செல்லூலாயிட்டில் பொன்னியின் செல்வன்!



Thanks to சைக்கிளில் பயணப்பட்ட இளைஞன்(ர்)

இல்லை. இந்தமுறை உறுதி என்கிறார்கள். ஆம். இதோ அதோ என தள்ளிப் போய்க்கொண்டே இருந்த ப்ராஜெக்ட் ஒருவழியாக ஃபைனலைஸ் ஆகிவிட்டது!

இல்லை. இந்தமுறை உறுதி என்கிறார்கள். ஆம். இதோ அதோ என தள்ளிப் போய்க்கொண்டே இருந்த ப்ராஜெக்ட் ஒருவழியாக ஃபைனலைஸ் ஆகிவிட்டது!யெஸ். லைக்கா தயாரிப்பில் இரு பாகங்களாக அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் திரைப்படமாகப் போகிறது என்கிறது கோடம்பாக்க பட்சி.எவ்வளவு நீண்ட பயணம் இது! அதுவும் சைக்கிளில் ஆரம்பித்த டிராவல் அல்லவா இது!அந்த இளைஞன் பரவசத்தில் இருந்தான்.

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் ஐந்து பாகங்களையும் சினிமாவுக்கான திரைக்கதையாக வசனத்துடன் எழுதி அப்போதுதான் முடித்திருந்தான். தாள்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தபோது, அது இரண்டு வால்யூம்கள் அடங்கிய file ஆக மாறியிருந்தது. எம்ஜிஆர்தான் அவனை இப்படி எழுதச் சொல்லியிருந்தார். அதற்காகவே லாயிட்ஸ் ரோட்டில் இருந்த தன் வீட்டின் மாடியை அவனுக்காக ஒதுக்கிக் கொடுத்திருந்தார்.

நினைத்துப் பார்க்கவே அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தன்னை மதித்து இப்படியொரு மகத்தான வேலையை ஒப்படைத்திருக்கிறாரே... நெகிழ்ந்தான்.
இத்தனைக்கும் எம்ஜிஆருடன் அவனுக்கு ஏற்பட்ட அறிமுகம் சிக்கலானது. அப்போது அவன் காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவன். கல்லூரி விழாவுக்கு அவர் வந்திருந்தார். மேடையில் அவர் வீற்றிருந்தார். மேடையில் அவர் வீற்றிருந்தபோேத, ‘தமிழ் சினிமா எந்தளவுக்கு கமர்ஷியல் என்னும் பெயரில் தரம் தாழ்ந்து கிடக்கிறது’ என முழங்கினான்.

புருவம் உயர அவன் பேச்சைக் கேட்டவர் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார்.படிப்பு முடிந்ததும் சட்டம் படிப்பதற்காக அவன் சென்னை வந்தான். சட்டக் கல்லூரியில் சேர்ந்தான். ஆனால், தொடர்ந்து படிக்க முடியவில்லை. வீட்டின் பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எனவே ஊருக்குச் சென்று வேலை பார்க்க முடிவு செய்தான். சட்டக் கல்லூரியில் இருந்து டிசி வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

எதேச்சையாக அப்போது கல்லூரிப் பக்கமாக வந்த கண்ணப்ப வள்ளியப்பன், அந்த இளைஞனைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். ‘எம்ஜிஆர் முன்னால் கோபத்துடன் பேசியவன்தானே நீ’ என உறுதிப்படுத்திக் கொண்டு, தனது ‘இன முழக்கம்’ பத்திரிகையில் அவனைச் சேர்த்துக் கொண்டார்.சம்பளம் ஒழுங்காகக் கிடைத்தது. சிக்கனமாகக் செலவழித்து மீதிப் பணத்தை ஊருக்கு அனுப்பினான்.

சினிமா விமர்சனம் எழுதுவதுதான் அவரது பணி. தன் பாணியில் படங்களின் குறைகளைச் சுட்டிக்காட்டினான். அது தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவனுக்கு எதிராகப் புகார் கொடுக்க ஆரம்பித்தார்கள்.ஆனால், ‘இன முழக்கம்’ ஆசிரியர் சி.பி.சிற்றரசு அவனுக்கு உறுதுணையாக இருந்தார். எனவே யாராலும் அவனை அசைக்க முடியவில்லை.இந்நிலையில்தான், ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆர். செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பெரிதாக ஒன்றுமில்லை. ‘இன்பக் கனவு’ நாடகத்தின்போது நடிகர் குண்டுமணியை அவர் அலேக்காகத் தூக்கியபோது கால் எலும்பு முறிந்ததல்லவா... அது குணமாகிவிட்டது என்பதைச் சொல்லவும், தொடர்ந்து படங்களில் நடிக்கப் போவதை அறிவிக்கவுமே அந்த பிரஸ் மீட்.

‘இன முழக்கம்’ சார்பில் அந்த இளைஞன் அதில் கலந்து கொண்டான்.கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த அவனை அப்போது எம்ஜிஆர் அருகில் அழைத்தார். ‘அழகப்பா கல்லூரிப் படிப்பு முடிந்ததா... சென்னையில் என்ன செய்கிறாய்..?’ என்றெல்லாம் விசாரித்துவிட்டு தன் வீட்டுக்கு வரும்படி கட்டளையிட்டார்.

தன் காதுகளையே நம்ப முடியாமல் திகைத்து நின்றான். என்றோ சந்தித்த தன்னை இன்னமும் நினைவு வைத்திருக்கிறாரே....

மகிழ்ச்சியுடன் மறுநாள் காலை அவர் வீட்டுக்குச் சென்றான். அவன் எழுதும் சினிமா விமர்சனங்களை மனம் திறந்து பாராட்டிவிட்டு, அவனிடம் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைக் கொடுத்து, இதற்கு திரைக்கதை, வசனம் எழுது என்றார்!

தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான். கனவல்ல. நிஜம்தான். மகிழ்ச்சியுடன் அப்பணியை மேற்கொள்ள ஒப்புக் கொண்டான்.

‘‘சினிமா பத்தின அடிப்படை விஷயங்களை நீ தெரிஞ்சுக்கணும் இல்லையா... இப்ப நான் ‘ராஜா தேசிங்கு’ படத்துல நடிச்சுட்டு இருக்கேன். படப்பிடிப்பை வேடிக்கை பாரு. சந்தேகம் ஏற்பட்டா என்னைக் கேளு...’’ எம்ஜிஆர் புன்னகைத்தார்.

சம்மதித்து அவருடன் ‘ராஜா தேசிங்கு’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றான். என்றாலும் ஒரு படத்துக்கு எப்படி திரைக்கதை எழுத வேண்டும் என்பதை அவரிடமே கேட்டான்.‘‘நாவலை முழுக்க படி. மனசுக்குள்ள கதையை ஓடவிடு. எந்தக் காட்சியை முதலாகச் சொல்லணும்னு உனக்கு தோணுதோ அதுதான் பர்ஃபெக்ட் சீன். அப்படியே நூல் பிடிச்ச மாதிரி கதையைச் சொல்லு. ஸ்கிரிப்ட் உருவாகிடும்...’’ எம்ஜிஆர் நிதானமாகச் சொன்னார்.

அவர் விளக்கியபடியே யோசித்தான். மனதில் உருவான சித்திரத்தை அப்படியே நோக்கினான். எழுதத் தொடங்கினான். சரியாக ஒரு மாதம் முடிந்தது. முழு ஸ்கிரிப்ட்டும் தயார்!பரவசத்தில் மனம் துள்ளியது. உடனே அவரிடம் கொடுக்க வேண்டும். முடிவெடுத்தவன், இப்போது அவர் எங்கே இருக்கிறார் என விசாரித்தான்.

எட்டு பணியாளர்கள், மெஜஸ்டிக் ஸ்டூடியோவில், ‘திருடாதே’ ஷூட்டிங்கில் இருப்பதாகச் சொன்னார்கள்.நண்பன் சங்கர நாராயணனிடம் சைக்கிளை கடன் வாங்கினான். கேரியரில் அந்த 2 ஃபல்களையும் வைத்தான். புறப்பட்டான்.

நல்லவேளையாக கோடம்பாக்கம் ரயில்வே கேட் திறந்திருந்தது. நிம்மதியுடன் சைக்கிளை மிதித்தவன் இருபக்கமும் விரிந்திருந்த தோப்புகளை வேடிக்கை பார்த்தபடி ஸ்டூடியோவை அடைந்தான்.

மெஜஸ்டிக் ஸ்டூடியோவுக்குள் அவன் நுழைந்தபோது மணி மாலை 6.30. பிரேக் விடப்பட்டு நடிகர்கள் அனைவரும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவனைப் பார்த்ததும் எம்ஜிஆரின் முகம் மலர்நதது. எழுந்து அவனை நோக்கி வந்தவர், ‘‘என்ன விஷயம்...’’ என்று கேட்டார்.‘‘எழுதிட்டேன் சார்...’’ கேரியரில் இருந்த இரு ஃபைல்களையும் எடுத்துக் கொடுத்தான்.‘‘ஒரு மாசத்துல முடிச்சுட்டியா?’’ ஆச்சர்யத்துடன் கேட்டு அவன் தோளில் தட்டிக் கொடுத்தார்.சங்கடத்துடன் அந்த இளைஞன் நெளிந்தான்.ஓரக் கண்ணால் அதை எம்ஜிஆர் பார்த்தார். சட்டென்று, ‘‘அப்புறம்... வீட்டுலேருந்து மாசா மாசம் பணம் அனுப்புறாங்களா?’’ சாதாரணமாகக் கேட்டார்.அந்த இளைஞனின் கண்கள் கலங்கின.

பார்த்த எம்ஜிஆருக்கு அதிர்ச்சி. ‘‘வசதியான வீட்டுப் பிள்ளைதானே?’’
‘‘இல்ல சார்... நான் சம்பாதிச்சாதான் ஓரளவு நிம்மதியா சாப்பிட முடியும்...’’ மென்று விழுங்கினான்.

அவர் முகத்தில் கோபம் கொப்பளித்தது. ‘‘இத்தனை நாளா சென்னைல எப்படி வாழற?’’
‘‘நண்பன் ரூம்ல தங்கிக்கறேன்... அவன் செலவுல மெஸ்ஸுல சாப்பிடறேன்...’’

எம்ஜிஆரின் முகம் மாறியது. குரல் தழுதழுக்க, ‘‘இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை? எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்... என்னை மன்னிச்சிடு தம்பி! உடனே நீ லாயிட்ஸ் ரோடு போ. கொஞ்ச நேரத்துல நான் மாணிக்கத்தை அனுப்பறேன். எங்கேயும் போயிடாதே...’’ என்றார்.

இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் அவர் சொன்னபடி லாயிட்ஸ் ரோட்டில் காத்திருந்தான்.காரில் வந்த மாணிக்கம் அவனிடம் ஒரு கவரைக் கொடுத்தார். அதனுள் ரூ.1,500 இருந்தது! 1961ல் அது பெரிய தொகை மட்டுமல்ல; நினைத்துப் பார்க்க முடியாத தொகையும்கூட.

நெகிழ்ந்துவிட்டான். அந்த நெகிழ்ச்சி மறுநாள் அதிகரித்தது. காரணம், இரவோடு இரவாக எம்ஜிஆர். அவன் எழுதிய முதல் இருபது காட்சிகளைப் படித்துவிட்டார். அதை மனப்பாடமாக வசனத்துடன் அவர் உச்சரித்தபோது -வார்த்தைகள் இன்றி அவன் திணறினான்.
‘‘சினிமாவுல இருக்கிற நிறைய ரைட்டர்ஸ்கிட்ட ‘பொன்னியின் செல்வனை’ எழுதும்படி ஒரு வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கேன். யாருமே இன்னும் முடிக்கலை.

ஆனா, நீ ஒரே மாசத்துல பிரமாதமா எழுதிட்ட..!’’ மனதாரப் புகழ்ந்தார்.இதனைத் தொடர்ந்து பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தை அணுகி எம்ஜிஆர் நடிக்கக் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், என்ன காரணத்தாலோ அந்த ப்ராஜெக்ட் டேக் ஆஃப் ஆகவில்லை.

எம்ஜிஆருக்குப் பின் அந்த நாவலைப் படமாக்க கமல் முயன்றார். திரைக்கதை, வசனத்தை இவருக்காக எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் எழுதினார். அத்துடன் சரி. படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை.பிறகு சின்னத்திரைக்காக நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்க ‘பொன்னியின் செல்வனை’ எடுக்க ‘மர்ம தேசம்’ புகழ் நாகா முயன்றார். ஸ்கிரிப்ட்டை எழுத்தாளர் ஜே.பி.சாணக்யா எழுதினார். இதுவும் சில நாள் படப்பிடிப்புடன் நின்று விட்டது.இடையில் மேஜிக்லேண்ட் குழுவினர் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மேடை நாடகமாக மாற்றி அரங்கேற்றினர்.

கடைசியாக இப்போது இந்த ப்ராஜெக்ட்டை மணிரத்னம் கையில் எடுத்திருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
இம்முறையாவது ‘பொன்னியின் செல்வன்’ திரைவடிவம் காணுமா..? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.என்றாலும் என்றேனும் ஒருநாள் இந்தக் கனவு மெய்ப்படும்.

அதற்கெல்லாம் பிள்ளையார் சுழியாக நிச்சயம் எம்ஜிஆரின் நிர்ப்பந்தம் காரணமாக அந்த நாவலுக்கு முதன் முதலில் திரைக்கதை, வசனம் எழுதிய அந்த இளைஞன் இருப்பான். அவன் யாரென்று கேட்கிறீர்களா?‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப் பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘ஜானி’ உட்பட ஏராளமான படங்களை இயக்கியவரும், தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குபவரும், சமீபத்தில் மறைந்தவருமான -இயக்குநர் மகேந்திரன்தான் அந்த இளைஞர்!   

கே.என்.சிவராமன்