சிறுகதை-புதிய வெளிச்சம்



ஒன்று தகவல் தப்பாய் இருக்க வேண்டும். அல்லது இந்த முகவரி தவறாய் இருக்க வேண்டும்.கைபேசியை மீண்டும் உயிர்ப்பித்தேன். வீட்டு எண், தெரு எல்லாம் சரி. பெயரும் இருந்தது.
ஆனால், என் எதிரே நின்றவர் அழிச்சாட்டியமாய் அந்த மாதிரி இங்கே யாரும் குடி இல்லையே என்றார்.வயதானவர். கேட்கும் திறனில் குறைபாடும் இருந்தது. குத்து மதிப்பாய் என் பேச்சிற்கு முதலில் தலை ஆட்டியவர் ‘சபேசன் இருக்காரா’ என்றதும் உஷாராகி விட்டார். ‘என்ன’ என்றார் அதட்டலாய்.

‘‘சபேசன்... சபேசன்...’’ என்றேன் ஏலம் போடுவது போல்.‘‘அப்படி யாரும் இங்கே இல்லை...’’‘‘இந்த விலாசம்தான் கொடுத்திருக்காங்க...’’
‘‘தப்புத் தப்பா எதையாவது எழுதிக்கிட்டு வந்து என் உசுரை ஏன் எடுக்கிறீங்க...’’அவரது நிதானம் தொலைய ஆரம்பித்தது புரிந்தது. எனக்கும் மேற்கொண்டு என்ன செய்வது என்று புலப்படவில்லை. ‘மன்னிச்சுருங்க’ என்று கை கூப்பி விட்டு நகர்ந்தேன். சற்றுத் தள்ளி வந்து எனக்குத் தகவல் அனுப்பியவரைத் தொடர்பு கொண்டேன்.‘‘ஹலோ...’’ என்றார் என் குரலைக் கேட்டதும்.

‘‘அட்ரஸ் சரிதானா? நான் அங்கேதான் நிக்கிறேன். சபேசன்னு யாரும் இல்லைங்கிறாங்க...’’
என் குரலில் பதற்றம். எங்கோ வட இந்தியாவிலிருந்து ஒருவர் ஒரு உதவி கேட்டிருக்கிறார். ஃபேஸ்புக்கில் எனக்கு ஆறு வருடங்களாய் நட்பில் இருக்கிறார். நல்ல மனிதர். இரண்டு மாதங்களுக்கு முன் இந்தப் பக்கம் டூர் வந்திருக்கிறார். இங்கே உள்ள முருகன் கோயில் பிரசித்தி. கிளம்புமுன் என்னிடமும் தல வரலாறு கேட்டுக் கொண்டார்.

‘‘நாலஞ்சு குடும்பமா வரோம். உங்களைச் சந்திக்க ஆர்வம். ஆனா, உங்க வீட்டுக்கு வர முடியுமான்னு தெரியல...’’ என்றார்.‘‘கோயிலுக்கு வரும்போது சொல்லுங்க. அங்கேயே வந்து சந்திக்கிறேன்...’’ என்றேன்.ஆனால், சந்திக்க இயலவில்லை. அவர் வந்த நேரம் நான் அலுவலகத்தில் இருந்தேன். வரும் தேதி குறிப்பாகத் தெரியவில்லை. நடுவில் அவரது பயணத் திட்டம் மாறிவிட்டிருந்தது. அவர் என்னை அழைத்தபோது என்னாலும் உடனே கிளம்பி வர முடியவில்லை.

‘‘மன்னிச்சுருங்க. அடுத்த தடவை நிச்சயம் சந்திப்போம்...’’ என்று நிறைய தடவை ஸாரி சொன்னார். ஊருக்குத் திரும்பிய பின்னும் புலம்பி விட்டார்.
‘‘விட்டுத் தள்ளுங்க. வேணும்னுட்டு செய்யல. சூழ்நிலை அப்படி...’’‘‘நல்ல தரிசனம். கோயில் வாசல்ல ஒருத்தரைப் பார்த்தோம். எங்களை அழைச்சுக்கிட்டு போய் ஒவ்வொரு இடமும் வரலாறு சொல்லி தரிசனம் செஞ்சு வச்சார்...’’

‘‘ஓ...’’‘‘பணம் கூட எதுவும் கேட்கல. நாங்கதான் வற்புறுத்தி கொடுத்தோம். ஒரு மகன், ஒரு மகள் அவருக்கு. படிப்புச் செலவே கட்டுக்கு மீறிப் போகுதாம். அவருக்கு இப்படி கைட் வேலைதானாம். ஒரு கம்பெனில வேலை பார்த்து அதை ஏதோ பிரச்னைல மூடிட்டாங்களாம். முருகன் படியளந்தா வீட்டுல சோறு பொங்கும்னு சிரிச்சுக்கிட்டே சொன்னாரு...’’

நண்பர் மிகவும் உணர்ச்சியாய் பேசிக்கொண்டே போனார். ‘ம்ம்...’ என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.‘‘என் ஃபோன் நம்பர் வாங்கிக்கிட்டாரு. எப்ப வந்தாலும் அவருக்கு ஃபோன் செய்யச் சொன்னாரு. வேற யார் வந்தாலும் உதவறேன்னாரு...’’அத்தோடு அன்றைய பேச்சு முடிந்து விட்டது. பிறகு அவரே குறிப்பு அனுப்பியிருந்தார். மகனுக்கு ஃபீஸ் கட்ட வேண்டுமாம். உதவி கேட்டிருக்கார். 5000 அனுப்பி விட்டேன் என்று.

அப்போதுதான் எனக்கு சுரீரென்றது. நண்பரின் குணமே இதுதான். ஃபேஸ்புக்கிலேயே இது போல் ஒருவருக்கு அவரது பதிவைப் பார்த்து பணம் அனுப்பி விட்டார். என்னிடமும் சொன்னார். அவர் குறிப்பிட்ட நபரின் டைம் லைனுக்குப் போய்ப் பார்த்தேன். ஒரு பதிவில், தான் மிக சீரியஸ், மருத்துவமனையில் இருப்பதாய் போட்டிருந்தவர், அடுத்த பதிவில் அதுவும் அரை மணி நேரத்திற்குள் பிரபல நடிகைக்குப் பிறந்த நாள் வாழ்த்து பதிவிட்டு இருந்தார்.

நண்பருக்கு அதைத் தகவல் அனுப்பினேன். ‘‘உங்கள் இரக்க குணத்திற்கும் எல்லை வேண்டும்...’’என் மனதை நோகடிக்க வேண்டாம் என்று நினைத்தவர் போல் ‘‘சரி. இனி எச்சரிக்கையாய் இருக்கிறேன்...’’ என்று பதில் அனுப்பினார்.இன்றைய குழப்பத்திற்கும் அவர்தான் காரணம். ‘தப்பா எடுத்துக்கலைன்னா ஒரு உதவி செய்ய முடியுமா’ என்று கேட்டார். சம்மதம் சொன்னதும் கோயிலில் உதவிய அதே நபருக்கு அவசரமாய் உதவி தேவைப்படுகிறதாம். ‘அவர் மனைவிக்கு சீரியசாம்.


உங்களால் முடிஞ்சதை அனுப்புங்க. அந்த முருகனாவே உங்களை நினைச்சு கேட்கிறேன்னு மெசெஜ் அனுப்பி இருக்கார். இந்த முறை அவர் அக்கவுண்ட்ல போடல. நீங்க சொன்னது நல்லா ஞாபகம் இருக்கு. எனக்காக நீங்க அவர் வீட்டுக்குப் போய்ப் பாருங்க. உண்மைன்னு தெரிஞ்சா அவர் கேட்கிறதைக் கொடுங்க. நான் உங்க அக்கவுண்டுக்கு அனுப்பிடறேன். ப்ளீஸ்...’எனக்கும் இது நியாயமாகப்பட்டது. விலாசத்தை அனுப்பச் சொன்னேன். இதோ அந்த விலாசத்தின் முன்தான் நிற்கிறேன். ஆனால், அப்படி யாரும் இல்லை என்கிற பதில்.

எதிர் முனையில் நண்பருக்கும் தடுமாற்றம். ‘இந்த அட்ரஸ்தானே அனுப்பினார்...’ என்று அதே பாட்டைப் பாடினார்.‘‘சரி. நீங்க என்ன செய்வீங்க. அட்ரஸ் தப்புன்னா. கிளம்புங்க...’’ என்றார் கடைசியாக.கதவு மூடிக் கொண்ட அந்த வீட்டையே எட்டி நின்றபடி இன்னொரு முறை பார்த்துவிட்டு கிளம்பி விட்டேன். ஒரு வாரம் போனது. நண்பரிடமிருந்து குறுந்தகவல். ‘‘பணம் அனுப்பி விட்டேன். அட்ரஸ் சரிதானாம்....’’என்ன சொல்கிறார்?  உடனே அவரை அழைத்து விட்டேன்.

‘‘அவரே மறுபடி மெசெஜ் அனுப்பினார், உதவி கேட்டிருந்தேனே என்று. ஒரு நண்பரை உங்க வீட்டுக்கு அனுப்பினேன், நேரே உங்களைப் பார்த்து பணம் கொடுக்கச் சொல்லி. அவரும் வந்து பார்த்துவிட்டு அப்படி யாரும் இல்லைன்னு சொல்லிட்டார். எனக்கும் என்ன செய்யன்னு புரியவில்லை என்றேன்...’’அவர் பேசியதைக் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

‘‘அப்படி யாரும் வரலியேன்னார். பனி அதிகமாக இருப்பதால் கோயிலுக்குக் கூட போகவில்லை என்றார். அக்கவுண்ட் நம்பர் ஏற்கனவே என்னிடம் இருப்பதால் பணம் அனுப்பி விட்டேன். உங்களிடம் சொல்லாமல் இருக்கக் கூடாது என்பதால் தகவல்...’’அப்புறம் வேறேதோ பேசினோம். நானும் இதைப் பற்றி மேலும் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை. வீணாய் இருவருக்கும் சங்கடம்.

எனக்குள் ஏதேதோ பிறாண்டல்கள். எனக்கு இதில் எந்த நஷ்டமும் இல்லைதான். திரும்பத் திரும்ப நான் கண்ணால் பார்த்த விவரம் பொய் என்று சொல்லப்படும்போது சராசரி மனிதனுக்கு ஏற்படும் சஞ்சலம். மனைவி கூடச் சொன்னாள். ‘‘விட்டுத் தள்ளுங்க. இதுல என்ன. அவருக்கு உதவணும்னு விதி. அது உண்மைன்னே நினைச்சுக்கிட்டு இதை மறந்துருங்க...’’

‘‘இல்லம்மா. எனக்கு அதில் எந்தக் குழப்பமும் இல்லை. இவர்கிட்ட பணம் இருக்கு. கொடுக்கிறார். தப்பான ஆளுக்குத் தொடர்ந்து உதவி சரியான ஆளுக்குப் போக வேண்டியதைத் தடுக்கிறேனோன்னு தோணுது...’’‘‘தேவை இல்லாத வேலை...’’ அத்தோடு என் மனைவியும் வாதம் செய்வதை விட்டுவிட்டாள்.

தற்செயலாய் அந்தப் பக்கம் போகவேண்டிய வேலை வந்தது. வேலை முடிந்ததும் அதே வழியாய் திரும்பிக் கொண்டிருந்தேன். அன்று பார்த்த மனிதருடன் இப்போது இன்னொருவரும். பனியன் வேட்டியில் இயல்பாய் உட்கார்ந்திருந்ததால் இருவருமே ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள் என்று கணிக்கத் தோன்றியது.

அருகில் போனேன். வணக்கம் சொன்னேன். “இங்கே சபேசன்னு...”புதிய மனிதர் சிரித்தார். என் நண்பரின் பெயரைச் சொன்னார். “அவர் அனுப்பியது உங்களைத்தானா? இன்னிக்குத்தான் உங்களைப் பார்க்கிறேன். அவர் கேட்டப்போ யாரும் வரலியேன்னு சொல்லிட்டேன்...”
நடந்த கதையைச் சொன்னேன். பக்கத்தில் இருந்தவரைச் சுட்டிக் காட்டினேன். “இவர்கிட்டதான் விசாரிச்சேன். அப்படி யாரும் இல்லைன்னு சொல்லிட்டார்...”சபேசனின் முகம் ஏனோ வாடியது. “காபி சாப்பிடறீங்களா?”

“அதெல்லாம் வேணாம்...”
“எனக்காக அரை டம்ளர். ஆளுக்குப் பாதி குடிப்போம்...” கெஞ்சுகிற குரலில் சொன்னார். எனக்குக் கொடுக்கிற காபி என் நண்பரின் உதவிக்குச் செய்யும் பதில் மரியாதை போல நினைக்கிறார் என்று புரிந்தது. சரி என்று தலையாட்டினேன். உள்ளே போனவர் சட்டை போட்டுக் கொண்டு திரும்பி வந்தார்.“ஆங். சொல்ல மறந்துட்டேனே. இவர் என் அண்ணா. கல்யாணம் பண்ணிக்கல.

யாரும் பண்ணிக்கவும் மாட்டா. இவரைக் கைவிட்டுராதேன்னு எங்க அம்மா சத்தியம் வாங்கிண்டா அவ உயிர் போகிறச்ச. எங்க கூடத்தான் இருக்கார். வாங்க போகலாம். பக்கத்துலதான் காபிக்கடை...”வீட்டுப் பெண்மணிகள் யாராவது காபியுடன் வெளியே வருவார்கள் என்று நினைத்தால் இதென்ன புதுக் கூத்து.

ஒரு காபிதான் வாங்கினார். இன்னொரு காலி டம்ளரும் கேட்டு வாங்கினார். குடித்ததும் கிளம்பத் தோன்றியது. ‘‘வரட்டுமா...’’ என்றேன். ‘‘என்னோடு வர முடியுமா. அரை மணியில் உங்களை விட்டுவிடுவேன்...’’ இப்போதும் அவர் குரலில் கெஞ்சல் தொனி.

நான் ஏன் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று புரியவில்லை. போனேன். ஜிஎச்சில் பெண்கள் வார்டுக்குள் கூட்டிப் போனார். படுத்திருந்த பெண்மணிக்கு உயிர் கண்களில் இருக்கின்ற பிரமை. சபேசனைப் பார்த்ததும் அதில் வெளிச்சம். கூட வந்த என்னைப் பார்த்து பார்வை சிணுங்கியது.

‘‘தெரிஞ்சவர்தாம்மா. உனக்கு உடம்பு சரியில்லைன்னதும் பார்க்கிறேன்னு வந்தார். தட்ட முடியல...’’‘‘வேண்டாம்ணா. போதும். இனிமேல் என்னைக் காப்பாத்தி என்ன பண்ணப் போறீங்க..?’’‘‘மீனாட்சி, உளறாதே. இருக்கிறதும் போகிறதும் அவன்
கையிலதான் இருக்கு...’’

என்னை அனுப்பி வைத்து விட்டு வருவதாகச் சொல்லி விட்டு வெளியே வந்தார். எதிரில் சபேசன் ஜாடையில் ஒரு பெண் வந்தாள். ‘‘டாக்டரைப் பார்த்தியாப்பா?’’‘‘கௌரி... இவரை அனுப்பிட்டு வரேம்மா...’’ஜிஎச் வாசலில் ஒதுங்கி நின்றோம். வெளியுலகம் அதன் போக்கில் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. ஐம்பதடிக்குள் ஒரு கட்டடம். அதற்குள் படுக்கைகளில் தினுசு தினுசாய் ஜீவ மரணப் போராட்டங்களில் மனிதர்கள். சிலர் போராடித் தோற்று இன்னொரு மூலையில் மார்ச்சுவரியில். இது எதுவும் பாதிக்காத வெளியுலகம்.

“ஒரு பையனும் இருக்கான். அவன் இப்போ படிக்கிறான். கௌரி படிப்பைப் பாதியில் நிறுத்தியாச்சு. வசதி இல்லை. நான் யாரையும் குத்தம் சொல்லல. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விளையாட்டு விதிகள். வாழ்க்கை விளையாட்டு. என்னால ஜெயிக்க முடியலேன்னா அதுக்காகப் படைச்சவனைக் குத்தம் சொல்ல முடியுமா என்ன. வேற விளையாட்டில் போட்டிருந்தாலும் எனக்கு ஜெயிக்கிற சாமர்த்தியம் இல்லைன்னா அது அவன் தப்பு இல்லியே...”இயல்பாய் பேசிக் கொண்டிருந்தார். பேச்சிலும் கண்களிலும் அத்தனை தெளிவு.

“மீனாட்சியை நீங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பார்த்துருக்கணும். எங்க குடும்பத்தேர் எப்படி இத்தனை நாள் ஓடுச்சுன்னு புரிஞ்சிருக்கும். கொஞ்சம் கொஞ்சமா டவுன் ஆயிட்டா...”அவரின் மூடிய விழிகளில் மீனாட்சியின் பழைய உருவம் ஒளிர்ந்தது புரிந்தது. தொடர்ந்தார்.

“கை நீட்டறச்ச கூச்சமாத்தான் இருந்துச்சு. உதவுங்கோன்னு. கண் முன்னாடி இவங்களைத் தவிக்க விடறதும் சரியாப் படல. நீட்டிட்டேன். அதுவும் எல்லார்ட்டயும் இல்ல. என் மனசுல இவாள்ட்ட கேளுன்னு தோணிச்சுன்னா அவர்கள்ட்ட மட்டும்தான்.

 கணக்கு வச்சிருக்கேன். பசங்க ரெண்டு பேர்ட்டயும் சொல்லியிருக்கேன். நிச்சயம் இதே சூழ்நிலை ஆயுசுக்கும் இருக்காது. நீங்க ஒரு நாள் தலையெடுப்பீங்க. உங்க கையிலயும் பணம் தாராளமாப் புரளும். பூட்டி வைக்காதீங்கோ. தேடித் தேடி உதவுங்கோ. உதவி கேட்டு வரவங்களை கெஞ்ச வைக்காதீங்கோன்னு. சம்மதிச்சுருக்கா. என் குழந்தைகள். நிச்சயம் நிறைவேத்துவா. எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்க நண்பர்ட்ட சொல்லுங்கோ.

அவருக்குத் திருப்பித் தருவேனோ என்னவோ. ஆனா, திருப்பிருவேன் நான் வாங்கினதை. இது அந்த முருகன் மேல சத்தியம்...”மீண்டும் கை கூப்பினார். விறுவிறுவென்று உள்ளே போய்விட்டார். என் கைபேசி ஒலித்தது. வீட்டுக்காரிதான். ‘‘என்ன துப்பறியும் நிபுணரே, அங்கேதான் நிக்கிறீங்களா. எப்போ வீட்டுக்கு வர உத்தேசம்..?”“எனக்கு இங்கே ஒரு சின்ன வேலை பாக்கி இருக்கு. முடிச்சுட்டு வந்துடறேம்மா...”சற்று முன்னால் போய்க் கொண்டிருந்த சபேசனைப் பின்தொடர ஆரம்பித்தேன் ஒரு முடிவோடு.

ரிஷபன்