இந்திய ராணுவ போலீசில் முதன் முறையாக பெண்கள்! இதில் நால்வர் தமிழச்சிகள்!



இந்திய ராணுவம் என்றால் நம் அனைவரின் உடலும் விறைப்பாக மாறிவிடும். அந்த அளவுக்கு ராணுவம் நமது உணர்வோடு ஒன்றிணைந்து விட்டது. கோடை, வெயில், பனி, மழை பாராமல் பணியாற்றும் வீரர்களின் சிறப்பை வர்ணிப்பதற்கு யாராலும் முடியாது. போர் முனைக்கு வீறு கொண்டு செல்கிற வீரர்களுக்கு வீரர்களே இணையாவார்கள்.

இவ்வளவு சிறப்பு மிக்க நமது ராணுவத்தில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இந்திய ராணுவ போலீசார் என்று ஒரு பிரிவு செயல்பட்டு வருகிறது.

நாட்டில் சாதாரணமாக சட்டம், ஒழுங்கு பிரச்னையைக் கையாள்வதற்கும், போக்குவரத்து விதிகளை மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் போலீஸ் நிலையம் இருப்பது போல் ராணுவத்தில் நடைபெறுகிற விதிமீறல், ராணுவ குடியிருப்பில் நடைபெறுகிற குற்றங்களை விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உறுதுணையாக இருப்பதுதான் இந்த ராணுவ போலீசாரின் பணி.

இப்படிப்பட்ட அரும்பணியில் இதுவரை ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர்.ஆம். இந்திய பாதுகாப்புப் படையின் அனைத்துப் பிரிவிலும் பெண்கள் பணியாற்றும் போது ராணுவ போலீசார் பணியில் இதுவரை பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. இப்போது ராணுவ போலீஸ் துறையிலும் முதன் முறையாக பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஜனவரி மாதம் இந்த முடிவு அமலுக்கு வந்த போது நாடு முழுவதும் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பம் செய்தனர்.

கல்வித் தகுதி 10ம் வகுப்பு மட்டுமே. ஆனால், பட்டம் பெற்றவர்களும் இதில் கலந்து கொண்டனர். என்.சி.சி. சான்றிதழ் கூடுதலான தகுதியாக கருதப்பட்ட நிலையில் இதற்கு தனியாக மதிப்பெண்களும் அளிக்கப்பட்டன. அந்த வகையில் இந்தியாவின் முதல் ராணுவ  போலீஸ் பிரிவில் 100 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அரியானா மாநிலத்திலிருந்து 26 பேர், கர்நாடக மாநிலத்திலிருந்து 8 பேர் மற்றும் பஞ்சாப், ராஜஸ்தான் என பிற மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட 100 பேருக்கு ராணுவ வீரர்களுக்கான அடிப்படை பயிற்சிகள் பெங்களூருவில் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பெண்களும் அடங்குவர் என்பதுதான் ஹைலைட்.

ராணுவ பெண் போலீஸ் என்பதன் முதல் வார்த்தையில் ‘ராணுவம்’ என்ற சொல் இருப்பதால் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அளிக்கப்படும் கடின உடற்பயிற்கள் தவறாமல் இவர்களுக்கும் அளிக்கப்படுகின்றன.

29 வார அடிப்படை பயிற்சியில் ராணுவ வீராங்கனை என்ற மிடுக்குடன் எந்த சூழ்நிலையிலும் சுதாரித்துக்கொண்டு வெற்றி இலக்கை நோக்கி பயணம் செய்யும் பீரங்கிக் குண்டுகள் போல் மாறி விடுகின்றனர். சில வாரம் நவீன கருவிகள், தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிகளை முடித்த பிறகு சிறப்புப் பயிற்சிகளுடன் ராணுவ போலீஸ் என்ற முழுத் தகுதியைப் பெறுவர்.

பயிற்சியின்போது ஒரு பகுதி யாக போக்குவரத்து விதிகள், போக்குவரத்தை சரிசெய்வது, போக்குவரத்து சிக்னல் உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சிகளும் இப்பெண்களுக்கு அளிக்கப்படுகின்றன. கார், பைக் உள்ளிட்டவை இயக்குவதற்கும் லைசென்ஸ் பெறுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தவிர, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படு–்த்துவதற்கான அனைத்து பயிற்சிகளிலும் தவறாமல் தேர்ச்சி பெறவேண்டியது மிகவும் அவசியம்.

வாகனத்தின் தொழில் நுட்பத்தை கற்கும்போதே விசாரணை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் பயிற்சியாளர்கள் தெளிவாக கற்றுத் தருகின்றனர்.உதாரணமாக ஒரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்தால் அதை எப்படி விசாரணை நடத்த வேண்டும்..? அது உண்மையில் தற்கொலைதானா என்பதைக் கண்டறிவதற்கான முழு யுக்தியும் சொல்லித் தரப்படுகிறது.

இப்படி ஆண்டுதோறும் நூறு பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை ராணுவ போலீசில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.‘‘எனது தந்தை ஆட்டோ டிரைவர். கேரளாவில் இருந்து 6 பேர் தேர்ச்சி பெற்றுள்ளோம். ஆரம்பத்தில் இந்தி தெரியாமல் சிரமப்பட்டோம். இப்பொழுது அந்த மொழியைக் கற்றுக் கொண்டிருக்கிறோம்...’’ என்கிறார் இந்தியாவின் முதல் ராணுவ பெண் போலீசில் முதலாவதாக இடம் பிடித்துள்ள திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கவுரி.

இந்திய ராணுவ முதல் 100 பெண் போலீஸ் என்ற பெருமையில் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த நால்வர் இடம்பிடித்துள்ளனர். இந்த நால்வரில் ஒருவர் நர்மதா. 22 வயதான அவரின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பனந்தூர் பகுதி. இவரின் தந்தை விவசாயி. படிக்கும்போதே என்சிசியில் பயிற்சி பெற்றுள்ளார்.

மற்றொருவர் கற்பகலட்சுமி. இவரின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் காளபெருமாள்பட்டி. கற்பகலட்சுமியின் தந்தையும் விவசாயிதான். இவர்களைத் தவிர நாகர்கோவில் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த அனிதா மற்றும் சரண்யா ஆகிய தமிழக வீராங்கனைகள் ராணுவ பெண் போலீசில் பயிற்சி பெற்றுள்ளனர்.

பயிற்சிகள்

இந்தியாவின் ராணுவ முதல் பெண் போலீஸ் அணிக்கான பயிற்சிகள் பிரிகேடியர் சி தயாளன் தலைமையில் அளிக்கப்படுகிறது. ராணுவத்தில் புதிதாக சேர்ந்த ஆண்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளே பெண்களுக்கும் அளிக்கப்படுகிறது.  பயிற்சி அளிக்கும் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஜூலி, பயிற்சி பெறும் ஒவ்வொரு வீராங்கனைகளின் செயல்பாடுகளையும் நுட்பமாக கவனித்து வருகிறார். கேப்டன் குர்பானி சிம்ரன் பேடி வீராங்கனைகளின் உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளை அளிக்கிறார்.  

இதுதவிர ஆரோக்கியம் மற்றும் மன வலிமை பெறுவதற்கு மாஜ்ரிச் சக்ரவர்த்தி உறுதுணையாக செயல்படுகிறார். கர்னல் ஆர்.எஸ் தலால், துணை கமாண்டன்ட் மற்றும் தலைமை பயிற்சியாளர்கள் இந்தியாவின் முதல் ராணுவ பெண் போலீசார் சிறப்பாக தேர்ச்சி அடைவதற்கு உறுதுணையாக உள்ளனர்.

செய்தி: ஏரல் எஸ்.பட்டு

படங்கள்: வெங்கடேஷ்