ஹோம் அக்ரி-37



மண்ணில்லாமல் வீட்டில் செடி வளர்க்கும்  எளிய முறைகள்!

தானாகவே நீர் உறிஞ்சிக்கொள்ளும் ஹைட்ரோபோனிக் (நீர்நிறை வேளாண்மை) முறை பற்றி பார்த்துவிட்டோம். இப்போது மற்ற இரு முறைகளைப் பார்ப்போம்.

நாம் இந்த தொடரில் விளக்கும் முறைகள் அனைத்தும் வீட்டில் பயன் படுத்தும் எளிய முறைகளே. இதே முறைகளைத் தோட்டத்திலும் பயன்படுத்தலாம். தோட்டத்தில் வணிக ரீதியாக பயன்படுத்தும்போது சில தானியங்கி கட்டுப்பாடுகளை சேர்த்துக்கொள்ளலாம். இதனால் குறைந்த செலவும் குறைந்த ஆள் தேவையும் இருக்கும்.

மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் முறை NFT (Nutrient Film Technique) என்று சொல்லக்கூடிய முறையில் நீர்நிறை கரைசல் (hydroponic solution) செடிகளின் வேரைத் தொடும்படி சுழற்சியில் வைக்கப்படுகிறது. இதற்கு குழாய் போன்ற கலன்களும், இதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட செவ்வகக் குழாய்களும்  பயன்படுத்தப்படுகின்றன.

இந்த முறையில் ஒரு கொள்கலனிலிருந்து நீர்நிறை கரைசல் இந்த குழாய் வழியாக செலுத்தப்படுகிறது. கொள்கலனில் இருக்கும் கரைசல் தொடர்ந்து காற்றேற்றம் (aeration) செய்யப்படுதலால் ஆக்ஸிஜன் நிறைந்ததாக இருக்கிறது. வேர்களுக்கு ஆக்ஸிஜன் தேவையென்பதால் இது முக்கியமாகிறது. இதனால் வேர்கள் எப்போதும் நீரில் மூழ்கி இருப்பதில்லை.

அவ்வப்போது பாய்ச்சப்படும் கரைசலில் நனைந்து பின்னர் அந்த ஈரத்தின் ஆதாரத்திலேயே வளர்கின்றன. இந்த முறையில் தொடர்ந்து கரைசலின் pH மற்றும் மற்ற ஊட்டங்களின் அளவுகள் கண்காணிக்கப்பட முடிவதால் நல்ல முறையில் செடியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம்.

இந்த முறையும் வீட்டில் செய்யக்கூடியதுதான் என்றாலும் கூட, இதைவிட எளிமையான வழிகளில் வீட்டுச்சூழலில் இந்த முறையை பின்பற்ற முடியும் என்பதால் அந்த முறைகளைப் பற்றி நாம் பார்ப்போம்.இரண்டாவது எளிமையான முறை அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் மிகவும் எளிமையானது.

ஒரு தொட்டியில் நீர்நிறை கரைசலை எடுத்துக்கொள்ள வேண்டும். தொட்டியின் மூடியில் செடியின் தண்டும் வேரும் உள்ளே புகுமாறு துளையிட வேண்டும். பின்னர் சிறிய ஒரு கலனிலோ, இதற்காகவே வரும் ‘net pot’ போன்றவற்றிலோ, நாற்றின் வேர்ப்பகுதி நன்றாக கரைசலில் நனைந்திருக்கும்படி செடியை அமர்த்தவேண்டும். தேவைக்கு ஏற்றபடி காற்றேற்றம் தரலாம்.

பெரும்பாலான தருணங்களில் காற்றேற்றம் தேவைப்படுவதில்லை. செடி ஸ்திரமாக இருப்பதற்காக கலனில் கற்களோ, தென்னை நார்க்கழிவோ மற்ற பொருட்களோ இடலாம். இந்த முறையில் நீர் அளவு குறையக் குறைய ஊற்றிக்கொள்ள வேண்டும். அவ்வப்போது கரைசலின் pH மற்றும் TDS அளவை கண்காணித்து, தேவைப்பட்டால் மொத்தக் கரைசலையும் மாற்றி விட வேண்டும்.

கரைசல் இருக்கும் கலன் நேரடி வெளிச்சத்தில் இருந்தால் பாசாணம் வளர வாய்ப்புள்ளதால், அதை ஒளி புகாதவாறு மூடி வைக்கவேண்டும்.
இங்கு பிரசுரமாகியிருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள். ஒரு இரண்டு லிட்டர் பிளாஸ்டிக்டப்பா கரைசலால் நிரப்பப்பட்டிருக்கிறது. அதன் மேல் மூடியாக தெர்மோகோல் வைக்கப்பட்டிருக்கிறது. செடிகளைத் தாங்குவதற்காக தண்ணீர் பாட்டிலின் மேற்பகுதி உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டிலின் மூடியில் துளையிடப்பட்டு அதன் வழியாக செடி செருகப்பட்டிருக்கிறது.

முதலில் ஒன்றிரண்டாக இருந்த வேர்கள் சில வாரத்திற்குப் பின் இப்போது கொத்துக் கொத்தாக நன்றாக வளர்ந்திருப்பதைக் காணலாம். இந்த முறையில் காற்றேற்றம் தேவையில்லை. காற்று இல்லாமல் செடி வாடுவதாக தெரிந்தால் சிறிது நேரம் மீன் தொட்டியில் பயன்படுத்தும் air pump மூலமாக காற்றை நீரில் செலுத்தலாம்.

இந்த தொட்டி வெளிப்புறத்திலேயே சூரிய ஒளி படுமாறு வைக்கப்பட்டிருக்கிறது. நான்கு வாரங்களில் இரண்டு முறை முக்கால் லிட்டர் கரைசல் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதுவரை எந்த வித நோய் தாக்குதலோ, பூச்சி தாக்குதலோ, ஊட்டச்சத்து குறைபாடோ தென்படவில்லை. சாதாரண வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் மற்ற செடிகளுக்கு நடுவிலேயே வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த முறை அனைத்து வகையான கீரை வகைகளுக்கும் மிக உகந்த முறை. கலனின் கொள்ளளவிற்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட செடிகளை வளர்க்கலாம். இந்த இரண்டு லிட்டர் டப்பாவில் தக்காளி மற்றும் கொடிப்பசலி வைக்கப்பட்டிருக்கிறது. தக்காளி பெரிதாகும் போது வேறு கலனுக்கு மாற்றிக் கொள்ளலாம்.இந்த முறையை பின்பற்றும் போது கீரை போன்ற சிறிய மற்றும் குறுகிய காலச் செடி வகைகளை வளர்க்க நாம் உபயோகிக்கும் குடிநீர் பாட்டில்களையும், குளிர்பான பாட்டிகளையும் கூட பயன்படுத்தலாம்.

பாட்டிலின் புனல் போன்ற பகுதியை முதலில் வெட்ட வேண்டும். பாட்டில் மூடியிலும், அதனையொட்டியுள்ள பக்கங்களிலும் துளையோ கீறலோ செய்து வேர்கள் நீரைத் தொட ஏதுவாக அமைக்க வேண்டும். பின்னர் புனல் போன்ற பகுதியின் மேற்புறத்தில் செடியினை வைக்க வேண்டும். வேர் மூடியின் துளை வழியாக நீர்நிறை கரைசலைத் தொடுமாறு வைக்கவேண்டும். செடியின் பிடிமானத்திற்காகக் கற்களையோ மற்ற பொருட்களையோ கொண்டு நிரப்பலாம்.

கரைசல் அளவு குறையக் குறைய நிரப்பிக்கொள்ள வேண்டும். இதே முறையை 2 லிட்டர் பாட்டிலில் செய்யும் போது தக்காளி, மிளகாய்ச் செடிகளையும் வளர்க்கலாம். தண்டுக் கீரை, புளிச்சைக் கீரை போன்றவற்றிற்கு ஒரு பாட்டிலில் ஒரு செடியும், மற்ற சிறியவகைக் கீரைகள் என்றால் 3 - 4 செடிகளும் வைக்கலாம்.

NFT (Nutrient Film Technique) முறையில் பயன்படுத்தப்படும் குழாய் அமைப்பைப் கரைசலுடைய சுழற்சி இல்லாமலும் கூட பயன்படுத்தலாம்.
இந்த முறையில் குழாயின் மேற்புறத்தில் சிறு துளைகள் செய்து அதில் நாற்று வைப்பதற்கான கலனைப் பொருத்தி செடிகளை நடலாம். கரைசல் அளவும் தரமும் மாறுவதைக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்த முறையின் பெரிய ஆதாயம் இதை ஒன்றின் மேல் ஒன்றாகவோ அல்லது முக்கோண வடிவில் மேற்புறமாக இருக்குமாறு அமைக்க முடியும்.

உயரமான அமைப்பாக இருக்கும்போது குறைந்த இடத்தில் நிறைய செடிகளை வளர்க்கமுடியும். மேலும் மின்விளக்கின் வெளிச்சத்தில் கட்டடத்தின் உற்புறம் வளர்க்க வேண்டி யிருந்தால் இந்த முறை மிகவும் உகந்ததாக இருக்கும். மின் விளக்கிற்கும், வெளி உபயோகத்திற்கும் உகந்த இன்னொரு முறை, பாரல்களை (barrels) உபயோகப்படுத்துவது.

இது மிகமிக எளிதான முறை. மொட்டை மாடியிலும், தோட்டங்களிலும் நீர்நிறை வேளாண்மை சிறிய அளவில் செயல்படுத்தவும், பெரிய அளவில்
 விரிவு படுத்தவும் சரியான வழி. 200 லிட்டர் பிளாஸ்டிக் பாரல்களை பக்கவாட்டில் வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் இதில் கரைசலை நிரப்பி அதன் மேல் தெர்மோகோல் போன்ற மிதக்கும் பொருளை வைத்து பின் அதன் மேல் செடிகளை வைக்கலாம்.

காற்றேற்றம் தருவதற்கும், கரைசலை எளிதாக சோதனை செய்வதற்கும், செடிகளை பராமரிப்பதற்கும் எல்லாவற்றிற்கும் எளிய வழி இது.  நீர்நிறை வேளாண்மையின் மற்ற நுணுக்கங்கள் என்னென்ன?

(வளரும்)

 மன்னர் மன்னன்