ஏன் இப்படி செஞ்சீங்க ஜாக்சன் துரை..?அனல் பறக்கும் வசனம், பாடல்கள், இசை, நடனம், டெக்னிக்கலர், நடிகர், நடிகையர் தேர்வு, போர்க் காட்சிகள், உடையலங்காரம் என பி.ஆர்.பந்துலுவின் தயாரிப்பு, இயக்கத்தில் உருவான பிரம்மாண்டமான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.சக்தி டி.கே.கிருஷ்ணசாமி எழுதிய வசனத்திற்கு உயிரூட்டிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிரமிக்கத்தக்க நடிப்பைப் பார்த்து பாரதிராஜாவைப் போல தமிழக குக்கிராமங்களில் இருந்து கோடம்பாக்கத்திற்கு திரை பிரபலங்கள் பலரை அழைத்து வந்த படம் இது.

கட்டபொம்மு என்ற பாளையக்காரரின் வரலாற்றை தமிழ் நிலத்திற்கான கதையாக மாற்றி கலாசாரம், பண்பாடு, வீரம், காதல் என அத்தனை ரசங்களையும் கொட்டி நாடகமாக்கிய சக்தி டி.கே.கிருஷ்ணசாமியின் அளப்பரிய உழைப்புதான், அதே பெயரில் படமாக்கப்பட்டது. கெய்ரோ விருதையும் பெற்றுத் தந்தது.

இப்படத்தில் சிவாஜிகணேசன் பேசும் வசனத்தை இன்றைய அனைத்து நடிகர்களும் தேசிய கீதம் போல ஒப்பிப்பார்கள். அந்த அளவு வசனம் மனப்பாடம். அதில் அனைவருக்கும் பிடித்த காட்சி ஜாக்சன் துரை யுடன் கட்ட பொம்மன் மோதும் காட்சி. ஒரே டேக்கில் இவ்வளவு பெரிய வசனத்தை உணர்ச்சிப் பிழம்பாகப் பேசி நடித்ததால்தான் சிவாஜி கணேசன் செவாலியே.

கிஸ்தி, திரை, வட்டி, வேடிக்கை... வானம் பொழிகிறது, பூமி விளைகிறது... உனக்கேன் கொடுப்பது கிஸ்தி... எங்களோடு வயலுக்கு வந்
தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சினாயா? நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழனி வாழ் உழவருக்கு கஞ்சிக் கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்கு கேட்கிறாய் வரி? யாரைக் கேட்கிறாய் திரை? போரடித்து நெற்குவிக்கும் வேளை நாட்டு உழவர் கூட்டம் உன் பரங்கியர்கள் உடல்களையும் போரடித்து தலைகளை நெற்கதிர்களாய்க் குவித்துவிடும்... ஜாக்கிரதை...

என சிம்மமாக சிவாஜி கர்ஜிப்பார். நடிகர் திலகத்துடன் இந்தக் காட்சியில் போட்டி போட்டு நடித்த ஜாக்சன் துரை, தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் குமாஸ்தாவாக வேலை செய்த ஊழியர் என்றால் நம்ப முடிகிறதா? அவர் பெயர் சி.ஆர்.பார்த்திபன். வேலூரில் பிறந்து மேல்படிப்பிற்காக சென்னை வந்து லயோலா கல்லூரியில் பொருளியல் இளங்கலை பட்டம் பெற்றவர் அவர்.

பல படங்களில் காவல்துறை அதிகாரியாக, டாக்டராக, நீதிபதியாக பார்த்திருக்கலாம். குறிப்பாக எம்ஜிஆர் படங்களில் காவல்துறை அதிகாரி வேடம் என்றால் திருச்சி சௌந்தரராஜனுக்கு அடுத்து அவருக்குத்தான் அந்த வேடம் அளிக்கப்பட்டது. சிவாஜியோடு 16 படங்களில் நடித்துள்ளதாக சி.ஆர்.பார்த்திபனே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

‘சங்கே முழங்கு’, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, ‘மனசாட்சி’, ‘தங்கைக்காக’, ‘தேடி வந்த திருநாள்’, ‘பந்தாட்டம்’ உட்பட பல படங்களில் சி.ஆர்.பார்த்திபன் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அப்படியே அந்த உடையில் அவரைப் பார்க்கும் போது நிஜ காவல்துறை அதிகாரி போலவே தோற்றமளிப்பார்.

1958ம் ஆண்டு வெளியான ‘கப்பலோடிய தமிழன்’ படத்தில் நீதிபதியாக நடித்த சி.ஆர்.பார்த்திபன், 1985ம் ஆண்டு வெளியான ‘சுகமான ராகங்கள்’ வரை பல படங்களில் நீதிபதியாக நடித்துள்ளார். இவை தவிர 1968ம் ஆண்டு வெளியான ‘தெய்வீக உறவு’, 1975ம் ஆண்டு வெளியான ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ உள்ளிட்ட பல படங்களில் டாக்டராகவும் நடித்துள்ளார். ‘நீலமலைத் திருடன்’ படத்தில் வீரப்பாவின் கொள்ளைக் கூட்டத்தில் ஒருவராக சி.ஆர்.பார்த்திபன் நடித்தார்.

அவருடைய ஆறடி உயர ஆஜானுபாகுவான தோற்றம் மிரட்சியை உருவாக்கும். அதனால், அவருக்கு சினிமாவில் கம்பீரமான கேரக்டர்களே அந்தக் காலத்தில் வழங்கப்பட்டது.தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காதல் காவியமான ‘வசந்த மாளிகை’ படத்திலும் சி.ஆர்.பார்த்திபன் தோன்றும் காட்சி கம்பீரமாகவே இருக்கும்.  இப்படத்தில் ஒரு  பாடல் காட்சி. போதையில் சிவாஜி பாடுவது போன்று படமாக்கப்பட்டிருக்கும். ‘எல்லோரும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்கோ...’ என  சிவாஜிக்கு டி.எம்.சௌந்தரராஜன் பாடுவார்.

அப்போது, கோட் சூட் போட்டு கம்பீரமாக விமானத்தில் அமர்ந்திருக்கும் சி.ஆர்.பார்த்திபன், ‘‘என்ன மிஸ்டர்... குடிமயக்கமா?’’ என சிவாஜியிடம் கேட்பார். ‘‘ஏன் உங்களுக்கு கொஞ்சம் வேணுமா?’’ என சிவாஜி கேட்க, ‘‘எங்க பெரியவங்க ஒண்ணும் சேர்த்து வைச்சுட்டு போகல பாவப்பணத்தை... இப்படி குடிச்சே அழிக்க எங்களுக்குத் தெரியாது...’’ என சிவாஜிக்கு அறிவுரை சொல்பவராக நடித்திருப்பார் சி.ஆர்.பார்த்திபன்.

1979ம் ஆண்டு வெளியான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் சுதாகரின் தந்தையாக பண்பட்ட நடிப்பை சி.ஆர்.பார்த்திபன் வழங்கியிருப்பார். தனது மாமன் மகனை திருமணம் செய்ய ஒருதலைக் காதலால் உருகும் சி.ஆர்.சரஸ்வதியிடம் குணமாக நடந்து கொள்ளும் கதாபாத்திரத்தில் சி.ஆர்.பார்த்திபன் சிறப்பாக நடித்திருப்பார்.

அவருடைய முதல் படம் ‘நாக பஞ்சமி’. இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் நடித்த ‘புதுமைப்பித்தன்’ படத்தில் டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரராக நடித்திருப்பார். ‘அன்னையின் ஆணை’, ‘இரும்புத்திரை’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘மூன்றெழுத்து’, ‘பணமா பாசமா’, ‘சுமைதாங்கி’, ‘திக்கற்ற பார்வதி’, ‘தேடி வந்த திருமகள்’, ‘அன்றுகண்ட முகம்’, ‘உங்க வீட்டுக்கல்யாணம்’, ‘மல்லிகைப்பூ’, ‘நல்லவன் வாழ்வான்’, ‘அருணகிரி நாதர்’,  ‘சக்கரம்’ உட்பட தமிழ், தெலுங்கு, இந்தி என 120 படங்களில் நடித்துள்ளார்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரஞ்சன், ஜெய்சங்கர், சி.எல்.ஆனந்தன், ரவிச்சந்திரன் போன்ற நடிகர்களுடன் கம்பீரமாக நடித்த சி.ஆர்.பார்த்திபன், கடைசி காலத்தில் நடித்த இரண்டு படங்கள்தான் இந்த கட்டுரையை எழுத காரணமாக அமைந்து விட்டது.
இப்படங்களில் அந்த கேரக்டரில் ஏன் அவர் நடித்தார் என்று கூட புரியவில்லை. நடிகராக மட்டுமின்றி காப்பீட்டு நிறுவன முகவராக இருந்ததால் கஷ்ட ஜீவனத்தில் சி.ஆர்.பார்த்திபன் வாழ்க்கை இல்லையென்றும் கேள்விப்பட்டேன். பிறகெதற்கு அவர் இப்படிப்பட்ட படங்களில் நடித்தார்..? தெரியவில்லை.

அதுவரை பாடகராக, இசையமைப்பாளராக, கவிஞராக இருந்த கங்கை அமரன் முதல் முதலாக இயக்குநரான படம் ‘கோழி கூவுது’. 1982ம் ஆண்டு வெளியான அவரின் முதல் படமே முந்நூறு நாட்கள் ஓடி வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தில் சிட்டு என்ற கதாபாத்திரத்தில் சில்க் ஸ்மிதா நடித்திருப்பார். இப்படத்தில் குமரிமுத்து, சி.ஆர்.பார்த்திபன் குழுவை வைத்தே காமெடி ஸ்கிரி ப்ட் எழுதப்பட்டிருக்கும்.

‘‘ஏய்... தடியா... இந்த வட்டம் பாரு... உறியை நான் அடிக்கிறேன்...’’ என்று சி.ஆர்.பார்த்திபனைப் பார்த்து குமரிமுத்து கூறுவார். ‘‘உன்னால கொசுவையே அடிக்க முடியாது. போட்...டா...’’ என்று பார்த்திபன் கூற, ‘‘போட்...டா  தடிமாடு...’’ என குமரிமுத்துவும் பதிலளிப்பார்.
‘கோழி கூவுது’ காமெடி கலந்த காதல் சித்திரம்தான் என்றாலும் கம்பீரமான சி.ஆர்.பார்த்திபனை குமரிமுத்துவுடன் இணைத்து காமெடி காட்சிகளுக்கு பயன் படுத்திய விதம் ரசிக்கவே முடியவில்லை.

இது போதாதென்று சி.ஆர்.பார்த்திபனை ‘‘தென்னைமரம்...’’ என்பார் சில்க்ஸ்மிதா. குமரிமுத்து, பிரபு உள்ளிட்ட பலர் ‘‘போடா, வாடா, தடியா...’’ என சர்வ சாதாரணமாக அழைப்பது போல் காட்சியமைக்கப்பட்டிருக்கும். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை. ஓட்டைகள் விழுந்த முண்டா பனியோடு சி.ஆர்.பார்த்திபன் படம் முழுவதும் பரிதாபமாக வருவார். ஒரு காட்சியில் குமரிமுத்துவிடம், ‘‘அண்ணே... இரண்டு வடை வாங்கிக்கிறேனே...’’ என்று சி.ஆர்.பார்த்திபன் கேட்க, ‘‘உனக்கு டீ வாங்கித் தரதே தெண்டம்...’’ என குமரிமுத்து கூறுவார்.

இப்படி படம் முழுவதும் கவுண்டமணியிட்ம் சிக்கிய செந்திலைப் போல குமரிமுத்துவிடம் சிக்கி சி.ஆர்.பார்த்திபன் சின்னாபின்னமாகியிருப்பார்.பளிச்சென உங்களுக்கு அவரைத் தெரிய வேண்டும் என்றால், ‘அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே...’ பாடலைப் பாருங்கள். அந்தக் காட்சியிலும் சி.ஆர்.பார்த்திபன் தோன்றியிருப்பார்.இயக்குநர் கங்கை அமரனுக்கு சி.ஆர்.பார்த்திபனின் கம்பீரத்தின் மீது என்ன கோபமோ? அந்த பிம்பத்தை ‘கோழி கூவுது’ படத்தில் சுக்கு நூறாக நொறுக்கிப் போட்டிருப்பார்.

இதன் தொடர்ச்சியாக 1985ம் ஆண்டு ‘நானே ராஜா நானே மந்திரி’ படத்தில், துவக்கக் காட்சியிலேயே அந்த வேலையை இயக்குநர் பாலு ஆனந்த் செய்திருப்பார். படத்தின் டைட்டிலில் கூட கடைசியாக ஜோக்கர் துளசி, கொடுக்காப்புளி செல்வராஜ் பெயர்களுடன் பார்த்திபன் என்றே சி.ஆர்.பார்த்திபன் பெயர் காட்டப்பட்டிருக்கும்.

இப்படத்தில் நாடக கோஷ்டி யில் பெட்டி போடுபவராக, அதாவது ஆர்மோனியம் வாசித்து பின்பாட்டு பாடுபவராக சி.ஆர்.பார்த்திபன் நடித்திருப்பார். ‘தாய் அவளின் திருத்தாழ் பணிந்தேனே ஆதிசிவன்...’ எனத் துவங்கும் அந்தப் பாடலை இசைஞானி, கங்கை அமரன், எஸ்.பி.சைலஜா, விஜயரமணி ஆகியோர் பாடியிருப்பார்கள். இதில் விஜயரமணிதான் சி.ஆர்.பார்த்திபனுக்கு குரல் கொடுத்திருப்பார். ‘வைதேகி காத்திருந்தாள்’ டி.எஸ்.ராகவேந்திரா என்ற நடிகர்தான் விஜயரமணி. இந்தக் காட்சியில் விஜயகாந்த், ‘‘போஸ்ட் மரத்தில் கட்டி வைச்சு தோல உரிச்சிடுவேன்...’’ என மிரட்டி அடித்து விரட்டும் கதாபாத்திரத்தில் சி.ஆர்.பார்த்திபன் பரிதாபமாக நடித்திருந்தார்.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் நடிகர் திலகத்திற்கு இணையாக கம்பீரமான கேரக்டரில் நடித்த ஒரு நடிகரை, நகைச்சுவை என்ற பெயரில் இழிவுபடுத்திய இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் மனம் பதறும். அப்படங்களை இயக்கிய இயக்குநர்களை நினைத்து மனம் குமுறும். லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கருப்பு, வெள்ளை காலத்தில் இருந்து கலர் படங்கள் வரை ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், திராவிட சிந்தனையாளனான, தான், புராணப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார். சாகும்வரை அப்படிப்பட்ட படங்களில் அவர் நடிக்கவே இல்லை.

அப்படி ராஜாஜி, கலைஞர், எம்ஜிஆர், என்.டி.ராமாராவ், ஜெயலலிதா ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சி.ஆர்.பார்த்திபன் என்ற கம்பீரமான நடிகர், காமெடி என்ற பெயரில் தன்னை இழிவுபடுத்திக்கொண்ட கேரக்டர்களை தவிர்த்திருக்கலாமே என்ற ஆதங்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.இப்போது அவர் நம்மிடையே இல்லையென்றாலும், ‘ஏன் இப்படி செஞ்சீங்க மிஸ்டர் ஜாக்சன் துரை’ என்று அவரிடம் கேட்கத் தோன்றுகிறது.  

ப.கவிதா குமார்