பெண்களின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மாநில அரசுகள் பயன்படுத்தாமல் இருப்பதால்தான் பாலியல் வல்லுறவுகள் அரங்கேறுகின்றன...



நிர்பயா முதல் ப்ரியங்கா வரை

ஹைதராபாத்தில் இளம் பெண் மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கால்நடை மருத்துவரான ப்ரியங்காவை இரண்டு கால் மிருகங்கள் நர வேட்டையாடியுள்ள கொடூர சம்பவத்துக்கு பாராளுமன்றமே கொந்தளித்தது.
எதிர்க் கட்சி உறுப்பினர்களில் பலர் ‘அந்தக் கொலைகாரர்களைத் தூக்கிலிடவேண்டும்… பொது மக்கள் முன்னிலையில் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும்… அவர்கள் பிறப்புறுப்பை அறுக்க வேண்டும்...’ என்று பலவாறாகப் பொங்கியிருக்கிறார்கள்.
 
இதற்குப் பின் இருக்கும் அறஉணர்வை, ஆவேசத்தை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால், இதற்கு இன்னொரு மறுபக்கம் இருக்கிறது. அதுதான் இந்த தேசத்தின் எதார்த்தம் என்னவென்று நம் முகத்தில் அறைந்து சொல்கிறது. இந்தியப் பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு ஒதுக்கிய ‘நிர்பயா நிதி’யை நம் மாநில அரசுகள் பயன்படுத்தவே இல்லை என்ற எதார்த்தம்தான் அது.  

நமது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிலேயே பலருக்கு நிர்பயா நிதி என்றால் என்னவென்றே தெரியவில்லை என்பது தான் அவலம்.
2012ம் ஆண்டில் நாட்டையே உலுக்கிய தில்லி இளம்பெண் நிர்பயாவின் மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. கிட்டத்தட்ட இப்போது ப்ரியங்காவுக்கு நிகழ்ந்ததைப் போன்ற கொடூரம்தான் அதுவும். ஓடும் பேருந்தில் கடுமையாகத் தாக்கப்பட்டு வல்லுறவு செய்யப்பட்டு தெருவில் வீசிச் செல்லப்பட்ட நிர்பயா, அநாதரவாக இறந்தார்.

நாட்டின் தலைநகரிலேயே ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பில்லையா என்று நாடு முழுதும் கடும் கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள்
நடந்தன. தொடர்ந்து வந்த அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியது.

வீட்டை விட்டு வெளியே வரும் பெண்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு வசதிகள், கண்காணிப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டிய தேவை இருந்தது. இவற்றுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அடிப்படைக் கட்டுமானங்களை இந்தத் தொகை கொண்டு நாடு முழுதும் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதி இது.

இந்தத் தொகை நிதி அமைச்சகத்தின் பொருளாதார நடவடிக்கைகள் துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், உள்துறை அமைச்சகம் உட்பட பல்வேறு அமைச்சகங்கள் இந்தத் தொகையைப் பயன்படுத்தி தங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகின்றன.

மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் இந்த நிதி அறிவிக்கப்பட்ட அதே ஆண்டிலேயே ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு இயக்கத்தின் நிதி மூலம் பேருந்து வசதிகள் கிடைக்காத பகுதிகளுக்கு நிர்பயா நிதி மூலம் புதிய பேருந்துகள் வாங்கிக்கொள்ள மாநில அரசுகளை வலியுறுத்தியது.
இப்படி ஆங்காங்கே ஒருசில முயற்சிகள் நடந்தாலும் இந்த நிர்பயா நிதியை பெரும்பாலான மாநிலங்கள் முறையாகப் பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மகாராஷ்ட்ரா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்கள், டையூ, டாமன் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 183 கோடியில் பெரும்பகுதியைப் பயன்படுத்தவே இல்லை என்கிறார்கள்.இப்போது ப்ரியங்காவின் படுகொலை நடந்திருக்கும் தெலுங்கானாவுக்கு 123 கோடி ரூபாய் அளவுக்கு ‘நிர்பயா நிதி’ ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வெறும் 10 கோடி ரூபாயை மட்டுமே - அதாவது எட்டு சதவீத நிதியை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

உள்துறை அமைச்சகத்தைத் தவிர பிற துறைகளும் இந்த நிதிக்கு பங்களித்துள்ளன. நீதித் துறை 79 கோடி ரூபாயை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகமான குற்றங்கள் நடக்கும் 11 மாநிலங்களுக்கு ஒதுக்கியது. இதில் மகாராஷ்ட்ரமும் மத்தியப் பிரதேசமுமே அதிகப் பங்கைப் பெற்றன. இதில் எந்த ஒரு மாநிலமும் இந்தத் தொகையை உருப்படியாகப் பயன்படுத்தவில்லை.

பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் மகிளா போலீஸ் தன்னார்வலர்கள் திட்டத்துக்கு பதினாறு கோடி ரூபாயை 12 மாநிலங்களுக்கு ஒதுக்கியது. இதில், வெறும் நான்கு மாநிலங்கள் மட்டுமே சிறு பகுதித் தொகையைப் பயன்படுத்தியுள்ளன. அதாவது வெறும் மூன்று கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு நிறுத்தப் பேருந்துத் திட்டம், பெண்கள் உதவி சேவை மையங்கள் ஆகிய திட்டங்களுக்கு ஓரளவு நிதி செலவிடப்பட்டுள்ளது ஆறுதலானது.
வளர்ந்து கொண்டிருக்கும் சிவில் சமூகம் ஒன்றில் குற்றங்கள் நடப்பது தவிர்க்க இயலாதது. ஒரு பொறுப்பான அரசு இப்படியான குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என்று கண்டறிந்து அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுதான் அதன் கடமை.

அந்த வகையில் மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிவித்து அதற்கான தொகையை ஒதுக்கியிருக்கிறது. ஆனால், மாநில அரசுகளுக்கோ இதை முறையாகப் பயன்படுத்துவதில் எந்த ஆர்வமும் இல்லை. மறுபுறம் மத்திய அரசிடமும் இவற்றை எல்லாம் கண்காணிப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை.

இவ்வளவு பொறுப்பற்று அரசு நிர்வாகங்கள் இருக்கும் என்றால்... நடக்கும் குற்றங்களில் எல்லாம் அரசுக்கும் மறைமுகப் பங்கிருக்கிறது என்றே அர்த்தமாகும். நிர்பயாக்களும் ப்ரியங்காக்களும் என்று நிம்மதியாக நடமாட முடிகிறதோ அன்றுதான் நாம் நிஜமான சுதந்திர தேசம். இதை அரசும் குடிகளும் உணர வேண்டும்!

இளங்கோ கிருஷ்ணன்