COFFEE TABLE



சாரா ஹேப்பி!

சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கிறார் சாரா அலி கான். பாலிவுட் ஸ்டார் சயிஃப் அலி கானின் மகள் என்ற எந்த பந்தாவும் இவரிடமில்லை. சாரா அறிமுகமான ‘கேதர்நாத்’ சர்ச்சைகளைத் தாண்டி வசூலில் பட்டையைக் கிளப்பியதே அந்த துள்ளலுக்குக் காரணம்.

அடுத்து ரன்வீர் சிங்குடன் ஜோடி சேர்ந்திருக்கும் ‘சிம்பா’வில் இவர் செம ஸ்கோர் அடித்திருப்பதாக பாலிவுட்டில் தகவல் கசிந்திருக்கிறது. சினிமாவில் நுழைந்த சில நாட்களிலேயே சாராவிற்கு இன்ஸ்டாவில் இரண்டரை லட்சம் ஃபாலோயர்கள். ஒரு ஸ்மைலியை வீசினாலே அவர் பக்கத்தில் ஆயிரக்கணக்கான ஹார்ட்டின்கள் துடிக்கின்றன!

Funny Kids

உயிரியல் பூங்காவிற்குச் செல்கின்ற குழந்தைகள், அங்கிருக்கும் பறவைகள், விலங்குகளோடு வேடிக்கையாகப் பழகும் தருணங்கள் அழகானவை. காண்பவர்களை நெகிழச் செய்யும் அந்த மொமன்ட்டுகளை வீடியோ பதிவாக தொகுத்துள்ளனர் ஃபேஸ்புக்கின் ‘So Funny’ பக்கத்தினர். அதில் ‘Kids and Zoo Animals’ என்ற வீடியோவை 19 லட்சம் பேர் பார்த்தும், 8 லட்சம் பேர் பகிர்ந்தும் வைரலாக்கியுள்ளனர்!

மீண்டும் நோக்கியா

புத்தாண்டில் 6 ஜிபி ரேமுடன் களமிறங்குகிறது ‘நோக்கியா’. 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 3,500mAh பேட்டரி திறன், டிஎஸ்எல்ஆர் கேமராவை மிஞ்சும் இரண்டு பின்புற கேமராக்கள். 64 ஜிபி இன்பில்ட் மெமரி.வேண்டுமானால் 400 ஜிபி வரைக்கும் மெமரியை அதிகரித்துக்கொள்ளும் வசதி, 178 கிராம் எடை என கவர்ச்சியான வடிவமைப்பில் தயாராகிவிட்டது ‘நோக்கியா 8.1’ ஸ்மார்ட்போன். விலை இன்னும் முடிவாகவில்லை!

டாஸ்மாக் பாண்ட்!

விநோதமான ஆய்வுகள் சில நேரங்களில் ஹிட்டாகி ஆச்சர்யப்படுத்துவதுண்டு. அப்படி ஒரு ஆச்சர்யம் இது. ‘‘ஜேம்ஸ்பாண்ட் நல்லவரா… கெட்டவரா? அது உங்கள் விருப்பம். ஆனால், அவர் ஒரு பெருங்குடிகாரர்..!’’ என்கிறது சமீபத்திய ஆய்வு.

‘‘பாண்ட் மது அருந்திய பிறகே சாகசங்களிலும் லீலைகளிலும் இறங்குவார். மற்ற நேரங்களில் அவர் ஒரு குழந்தை மாதிரி. உதாரணமாக, அவரின் அதிரடியான சண்டை, மின்னல் வேகத்தில் கார் ஓட்டுவது, சூதாட்டம், வில்லியுடன் ரொமான்ஸ் என சகல விஷயங்களும் அவர் மது அருந்திய பிறகே நடக்கிறது...’’ என்கின்றனர் ஆய்வாளர்கள். ‘‘ஜேம்ஸ்பாண்ட் ஒரு கதாபாத்திரம்தானே. அவர் என்ன நிஜ மனிதரா? இதுக்காக எதற்கு நேரத்தை வீணடிக்கிறீர்கள்...’’ போன்ற எதிர்க்குரலும் வலுத்திருக்கிறது.                               

102 வயதில் ஸ்கை ஸ்டைவ்

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் தனது வேகத்தைக் குறைக்க, கதவைத் திறந்துகொண்டு அசால்ட்டாக ஸ்கை ஸ்டைவ் அடிக்கிறார் ஐரீன்.

சில வருடங்களுக்கு முன்பு ஐரீனின் மகள் மோட்டார் நியூரான் நோயினால் பாதிக்கப்பட்டு சரியான சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்துவிட்டார்.

தன் மகளைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேகரிக்கவே ஸ்கை ஸ்டைவ் சாகசத்தை செய்திருக்கிறார் ஐரீன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த வீராங்கனையின் வயது 102. உலகிலேயே அதிக வயதில் ஸ்கை ஸ்டைவ் அடித்த சாதனையையும் தன்வசப்
படுத்திவிட்டார் ஐரீன்.

குங்குமம் டீம்