ரோஜா ஜோடி கலகல



லவ், மேரேஜ் எதுவும் வேணாம்... ஆஸ்ரமம் கட்டணும்!சிபு சூரியன்

தெலுங்கு, தமிழ்ப் படங்கள்ல நடிச்சிருக்கேன்...பிரியங்கா


800 எபிசோடுகளைக் கடந்து தமிழ் சீரியல்களிலேயே டாப் ஒன் ஆக இருப்பது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’. அப்படியிருக்க, அத்தொடரின் ஜோடிகளை பேட்டி எடுக்காவிட்டால் எப்படி?!வளசரவாக்கத்தில் உள்ள ஏ.ஆர்.எஸ். கார்டனில் பரபரக்குது அதன் படப்பிடிப்பு. ரொமான்ஸ் சீன்களில் கலக்கிய ஜோடி, இப்போதும் டூயட்டில் ஆடிப்பாடும் என நினைத்து கார்டன் கேட்டை திறந்தால்... ப்ச். உள்ளே சென்ட்ரல் ஜெயில் செட்டப் பளபளக்கிறது. போலீஸ் அதிகாரி சந்திரகாந்தாவுடன் (ராணி) சீரியஸான முகத்துடன் காரில் வந்து இறங்குகிறார் ரோஜா.
 
இன்னொரு காரில் கூலிங் கிளாஸுடன் அர்ஜுன் வந்திறங்குகிறார். கோர்ட், ஜெயில் என விறுவிறுப்பான சீக்குவென்ஸை இயக்கிக் கொண்டிருந்தார் வி.சதாசிவம். நம்மைப் பார்த்ததும் ஒரு புன்னகையை வீசிவிட்டு, ‘ஐந்தே ஐந்து நிமிஷத்துல ஷாட் முடிஞ்சிடும். ப்ளீஸ் வெயிட்’ என்பது போல சைகை காண்பிக்க... அதை ரோஜாவும் (பிரியங்கா), அர்ஜுனும் (சிபு சூரியன்) நோட் பண்ணிவிட்டார்கள்.

ஷாட்டில் இருந்தபடியே தங்கள் பார்வையாலேயே ‘என்ன விஷயம்’ என விசாரிக்க... பேட்டி என்று நாம் சொல்ல, கட்டை விரலை உயர்த்திக் காண்பித்துவிட்டு ஷூட்டை முடித்துவிட்டு வந்தார்கள்.

‘‘எங்களுக்கு இப்படி ஒரு கிராண்ட் வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல. வெளிய எங்கே போனாலும் ரசிகர்கள் திரண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தறாங்க. அவுட்டோர் ஷூட்ல லன்ச் பிரேக் வரை காத்திருந்து செல்ஃபி எடுத்துட்டுப் போறாங்க.
இவ்ளோ ரசிகர்கள்... இவ்ளோ அன்பு... எல்லாத்துக்கும் காரணம் சன் டிவியின் ரீச்தான்...’’ கோரசாகச் சொல்லும் ரோஜாவும் அர்ஜுனும் ரிலாக்சாக மர நிழலில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள்.

‘‘என் பேரு பிரியங்கா நல்கரி...’’ என ஆரம்பித்தார் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா. ‘‘அதென்ன நல்கரினு கேட்கறீங்களா? ஃபேமிலி சர்நேம். பூர்வீகம் ஹைதராபாத். அப்பா, பில்டிங் கன்ஸ்ட்ரக்டர். ஒரே ஒரு தங்கச்சி. தெலுங்கில் குழந்தை நட்சத்தி ரமா என் கேரியர் தொடங்கிச்சு. ஸ்கூல் படிக்கும்போதே, என் படிப்புச் செலவை நானே பாத்துக்கிட்டேன். பார்ட் டைம் ஜாப் போய், அதுல கிடைக்கற பணத்தை வச்சு, ஸ்கூல் ஃபீஸ், ஏன்... காலேஜ் ஃபீஸ் கூட கட்டி யிருக்கேன்.

எனக்கு இன்டீரியர் டிசைனிங்ல ஆர்வம். ஸோ, இன்டீரியர் டிசைனரானேன். பெரிய பெரிய இன்டீரியர் ஒர்க்ஸ் எல்லாம் பண்ணி பெயரெடுக்கணும்னு விரும்பினேன். அதுக்குள்ள சினிமா ஆஃபர்ஸ் வந்திடுச்சு. தெலுங்கில் சீரியல்கள், படங்கள் பண்ணினேன். தமிழ்ல ‘ரோஜா’தான் என் முதல் சீரியல். தமிழ்நாட்டுல என் ஆரம்பமே அமர்க்களமா இருக்கு. எங்க அம்மாவும் என் நடிப்பை தொடர்ந்து கவனிக்கறாங்க. அவங்ககிட்ட இருந்து எப்பவும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்திட்டே இருக்கும்...’’ ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக பிரியங்கா முடிக்க, புன்னகைத்தார் அர்ஜுனாக நடிக்கும் சிபு சூரியன்.

‘‘என் ரியல் நேம் சிபு சூரியன். தாய்மொழி கன்னடம். இங்க வந்துதான் தமிழ் கத்துக்கிட்டேன்; கத்துக்கிட்டிருக்கேன். படிச்சது, வளர்ந்ததெல்லாம் பெங்களூருல. மெக்கானிக்கல் முடிச்சிருக்கேன். காலேஜ் படிக்கிறப்ப என் ஹைட்டையும் லுக்கையும் பார்த்துட்டு மாடலிங் பண்ணச் சொல்லி நண்பர்கள் உசுப்பேத்தினாங்க.

நானும் மாடலிங்ல என்ட்ரி ஆனேன். ஃபேஷன் ஷோஸ்ல என் வாக்கிங் ஸ்டைலுக்கு பாராட்டுகள் குவிஞ்சது. சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டுச்சு.
கன்னடத்துல படங்கள், சீரியல்கள் பண்ணினேன். அந்த டைம்லதான் ‘ரோஜா’ கிடைச்சது. எங்க ஊர்லேயும் ‘ரோஜா’வை தமிழ்லதான் பார்க்கறாங்க. பெங்களூர் போனா ‘அர்ஜுன் சார்... அர்ஜுன் சார்’னு கேரக்டர் நேமை வைச்சுதான் அழைக்கறாங்க...’’ சொல்லும்போதே சிபுவின் கண்கள் ஒளிர்கின்றன.

வெயில் அனலாக வீசவே பிரியங்கா தன் முந்தானையால் தன்னைத் தானே விசிறத் தொடங்கினார். பார்த்த சிபு, ‘‘வாங்க கேரவன்ல பேசலாம்...’’ என அழைத்துச் சென்றார்.ஏசியின் ஜில்லை அனுபவித்தபடி பிரியங்கா தொடர்ந்தார். ‘‘சென்னைல எங்கூட அம்மாவும் இருக்கறதால எப்பவும் ஜில்னுதான் இருக்கேன்! வீட்ல அம்மா எனக்காக நுங்கு, இளநீர்னு வாங்கி வச்சிருப்பாங்க. வெளியே கிளம்பும்போதும் நிறைய ஜூஸ் கொடுத்தனுப்புவாங்க. அம்மானா அம்மாதான்.

ஆனா, ஒரு விஷயம். நான் வெயிலை சமாளிக்கல. இந்த வெயில்தான் என்னை சமாளிக் குது! கோவிட்ல எல்லாரும் வீட்ல இருக்கணும்னு சொல்லிட்டாங்க. பிரேக் கிடைச்சாலும் ஹைதராபாத் ட்ராவல் பண்ண முடியாமப் போச்சு. ஷூட் முடிச்ச அடுத்த செகண்டே வீட்டுக்கு பறந்திடுவேன். அங்க எனக்காக என் அம்மாவும், தங்கையும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க...’’ என எமோஷனலும், ஃபீலிங்குமாக பேசிவிட்டு சிபுவைப் பார்த்தார்.

‘‘பெங்குளூருல க்ளைமேட் எப்படி இருக்கும்னு உங்களுக்கே தெரியும். சென்னைக்கு வந்த புதுசுல, இந்த வெயில் கொஞ்சம் பயமுறுத்துச்சு. அப்புறம் இந்த வெயிலுக்கு செட் ஆகிட்டேன்! இப்ப பெங்களூரு போனா, அந்த க்ளைமேட் எனக்கு செட் ஆகல! குளிரெடுக்குது. அந்தக் குளிரைத் தாங்கிக்க முடியாம ‘எப்படா சென்னைக்கு போவோம்’ கிற எண்ணம் வந்திடுது...’’  ஏசி குளிரிலும் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்கிறார் சிபு.

இருவரின் பேச்சும் அவரவரின் சினிமா அனுபவம் பக்கம் தாவியது. பிரியங்கா தமிழிலிலும் படங்கள் பண்ணினவர். ‘‘ஆமா. தெலுங்கில் மட்டுமில்ல. தமிழ்லயும் படங்கள் பண்ணியிருக்கேன். என்னைப் பொறுத்தவரை ரெண்டு இடங்கள்லயுமே எனக்கு நல்ல ரிசீவிங் இருக்கு. நாம பாசிட்டிவ்வா பார்த்தா, நல்லது மட்டுமே தெரியும்.

திறமைசாலிகள் எல்லா இடங்கள்லேயும் இருக்காங்க. ‘காஞ்சனா 3’க்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகள் வருது. ஆனா, இங்க ‘ரோஜா’வே மாசத்துல 28 நாட்கள் ஷூட் போறதால, சினிமா பத்தி யோசிக்கல...’’ என்ற பிரியங்காவிடம், ‘‘சூப்பர் ஜி...’’ என்பது போல பார்த்துவிட்டு, நம்மிடம் திரும்புகிறார் சிபு.

‘‘தமிழ் இண்டஸ்ட்ரி... கன்னட இண்டஸ்ட்ரி ரெண்டுமே ஒரே மாதிரிதான் இருக்கு. ஆனா, இங்க மாதிரி அங்க பிராம்ப்டிங் வசதி கிடையாது. எவ்வளவு நீளமான டயலாக்னாலும் அதை மனப்பாடம் பண்ணிட்டு பேசி நடிக்கணும். இங்க பிராம்ப்டிங் இருக்கறதால, டப்பிங்கும் வேறு ஒரு குரல்ல பேசிடறாங்க. ஒர்க்கும் வேகமா முடிஞ்சிடுது.

அடுத்து அங்க ஒரு படம் பண்றேன். சமீபத்துல கூட ஒரு பேட்டில ‘ரோஜா’தான் என் கடைசி சீரியல்னு சொல்லியிருந்தேன். அது உண்மைதான்...’’ என்ற சிபு, திரும்பி ‘‘எப்படி இருந்தது கோவா ட்ரிப்?’’ என பிரியங்காவிடம் கேட்டார். ‘‘பிப்ரவரிலதான் போயிட்டு வந்தோம். நாங்க போன டைம்ல சீஸன் இல்லாததால கோவாவே வெறிச்சோடி இருந்துச்சு. ஆனா, ஃபாரீன் ஃப்ரெண்ட்ஸ் நிறைய கிடைச்சாங்க. எல்லாருமே பக்கத்து ரூம்ல உள்ள டூரிஸ்ட்கள்தான்.

ஐ லவ் மை மாம். இன்னிக்கு நான் இந்த உயரம் தொட காரணமே அவங்கதான்...’’ என்ற லலலா... லலலா... ஃபீலிங் பேர்டு பிரியங்கா தொடர்ந்தார்.

‘‘டான்ஸ், காம்பியரிங், சினிமா, டிவினு நிறைய பண்ணிட்டேன். அடுத்து ஒரு பெரிய ட்ரீம் இருக்கு. முறைப்படி கிளாசிக்கல் டான்ஸ் கத்துக்கணும். சன் டிவியில் ஒரு பிரமாண்ட ஸ்டேஜில் ஆடணும். அதான் என் ஆசை...’’ என கண்கள் விரிய பிரியங்கா சொன்னதும், ‘‘அட்வான்ஸ் கங்கிராட்ஸ்...’’ என்ற சிபு, தனது ஆசையையும் சொன்னார்.

‘‘எனக்கு லவ், மேரேஜ் இதெல்லாம் செட் ஆகாது. காலேஜ் டைம்ல கூட நான் பழகறது பாத்து பொண்ணுங்க என்கிட்ட புரபோஸ் பண்ணவே தயங்குவாங்க. நான் ஒரு ஞானி மாதிரி. சமூக சேவையில் ஆர்வம் அதிகம். ஆதரவற்ற குழந்தைகளோடும், பெரியவங்களோடும் எப்பவும் டைம் செலவழிக்கணும். அவங்களுக்கு மூணு வேளையும் சாப்பாடு கொடுத்து தங்க வச்சு அக்கறையா பாத்துக்கற மாதிரி ஒரு ஆஸ்ரமம் அமைக்கணும். என் எதிர்காலக் கனவுகள்ல இதுவும் ஒண்ணு...’’ என ஜீன்ஸ் போட்ட புத்தராக சிபு சொல்லவும், ‘‘வாவ்.. சூப்பர் ஜி... சூப்பர் ஜி...’’ என விஜய்சேதுபதி ஸ்டைலில் பிரியங்கா வாழ்த்தினார்!