குழந்தை யானை



கிளினர் பையனுக்குப்
பத்துபன்னிரண்டு வயதிருக்கும்
விசில் எழுப்பியபடி
குழந்தையைப் போல
லாரியைக் கழுவுகிறான்
விரல்களைச் சீப்பாக்கி
தலையைக் கோதிக்கொள்கிறான்

லாரி அவன் நீரில்
மூழ்கி எழுகிறது
புதிதாய் லாரியை மீட்டெடுத்து
அதற்கு ஒரு முத்தம் வைக்கிறான்
அவன் உதட்டில்
உயிர் அசைகிறது
எட்டும் மட்டும்
கை நீட்டி அணைக்கிறான்

குழந்தை யானை என்று
அதற்கு வைத்த பெயரை
ஒரு முறை சொல்லிக்கொள்கிறான்
தொலைவில் போய் நின்று
குளித்துமுடித்த லாரியைப் பார்க்கிறான்

நாளை அந்த லாரியை
ஓட்டப்போகும் டிரைவர் போல
உடல் நிமிர்த்தி
மிதந்து போவது போல்
அதை நோக்கி நடந்து போகிறான்.

ராஜா சந்திரசேகர்