மு.க.ஸ்டாலின் எனும் அவர்...“மறுபடியும் கூப்புலதான் உட்காரணும்...” என்றன சமூக வலைத்தளங்கள்.“துண்டு சீட்டு இல்லாமல் அவரால் பேசமுடியுமா?” இப்படிக் கேட்டவர், சட்டமன்றத்திலும் பொது மேடைகளிலும் கத்தை கத்தையாகத் தாள்களை வைத்துக்கொண்டு பேசிய (முன்னாள்) முதலமைச்சர்.
இவை மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ விமர்சனங்கள். எல்லை மீறிய சொற்கள். இன்று நேற்றல்ல; மு.க.ஸ்டாலினின் பொதுவாழ்வு தொடங்கிய 14 வயதிலிருந்தே அவருடைய ஒவ்வொரு செயலுக்கும் கிடைத்த பாராட்டுகளைவிட எதிர்மறை விமர்சனங்களே நிறைந்திருந்தன.

கலைஞரின் மகன் என்பது அவருக்கு வசதியானதாக இல்லை. வசவுக்கானதாகவே பெருமளவில் இருந்தது. தந்தையைப் போல பேசத் தெரியாதவர், எழுதத் தெரியாதவர், வார்த்தைகளை உச்சரிப்பதில் தடுமாறுபவர், அப்பாவைப் போல கட்சியை நடத்தத் தெரியாதவர், சாதுர்யம் இல்லாதவர் என மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு அசைவும் விமர்சிக்கப்பட்டன. அவமதிக்கப்பட்டன. இழிவுபடுத்தப்பட்டன. ஓரிரு திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் சமூக அக்கறை கொண்ட கதாபாத்திரத்தில் அவர் நடித்தபோதும் அதே அவமதிப்பு விமர்சனங்கள்தான்.

சமூக வலைத்தளங்கள் பெருகிய பிறகு, அவர் பேசியதை விட அவரைப் பற்றி கேலி பேசும் கூட்டம் அதிகரித்தது. முழுநேரத் தொழிலாக இதனை மேற்கொண்டவர்களும் உண்டு. அவருக்காக அல்லும் பகலும் ஜோசியம் பார்த்தவர்களும் உண்டு. ராசி இல்லாதவர்,
கட்டம் சரியில்லை, இலவு காத்த கிளியாகக் காத்திருக்க வேண்டியதுதான், ஆட்சிக்கு வரவே முடியாது என்று ஆரூடம் கூறியவர்கள் அநேகர். அவரது அரசியல் வாழ்வு தொடக்கத்தின் மிகக் கடுமையான, நெருக்கடியான மிசா சிறைவாசத்தைக்கூட கொச்சைப்படுத்தினார்கள்.

அவர் எதைச் செய்தாலும் அதை இழிவுபடுத்தும் வார்த்தைகளால் அர்ச்சிப்பதற்கென்றே ஒரு கூட்டம் நிறைந்திருக்கிறது. தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்து சிரித்துக்கொள்ளும் ஆட்கள் நிறைந்த அந்தக் கூட்டம், சமூக வலைத்தளத்தில் மு.க.ஸ்டாலின் ஏதேனும் பதிவிட்டால் சம்பந்தமே இல்லாமல் ‘ஹா... ஹா...’ ஸ்மைலி போட்டுவிட்டுப் போகும்.

ஸ்டாலின், கலைஞர் இல்லை. இதை அவரும் வெளிப்படையாகச் சொன்னவர். ‘கலைஞரின் எழுத்தாற்றலை - பேச்சாற்றலை - கலையாற்றலைத் தன்னிடம் எதிர்பார்க்க வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுத்தான் தி.மு.கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். தன்னிடம் இருப்பது உழைப்பு... கடும் உழைப்பு... சக்திக்கு மீறிய உழைப்பு... கலைஞரால் பாராட்டப்பட்ட உழைப்பு என்பதையும் அவர் சொன்னார். சொன்னது மட்டுமல்ல; சொன்னதைச் செய்வோம் என்கிற கலைஞரின் வழியிலேயே செயல்படுத்தியும் காட்டினார்.

1996ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடைபெற்றது. மேயர் என்ற பதவியை தலைநகரம் சென்னையின் ஒரு தலைமுறையே அறிந்திராத அளவுக்கு உள்ளாட்சியின் இலட்சணம் இருந்த காலம் அது. கலைஞர் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகுதான், மேயர் தேர்தல் நடைபெற்றது. முதன்முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் மேயர் என்ற பெருமையினைப் பெற்றார் மு.க.ஸ்டாலின்.

மேயராக அவர் பொறுப்பேற்றபிறகு, சென்னையின் முகமும் முகவரியும் மாறின. நவீன தமிழகத்திற்கேற்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட கட்டமைப்புகளை அவர் உருவாக்கினார். குறிப்பாக, மாநகராட்சி சார்பில் அவர் கட்டிய மேம்பாலங்கள் இன்றளவும் போக்குவரத்து நெருக்கடியைக் குறைத்து வருகின்றன.

அவரது கொளத்தூர் தொகுதியில் பரப்புரை செய்த எடப்பாடி பழனிசாமி, “மேயராக இருந்த ஸ்டாலின் சென்னைக்கு என்ன செய்தார்?” எனக் கேட்டார். ஸ்டாலின் எந்த பதிலும் சொல்லவில்லை. எடப்பாடியிடமே அதற்கான பதில் இருக்கிறது என்பது ஸ்டாலினுக்குத் தெரியும்.
ஆம். முதலமைச்சருக்கான க்ரீன்வேஸ் சாலை அரசு இல்லத்திலிருந்து கொளத்தூர் வரை அவர் சென்ற வழியில் பயணித்த பாலங்கள் எல்லாம் ஸ்டாலின் மேயராக இருந்தபொழுது கட்டப்பட்டவைதான். போயஸ் கார்டன் பெருமாட்டி தன் வீட்டிலிருந்து கோட்டைக்குப் போக வேண்டும் என்றாலும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் மேயர் ஸ்டாலின் நிர்வாகத்தில் கட்டப்பட்ட பாலத்தில் பயணித்துதான் போய்க்கொண்டிருந்தார்.
 
இத்தனைக்கும் அந்த பாலங்களில் ஊழல் என்று அவசர அவசரமாக வழக்குப் பதிவு செய்து, நள்ளிரவில் கைதுக் கொடூரத்தை நிகழ்த்தி, கடைசி வரை அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூட வக்கில்லாத ஆளுமைமிக்க அம்மணி அவர். இரண்டாவது முறையாகவும் ஸ்டாலினை மேயராக சென்னை மக்கள் தேர்ந்தெடுத்ததைப் பொறுக்க முடியாமல், அவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்காகவே புதிய சட்டத்தைக் கொண்டு வந்த தாயுள்ளமும் அந்த அம்மணிக்கு உண்டு.

மு.க.ஸ்டாலின் அலட்டிக்கொள்ளவில்லை. பதவி விலகினார். சென்னை மக்கள் அவரைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தனர். 2006ல் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆனார். பத்தாண்டுகளுக்கு மேலாக ஊராட்சித் தேர்தல் நடத்த முடியாமல் சாதிப் பதற்றம் நிலவி வந்த கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய ஊராட்சிகளில் முறையாகத் தேர்தலை நடத்தி தன் நிர்வாகத் திறனை வெளிப்படுத்தினார். உள்ளாட்சிக் கட்டமைப்புகளை மேம்படுத்தினார்.

வறட்சி நிறைந்த பகுதிகளிலும், சுத்தமான தண்ணீர் கிடைக்காத இடங்களிலும் குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்றினார். நேர்மையும் செயல்திறமும் கொண்ட அதிகாரிகளின் ஆற்றலை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார். 2009ம் ஆண்டு துணை முதல்வரானார். தொழில்துறை பொறுப்பையும் கவனித்தார். அதிகளவில் முதலீடுகளை தமிழகத்திற்குக் கொண்டு வந்தார். வெளிநாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டு நிதி வசதி யினைப் பெருக்கி, மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்திட துணை நின்றார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் வசதிகளையும் சுழல் நிதியையும் அதிகப்படுத்தி, அவற்றை தன் கைகளாலேயே அவர்களுக்கு வழங்கி, பொருளாதாரக் கட்டமைப்பில், பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கான வழிவகை செய்தார்.தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் தன் நிர்வாகத் திறனை சிறப்பாக வெளிப்படுத்தியவர் மு.க.ஸ்டாலின். தன் மீதான விமர்சனங்களைக் கடந்து அவர் பயணித்துக்கொண்டே இருந்தார்.

பத்தாண்டு காலம் திமுகவிடம் ஆட்சியும் அதிகாரமும் இல்லை. ஆனால், மக்களைச் சந்திப்பதில் மு.க.ஸ்டாலின் ‘முதல்வராக’வே இருந்தார். அதன் முதல் கட்டம்தான், 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அவர் மேற்கொண்ட ‘நமக்கு நாமே’ பயணம்.கலைஞருக்கு உடல்நலன் குன்றியபோது, செயல் தலைவர் என்ற பொறுப்பினை கட்சி விதிகளின்படி உருவாக்கி முழுத் தலைவராகவே பணியாற்றினார். 2018ல் கலைஞரின் மறைவுக்குப் பிறகு, கழகத் தலைவர் எனும் பெரும் பொறுப்பைத் தன் தோளில் சுமந்தார். அரை நூற்றாண்டுக் காலம் கட்சியை வழிநடத்தி, தமிழக அரசியலை சுழல  வைத்து, இந்திய அரசியலுக்கும் வழிகாட்டும் கலைஞரைப் போல இவரால் முடியுமா எனக் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஸ்டாலின் பதில் பேசவில்லை.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை மட்டுமின்றி, கூட்டணியையும் தன் தோளில் சுமந்து தமிழகம் - புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்ததுடன், 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, திமுகவை நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய
கட்சியாக அமரச்  செய்தார்.

இது ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி இல்லை; மோடி எதிர்ப்பலையில் கிடைத்த வெற்றி என புது வியாக்கியானம் கொடுத்தார்கள் வயிற்றெரிச்சல் விமர்சனக்காரர்கள். திமுகவுக்கு பயந்து முழுமையான உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், ஊரக உள்ளாட்சித் தேர்தலை மட்டும் நடத்தியது அதிமுக அரசு. அதிலும் திமுகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதை அங்கீகரிக்க எவருக்கும் துணிவுமில்லை, துப்புமில்லை.

கொரோனா பேரிடரில் ‘ஒன்றிணைவோம் வா’ என தி.மு.க.வினரை பொதுமக்களுக்குத் துணை நிற்கச் செய்தார் ஸ்டாலின். ‘கிராமசபை கூட்டம்’, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனத் தொடர்ச்சியாக மக்களுடன் கட்சியினர் இணைந்திருக்கும்படி செய்தார். அதற்கு அவரே முன் நின்றார். மொத்த சுமையையும் தன் தலையில் சுமந்தார்.

சட்டமன்றத் தேர்தலில் தோழமைக் கட்சிகளின் உரிமைகளை மதித்து - அதே நேரத்தில் வெற்றிக்குக் குந்தகம் இல்லாதபடி தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக முடித்தார். வெற்றிக்கான வியூகத்தையும் சரியாக வகுத்தார். ஆட்சிக்கு எதிரான அலை என்றார்கள் விமர்சகர்கள். ஆட்சி மாற்றத்திற்கான அலையை உருவாக்கும் வகையில் உழைத்தார். உழைத்தார். உழைத்தார். வெற்றிக் கோட்டையைப் பிடித்தார்.

ஆயிரம் வசைச் சொற்கள். அவமதிப்பு, குறை மதிப்பீடு, நக்கல், கேலி, ஏளனம் என எல்லா வகையிலும் தன்மீது தொடர்ந்து வீசப்பட்ட அத்தனை வார்த்தைகளையும் பொறுத்திருந்து அவர் தந்திருக்கும் ஒற்றை பதில், ‘செயல்’. அந்த செயலில் விளைந்தது மகத்தான வெற்றி.

கோவி.லெனின்