கவிதை வனம்



கடந்த நிகழ் காலம்  

எதுவென்று புரியாத
கேள்விக்குறி போல்
வளைந்து நிற்கும்
வாழ்க்கையில்
ஒரு புள்ளியாக நிற்கிறது
இந்த நிகழ்காலம்
புள்ளி நகர்ந்து
எதிர்காலத்தில்  
முன்னேறும் போதெல்லாம்
நியூட்டனின்
அனைத்து விதிகளும்
ஒருங்கே அரங்கேறி
எப்பக்கமும் மீள முடியாமல்
மரத்துக்கும்
ஆப்பிளுக்குமிடையே
புவிஈர்ப்பு
விசையாய் அல்லாடுகிறது
வயதான இறந்த
காலமொன்று
ஏங்கிப் புலம்புகிறது
தன் இளமையான
நிகழ்காலத்தை நினைத்து.

- திருமதி பிரியா

விற்று தீராத பலூன்கள்  

தோள் நிறைய
விற்றுத் தீர்ந்திடாத
பலூன்களை
சுமந்து செல்லும்
கிழவர் முகத்தில்
நிழலாடும்
மகிழ்ச்சியின்
ரேகைகளின்
ஊடாக மெல்ல
எட்டிப்பார்க்கிறது
எதிர் வீட்டு
மழலை முகம்.

- பாலு விஜயன்