ஆன்மா



இந்த வருடத்தின் சிறந்த அனிமேஷன் மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான இரண்டு ஆஸ்கர் விருதுகள் உட்பட நூற்றுக்கும் மேலான விருதுகளை அள்ளியிருக்கும் அனிமேஷன் படம், ‘சோல்’. ஆங்கில மொழியில் ‘ஹாட் ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது.நியூயார்க்கில் இருக்கும் ஓர் இசைப் பள்ளியில் குழந்தைகளுக்கு இசை கற்றுக்கொடுத்து வருகிறார் ஜோ. பெரிய ஜாஸ் இசைக் கலைஞன் ஆகவேண்டும்  என்பது அவரது கனவு.

அந்தக் கனவு நிறைவேறப் போகிறது என்ற உற்சாகத்தில் இருக்கும் ஜோ ஒரு சாக்கடைக் குழியில் விழுந்து கோமாவுக்குச் சென்றுவிடுகிறார். அவருடைய ஆன்மா இந்த உலகத்துக்கும் இன்னொரு உலகுக்கும் இடையில் ஊசலாடுகிறது. ஜோவின் ஆன்மா மீண்டும் உயிர்பெற்று கனவு வாழ்க்கையை வாழத் துடிக்கிறது.

வேற்று உலகில் இருந்து அவருடைய ஆன்மா பூமியை நோக்கி வரும்போது உடன் இன்னொரு ஆன்மாவையும் அழைத்து வருகிறது. ஜோவின் ஆன்மா ஒரு பூனையின் உடலில் சேர்கிறது. ஜோவுடன் வந்த ஆன்மா ஜோவின் உடலில் சேர்கிறது. உடல் ஒரு பக்கம் இருக்க, ஆன்மா வேறு உடலில் இருக்க வாழ்க்கையைப் பற்றி ஜோ என்ன கண்டடைகிறார் என்பதே ஃபேன்டஸி திரைக்கதை. காட்சி கவிதையாக மிளிரும் இப்படத்தை இயக்கியவர்
பீட் டாக்டெர்.