கஜா செயலிழந்த தமிழக அரசு!



வானொலியும், நாளிதழ்களும் புயல் அறிவிப்பை தந்த காலத்தில் அவற்றை வெகுமக்கள் நம்பினார்கள்.அந்த நம்பகத்தன்மையை நவீன தொழில்நுட்பங்களுடனான அறிவிப்புகளும், ஊடக பரபரப்பும் நிலவும் இக்காலத்தில் மக்கள் இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது.காரணம், ஊடகங்களின் பரபரப்புச் செய்திகளுக்காக கஜா புயலின் பயணத்தை மணிக்கொரு முறை வெளியிட, அது இயற்கையின் போக்கில் மாறுபட,  உடனே சமூக வலைத்தளங்களில் நக்கல், நையாண்டி மீம்ஸ் பறக்க ஆரம்பித்தன.

இன்னொரு பக்கம் ஊடகங்கள் ‘இன்னும் மழை தூறவே ஆரம்பிக்கவில்லை...’ என்று நேரடி ஒளிபரப்பை ஆரம்பிக்க, வெகு மக்களிடம் புயல் குறித்த  கேள்வி எழ ஆரம்பித்தது.கடலூர் அருகே கடக்கும் என்று எதிர்பார்த்த கஜா, மெல்ல நாகை நோக்கி திசை திரும்பியது. வேதாரண்யத்தில் நுழைந்து, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், புதுக்கோட்டை என கிழித்துக்கொண்டு, திண்டுக்கல்லை துவம்சம் செய்து எகிறி கொடைக்கானல் மலை மீது ஒரு  கோரத்தாண்டவமே ஆடிவிட்டது.

இது யாருமே எதிர்பாராதது. வானிலை ஆய்வு மையமும் தடுமாறித்தான் விட்டது. ஒருசில தனியார் வானிலை ஆர்வலர்கள் மாத்திரம் கணித்துச்  சொல்லி இருந்தனர். ஆனால், அது பெரிய அளவில் கவனம் ஈர்த்திருக்கவில்லை.கஜா புயல் என்ற அறிவிப்பு வந்தவுடனே, இந்த முறை தமிழக அரசு அதீத வேகத்தில் பாய்ச்சல் காட்டியது.
பேரிடர் மேலாண்மைக் குழுக்களைக் குவித்தது. தொடர் ஆய்வுக் கூட்டங்களை முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி நடத்தினார். அமைச்சர் பெருமக்கள் அவரவர் துறை ‘அலர்ட்’ ஆக இருப்பதாக பேட்டி அளித்தனர். அதில் வருவாய்த்துறை அமைச்சர்  உதயகுமார் கூடுதல் சுறுசுறுப்புடன் பணியாற்றினார்.

கஜா புயல் பாதிப்புகளுக்காக அரசு அமைத்திருந்த கண்காணிப்பு அறையில் இரவு முழுதும் அமர்ந்து ‘ஆர்வமாக’ பேட்டி அளித்தார். பார்த்தோர்  பரவசம் அடைந்தனர், பாராட்டினர். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட  பல்வேறு கட்சித் தலைவர்களும் பாராட்டினார்கள்.

கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் வெள்ளம், புயல் ஏற்பட்டபோதெல்லாம் அரசு செயலிழந்து கிடந்தது. குறிப்பாக சென்னை பெருவெள்ளம்,  தானே புயல், ஒக்கி புயல் எனமக்கள் அடைந்த அவதிக்கு அளவே இல்லை. அந்தக் கெட்ட பெயரைத் துடைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு துரிதமாகவும், சிறப்பாகவும் செயல்படுகிறது என மக்களும் , எதிர்க்கட்சிகளும் நம்பி விட்டன.

ஆனால், அத்தனை பாராட் டுகளையும் கஜா புயலே அடித்துச் செல்லும் நிலையை எடப்பாடி அரசு செய்துவிட்டது! பேரிடர் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளில் தீவிரமாக அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பு காட்டியவர்கள் புயலுக்குப்பின் படுத்துத்  தூங்கிவிட்டனர்.

புயல் எத்தகைய பேரழிவை உண்டாக்கும், அதற்கு என்ன என்ன தீர்வுகளை தயாராக வைத்திருப்பது என்று திட்டமிட்டு முன்னெச்சரிக்கையோடு  அரசு இருக்கவில்லை. மக்களை முன்னெச்சரிக்கையாக இருக்கச் சொன்னதும், தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைத்ததும் போதுமானது என்று  இருந்து விட்டார்கள் போலும்.

புயலின் கோரத்தாண்டவத்திற்குப் பிறகும், அரசுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. புயல் தாக்கினால், மரங்கள் விழும், அதனால் பாதிப்புகள்  ஏற்படும், மின்சாரக் கம்பங்கள் முறிந்து போகும், அதனால் மின்சாரம் தடைபட்டுப் போகும், அதனால் குடிநீர் பிரச்னை எழும் என்பதைக் கூட  எளிதாகக்கணித்து அதற்கேற்ப அரசு தயாராக இருக்கவில்லை.

மரங்கள் விழுந்து சாலைகள் பாதித்தால், போக்குவரத்து பாதிக்கும். அதனால் உணவுப் பொருட்கள், காய்கறி, பால் தட்டுப்பாடு வரும். அதற்கு  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பாலபாடம் கூட அறியாதவர்களாக ஆட்சியாளர்கள் நடந்து கொண்டது மிகக் கேவலமானது.

ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்வது கடினமான காரியம்தான். ஆனால், மாநிலம் முழுதும் இருக்கும் அரசுப்  பணியாளர்களில் ஒருபகுதியினரை புயல் தாக்கிய பகுதிக்கு அனுப்பி துரிதமாகச் சீர் செய்ய இயலும். அந்த நடவடிக்கையைக் கூட தாமதமாகத்தான் அரசு செய்கிறது.

மின்சாரம் போய் நான்கு நாட்களாகிறது என பல கிராம மக்கள் கதறுகிறார்கள். ‘‘பத்தாயிரம் மின்கம்பங்களோடு தயாராக இருக்கிறோம்...’’ என  மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி புயலுக்கு முன் சொல்லியிருந்தார். ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் இல்லை என சாலை மறியல்  செய்கிறார்கள் மக்கள். ஆனால், புயலுக்கு முன் உணவு அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டியில், ‘‘தேவையான உணவுப் பொருட்கள் தயாராக  இருக்கின்றன...’’ என உறுதியாகச் சொன்னார்.

அத்தனையும் இந்த அமைச்சர் பெருமக்கள் சட்டசபையில் அளிக்கும் உறுதி போலவே பல்லிளிக்கின்றன.இவர்கள் சொன்ன பொய்க் கதைகள்தான் மக்கள் கோபத்திற்குக் காரணம். காணும் தொலைக்காட்சிகளில் எல்லாம் ஒரு அமைச்சர் பேட்டி அளிப்பதும், ஆனால் அதன் படி காரியம் நடக்காத காரணத்தினால் மக்கள் சாலை மறியல், முற்றுகை என களமிறங்குவதும் அதிகரித்தன.

சில இடங்களில் போராட்டம் கலவரமாக உருவெடுத்தது. உச்சகட்டமாக கொத்தமங்கலம் கிராமத்தில், அரசு வாகனங்கள் நான்கு எரிக்கப்பட்டன.  அந்த ஊரில் உள்ள ஆண்களை காவல்துறை கைது செய்து வருவதால், பதற்றம் நீடிக்கிறது.  அமைச்சர்களும் மக்கள் கோபத்திலிருந்து தப்ப முடியவில்லை. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மக்கள் முற்றுகை காரணமாக சுவர் ஏறிக் குதித்து தப்பினார்.

 அவர் தப்பித்த கோபத்தில், அவரது கார் தாக்கப்பட்டது. இப்படியாக மக்கள் கோபம் கலவரமாக மாறிய பிறகும் அரசு பாடம் கற்றதாகத் தெரியவில்லை.இதற்கெல்லாம் உச்சக்கட்ட கூத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நடத்தை. புயல் அடித்து, சோற்றுக்கும், குடிநீருக்கும் வழி இல்லாமல் மக்கள் கதறிக்கொண்டிருந்த நேரத்தில், நாமக்கல்லில் அரசு விழாவில், கூட்டிவைத்த மக்களிடம் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்.
அது புயல் அடித்த இரண்டாம் நாள். அடுத்த நாள் புயல் பாதித்த பகுதிகளுக்குப் போவதாக அறிவித்தார். ஆனால், அடுத்த நாள் காலை பயணத்தை  கேன்சல் செய்வதாக அறிவித்தார்.

இதில் மிகக் கேவலமானது, பயணம் போகாமை குறித்து முதல்வரே பேட்டி அளித்தது. அதிலும் கொடுரமானது, அவர் அதற்குச் சொன்ன காரணம்.  ‘‘இன்னும் விழாக்கள் முடியவில்லை.  மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட சில திறப்பு விழாக்கள் இருக்கின்றன!’’  
அடுத்த நான்கு நாட்கள் கழித்து திறந்தால், அந்தக் கட்டடங்கள் திறக்காதா? அடுத்த நான்கு நாட்கள் தள்ளிப் போட்டால், விழாக்கள் நடத்த  முடியாமலே போய் விடுமா?

புயல் பாதித்த பகுதிக்குச் செல்ல 350 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டுமாம். அதனால் இரண்டு நாட்கள் கழித்து போகிறாராம். சென்னைக்கும்  சேலத்திற்கும் இதே தூரம்தானே, விழுந்து விழுந்து விழாக்கள் நடத்தவில்லையா, அதற்காக பயணிக்க வில்லையா?

சொல்லப்போனால், முதலமைச்சர் பழனிச்சாமி அங்கே போகக்கூட வேண்டாம். அந்த மக்களின் இழப்பிற்காக வருந்தி, ஆடம்பர அரசு விழாவைத் தவிர்த்திருக்கலாம், தள்ளி வைத்திருக்கலாம்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புயலுக்கு முன்பாகச் செய்ததை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புயலுக்குப்பின் செய்திருக்க வேண்டும். தன் அலுவலகத்திலேயே ஒரு பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு மையத்தை அமைத்து, நிவாரண உதவிகள் எல்லாப் பகுதிக்கும் சென்று சேர உறுதி செய்திருக்க வேண்டும். எல்லாத் துறைகளும் துரிதமாகச் செயல்படுவதை, அந்த‘கட்டுப்பாட்டு அறையில்’ அமர்ந்து கண்காணித்திருக்க வேண்டும்.

ஆனால், அத்தனையிலும் தவறி விட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இப்போது ஹெலிகாப்டர் பயணம் என்று பம்மாத்து செய்கிறார். அதைக்  கூட அடுத்த நாள் செய்யாமல், இத்தனை நாட்கள் தள்ளிப் போட்டது மக்கள் மீதான அவரது அக்கறையை வெளிப்படுத்து
கிறது.

வேதாரண்யம் ஆரம்பித்து, பட்டுக்கோட்டை, திண்டுக்கல் என பரவலாக தென்னை பயிர் வைத்திருந்தோர் பெரும் துயருக்கு ஆளாகி உள்ளனர். நீண்ட  காலப் பயிராக, காலம் எல்லாம் காத்திருக்கும் என நினைத்து கண்ணும் கருத்துமாக வைத்திருந்த தென்னை மரங்கள் புயலால்  கிள்ளிப்போடப்பட்டிருக்கின்றன. இன்னும் பல ஆண்டுகளுக்கு வந்திருக்க வேண்டிய வருமானம் பொய்த்துப் போனது. பயிரை மீண்டும் வைத்து, அது பலன் கொடுக்கும் காலத்திற்கும் காத்திருக்க வேண்டும்.

 வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாய் மாறிப் போனது.வாழை, வெற்றிலை, நெல் பயிரிட்டோரும் புயலுக்கு பறிகொடுத்து, பரிதவித்துப் போயுள்ளனர். அரசு இதே மெத்தனப் போக்கில் சேதத்தைக் கணக்கிடுவதைத் தாமதமாகச் செய்தால், மக்கள் கோபம் கூடத்தான் செய்யும். இருந்ததையும் இழந்து, இழப்பீடாவது கிடைக்கும் என காத்திருப்போருக்கு உடனே உதவ வேண்டியது அரசின் கடமை.

உயிரிழந்தோருக்கு அரசு நிவாரணம் அறிவித்திருக்கிறது. வீடிழந்தோருக்கு அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் போதாது. பயிர்களுக்கு அறிவித்திருக்கும்  நிவாரணம், குறுகிய காலப் பயிர்களுக்கே உதவும். நீண்ட காலப் பயிர் செய்த விவசாயிகள் நிலைதான் மோசம். இவர்கள் நிலை உயிரிழந்தது  போலத்தான்.

அறிவிப்புகள் மூலம் ஊடகங்களின் வழியே ஆட்சியை நடத்தி விடலாம் என்று முதல்வரும், அமைச்சர்களும் நினைத்தால் அது மிகப் பெரிய தவறு.  மக்களைச் சந்திக்கும்போதுதான் விளைவுகள் புரியும். ஓ.எஸ்.மணியன் அனுபவத்தைக் கேளுங்கள், தேர்தல் காலத்தில் உங்களுக்கும் இதுதான் நிகழும். மக்கள் மனதில் ‘கஜா’ நிலை கொண்டிருக்கும் !               

எஸ்.எஸ்.சிவசங்கர்