பகவான்-8



மரணத்தின் ரகசியங்களை உணர ஆரம்பித்துவிட்டேன்!

ரஜனீஷின் உடல்மீது ஊர்ந்த நாகம் அவரது மார்பின் மேல், தன் முழு உடலையும் வட்டமாகச் சுற்றி நிலைகொண்டது. தலையை தூக்கி படமெடுத்தது. ‘புஸ் புஸ்’ஸென்று சப்தம் கொடுத்துக் கொண்டே அவரது கண்களை குத்துவதைப் போல அச்சுறுத்தியது.ரஜனீஷ் உடலை அசைக்கவே இல்லை.

பாம்பைக் கண்டு படை வேண்டுமானால் அஞ்சலாம். பகவான் அஞ்சலாமா?
ஒளி பொருந்திய தன் இரு கண்களையும் நன்கு மலரவைத்து பாம்பின் கண்களை கூர்மையாக பார்த்தார்.ஏழு அல்லது பதினான்கு வயதில் மரணம் என்று ஜோதிடர்கள் கணித்திருந்தார்களே, அந்த மரணம் இப்போதுதான் இந்த நாகப்பாம்பின் மூலமாக வரப்போகிறதா என்கிற குறுகுறுப்புணர்வு மட்டும் அவருக்கு இருந்தது.

‘மரணத்தை மகிழ்ச்சியாக வரவேற்பேன்’ என்று அவரது தாத்தா சொன்னதும் நினைவுக்கு வந்தது. தானும் இச்சூழலில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று விரும்பினார்.அவரது உதடுகள் மெல்ல விரிந்து புன்னகைபுரிந்தன. இந்தப் புன்னகை அவரது தீட்சண்யமான கண்களிலும் வெளிப்பட்டது.பாம்பு அவரைப் பார்க்க, அவர் பாம்பைக் கருணையும், மகிழ்வும் வெளிப்படுத்திய கண்களோடு பார்க்க, மவுனமாகக் கடந்தன சில நிமிடங்கள்.

மரணத்துக்கும், மனிதனுக்குமான சடுகுடு நிகழ்ந்த தருணம் அது. மரணம் மழை மாதிரி. வேண்டாம் என்றால் வீம்பாக வரும். வேண்டும் வா என்று அழைத்தால், வரமறுத்து சிணுங்கும்.மரணிக்க மகிழ்வோடு காத்திருப்பவனுக்கு மரணத்தையே பரிசளிப்பது சரியல்ல என்று அந்த நாகம் எண்ணியிருக்கக்கூடும். வந்த சுவடு தெரியாமல், தன் உடலை நெளித்து வளைத்து அது பாட்டுக்குச் சென்றது.நெருங்கிய மரணத்தை எதிர்கொள்ளுமளவுக்கு தனக்கு நெஞ்சுரம் இருப்பதை ரஜனீஷ் உணர்ந்து கொண்டார்.

மறுநாள் வீட்டுக்குச் சென்று தன் அம்மாவிடம், இந்தச் சம்பவத்தைச் சொன்னார்.“அப்பாடா. பதினான்கு வயது கண்டம் நீங்கியது. உனக்கு இருபத்தோரு வயது ஆகும்போது வரப்போகும் கண்டத்தைப்பற்றித்தான் இனி நான் கவலைப்பட வேண்டும்!”“பயப்படாதே அம்மா. மரணத்தின் ரகசியங்களை நான் உணர ஆரம்பித்துவிட்டேன். மரணத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கும்வரை மரணம் என்னை தீண்டாது. ஆனால், இருபத்தோரு வயதில் நான் நானாக இருக்கமாட்டேன்!”

தீர்க்கதரிசனம் மாதிரி உறுதியான குரலில் சொன்னார் ரஜனீஷ்.இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மேலும் மேலும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். பள்ளியில் மற்ற மாணவர்களோடு அவர் பேசுவது அரிது. இப்போது முற்றிலும் பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஓயாமல் ஆசிரியர்களிடம் தர்க்கம் புரிவார். அதையும் தவிர்க்க ஆரம்பித்தார்.

அவருடைய உள்ளம் பிறப்பின் ரகசியம் பற்றிய விசாரணைகளில் தத்தளித்துக் கொண்டிருந்தது. மரணத்தைவிட பிறப்புதான் துயர்மிக்கது என்று கருதினார். பசி, தூக்கம் போன்ற எந்த உணர்வுகளும் இல்லாமல் எப்போதும் வானத்தை வெறித்துப் பார்த்தவாறே யாரிடமும் பேசாமல் இருந்தார்.

அம்மாவோ, அப்பாவோ ஏதேனும் கேட்டால் அவர்களை உற்றுக் கவனித்தவாறே இருப்பார். திரும்பத் திரும்ப உலுக்கிப் பேசினால் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்வார்.பயந்துபோன பெற்றோர் அவரை ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள்.“ரஜனீஷ், உங்களுக்கு என்ன பிரச்னை?” டாக்டரிடம் ரஜனீஷ்,சகஜமாகவே பேசினார்.

“என் கண்களைப் பாருங்கள் டாக்டர் ஏதேனும் பிரச்னை இருப்பதாக தெரிகிறதா?”
ரஜனீஷின் அப்பா குறுக்கிட்டு சொன்னார். “இவன் வயதுடைய பையன்கள் எல்லாம் துடிதுடிப்பாக இருக்கிறார்கள். இவன் மட்டும் எதையோ பறிகொடுத்ததைப் போல இருக்கிறான்...”

“அப்பா எது என்னிடம் இருந்தது? எதை நான் பறிகொடுத்தேன் என்று நினைக்கிறீர்கள்?”
“இப்படிதான் டாக்டர், இவன் பேசுவது எதுவுமே எங்களுக்கு புரியவில்லை!”ஆனால், டாக்டருக்கு உடனே புரிந்தது. “ரஜனீஷ், யார் உன் குரு?” என்று கேட்டார்.“ஒரு குருவின் உதவியோடு ஆத்மஞானம் கிடைக்குமானால் அவன் அதிர்ஷ்டசாலி. எனக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை!”
“பிறகு?”“நானே சுயதேடலில் ஞானம் பெறுவேன்!”“வேறெந்த ஆசையும் இல்லையா?”

“பிறப்பின் இரகசியத்தையும், ஆன்மாவின் உண்மையையும் அறிவதைவிட வேறென்ன ஆசை எனக்கு இருக்கப்போகிறது?”

“தேடல் எந்த நிலையில் இருக்கிறது?”“என் புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் ஞானக்கண்ணை கண்டறிந்துவிட்டேன்!”
“எப்படி?”

“கல்லூரிக்கு பின்பக்கமாக இருக்கும் தோப்பில் அடிக்கடி தியானம் செய்வேன். ஒரு மரத்தடியில் நான் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தபோது, அந்த மரத்தின் மீதும் நான் இருப்பதாக உணர்ந்தேன். இந்த உணர்வு தந்த பதற்றத்தில் மரத்தின் மீதிருந்து கீழே விழுந்தேன்.

அந்த வழியாக போய்க்கொண்டிருந்த பெண்மணி ஒருவர், கீழே விழுந்த என்னைத் தூக்கி என் புருவ மத்தியில் தேய்த்துவிட்டார். மூன்றாவது கண் திறந்தது. பிரிந்த ஆன்மா மீண்டும் உடலில் இணைந்தது. என் ஆன்மாவை நானே காணும் நிலைக்கு முன்னேறியிருக்கிறேன்!”

டாக்டரும், ரஜனீஷும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து பெற்றோர் மேலும் கலக்கமுற்றார்கள்.“என்ன டாக்டர், நீங்களும் அவனோட சேர்ந்து ஏதேதோ பேசுறீங்க?”
“ஏதேதோ அல்ல. இது ஆன்மிகம். உங்கள் மகன் ஞானத்
தேடலில் இருக்கிறான்”
“புரியலை..?”

“எனக்கும்தான். ஏன், உங்கள்மகனுக்குமே கூட. பெருங்கடலில் சிறுகட்டுமரத்தில் பயணித்து தேடிக்கொண்டிருக்கிறான். என்ன தேடுகிறான் என்று அவனுக்கும் தெரியாது. ஆனால், தேடல் விரைவில் முழுமையடையும் என்றே நம்புகிறேன்!”
“எங்களுக்கு பயமா இருக்கு டாக்டர்”“பயப்பட ஒன்றுமில்லை. சில மருந்து எழுதிக் கொடுக்கறேன். நீங்க கொஞ்சம் வெளியே இருங்க. ரஜனீஷோடு நான் தனியா பேசணும்..!”

பெற்றோர் வெளியேற, டாக்டர் ரஜனீஷை அன்போடு பார்த்தார். “உன்னை நான் புரிந்து கொண்டதை போல, உலகமும் விரைவில் புரிந்துகொள்ள வேண்டும். அதுவரை உன்னை சுற்றியிருப்பவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தாதே என்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன்...”

டாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு ரஜனீஷ், வெளியே வந்தார். டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துகளை வாங்கிக்கொண்டு பெற்றோரும் தயாராக நின்றார்கள்.

அன்றிலிருந்து அம்மாவுக்காக உணவு உண்டார். அப்பாவுக்காக இரவில் நன்கு தூங்கத் தொடங்கினார். கல்லூரியில் சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் பயமுறுத்தாமல் நார்மலாக நடந்துகொள்ளத் தொடங்கினார்.புறம் இப்படியிருந்தாலும், அகம் ஆழமான தேடல்களுக்குள் மேலும் மேலும் முன்னேறிக் கொண்டேயிருந்தது.ஜோதிடர்கள் கணித்த கடைசிக் கண்டமான 21 வயதை ரஜனீஷ் நெருங்கிக்கொண்டிருந்தார்.

கர்மவினையை எப்படி தவிர்ப்பது?

மறுபிறப்பு நம்பிக்கை இருக்கக்கூடிய எல்லா சமூகங்களிலுமே கர்மவினை குறித்த பிரக்ஞை இருக்கும்.இப்பிறப்பில் செய்யக்கூடிய நல்ல செயல்கள்தான் அடுத்த பிறப்பில் நம் வாழ்க்கையை  மகிழ்ச்சியாக்கும் என்றுதான் பெரும்பாலானோர் நம்புகிறோம். இந்த கொள்கையே கூட தவறுதான் என்கிறார் ஓஷோ.“நம் ஒவ்வொரு செயலையும் நல்ல செயலாக நிகழ்த்திட வேண்டும் என்கிற முயற்சியும், சிந்தனையும் எப்போதும் மேலோங்கி இருப்பதால் மட்டும் கர்மவினைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாது.

நம்மால் நல்லதுதான் செய்ய முடியும் என்கிற உள்ளுணர்வு மட்டுமே உங்களுக்கு இருந்தால் போதும். மற்றபடி அச்செயலில் இருந்து நாம் உடனே விலகிவிட வேண்டும்...” என்கிறார் அவர்.மேலும், “விழிப்புணர்வின்றி நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் மட்டுமே கர்மபலனுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

கர்மாவிலிருந்து முற்றிலும் விடுபட வேண்டுமானால் நீங்கள் செய்த செயல்களிலிருந்து முழுமையாக விலகி, அவற்றைப் பற்றி சிந்திக்கவே கூடாது!” என்றும் சொல்கிறார்.நாம் செய்த செயல்களிலிருந்து நாம் எப்படி விலகுவது?
அதை தியானம் கற்றுக் கொடுக்கும்!

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்