ரத்த மகுடம்-148பிரமாண்டமான சரித்திரத் தொடர்

வாதாபி மக்கள் கண்கொட்டாமல் இமைகள் விரிய அந்தக் காளைகளின் அணிவகுப்பைக் கண்டார்கள்.  பொதுவாக திருவிழாக் காலங்களில்தான் காளைகளின் ஊர்வலம் தலைநகரில் நடக்கும். இதற்கான ஏற்பாடுகளை மூன்று திங்களுக்கு முன்பே சாளுக்கியர்கள் தொடங்கி விடுவார்கள். தெருக்கள் சுத்தம் செய்யப்படும். மாட மாளிகைகளும் அரண்மனைகளும் மட்டுமல்ல... சாதாரண குடியானவர்களின் இல்லங்களும் விழாக்கோலம் பூணும். மாவிலைகளும் தோரணங்களும் ஒவ்வொருவர் இல்லத்தையும் அலங்கரிக்கும்.

காளைகளின் அணிவகுப்பைப் பற்றி பெரியவர்கள் கதையளப்பார்கள். அவர்கள் மடியில் படுத்தபடியும் அருகில் அமர்ந்தபடியும் சிறுவர்களும் சிறுமியர்களும் வாயைப் பிளந்தபடி அவற்றைக் கேட்பார்கள். அவர்களது அகத்தில் விரியும் காட்சிகளை வதனங்கள் பிரதிபலித்தபடியே இருக்கும்.

ஆனால், பாண்டியர்களைப் போல் சாளுக்கியர்கள் காளைகளை அடக்கும் வீர விளையாட்டுகளை நடத்துவதில்லை. மாறாக, நூற்றுக்கணக்கான காளைகளை ஓட விடுவார்கள். அதுவும் ஒரே சமயத்தில். மலையென எழும் புழுதியும், சீரான தாள கதியில் ஒலிக்கும் குளம்புகளும், ஒன்றின்மீது மற்றொன்று மோதாத வகையில் சீரான அணிவகுப்பில் ஓடும் காளைகளின் நடனமும் காண்பவரை மெய்மறக்கச் செய்யும்.

சாலையோரங்களில் தடுப்புகள் கட்டப்பட்டிருக்கும். மக்கள் அனைவரும் தடுப்புக்கு அந்தப் பக்கமே நிற்பார்கள். காளைகளும் தடுப்பை மீறி மக்கள் கூட்டத்துக்குள் நுழையாது. முரண்டு பிடித்து அப்படி நுழையும் ஒன்றிரண்டு காளைகளின் கொம்பைப் பிடித்து லாவகமாக அவற்றை சாலையில் திருப்ப வீரர்களும் காளை வளர்ப்போரும் குறிப்பிட்ட இடைவெளியில் விழிப்புடன் காத்திருப்பார்கள்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் காளை ஓட்டத்துக்காகவே காளைகளை வளர்ப்பவர்கள் சாளுக்கிய தேசத்தின் எல்லைப்புறங்களில், வனங்கள் சூழ்ந்த வேளாண்மைப் பகுதிகளில் வாழ்ந்து வந்தார்கள். காளை என்றால் களிறு! ஆம்; இம்மக்கள் வளர்க்கும் ஒவ்வொரு காளையும் பார்க்க யானையைப் போல் காட்சி தரும்.  இது தொன்றுதொட்டு நடைபெற்று வரும் நிகழ்ச்சி. தக்காணத்தின் அடையாளம். வாதாபியின் கலாசார பண்பாட்டுத் திலகம்.

அப்படிப்பட்ட காளைத் திருவிழாவுக்கு ஈடாக ஓர் அணிவகுப்பு திடீரென தலைநகரத்தில் நடக்கிறது என்றால் மக்கள் ஆச்சர்யமும் வியப்பும் அடையத்தானே செய்வார்கள்..?மக்களின் ஆரவாரத்தை ரசித்தபடியே, அதேநேரம் ஐம்பதுக்கும் மேற்பட்ட காளைகளின் அணிவரிசையைத் திறம்பட நடத்தியபடி வாதாபிக்குள் வலம் வந்தாள் சிவகாமி.அந்த அணிவகுப்பின் முன்னணியில் இருந்த காளை மீது சிவகாமி அமர்ந்திருந்த கோலம் கொற்றவையை நினைவுபடுத்தியதால் மக்கள் அனைவரும் தங்களையும் மீறி அவளை வணங்கினார்கள்.

மக்களின் ஆரவாரத்தைக் கேட்ட சாளுக்கிய வீரர்கள் அவ்விடத்துக்கு விரைந்து வந்தார்கள். தங்களுக்குத் தெரியாமல், தங்களுக்கு அறிவிக்கப்படாமல் காளைகளின் ஊர்வலம் எப்படி சாத்தியம் என்ற வினா அவர்கள் முகத்தில் படர்ந்தது.‘‘இளவரசரைச் சந்திக்கச் செல்கிறேன்...’’ வீரர்கள் தலைவனிடம் காளையில் அமர்ந்தபடியே சிவகாமி சொன்னாள்.தள்ளி நின்ற அத்தலைவன் முகத்தில் சந்தேகத்தின் சாயை படர்ந்தது.

சிவகாமி புன்னகைத்தாள். ‘‘ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமி அம்மையார் சிறை வைக்கப்பட்ட இடத்தில் நம் மாமன்னர் கொற்றவைக்கு ஆலயம் எழுப்பியிருக்கிறார் அல்லவா..? அங்குதான் இளவரசர் இருக்கிறார். சந்தேகமாக இருந்தால் உடன் வா...’’பதிலை எதிர்பார்க்காமல், தன் கால்களால், அமர்ந்திருந்த காளையை லேசாக உதைத்தாள். நின்ற காளை பழையபடி நடக்க ஆரம்பித்தது. பின்னால் நின்ற காளைகளும் முன்னணி காளைக்கு சமமாக நடக்கத் தொடங்கின.

கண்களைச் சுருக்கினான் வீரர்களின் தலைவன். வாதாபி நம் வீரர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எனவே, அச்சப்பட வேண்டியதில்லை. அதேநேரம் எச்சரிக்கையையும் கைவிட வேண்டாம். முடிவுக்கு வந்தவன், வீரர்களை அவரவர் இடங்களுக்குச் செல்லும் படி கட்டளையிட்டான். கோட்டைக் கதவை இழுத்து மூடும்படி ஆணையிட்டுவிட்டு காளைகளின் அணிவரிசையைத் தொடர்ந்தான்.

அரை நாழிகை பயணத்துக்குப் பின் கொற்றவை ஆலயத்தை காளைகளின் ஊர்வலம் அடைந்தது. ஆலய மண்டபத்தில் அமர்ந்திருந்த சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனையும், சுற்றிலும் வாட்களுடன் நின்றிருந்த வீரர்களையும் கண்டதும் மனபாரம் இறங்கியது போல் வீரர்களின் தலைவன் உணர்ந்தான்.விரைந்து இளவரசரை வணங்கி சிவகாமியைச் சுட்டிக்காட்டி செய்தி சொல்லிவிட்டு விடைபெற்றான்.

அவன் செல்லும் வரை காத்திருந்த சிவகாமி, நிதானமாக காளையை விட்டு இறங்கி விநயாதித்தனை நோக்கி நடந்தாள். அவள் பார்வை விநயாதித்தன் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்த பெண்ணின் மீதே படர்ந்தது. அவளது கரங்கள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்தன. அருகில் மூங்கில் கூடையும் அதனுள் கூழ் பானையும்.

நேராக அப்பெண்ணை அடைந்த சிவகாமி தன் குறுவாளால் அவளது கட்டுகளை அறுத்தாள். ‘‘உன்னைச் சந்திப்பதாக இருந்தது நான்தான். உன் வழியாக இளவரசருக்கு செய்தி அனுப்ப நினைத்தேன். அவரே இங்கு வந்துவிட்டதால்...’’ விநயாதித்தனை கணத்துக்கும் குறைவான பொழுது நோக்கியவள், திரும்பி அப்பெண்ணின் கண்களைச் சந்தித்தாள். ‘‘நீ செல்லலாம்... உனக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறேன்...’’

அப்பெண் எதுவும் சொல்லாமல் எழுந்தாள். மணிக்கட்டு
வலித்தது. தாங்கிக் கொண்டு கூடையைச் சுமந்தபடி அகன்றாள்.
‘‘வணக்கம் இளவரசே...’’ சிவகாமி வணங்கினாள்.
‘‘வந்திருப்பது எங்கள் ஒற்றர் படைத் தலைவியா அல்லது
கரிகாலனின் காதலியா?’’ விநயாதித்தன் நகைத்தான்.
‘‘அல்லது பல்லவர்களின் உபதளபதியா என்பதை விட்டுவிட்டீர்கள் இளவரசே!’’

‘‘தெரிந்ததைக் கேட்டு என்ன பயன்..?’’
‘‘தெரியாததை அறியத்தான் இளவரசே!’’
‘‘அறியச் செய்பவர் ஒருபோதும் உண்மையை உரைக்காதவர் என்றால்..?’’
‘‘புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்கிறார் மகான்!’’
‘‘யார்... வள்ளுவரா?’’
‘‘அவர் வாக்கையே வேத வாக்காகக் கடைப்பிடிக்கும் சாளுக்கிய மாமன்னர்!’’

நிமிர்ந்தான் விநயாதித்தன்.
‘‘எனது பொய்மையும் வாய்மையிடத்தை உணர்ந்த தக்கா
ணத்தின் மாமன்னர் தங்களுக்கு செய்தி அனுப்பியிருக்கிறார்!’’
‘‘இதை நான் நம்ப வேண்டுமா..?’’

‘‘தங்கள் விருப்பம்! ஆனால், செய்தியை தங்களிடம் சேர்ப்பிக்க வேண்டியது என் கடமை...’’
‘‘அதை முன்னிட்டுத்தான் கூழ் விற்கும் பெண்ணை இங்கு சந்திக்க முடிவு செய்தாயா..?’’
‘‘ஆம் மன்னா... தங்களை இங்கு எதிர்பார்க்கவில்லை. போர்க் களத்தில் இருப்பீர்கள் என்று நினைத்தேன்!’’

ஆசனத்தில் இருந்து சட்டென எழுந்தான் விநயாதித்தன். எதை எதிர்பார்த்தாலும் இச்செய்தியை எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் உடல்மொழி வெளிப்படுத்தியது. ‘‘பல்லவர்கள் இன்னும் தயாராகவில்லையே!’’
‘‘ஆயத்தமாக இருக்கிறார்கள் இளவரசே!’’
‘‘படை திரட்டி விட்டார்களா..?’’
‘‘ஆயுதங்களையும் சேகரித்துவிட்டார்கள்!’’

‘‘எப்படி சாத்தியம்..? இவை எல்லாம் நடக்க வேண்டுமென்றால் செல்வம் வேண்டும். பல்லவர்களின் நிதி ஆதாரம் காஞ்சியிலுள்ள கஜானாவில் நிரம்பி வழிகிறது. அந்த கஜானாவோ சாளுக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது! அப்படியிருக்க பல்லவர்களால் எப்படி படை திரட்ட முடியும்..?’’
‘‘உண்மைதான் இளவரசே! பல்லவர்களின் கஜானா சாளுக்கியர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆனால், சாளுக்கியர்களின் கஜானா பல்லவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறதே!’’

‘‘என்ன சொல்கிறாய்...’’ பாய்ந்து வந்து சிவகாமியின் தோள்களைப் பற்றினான் விநயாதித்தன்.
பற்றிய அவன் கரங்களை கீழ்க்கண்ணால் பார்த்துவிட்டு விநயாதித்தனின் கருவிழிகளை நேருக்கு நேர் எரித்தாள்.
சட்டென தன் கைகளை எடுத்தான். ‘‘தவறுதான்...’’

‘‘உணர்ச்சிவசப்பட்டால் இப்படித்தான் தன்னை மறக்க நேரிடும் இளவரசே...’’ என்ற சிவகாமி, ‘‘வீரர்களைத் தள்ளி நிற்கச் சொல்லுங்கள். மாமன்னரின் செய்தியைத் தங்களிடம் தெரிவிக்கவேண்டும்...’’ என்றாள்.
விநயாதித்தனும் தாமதிக்கவில்லை. வீரர்களைத் தொலைவுக்கு அனுப்பினான்.

அவர்கள் அகன்றதும் சிவகாமி நேரடியாக விஷயத்துக்கு வந்தாள். ‘‘சாளுக்கியர்களின் பொக்கிஷங்களை பல்லவர்கள் கைப்பற்றி விட்டார்கள்! வாதாபியில் பொக்கிஷங்கள் இருந்தால் பல்லவர்கள் என்றாவது அதைக் கைப்பற்றி விடுவார்கள் என நம் மாமன்னர் இந்திராவதி ஆற்றங்கரையில் உள்ள வனக் கோட்டைகளிலும், வனவாசி நகரிலும், வயிராகத்து கோட்டையிலும், சக்கரக்கோட்டத்திலும், பாஞ்சாலத்திலும் பிரித்து பதுக்கி வைத்தார்.
இதை எப்படியோ தெரிந்து கொண்ட பல்லவ இளவலான இராஜசிம்மன், அவற்றைக் கைப்பற்றி விட்டான். அந்தப் பொக்கிஷங்களை வைத்துதான் படைகளைத் திரட்டியிருக்கிறார்கள்...’’

‘‘நம்பும்படியாக இல்லையே... இரவு பகல் பாராமல் சாளுக்கிய வீரர்கள் பொக்கிஷம் இருக்கும் இடங்களை கண்காணித்து வருகையில் இராஜசிம்மனால் எப்படி அவற்றைக் கைப்பற்ற முடியும்..?’’‘‘யாரோ ஒரு பெண் பல்லவ இளவலுக்கு உதவியிருக்கிறாள்...’’ பார்வையை அகற்றாமல் விநயாதித்தனை நேருக்கு நேர் பார்த்தபடியே சிவகாமி தொடர்ந்தாள். ‘‘அவள்தான் மலைக் கோட்டைகளிலும் தன்னந்தனியாக விழுதுகளைக் கயிறாக்கி ஏறிச் சென்று களவாடியிருக்கிறாள்...’’ ‘‘இதுபோன்ற செயல்களை பொதுவாக சிவகாமிதானே செய்வாள்..?’’
‘‘அப்படித்தான் சாளுக்கிய மாமன்னரும் நினைக்கிறார்!’’

விநயாதித்தனுக்கு பற்றிக்கொண்டு வந்தது. அந்த இடத்திலேயே சிவகாமியைக் கொன்று விட வேண்டுமென்று ஆத்திரம் பொங்கியது. எவ்வளவு துணிச்சலாக, தான்தான் பொக்கிஷங்களைக் களவாடினேன் என்று சொல்கிறாள்...தன் உணர்வுகளை சாளுக்கிய இளவரசன் அடக்கினான். ‘‘பொக்கிஷத்தைக் கைப்பற்றினால் போதுமா..? ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டாமா..? பல்லவர்களின் தாயாதியான ஹிரண்யவர்மர் அனுப்பிய ஆயுதங்களைத்தான் ராமபுண்ய வல்லபர் கைப்பற்றி விட்டாரே!’’

‘‘ஆம். இளவரசே... அப்பொழுது கரிகாலனுடன் நானும் அங்கு இருந்தேன்! ஹிரண்ய வர்மரை மட்டுமே நம்பி பல்லவர்கள் இல்லை என இப்பொழுது புரிகிறது. பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மர், தலைமறைவாக இருப்பதாக நினைக்கிறோம்... ஆனால், அவர் ஆயுதங்களை தன் மேற்பார்வையில் தயாரித்து வந்தது சமீபத்தில்தான் தெரிய வந்தது...’’ ‘‘வாய்ப்பில்லையே... வாட்கள், குறுவாட்கள், ஈட்டிகள், வேல், அம்பு... உள்ளிட்ட ஆயுதங்களை லட்சக்கணக்கில் தயாரிக்க வேண்டும். இதற்கு முதலில் இரும்பு வேண்டும்... பிறகு நூற்றுக்கணக்கான இரும்புக் கலைஞர்கள் இரவும் பகலும் தொடர்ந்து உழைக்க வேண்டும். மன்னராக அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்கையில் இரும்பை வாங்குவதும், கலைஞர்களைக் கொண்டு ஆயுதங்களைத் தயாரிப்பதும் எளிது. ஆனால், பல்லவ மன்னர் உட்பட பல்லவப் படை முழுவதும் இப்பொழுது தலைமறைவாக... ஏதிலிகளாக அலைகிறார்கள்.

எங்கிருந்து அவர்கள் இரும்பை வாங்கினாலும் அத்தகவல் கசிந்துவிடும். எந்த இடத்தில் அவர்கள் ரகசியமாக ஆயுதங்களைத் தயாரிக்க முற்பட்டாலும் அது வெளிச்சத்துக்கு வந்து விடும்... அப்படி யிருக்க பல்லவ மன்னரால் எப்படி லட்சக்கணக்கில் ஆயுதங்களைத் தயாரித்திருக்க முடியும்..?’’

‘‘நல்ல வினா இளவரசே!’’ என்ற சிவகாமி, தான் அமர்ந்து வந்த காளைக்கு இருந்த இரு கொம்புகளில் இடப்புறமிருந்த கொம்பைத் திருகினாள். அது கையோடு வந்தது! அதனுள் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பட்டுத் துணியை எடுத்தாள்.பார்த்ததுமே விநயாதித்தனுக்குப் புரிந்தது. அது சீனப் பட்டு!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்