நான் லிங்கு பேசறேன்..!
பிரச்னைகளில் இருந்து மீண்ட கதையை விவரிக்கிறார் இயக்குநர் லிங்குசாமி
‘‘ரெண்டு சொட்டு விழுந்ததும் பச்சை பூத்திருதே பூமி...’’ என தோட்டத்துப் பக்கம் பார்த்துப் புன்னகைக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. இப்போது பிரச்னைகளிலிருந்து கடந்து வந்திருக்கிறார். ஒரு தாவரத்தைப் போல் நிஜமாகவும், ஒரு பறவையைப் போல துடிப்புடனும், கோடைக்காலத்தைப் போல் சூடாகவும் உயிர்த்திருக்கிறார்.
 ‘அஞ்சான்’ நேரத்தில் இணையத்தில் அதிகம் வறுபட்டவர்... தயாரிப்பு நிறுவனம் சார்ந்து அழுத்தும் கடன்கள்... அனைத்தையும் மீறி அதே ‘ஆனந்தம்’ லிங்குசாமியாக இப்போதும் நிற்கிறார். நிமிர்வும் கம்பீரமும் குறையவேயில்லை.எப்படி இது சாத்தியமானது..? அவரே சொல்கிறார்...
ஒரு சினிமாவை எடுத்துக்குங்க... ஒரு முழு மேப் யார்கிட்டேயும் கிடையாது. என்கிட்டே ஒரு பகுதியிருக்கு. இன்னொரு பகுதி மியூசிக் டைரக்டர், கேமராமேன்கிட்டே இருக்கு. இப்படி அந்த மேப் எல்லாத்தையும் ஒட்டிப் பார்க்கும்போதுதான் படம் தெரியுது. அனுபவத்தில் சொல்றேன்... எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம்தான் ெதரியுது. இப்படி சேர்ந்துதான் வேலை செய்றோம். எவ்வளவு குறைகள் குறைவாக இருக்கோ அதில் ஓடுகிறது படம்.
 நானும் வசந்த பாலனும் ஐந்து வருஷம் பேசாமல் இருந்தோம். ‘அங்காடித்தெரு’ என்ைன பேச வைத்தது. படம் பார்த்துட்டு ‘டே, எங்கேயிருக்கே, உன்னைப் பார்க்கணும் போல இருக்கு...’னு சொன்னேன். ‘என்னடா திடீர்...’னு அவனே நம்பமுடியாமல் கேட்டான். நம்ம படைப்பு நம்ம பரம எதிரிக்குக்கூட பிடிக்கணும்.
கமல் ‘அபூர்வ சகோதரர்கள்’ல ‘சர்க்கஸ் துப்பாக்கி முன்னாடியும் வெடிக்கும், பின்னாடியும் வெடிக்கும்...’னு சொல்வார். இது சினிமாவுக்கும் பொருந்தும். காலம் மாறுது, புதுசு புதுசா பையன்கள் வர்றாங்கன்னு நினைச்சு, நம்மைக் குறைச்சு மதிப்பீடு செய்தால் நமக்கு சௌகரியம் ஜாஸ்தி. அப்பபார்த்து நாம் சரியான வேலை செய்து, படம் காண்பித்தால் அவன் மிரளுவான்.
 ‘ஜி’ தோல்வி. மாயவரத்திலிருந்து ஒரு தியேட்டர் ஓனர் போன் பண்ணி, ‘உங்களை நம்பி தியேட்டர் சுத்தம் பண்ணி, பெயின்ட் அடிச்சு விலை கொடுத்து வாங்கியிருக்கேன். ஒரு ரூபாய் சம்பளம் கேட்டீங்களாம். வேலையை ஒழுங்கா பார்க்க மாட்டிங்களா...’னு கேட்டார். நான் அழுதிட்டேன். அதற்குப் பிறகு அதே வருஷத்தில் டிசம்பரில் ‘சண்டக்கோழி’ ரிலீஸ். மாபெரும் வெற்றி.
கடனில் இருக்கார், பிரச்னையில் இருக்கார்னு நினைச்சுக்கிட்டே இருக்காங்க. நான் எதையும் காதில் வாங்கிக்க மாட்டேன். அப்புறம் தியானம். நல்ல தியானம் தோளில் கை போட்டுப் பேசும் நண்பன் மாதிரி. கொஞ்சம் புத்தகங்கள்.
மனசு லேசாகிடும். இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் நம்ம பிரச்னை ஒரு புள்ளி! மராட்டியில் 4 கோடியில் எடுத்த ‘சாய்ரத்’ 70 கோடி வசூல் செய்யுது. ‘பாகுபலி’ 1000 கோடி. அந்த மேஜிக் இங்கேதானே நடக்குது... ஒரு கதை, ஒரு ஸ்கிரிப்ட் மாத்திவிட்டுடும். எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடும். ‘அழகி’, ‘ஆட்டோகிராப்’பை நடிகர்கள், உணர்வுகள் மாறி ‘96’ல் பார்க்கிறேன். நான் ‘அஞ்சானி’ல் தவறியதை நான் சொன்ன வார்த்தையை வைத்தே என்னை அடித்தார்கள். என் நம்பிக்கையை நான்தானே சொல்லமுடியும்! ஒரு குக்கிராமத்தில் பிறந்து, 4வது படிக்கும்போதே சினிமாவுக்குத்தான் போவேன்னு சொல்லிட்டு வந்தவன் ஒருத்தன் இப்படித்தான் பேசுவான்!
கடனை ஒரு விஷயமா நான் நினைக்கிறதில்லை. 100% எல்லோருக்கும் திருப்பிக் கொடுத்திடுவேன். என்னை அவர்கள் நம்புகிறார்கள். நான் அவர்களை மதிக்கிறேன். சொடக்கு போடுகிற நேரத்தில் எல்லாம் மாறும். மாத்திவிட்டுடலாம். தரமா, சரியா வேலை பார்க்கிறது நம்ம கையில் இருக்கு.
இதோ, அடுத்த படத்திற்கு ரெடியாகிட்டு இருக்கேன். எல்லோரும் என்கிட்டே ஏதோ ஒரு நல்ல தன்மை இருக்குன்னு நினைக்கிறாங்க. என் புன்னகையில் நச்சு இல்லைன்னு நம்புறாங்க. சூசகமா இங்கே சினிமா மாறுது.
50 வயதில் சுகர் பாருங்க, வாக்கிங் போங்கன்னு சொல்ற மாதிரி நமக்கும் ஒரு செக்கிங் வேண்டியிருக்கு. எனக்கே என் படம் பிடிக்கணும். சிலேட்டை சுத்தமா துடைச்சு எழுத வேண்டியிருக்கு. நான் மணி சாருக்கு ரசிகனா இருந்தேன். இப்போ என் மகளுக்கு அவர் படம் பிடிக்குது. மணி சார் பார்க்காத வெற்றியும், தோல்வியும் இல்லை. அவர்கிட்டே இருந்து ஒரு டிரைலர் வந்தால் சினிமா பரபரக்குது.
ஷங்கர் வந்து 25 வருஷமாச்சு. ராஜமெளலி இருக்கார். தொடர்ந்து நம்ம மாஸ்டர்ஸ் இப்படி இருக்காங்க. அவங்களைப் பார்த்திட்டு நாமும் பிழைக்கலாம். ஓர் அழுத்து அழுத்தினா ஓர் இடம் கிடைச்சிடும்.
‘பாகுபலி’ கதை எழுதின விஜயேந்திர பிரசாத் என் வீட்டுக்கு வந்து ‘சண்டக்கோழி மாதிரி கதை ஒண்ணு எனக்குத் தோணலையேனு கடவுள்கிட்ட கேட்டேன்...’னு சொன்னார். அவர் வயது என்ன, காலகட்டம் என்ன... இவங்களைத்தான் எடுத்துக்கறேன். நம்முடைய நம்பிக்கையும் அதனுடைய லெவலும்தான் ஒரு படம்.
நம்ம உடம்பில் என்ன டெம்போ இருக்கோ அது படத்தில் தெரியும். மக்கள் சுத்தமான மனசோட வர்றாங்க. சரியில்லாட்டி சந்தோஷம் இல்லாமல் போறாங்க. மத்தபடி இங்கே வெறுமே இருக்கிற கேலி, கிண்டல் எல்லாமே ப்ளானிங். மிகச்சரியாக ஒண்ணு கொடுத்திட்டால், அந்தப் பேரலையில் இதெல்லாம் அடிச்சிட்டுப் போயிடும். என் பாதி பாரத்தை சகோதரர்கள் சுமக்கிறாங்க. இன்னும் நண்பர்கள், சொந்தக்காரர்கள். குடியிருந்தபோது இருந்த கீழ்வீட்டுக்காரர் ‘உங்களுக்கு என்ன கஷ்டம்...’னு பணம் அனுப்புறார். ‘கொடுக்கும்போது கொடுங்க...’னு கத்தாரிலிருந்து மச்சான் அனுப்புறார். அருமையான அன்புச் சூழலில் வாழ்ந்துகிட்டு இருக்கேன். பணத்தை பெரிதாக நினைச்சதில்லை. அது வரும், போகும். அதுதான் அதுக்கு வேலையே. UTVஇல் இருந்த தனஞ்செயன் ஒரே செக்காக 30 கோடி கொடுத்துப் பார்த்திட்டேன்.
வீட்ல அவங்களுக்கு எதுவுமே தெரியாது. அவங்க தெரிஞ்சுக்கிறதில்லை. கேட்டா நான் மறைக்கறதில்லை. இரண்டும்தான். பல கோடி வந்தாலும், இல்லாமல் போனாலும் மகராசிக்கு குடும்பத்தை சந்தோஷமாக நடத்தத் தெரியும். வீட்டில பசங்க, மனைவி இருந்தால் ஃபேன்தான் ஓடும். ஏன் ஏசி போட்டுத் தூங்கக் கூடாதான்னு கேட்டால், ‘எங்களுக்கு பழகிடுச்சு அய்யா, நீங்க வந்தாதான் ஏசி போடுவோம்...’னு சொல்றாங்க.
கிராமத்துல ஒரே அறை கொண்டதுதான் எங்க வீடு. சத்தியத்துக்கு கட்டுப்பட்டு உங்க வீடு நிக்குதுன்னு சொல்வாங்க. ‘வீடு, கார் வாங்கிட்டே. ஆனால், ஊர்ல அப்ப ஒரு சந்தோஷம் இருந்திச்சே, அது எங்கடா...’னு அம்மா கேட்கும். நான் உயரத்துக்குப் போனாலும் முன்னாடி இருந்த இடத்தைவிட கம்மிதான். மத்தவங்களுக்குத்தான் என் வளர்ச்சி, வீழ்ச்சி எல்லாம் பிரச்னை.
எனக்கு ஒரு சீன் வராம போயிட்டா, ஒரு டயலாக் உட்காராமப் போயிட்டா, ஒரு கவிதை தோணலைனா, ஒரு படத்தை ரசிக்கிற தன்மையை இழந்துட்டாதான் பயமே.வாழ்க்கை என்பது, வாழ்வதா? தொடர்ந்து சாதனைகள் செய்துகொண்டே இருப்பதா? அல்லது மனதுக்குப் பிடித்தமானதைச் செய்துகொண்டே இருப்பதா? கலைஞனுக்குக் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. அவனைச் சுதந்திரமாக அப்படியே விட்டுவிட்டால் எல்லோருக்கும் நல்லது..!
நா.கதிர்வேலன்
ஆ.வின்சென்ட் பால்
|