இந்தியாவின் முதல் மகளிர் கார் பந்தயக் குழு!



‘‘பொம்பளையாத்தான் இருக்கும்...’’ - இதை எவ்வளவு முறை கேட்டிருப்போம்? ஏன்... நாம் கூட பலமுறை சொல்லியிருப்போம். சாலையில் மெதுவாக ஊர்ந்து செல்லும் காரைப் பார்க்கும்போது, எல்லோரும் அதை முந்திச் செல்லும்போது, இண்டிகேட்டர் போடாமலேயே காரைத் திருப்பும்போது, தேவையில்லாமல் ரிவர்ஸ் எடுக்கும்போது, எடக்கு முடக்காக காரை  ஓட்டும்போது, பார்க் செய்ய தடுமாறும்போது... எல்லாம் அந்தக் காரின் டிரைவர் பெண்ணாகத்தான் இருக்கும் என்பது ஆண்களின் அவநம்பிக்கை.

ஏனென்றால் பெண்களால் சரியாக காரை ஓட்ட முடியாது என்பது அவர்களின் எண்ணம். இதையெல்லாம் உடைத்து கார் பந்தயங்களில் கொடிகட்டி பறக்கத் தயாராகி வருகிறது ஒரு குழு! எஞ்சினியரிங் மாணவி, ஐடி துறையில் பணிபுரியும் பெண், இரண்டு குழந்தைகளுக்குத் தாய், நடிகை என்று கலவையான பெண்கள் சங்கமித்திருக்கும் இந்தக் குழுவின் பெயர் ‘அகுரா ரேஸிங்’.

இந்தியாவின் முதல் மகளிர் கார் பந்தயக்குழுவும் இதுவே. தேசிய அளவில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறாவிட்டாலும், பலரின் பாராட்டுகளைக் குவித்திருக்கிறது இந்தக் குழு.‘அகுரா ரேஸிங்’கை உருவாக்கியவர் மூன்று முறை கார் பந்தயத்தில் தேசிய சாம்பியன் பட்டம் வென்ற சரோஷ் ஹட்டாரியா. இவரின் அம்மா உமா ஹட்டாரியாவும் கார் பந்தய வீராங்கனைதான்.

கடந்த வருடம், ‘பெண்களுக்கான கார் பந்தயக் குழுவை ஆரம்பிக்கப் போறேன்...’ என்று சரோஷ் டுவிட்டியவுடன், இந்தியா முழுவதிலிருந்தும் 190 பெண்கள் கார் ஓட்டும் திறமையைச் சோதிக்கும் தகுதிச் சுற்றில் கலந்துகொண்டனர். அதில் 6 மெயின் டிரைவர்கள், 6 ரிசர்வ் டிரைவர்கள் என்று மொத்தம் 12 பேரைத் தேர்வு செய்து இந்தக் குழுவை வடிவமைத்திருக்கிறார் சரோஷ். தேர்வானவர்களில் யாருமே கார் பந்தய பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் இல்லை என்பது ஹைலைட்.

‘‘இந்தியாவுல மோட்டார் ஸ்போர்ட்ஸூக்கான இடமே இல்லை. அதுலயும் கார் ரேஸ் பக்கம் யாருமே எட்டிக்கூட பாக்கறதில்லை. சல்லடை வைச்சு சலித்தாலும் ஒரு பொண்ணைக் கூட இதுல நீங்க கண்டுபிடிக்க முடியாது. இது நமக்கு அவமானம் இல்லையா? கார் ரேஸ் என்ன ஆண்களோட கோட்டையா? பெண்களும் கார் ரேஸ்ல கலந்துக்கணும். இது என் அம்மாவோட கனவு.

அவங்க ரேஸ்ல கார் ஓட்டுறதைப் பாத்து வளர்ந்தவன் நான். அம்மா எப்படி எனக்கு இன்ஸ்பிரேஷனோ அதுமாதிரி மத்தவங்களுக்கு இன்ஸ்பிரேஷன் கொடுக்குற பெண்களை உருவாக்கணும். அதுக்குத்தான் இந்த டீம்...’’

மலர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார் சரோஷ். குழுவைப் பராமரிப்பது, போட்டியில் கலந்துகொள்வது உட்பட அனைத்து செலவுகளையும் ஸ்பான்சர் மற்றும் சொந்தப் பணத்தில் சரோஷே பார்த்துக்கொள்கிறார். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இதற்காக ரூ.80 லட்சம் செலவழித்திருக்கிறர்!
‘‘கனவு மாதிரியிருக்கு. டீம்ல செலக்ட் ஆன பிறகுதான் ரேஸ் டிராக்கையே முதன் முதலா நேர்ல பார்த்தேன்.

நானும் நேஷனல் லெவல் கார் ரேஸ்ல கலந்துக்க போறேன்னு நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. ஷூட்டிங்கை கூட விட்டுட்டு பயிற்சியில ஈடுபடுறேன்...’’ விழிகளை உருட்டி உதட்டில் புன்னகை மிளிர பேசுகிறார் நடிகை மனிஷா கெல்கர். இந்தி மற்றும் மராத்திய திரைப்பட உலகில் பிரபலமானவர் இவர்.

‘‘டீம்ல இடம் கிடைச்சதே ரொம்ப பெரிய விஷயம். வேலையையும் பார்த்துட்டு பந்தயத்துக்கும் தயாராவது கடினமா இருக்கு. ஆனாலும் பேலன்ஸ் பண்ண முடியுது. தேவையானபோது லீவ் கொடுக்குற என் நிறுவனமும் நண்பர்களும் ரொம்பவே உறுதுணையா இருக்காங்க...’’ என்கிறார் மிரினாளினி. ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் பெங்களூரைச் சேர்ந்தவர்.

‘‘எங்க டீமைப் பத்தி கேள்விப்படுற எல்லோரும் கவன ஈர்ப்புக்காக நாங்க ஏதோ வித்தை காட்டுறோம்னு சொல்றாங்க. ஆனா, எங்களுக்கு இருக்குற அழுத்தம், உடல் வலி, வேதனை எதுவுமே அவங்களுக்குத் தெரியாது. ஆறு மாசமா 200 பேரோட போட்டி போட்டுத்தான் இந்த இடம் எங்களுக்குக் கிடைச்சிருக்கு. நாங்க ஜெயிக்கும்போது இந்த ஜிகுனா பேச்சுகள் எல்லாம் காணாமல் போகும்னு நம்புறேன்...’’ என்று கறாராகச் சொல்கிறார் மேகா, இவர் இறுதியாண்டு எஞ்சினியரிங் மாணவி.

கலிபோர்னியா வாசியான லியாவுக்கு வயது 22. விடுமுறையில் பாட்டியைப் பார்க்க இந்தியா வந்திருக்கிறார். ‘அகுரா ரேஸிங்’கைப் பற்றிக் கேள்விப்பட்டு தகுதிச்சுற்றில் கலந்துகொண்டவர், குழுவிலும் இடம்பெற்றுவிட்டார். ‘‘ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. விபத்து போல நடந்த விஷயம் இது. ஆனா, யாருக்கும் அடி படலை. இனி அடிக்கடி இந்தியாவுக்கு வருவேன்...’’ என்று சிரிக்கிறார் லியா.

‘‘சின்ன வயசுல இருந்தே கார் ரேஸ்னா எனக்கு ரொம்ப பிரியம். ஆனா, அதுல எப்படி கலந்துகொள்றதுனு கூட எனக்குத் தெரியாது. ஒரு நாள் என் அண்ணன் ‘அகுரா ரேஸிங்’ செல்க்‌ஷன் பத்தி சொன்னார். உடனே கிளம்பிட்டேன். இப்ப அடுத்த மாசம் நடக்குற நேஷனல் ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தயாராகிட்டு வர்றேன். இதுக்கு இடையில குடும்பத்தையும் நான் கவனிச்சுக்கணும்...’’ என்கிற டயானாவும், இன்னொரு வீராங்கனையான நடாஷாவும் இந்தக்குழுவில் அம்மாக்கள்.

இருபது வயதான ஷிவானிதான் ‘அகுரா ரேஸிங்’கின் கடைக்குட்டி. மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவி இவர்.‘‘மத்த விளையாட்டுகள் மாதிரி ஆண்களுக்குத் தனியா, பெண்களுக்குத் தனியான்னு கார் ரேஸ்ல கிடையாது. பெண்கள் ஆண்களோட போட்டி போட்டாகணும். அதுக்கு புரொஃபஷனல் ரேஸர் மாதிரி கடுமையா பயிற்சி செய்யணும்.

கார் ரேஸ்ல பெண்களைப் பங்கு பெற வைக்கறது மட்டும் என் நோக்கம் அல்ல; அவங்க ஆண்களைத் தோற்கடிக்கணும். புரொஃபஷனல் ரேஸரா  மிளிரணும்...’’ சரோஷ் சொல்லும்போதே கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறது அகுரா ரேஸிங் டீம்.                                    

த.சக்திவேல்