மேகதாது...



வஞ்சிக்கும் மத்திய அரசு... தவிக்கும் தமிழக மக்கள்!

மேகதாதுவில் அணை கட்ட முழுமூச்சுடன் கர்நாடக அரசு இறங்கியிருக்கிறது. இதற்கு மத்திய அரசு இரு கை உயர்த்தி ஆசிர்வதித்திருக்கிறது!
ஏற்கெனவே கஜா புயலால் நிலைகுலைந்துபோயிருக்கும் டெல்டா மக்கள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதைப் போல துடித்துக்கொண்டிருக்கிறார்கள். நமது முதல்வரோ பிரதமரிடம் பேசுகிறேன் என்கிறார். ஆக்கப்பூர்வமாக எந்த முன்னேற்றமும் இல்லை.

மேகேதாட்டூ என்றால் ‘ஆடு தாண்டுதல்’ என்று பொருள் வரும். உச்சிக் காவிரியை ஆடு தாண்டும் காவிரி என்பார்கள். சமவெளிகளில் கடல் போல் பிரவாகித்து ஓடும் காவிரித்தாய், ஓர் ஆடு தாண்டிவிடும் அகலம்தான் அந்த மலைப் பகுதிகளில் ஓடிக் கொண்டிருக்கிறாள். கடந்த 2007ம் ஆண்டிலேயே கர்நாடக அரசு மேக்கேதாட்டூவில் அணை கட்ட திட்டமிடத் தொடங்கிவிட்டது.

காவிரி நடுவர்ஆணையத்தின் இறுதித் தீர்ப்பின்போக்கு தமிழக அரசுக்கு சாதகமாகவே வரும், இதனால் கர்நாடாகம் தமிழகத்துக்கு நீர் தர வேண்டிய சூழல் உருவாகும் என அப்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டார்கள்.

அதுபோலவே அந்தத் தீர்ப்பும் வர, உடனடியாக உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து வழக்கை இழுத்தடிக்கவிட்டு அந்த இடைவெளியில் புதிய அணை கட்டும் வேலையில் இறங்கிவிட்டது கர்நாடகா.சரி, ஏன் மேக்கேதாட்டூவில் அணை கட்ட வேண்டும்?நமது மேட்டூர் அணைக்கு வரும் காவிரி நீர் என்பது கர்நாடக அணைகளில் நிரம்பி வழியும்போது வரும் உபரிதான்.

குறிப்பாக, கர்நாடகாவின் கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகள் நிரம்பினால் வரும் உபரி நீரே நமது மேட்டூர் அணையின் நீர் வரத்துக்கு ஆதாரம். இந்த இரு அணை நீர் வரத்துகளும் இணைந்து வரும் இடத்தில் அணைகளைக் கட்டிவிட்டால் நமக்கு அனுப்ப வேண்டிய நீரை அவர்களே பிடித்துவைத்துக் கொள்ளலாம் என்பதே இந்த புதிய அணை கட்டப்படுவதன் நோக்கம்.

காவிரி விவகாரத்தில் நம் தரப்பில் உண்மை இருக்கிறது என்பது மத்திய அரசுக்கும் தெரியும். கர்நாடகா அரசுக்கும் தெரியும். அப்படியிருந்தும் ஓரவஞ்சனை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதியளித்ததே மாபெரும் அநீதி. கடந்த 1976ல் தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளை நவீனப்படுத்தும் பணிக்காக தமிழக அரசு உலக வங்கியிடம் ஆயிரம் கோடி ரூபாய் கடன் கேட்க முனைந்தபோது, அப்போதைய மத்திய அரசு அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தது.

அப்போது அது சொன்ன காரணம், காவிரி நதிநீர் விவகாரம் நீதிமன்றங்களில் இருக்கும்போது இப்படியான பணிகளுக்கு ஒப்புதல் தர முடியாது என்பதே. அப்படியானால் இந்தத் திட்டத்துக்கு மட்டும் இப்போது எப்படி ஒப்புதல் அளிக்கிறது..? அதுதான் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும்வந்துவிட்டதே என்கிறார்கள் சிலர்.

உண்மையில் மத்திய அரசு இந்த ஒப்புதலை முன்பே கொடுத்துவிட்டது. கடந்த 2012ம் ஆண்டே இரு ஐஏஎஸ் அதிகாரிகளின் தலைமையின் கீழ் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நீர்வளத்துறை வல்லுநர்களைக்கொண்டு ஐம்பத்தாறு இடங்களில் ஆய்வுசெய்தது கர்நாடகம்.

மத்திய அரசின் கண் சிமிட்டல்இல்லாமல் இதற்கு சாத்தியமே இல்லை. மேலும், இந்தப் பகுதிகளில் அணை கட்டுவதற்கான பணிகளுக்காக பல வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தப் புள்ளிகள் கேட்டிருக்கிறது கர்நாடக அரசு.

வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலா இவை எல்லாம் முன்பு நடைபெற்றன?இப்போது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தும் பத்து வருடங்களாகிவிட்டது. உச்ச நீதி மன்றத் தீர்ப்பு வந்தும் வருடமாகிவிட்டது. ஆனால், காவிரியைத் தர வேண்டிய நேரத்தில் தராமல் போக்குக் காட்டும் கர்நாடகா புதிய அணை கட்ட மட்டும் உடனடியாகத் தயாராகிவிட்டது.

கர்நாடக அரசியல் தலைவர்கள், ‘அணைகள் கட்டினாலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி தமிழகத்துக்குத் தர வேண்டிய நீரைத் தருவோம்’ என்று பொய் வாக்குறுதி கொடுக்கிறார்கள். இவர்களை எப்படி நம்புவது?

காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்தாதவர்கள், இறுதித் தீர்ப்பையும் மதிக்காதவர்கள், இன்று உச்சநீதி மன்றமே தலையில் குட்டி கடிந்துகொண்டபோது காதிலேயே வாங்கிக்கொள்ளாதவர்கள், இந்த அணை கட்டி முடிந்ததும் தருகிறோம் என்று சொல்வதை எப்படி நம்பமுடியும்?எப்படியாவது சமாளித்து அணையைக் கட்டிவிடுவோம். பிறகு, நீரைப் பிடித்து வைத்துக்கொண்டு அட்ராசிட்டி செய்தால் தமிழர்களால் என்ன செய்ய முடியும் என யோசிக்கிறார்கள் போலும்.இதை எதிர்க்க வேண்டிய தமிழக அரசோ மவுனமாக இருக்கிறது.

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்கிறார்கள் நம் அமைச்சர் பெருமக்கள். இங்குள்ள எவர் மீதும் மத்திய அரசுக்கு சின்ன பொருட்படுத்துதல்கூட கிடையாது என்பதால் இவர்கள் கொடுக்கும் அழுத்தத்தை எல்லாம் அவர்கள் கண்டுகொள்வதே இல்லை!இந்நிலையில் ஆளும் மத்திய அரசே தங்கள் வசம்தான் என பரமசிவன் கழுத்துப் பாம்பாக ஆடிக்கொண்டிருக்கிறது கர்நாடக அரசு.

மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து குழியில் தள்ளுவது நம் விவசாய மக்களின் வாழ்வைத்தான். டெல்டா மாவட்டங்கள் மீது தொடுக்கப்பட்ட மறைமுகமான போர் இது என்றுதான் தோன்றுகிறது. என்று தணியும் எங்கள் காவிரி தாகம் என்று காத்துகிடக்கிறான் டெல்டா  விவசாயி. தமிழகமே பாலைவனமாகிவிடுமோ எனப் பரிதவித்திருக்கிறார்கள் மக்கள்.                                             

இளங்கோ கிருஷ்ணன்