ஒரு நாள் கூட இளையராஜா இல்லாமல் கடந்து போக முடியாது...



லயிக்கிறார் ‘96’ இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா

‘‘என்ன ஆளை பிடிக்கவே முடியல... சிக்கவே மாட்டேங்றீங்க!’’ இதுதானே உங்க முதல் கேள்வி? எப்போதைக்குமான இனிமையில் உதடு பிரியாத புன்னகையில், சிநேகம் ததும்பும் கண்களில் சிரிக்கிறார் கோவிந்த் வஸந்தா.

 ‘96’, ‘சீதக்காதி’ என முரசுகொட்டி தமிழ் மக்களை வசீகரித்து கட்டிப் போட்டிருக்கும் இசையமைப்பாளர். அவரது இசைபோலவே பேச்சும் ரிதமே.
‘சீதக்காதி’ உங்களுக்குக் கிடைத்த பெரிய பொறுப்பில்லையா...பாலாஜி தரணிதரன் அண்ணாகூட வொர்க் பண்றதுசந்தோசமா இருக்கும். அவரே ஒரு Intense Character. ரொம்ப வருஷமா பழக்கம். இந்த ஸ்டோரி, கேரக்டர், அதன் உருவாக்கமெல்லாம் அவரிடம் நிகழ்ந்தபோதே எனக்குத் தெரியும். புதுசா இருந்தது.

கலை, பிறகு தொடர்பான வாழ்க்கையைச் சொல்ற படம். இவ்வளவு ஆழமா இருக்கும்போது நான் கவனக்குறைவா விடக்கூடாது. எங்க சித்தப்பா கர்நாடக இசைப்பாடகர். அப்ப நான் நேரடியாக் கத்துக்கல. ஆனால், அந்தப் பாட்டுகளும், அதோடு இணைந்த இசையும் என் காதுகளில் விழுந்துக்கிட்டே இருக்கும். அதுல ஒரு ஹார்மனி தெரியும். என்னால் பெயரிட முடியாத ராகம் கேட்கும்.

அப்புறமா ராக், ராப் எல்லாம் கேட்டேன். வெஸ்டர்ன் கிளாசிக்கில் நுழைஞ்சிப் பாத்தேன். இது 72 வயதான ஐயா பத்தி சொல்லும்போது கர்நாடிக் பேக்கரவுண்டை பயன்படுத்திருக்கேன். நான் இதுவரை பண்ணினதெல்லாம் காதல்தான்.  ஆனால், ‘சீதக்காதி’ வேற. தரணிதரன் என்னிடம் வெளிப்படையாக இருந்தார். எல்லா சந்தேகங்களையும் பேசி, அருகிருந்து செய்ததால் இவ்வளவு அழகா வந்திருக்கு.
நீங்க இளையராஜாவோட தீவிர ரசிகரில்லையா..?

நம்மோட வாழ்க்கை அவரை உணர்ந்தும், புரிந்தும்தான் நடந்துக்கிட்டே இருக்கு. ஓரு நாள் கூட இளையராஜா இல்லாமல் கடந்துபோக முடியாது. தினப்படி வாழ்க்கையில் அவரை நாம சேர்த்துக்கிட்டோ, ஞாபகப் படுத்திக்கிட்டோதான் இருக்கோம்.

அவர் மெலடிகள் அவ்வளவு உயிர்த் தன்மையானது. குத்துப்பாட்டில்கூட அதன் ஊடாக மெலடி ஸ்ட்ராங்கா இருக்கும். நானொரு வயலினிஸ்ட். அவர் பாடல்களை வாசிக்க அவ்வளவு இஷ்டமா இருக்கும். நான் அவர் முன்னாடியே ஒரு விழாவில் வாசிச்சேன். எனக்கோ பயங்கரடென்ஷன். முதுகுப்பக்கமா வந்து ‘ரொம்ப நல்லாருக்கு...’னு ரெண்டு வார்த்தை சொன்னார்.  

மறக்கமுடியாத Moment அது. சொல்லப்போனால் அவர் ஒரு மார்க்கம். அவரில் பயணித்து நிறையபேர் இலக்கை அடைந்திருக்கிறார்கள்.
மெலடிதான் இஷ்டமா?மெலடிதான் ஆன்மாவை ரொம்ப உரசும். அதில் பாட்டுக்கும், கேட்கிறவனுக்கும் ஒரு கனெக்‌ஷன் வருமில்லையா, அதுக்கு ரொம்ப பாடுபடுவேன். மெலடியை நம்புவேன். அதற்கு முன்னுரிமை தருவேன்.

முதலில் மெலடியை கம்போஸ் பண்ணிட்டுதான் அடுத்த வேலையே. மெலடி நீர் ஆவியாதல் மாதிரி ஒரு கொதிப்புப் புள்ளியில் புத்தியில் தெளிவா தங்கும்.இளையராஜா காலை 7 மணிக்கே தொடங்கிடுவார்.

ரஹ்மானுக்கு இரவுதான் உலகம். நீங்க எப்படி?நான் வெளியிலேயே போகவே மாட்டேன். 24 × 7 நேரமும் ரூமுக்குள்ளதான் இருப்பேன். ஜிம்முக்குப் போயிட்டு வந்தபிறகு இந்த அறைதான். நான் தனியா வேலை பார்ப்பேன். அஸிட்டெண்ட், ஹெல்பர்னு யாரும் கிடையாது. வயலினும் நானே பாடுவதும் நானே.

என் மனைவி கம்போஸிங்கில் இருப்பாங்க. வீடுதான் என் கம்போஸிங் நடக்குற இடம். அதனால் எப்ப வேண்டுமானாலும் வேலை பார்த்துக்கிட்டே இருக்கலாம். பத்து வருஷமா இப்படி உள்ளேயேதான் இருக்கேன். ஒரு இசை தயாராகி முடிஞ்சதும் கேக்கும்போது ஹேப்பியா இருப்பேன். அது ஹிட், ஹிட் ஆகல, அல்லது யாருக்குமே பிடிக்கலைன்னு சொன்னாக்கூட எனக்கு ஹேப்பிதான்.

ஒரு பாடலை உருவாக்கியதே எனக்கு மகிழ்ச்சியா இருக்கும். Making Something என்ற அளவிலேயே சந்தோஷமாகிடுவேன். இப்படி பாடல் தயாராவதில் இளையராஜா, ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், அப்பா அம்மா, என் வீட்டு நாய்க்குட்டி வரைக்கும் இதில் பாதிப்புஇருக்கும். வேற மாதிரி இருக்கீங்க... உங்களப் பத்தி இன்னும் கொஞ்சம்...

அடிப்படையில் நான் withdrawn man. கூச்ச சுபாவம் உள்ளவன். நான் இன்னும் இங்க பேசவே இல்ல. எனக்கு பேச வராது. ஒரு விஷயத்த சொல்லி புரியவைக்க என்னால முடியாது. நான் அந்த சமயம் எங்கோ போயிட்டிருப்பேன். மனசு அங்க இங்கன்னு பறந்துகிட்டே இருக்கும்.

ஒரு தடவை ஜிம்முக்குப் போகும்போது பைக் ரிப்பேர். வீட்டுக்கு வர ஆட்டோக்காரர் கிட்டப்  பேசணும். அதை எப்படி சரியாப் பேசணும்னு யோசிச்சிக்கிட்டே வீட்டுக்கு நடந்தே வந்துட்டேன்!ரொம்ப நாளாக  டிவியே பாக்கல. மியூசிக் அரேஞ்ஜ்மென்ட் பண்ற வேலை பார்த்திருக்கேன். படிப்பு பெருசா நமக்கு வராதுன்னு தெரிஞ்சிப் போச்சு. பொதுவா பாடல்கள்னா நாலு நிமிஷத்தில் முடியணும்னு எழுதப்படாத விதியிருக்கு.

‘96’ல் என் பாடல்கள் 6 நிமிஷம் வரைக்கும் போச்சு. மூட் செட் பண்ண டைம் எடுத்ததை பிரேம்குமார் புரிஞ்சிக்கிட்டதெல்லாம் அற்புதம்.எல்லா இசையமைப்பாளர்களும் பக்தி மயமாகவே இருக்காங்க... என்ன காரணம்?

நான் எப்போதும் பகுத்தறிவை முன்வைத்தே செயல்படுவேன். எந்த நம்பிக்கையும் இல்லாத காரணத்தால் எதிலும் சுதந்திரமா இருக்கேன். மூட நம்பிக்கை, நாள் கிழமை பாக்குறது கிடையாது. நான் ஒரு பகுத்தறிவாளன்னு அப்பா அம்மாவுக்கு கூட தெரியாதுன்னு நெனைக்கிறேன். மனைவி கோயிலுக்கு கூப்பிட்டா போவேன். அவங்க மனசு சங்கடப்பட பிடிக்காது. பிடிக்காத படத்தப் பாக்குறதில்லையா அதுமாதிரி.

Common Senseயை மட்டுமே நம்புவேன். ஆனால், இதில் விசாரணை, விவாதம் எதையும் செய்யமாட்டேன்.இப்ப மியூசிக் டைரக்டரா ஆன பிறகு எந்தப் பாடலைக் கேட்டா அதுக்கு மியூசிக் பண்றது கஷ்டம்னு தோணுது?

‘பன்னீர் புஷ்பங்க’ளில் ‘கோடைகால காற்றே...’ பாடல். ராஜா சார் பாட்டு. இந்தப் பாடலை அது கம்போஸ் ஆகிவந்த விதத்தை, அரேஞ்ஜ்மென்ட்டை இது வரைக்கும் என்னால தாண்டிப்போக முடியல.

அது வேற லெவல்ல வேற உலகத்துல இருக்கு. அதனோட டுவிஸ்ட், கேம் சேஞ்சை ஃபீல் பண்ணியும் இதுவரைக்கும் கிராஸ் பண்ண முடியல. டுவிஸ்ட், கேம் சேஞ் எதையும் உணராத விதத்தில் flow கிரியேட் பண்ற அந்த மூட் எங்கயோ போகுது. என் விரல் எல்லா நோட்ஸையும் தொட்டுக்கிட்டே போகுது. அது யுனிவர்சல் மாஸ்டர் பீஸ். இப்ப அந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்க, நான் சொன்னது புரியும்.                                

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்