பகவான்-25
Product ஆக பகவானை மாற்றியவர் இவர்தான்!ரோல்ஸ்ராய்ஸ் கார் வந்து நிற்கிறது என்றதுமே ‘மகதலேனா’ உணவகத்தில் இருந்த சூஸன் ஹார்ஃபோ உட்பட, புதியதாக வந்து சேர்ந்திருந்த சன்னியாசிகள் அத்தனை பேருமே பகவானைத்தான் எதிர்நோக்கினார்கள்.  ஆனால், வந்தவர் மா ஆனந்த் ஷீலா!இனி சூஸன் ஹார்ஃபோ, அவர் குரலிலேயே தொடர்வார்.ரஜனீஷ்புரத்துக்குச் செல்லும் வரை பகவானை மட்டுமல்ல. மா ஆனந்த் சில்வர்மேனையும் (இந்தியாவில் அவரை மா ஆனந்த் ஷீலா என்று அழைப்பார்கள்) நான் கண்டதில்லை. சில பத்திரிகைச் செய்திகளில் அவருடைய போட்டோக்களைப் பார்த்திருக்கிறேன். முதன்முதலாக அவரை ‘மகதலேனா’வில்தான் அன்று பார்த்தேன். சட்டென்று அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஒட்டுமொத்த உணவுக்கூடமும் அவரது நுழைவுக்குப் பிறகு அமைதியானது. அவர் அமர்வதற்காக அங்கே ஒரு சிறிய மேடையும், அதில் இருக்கையும் அமைக்கப்பட்டிருந்தது.ரோல்ஸ்ராய்ஸ் காரில் இருந்து ஷீலா இறங்கி நடந்து வருகிறார். இருபுறமும் நின்று ஆண், பெண் சன்னியாசிகள் அவரை வரவேற்கிறார்கள்.
கொஞ்சம் குள்ளமாக, ஆரஞ்ச் உடையென்றாலும் அதை நேர்த்தியாக ஸ்டைலாக அவர் அணிந்திருக்கிறார். சில சன்னியாசிகளை அவர் கட்டியணைத்து வணக்கம் சொல்கிறார். புதியதாக வந்த சன்னியாசிகள் அவரை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக எல்லோரையும் நோக்கி புன்னகை புரிந்தார் ஷீலா.
இப்போது ஐடி கம்பெனிகளில் பிரபலமாக இருக்கும் Cafeteria பாணியில்தான் ‘மகதலேனா’ உணவகம் அமைக்கப்பட்டிருந்தது. தங்களுக்கு வேண்டிய உணவை அவரவரே எடுத்துக்கொண்டு, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் நாற்காலிகளில் போய் அமர்ந்து உண்ண வேண்டும்.
ஆசிரமம் என்பதற்கான எவ்வித அடையாளங்களும் இல்லாமல் கம்பெனி கேன்டீன்களில் ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டே உண்பதைப் போலத்தான் அனைவரும் அங்கே இருந்தனர்.ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் பழத்துண்டுகளை எடுத்துக்கொண்டார் ஷீலா. ஒவ்வொரு டேபிளாக வந்து அமர்ந்து ஓரிரண்டு நிமிடங்கள் எல்லோரிடமும் சிரித்துப் பேசினார்.
பொதுவாக அப்போது ரஜனீஷ் ஆசிரமத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் யாரிடம் பேசினாலும் தத்துவம் தெறிக்கும். அதை வாசித்தீர்களா, இதை வாசித்தீர்களா என்று அறிவுபூர்வமாக உரையாடி கழுத்தறுப்பார்கள்.ஷீலா, இவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். அவருக்கும், ஆன்மீகத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதாஎன்றே சந்தேகம் வருமளவுக்கு அவர் பேசினார். ஹாலிவுட் நடிகைகள் குறித்த கிசுகிசுவில் தொடங்கி, மூன்றாம் தர செக்ஸ் ஜோக் வரை அவருடைய பேச்சில் இருந்தது. அவருடைய அணுகுமுறை தனித்துவமானது. என்னுடன் பேசும்போது என் ஆர்வத்துக்கு ஏற்ற விஷயங்களையே பேசினார். இன்னொருவரிடம் பேசும்போது அவரது ஆர்வத்துக்கு தக்க அவரது பேச்சு மாறியது. ஷீலாவின் பெரும் பலம் அவருடைய கலகலப்பான சுபாவம். நூறு பேர்களுக்கு மத்தியில் இருந்தாலும் அவர் தனித்துத் தெரியுமளவுக்கு ஆளுமை கொண்டவர்.
பகவான், கிட்டத்தட்ட தனக்கு இணையான இடத்தை ஷீலாவுக்கு கொடுத்திருக்கிறார் என்றால் அதில் ஏதோ அர்த்தமிருக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றியது.ஏனெனில், ஷீலாவுக்கு முன்பான பகவான் சற்றே எளிமையானவராக இருந்தார். பகவானை உலகெங்கும் branding செய்து ஆடம்பரமான, நிறைய முதலீடு கோருகிற product ஆக மாற்றியவர் ஷீலாதான்.
‘உங்களுக்கு நிறைய நிம்மதி தேவையென்றால் நிறைய செலவழிக்க வேண்டும்’ என்று வெளிப்படையாகவே அமெரிக்கத் தொழிலதிபர்களிடம் பேசி, ஏராளமான நிதியைத் திரட்டினர். பெரும் பணக்காரர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் எளிமையான பின்னணியைச் சார்ந்த பக்தர்களிடமும் வசூல் விஷயத்தில் அவர் கறார் காட்டினார்.
பங்களிப்பு செய்தால்தான் ஆசிரமத்தின் மீது உரிமையும், பற்றும் உங்களுக்கு வரும் என்பார்.கிட்டத்தட்ட நூறு ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் கொண்ட உலகின் பணக்கார சாமியாராக பகவான் உருவெடுக்க ஷீலாவே முதன்மையான காரணம் என்று சொல்வதில் எனக்கு தயக்கம் ஏதுமில்லை. அவரை ஆன்மீகவாதி என்று சொல்வதைவிட ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் CEO போலவேதான் நடந்து கொண்டார்.
ஆன்மீகமும், கார்ப்பரேட் பிசினஸாக மாறுமென்று அந்தக் காலத்தில் யாருமே கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாது. மதம், கடவுள், இனக்குழுக்கள், பிரிவுகள் எல்லாமே முதலீட்டியத்தோடு தொடர்பு உடையவைதான் என்றாலும், இவ்வளவு பச்சையாக பணத்தையும், ஆன்மீகத்தையும் இணைத்தது ரஜனீஷ் ஃபவுண்டேஷன்தான். இதை முன்னெடுத்ததில் ஷீலாவுக்கு எந்தவிதமான குற்றவுணர்வும் இல்லை. ஓஷோவின் அனுமதியோடுதான் இதையெல்லாம் அவர் செய்கிறாரா என்றுகூட பக்தர்களுக்கு சந்தேகம் உண்டு.
ஷீலாவுடனான முதல் சந்திப்பு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தாலும், என்னுடைய லௌகீகமான வாழ்க்கையை விட்டுவிட்டு ‘பகவானே சரணம்’ என்று முற்றுமுதலாக இங்கு வந்து சேர்ந்துவிட்டது சரிதானா என்கிற சந்தேகத்தை அப்போதைய ரஜனீஷ்புரத்தின் அமைப்பு மற்றும் நடவடிக்கைகள் தோற்றுவித்தன.
நீண்ட பயணம், அதன் விளைவான களைப்பு காரணமாக நிம்மதியான உறக்கத்தை நாடி எனக்கு தரப்பட்டிருந்த டென்டுக்கு செல்ல ஆயத்தமானேன்.ஆனால், ‘ஒரு டிஸ்கோ பார்ட்டி நடக்கிறது. அனைவரும் கலந்துகொண்டு குதூகலமாக இருக்கவேண்டும்’ என்றொரு அறிவிப்பு செய்யப்பட்டது.
என் கண்கள் தூக்கத்தை நாடினாலும், டிஸ்கோ பார்ட்டியில் கலந்துகொள்வதற்கும் ஆசையாகத்தான் இருந்தது.நான்கு புறமும் முரட்டுத் துணிகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு மேய்ச்சல் வெளி போல இருந்த புல்தரையில் டிஸ்கோவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஸ்பீக்கர்கள் அலற, ஆண் பெண் சன்னியாசிகள் இணைந்து வேகவேகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். ஆசிரமம் சாராத பல வெளியாட்களும் அந்த பார்ட்டியில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அவர்களெல்லாம் உள்ளூர்வாசிகள். அவர்களை அனுசரித்துச் செல்லாவிட்டால் நம்மால் இங்கு ரஜனீஷ்புரத்தை நாம் எதிர்பார்த்தமாதிரி உருவாக்க முடியாது என்று மெதுவாக என் காதைக் கடித்தார் அங்கிருந்த நிர்வாகி ஒருவர். Obviously, அங்கே மது உள்ளிட்ட லாகிரி வஸ்துகள் தாராளமாகக் கிடைத்தன.
ஒரேகானில் அது குளிர் காலம். வாட்டியெடுத்த குளிருக்கு கதகதப்பாக ஜோடிகள் தங்களை பரஸ்பரம் இறுக அணைத்துக்கொண்டு கதகதப்பாக நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அங்கே ஒலித்த பாடல்கள் மேலும் மேலும் அவர்களுக்கு வெறி கூட்டுவதாக அமைந்திருந்தன. என்னையும் ஒருவர் நடனமாட அழைத்தார். நடனத்தில் அவ்வளவாக பயிற்சியற்ற நான் ஏனோதானோவென்று அவரோடு ஆடினேன்.
நடுவில் நெருப்பு கொளுத்தப்பட்டு அதனுடைய வெம்மையை பலரும் அனுபவித்துக் கொண்டே கையில் மது, வாயில் சுருட்டு என்று ஆனந்தமாக இருந்தார்கள். நாம் வாழும் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாக வாழ்வதே வாழ்க்கை என்று ஒருவர் உச்சபட்ச போதையில் தத்துவமாகப் பேசத் தொடங்கினார்.
“இந்தியாவிலும் இப்படித்தானா?” என்று அவரிடம் கேட்டேன்.“இந்தியாவில் வேறுமாதிரி. இது அமெரிக்கா இல்லையா? அமெரிக்காவுக்குத் தகுந்தபடி நாம் மாறிக்கொள்ள வேண்டியதுதான்...” என்றார். அவர் ஓர் இந்திய சன்னியாசிதான்.ஆன்மீகத்தில் இதுமாதிரி கொண்டாட்டங்களை இணைப்பதின் மூலமாக ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ இயக்கத்து ஹிப்பிகள் பலரையும், ரஜனீஷ்புரவாசிகளாக மாற்ற முடியுமென்கிற திட்டம் அவர்களிடம் இருந்ததைப் புரிந்துகொண்டேன்.
விடியற்காலையில் என்னுடைய டென்டுக்கு கடுமையான உடல் அசதியோடு போய்ச் சேர்ந்தேன்.அங்கு எனக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியது.ஏனெனில் டென்டுக்குள்ளே வெறும் கட்டாந்தரையாக இருந்தது. படுக்கை வசதியே இல்லை.உலகில் உருவாக்கப்படும் சொர்க்கமான ரஜனீஷ்புரத்தில் எல்லா வசதிகளும் இருக்குமென்கிற எண்ணத்தில் எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் அங்கே கிளம்பிவந்த என்னுடைய முட்டாள்தனத்தை நொந்துகொண்டேன்.
தூசியும் தும்புமான அந்த இடத்தில் கடுமையான குளிரில் உறங்கவேண்டிய கொடுமையை நினைத்தாலே பகீரென்றது.என்னுடைய பைக்குள் இருந்த துணிமணிகளைச் சுருட்டி தலையணை போல ஏற்பாடு செய்து கொண்டேன். தரையில் துணிவிரித்துப் படுத்தேன். போர்வை வேறு இல்லை. இருமல் வேறு வந்தது. இரவு முழுக்க இருமிக்கொண்டே இருந்தேன். எனினும் தூங்கிவிட்டேன்.இப்படித்தான் ரஜனீஷ்புரத்தில் என்னுடைய முதல்நாள் கழிந்தது!
(தரிசனம் தருவார்)
யுவகிருஷ்ணா
ஓவியம்: அரஸ்
|