படியே பொருத்தம். எம்.எஸ்.பாஸ்கர் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மேலோங்கி உருவெடுக்கிறார்.
அவர் ஜோவிடம் பேசிவிட்டு கண்ணீர் உகுக்கும் இடங்கள் படத்தின் அழகிய பக்கங்கள். மூட்டுவலி மயில்சாமி உருகிய குரலுக்கு ஐந்து மாடி ஏறி இறங்கும் இடங்கள் ஆரவாரம். சிம்புவின் என்ட்ரி கொஞ்ச நேரமே என்றாலும், அவர் முகத்தில் எப்போதும் பார்க்காத அமைதி.
ராதாமோகனின் ஆஸ்தான நடிகர் குமரவேல் அதகளம். அப்பளத்திற்கு கவிதை வரிகள் கேட்கும்பொழுதெல்லாம் கலக்கியிருக்கீங்க வேல். படம் நெடுக சுவாரஸ்யமும், இயல்பும் மிளிரும் வசனங்களில் பொன்.பார்த்திபன் பளிச்சென ஈர்க்கிறார். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு கலர்ஃபுல். அதிகமாக வீட்டிற்குள், ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தாலும் யதார்த்தம்.
‘ஜிமிக்கி கம்மல்...’ பாடல், இறுகும் வேளைகளில் சுழன்று கலகலப்பு ஊட்டுகிறது. பல இடங்களில் இதமாக இருக்கிறது ஏ.எச்.காஷிப்பின் இசை.இன்னும் கதையோட்டத்தில் விரைவு ஏற்படுத்தி அவ்வப்போது ஜோவிடம் எட்டிப்பார்க்கும் மிகையைக் குறைத்திருக்கலாம். வணிகக்காரணங்களுக்காக எதையும் இட்டு நிரப்பாதது சிறப்பு.மனதின் மென் உணர்வுகளை பாசிட்டிவ் காமெடி கலந்து ராதாமோகன் தந்தது நல்ல ஆறுதல்.
குங்குமம் விமர்சனக்குழு
|