ஆக்‌ஷன் + காமெடி + டிராவல் = டகால்டி



‘‘கலகலனு ஒரு சினிமா. யோசிக்கவிடாமல் அருமையா பொழுதைக் கழிக்கிற சினிமாவா அது இருக்கும்போதே அதில் ஒரு சின்ன விஷயத்தை முன்னெடுத்துப் போனால் எப்படியிருக்கும்? அதுதான் ‘டகால்டி’. இந்த டைட்டில் சந்தானம் சாருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. ‘நம்ம கவுண்டமணி சார் அடிக்கடி இந்த வார்த்தையை புழங்குவார். இது ஒரு நல்ல டைட்டில்னு இப்பத்தான் தெரியுது பார்த்திங்களா’னு சொன்னார்.

எங்க டைரக்டர் ஷங்கர் சார்கிட்ட சொன்ன போதும் ‘டேய், நல்ல டைட்டில் பிடிச்சிட்டே’னு சந்தோஷமாயிட்டார். ஆக்‌ஷன், காமெடியில் படம் தாராளமாக போகும். சாதாரண மனிதர்களின் சுவாரஸ்யங்கள் எப்பவும் சுவை நிரம்பியது. அந்த வகையிலும் இந்தப்படம் மற்ற சந்தானத்தின் படங்களிலிருந்து வேறுபட்டதாகக் கூட இருக்கும். காமெடி + ஆக்‌ஷன்... இது கூடவே படத்துல ஒரு பயணமும் இருக்கு...’’ தெளிவாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் பள்ளியில் பயின்று வந்தவர்.

எப்படி இதுக்குள்ளே சந்தானம் வந்தார்..?
‘எந்திரன்’, ‘ஐ’ படங்களில் நடிக்கும்போதே அவரைத் தெரியும். எப்பவும் எல்லாரையும் சந்தோஷமாக, ஜாலியாக, கௌரவமாக நடத்துவார். இந்தக்கதை அப்போதே என்கிட்டே இருந்தது. இதை எழுதும்போது அதை கதையாக மட்டுமே எழுதினேன். யாரும் மனசுக்குள்ள வரலை.

அவர்கிட்டே இந்த லைனைச் சொன்னேன். அவருக்கும் ரொம்பவும் பிடிச்சுப்போச்சு. ‘நிச்சயமா அருமையா செய்திடுவோம். இதை உங்க படம் மாதிரியே செய்து கொடுங்க’னு சொன்னதோட கதைக்குள் வந்துட்டார். மேம்போக்காக அவரை காமெடியன்னு சொல்றாங்க. ஆனால், அவர் மிகச்சிறந்த நடிகராகவும் வந்திட்டார். அவரை அவ்வளவு சர்வ சாதாரணமாக நினைச்சுக்கிட்டு இருக்கிறவர்களுக்கு நல்ல அனுபவம் காத்திருக்கிறது. 100% ஹீரோ அவர்னு சந்தேகம் இல்லாமல் தெரிய வரும்.

நியாயமான ஆக்‌ஷன்... அருமையாக செய்திருக்கார். அதுக்காக பத்துப்பேரை அடிச்சு பறக்கவிடுகிற விஷயம் கிடையாது. ஒரு மனுஷன் ஒரு ஃபைட்டில் என்ன செய்ய முடியுமோ அதுவே பதிவாகியிருக்கு. இதில் ஒரு பயணமும் அமைஞ்சிருக்கு. சென்னை, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், கடப்பா, மும்பை, ஜெய்ப்பூர்னு முக்கிய திருப்பங்களுக்காகக் கதை டிராவல் ஆகுது. அந்தந்த ஊர்களின் அழகு வேற தனியாகக் கதைக்கு ஒரு கலர் கொடுக்கும்.

நுணுக்கமான காட்சிகளையும் ரொம்பவும் ஈஸியாக நடிச்சிட்டு கடந்து போற இடத்திற்கு சந்தானம் வந்திட்டார். அவர் கூட முதன்முறையாக யோகிபாபு சேர்ந்து நடிக்கிறார். இரண்டு பேரும் ஆளுக்கு ஆள் விட்டுக் கொடுக்காமல் ரகளையாக நடிச்சாங்க.

ஆரம்பத்தில் லொள்ளு சபாவில் சந்தானத்தோடு உடன் நடிச்சவர். இரண்டு பேரும் பரஸ்பரம் சிநேகிதமாகவும், சந்தோஷமாகவும் நடிச்சுக் கொடுத்தாங்க. ராதாரவி அனுபவத்திற்கு அப்படியே நம்ம ஆலோசனைப்படியே நடிக்கணும்னு தேவையில்லை. ஆனால், படத்திற்கு தேவை என்னனு டைரக்டர்கிட்ட கேட்டே நடிக்கிறார்.

பொண்ணை வங்காளத்திலிருந்து கொண்டு வந்திருக்கீங்க…
ரித்திகா சென். அஞ்சு வயதிலிருந்து நடிச்சுக்கிட்டு இருக்காங்க. தமிழில் வசனங்களை எழுதிக் கொடுத்து நடிக்கச்சொன்னால் ஒரே மூச்சில் பின்னி எடுக்கறாங்க. சந்தானத்துக்கும் அவருக்குமான பொருத்தம் நல்லா அமைஞ்சிருக்கு.

விஜய் நாராயணன் பாடகராக முன்னணியில் நிற்கிறவர். இப்போதுதான் முதல் தடவையாக இசையமைப்பாளராக களம் இறங்குகிறார். பொதுவாக ஒரு ஆல்பம் வரும்போது ஒரு பாடல் முத்திரையாக நிக்கும். இன்னொண்ணு கொஞ்சம் கேட்க வைக்கும். வேற ஒரு பாடல் சுமாராக வரும்.
ஆனால், ‘டகால்டி’யின் ஒவ்வொரு பாடலுக்கும் பாராட்டுகள் வருது.

இந்தப் பாடல்களுக்கான ரிச்னஸை நாங்கள் காட்சியில் இன்னும் வலிமையாகக் கொடுக்க வேண்டியதாகப் போச்சு. கேமிராமேன் தீபக் ஒளிப்பதிவு அப்படியே ஃப்ரேமில் கண்கூடாகத் தெரியுது. ‘நல்ல துவக்கம் பாதி வெற்றிக்குச் சமம்னு’ சொல்வாங்க. நல்லாவே துவங்கி முடிச்சிருக்கோம்.

உங்க குரு ஷங்கர்கிட்டே புராஜெக்ட் பத்தி பேசினீங்களா...

அவர்கிட்டே சொல்லாமலா! அவர்கிட்டே இருந்துதானே எல்லாமே நமக்குக் கிடைச்சது. ரொம்பவும் சந்தோஷப்பட்டார். இந்த டைட்டில் அருமையா அமைஞ்சிடுச்சுன்னு என்கிட்டே சொன்னதோட மத்தவங்ககிட்டேயும் பகிர்ந்திருக்கார்.

அவருக்கு இருக்கிற வேலைப் பளுவிற்கு, அதெல்லாம் சொல்லணும்னு கூட அவசியமில்லை. ஆனாலும் அவர் அன்பைக் காட்டிவிடுவார். எங்கேயிருந்தாலும் நம்மை விசாரிக்கிறதில் ஆரம்பித்து பார்த்திட்டால் புருவம் உயர்த்துகிற விதத்திலேயே அவரோட அக்கறை புரியும்.

‘நல்லா பண்ணணும்னு சொன்னார். அதுவே ஆசீர்வாதம். அப்புறம் ரஜினி சார்கிட்டேயும் டிரைலர் காண்பிச்சேன். ‘நீங்க நல்ல வருவீங்க விஜய்’னு வாழ்த்தினார். என் வளர்ச்சியில் அக்கறை கூடி நிற்பவர்களை என் வாழ்க்கையில் தொடர்ந்து இருப்பது சந்தோஷமாக இருக்கு.

தமிழக மக்கள் பார்க்கிறதுக்கு ஈஸியாக கலகலன்னு ஒரு படம் எடுத்திருக்கீங்கனு சொல்ற நாள்தான் எனக்கு சந்தோஷம். இது அவையடக்கம் கிடையாது. உண்மையிலும் உண்மை.

நா.கதிர்வேலன்