சகாவு!1944ல் அப்போதைய மலபார் மாவட்டத்திலுள்ள பினராய் கிராமத்தில் பிறந்தவர்தான் விஜயன். பிறந்த 14 குழந்தைகளில் உயிர் பிழைத்த நால்வரில் இவரும் ஒருவர்.  பேரலசேரி பள்ளியில் பத்தாம் வகுப்பை முடித்தவர், பிரன்னென் அரசு கல்லூரியில் பியூசி சேர்ந்தார். அவரது அரசியல் பயணம் இங்குதான் ஆரம்பித்தது. ஆம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பில் இணைந்தார். படிப்படியாக வளர்ந்து கண்ணனூர் மாவட்ட செயலாளரானார்.

விஜயனின் அர்ப்பணிப்பு மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு உயர்த்தியது. மாணவர் பருவத்தைக் கடந்ததும் கட்சியின் வாலிபர் சங்கத்தில் இணைந்தார். மாநில வாலிபர் சங்கத் தலைவரானார். அந்த நேரத்தில் மாற்று அமைப்பைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அப்பழி கேரள வாலிபர் சங்கத்தின் மீது விழுந்தது.

சங்கத்தின் தலைவராக இருந்த பினராய் விஜயன் கைது செய்யப்பட்டார். போதிய சாட்சிகள் இல்லாததால் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் விடுதலையானவர், மீண்டும் அரசியல் களத்திற்குத் திரும்புகையில் தலச்சேரி பகுதியில் நடந்த கலவரம் ஒன்றில் எதிர்த் தரப்பினரால் வெட்டப்பட்டார். அவரோடு வெட்டப்பட்ட சக தோழர் உயிரிழக்க, படுகாயம் அடைந்த விஜயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்துக்குப் பின் விஜயனின் மதிப்பு உயர்ந்தது.   

1970ம் ஆண்டு கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களம் இறங்கினார் பினராய் விஜயன். அப்போது விஜயனுக்கு தரப்பட்ட தொகுதி கூத்துப்பரம்பா. 743 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். எமர்ஜென்சியை எதிர்த்ததால் 1976ம் ஆண்டு மிசாவில் கைதானார். 1977ல் நடைபெற்ற கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் கூத்துப்பரம்பா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.   

1986ல் கண்ணனூர் மாவட்ட செயலாளராக உயர்ந்தவர், ஈ.கே.நாயனார் முதல்வரானபோது மின்சாரம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சரானார். கட்சிக்குள் அச்சுதானந்தனுக்கும் விஜயனுக்கும் இடையில் நடந்த கோஷ்டி மோதல் பிரபலமானது. இதன் காரணமாகவே 2011ல் மார்க்சிஸ்ட் கட்சி படுதோல்வி அடைந்தது.

என்றாலும் 2016ல் பெரும்பான்மை பலத்துடன் கட்சி ஜெயித்தபோது, பினராய் விஜயனே கேரள மாநில முதல்வரானார். ஊழல் குற்றசாட்டு, உட்கட்சி எதிர்ப்பு ஆகியவற்றைச் சமாளித்து மற்ற மாநிலங்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் கேரளாவை உயர்த்தியது பினராய் விஜயனின் ப்ளஸ். இதன் காரணமாகவே 2021 தேர்தலிலும் அவரையே மக்கள் முதல்வராக்கி இருக்கிறார்கள்.

தொகுப்பு: அன்னம் அரசு