தென்னிந்திய திரையுலகின் ஆவணக் காப்பகம்!‘‘வானம் வரை வளரவேண்டும்... நண்பர் ஞானம் அவர்களின் நிழற்பட ஞானமும், அவரது ஆயுளும்...’’ இது காவியக் கவிஞர் வாலியின் வாழ்த்து.‘‘‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் பாதையில் 86 ஆண்டுக் கால தமிழ் வரலாற்று நாயகர், நாயகிகளை தன் புகைப்படத் தொகுப்பு மூலம் மீண்டும் புத்துயிர் பெறச் செய்து இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள உதவும் கலைப்பணி இது...’’ என புகழாரம் சூட்டுகிறார் சிவகுமார். இப்படி தமிழ்த்திரையுலகின் ஜாம்பவான்கள் பலரும் ஞானத்தை பாராட்டக் காரணமிருக்கிறது.

1940ல் ஆரம்பித்து இன்று வரை தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளத் திரையுலகில் வெளியான திரைப்படங்கள், நட்சத்திரங்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், திராவிட இயக்கத் தலைவர்கள் என கறுப்பு வெள்ளை காலத்தின் பொக்கிஷப் புகைப்படங்களை இப்போதும் பாதுகாத்து, அதை பத்திரிகை மற்றும் சினிமா துறையினருக்கும் அளித்து வருகிறார் ஞானம் என்கிற ஞானப்பிரகாசம்.

வார, மாத, நாளிதழ்களில் வெளிவரும் திரையுலக ஜாம்பவான்களின் மலரும் நினைவுகள், அவர்களின் வாழ்க்கை வரலாறுகள், தொடர்கள் என சினிமா சார்ந்த வரலாற்றுப் பதிவுகள் இடம்பெறும்போதெல்லாம், அதற்கு புகைப்படங்களைக் கொடுத்து உதவுவது இவர்தான். அந்தக் கட்டுரைகளில் ‘படங்கள் உதவி: ஞானம்’ என வெளிவந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த ஞானம் இவர்தான்.

மந்தைவெளியில் இருக்கிறது ஞானத்தின் ‘கலை’க்கூடம். வீட்டு ஹாலில் ஆரம்பித்து சமையற்கட்டு வரை எங்கும் பரந்து விரிந்திருக்கிறது பொக்கிஷ பதிவுகள். கறுப்பு வெள்ளையில் ஆரம்பித்து இன்றைய டிஜிட்டல் சினிமா ஸ்டில்கள் வரை குவியல் குவியலாக புன்னகைக்கின்றன.
இன்னொரு புறம், இவரால் பட உதவி செய்யப்பட்டு வெளியான புத்தகங்களின் அணிவரிசை. சாதாரண அவரது வீட்டின் அறைகள் டைம் ட்ராவல் மெஷின் அறை போல, ஃப்ளாஷ்பேக்கில் அழைத்துச் செல்வது நிஜம்.

‘‘முன்னாடியெல்லாம் பத்திரிகை ஆபீஸ், சினிமா கம்பெனிகள்னு படிப்படியா ஏறிப்போய் ஸ்டில்களை காப்பி போட்டு கொடுத்துட்டு வருவேன். இப்ப எல்லாருக்குமே மெயில் அனுப்புறேன். தவிர, ஒரிஜினல் ஸ்டில் மிஸ் ஆகிடுமோனு பயமும் இல்ல. ஒருமுறை ஸ்டில்ஸ் ரவி சார், அவர் எடுத்த போட்டோக்களை எல்லாம் ஆல்பம் பண்ணப் போனார். அப்ப அவரிடம் சில புகைப்படங்கள் விடுபட்டுப் போனதால், என்கிட்ட கேட்டார். நான் அதையெல்லாம் என் கலெக்‌ஷனில் இருந்து எடுத்துக் கொடுத்ததும், அவருக்கே ஆச்சரியம். அந்த நட்பில் அவ்வப்போது நலம் விசாரிப்பார். நிவார் புயல் டைமில் இந்தப் படங்களின் மீது அவர் காட்டிய அக்கறை அலாதியானது.

சென்னை மழையில் மிதந்த போது அவரிடம் இருந்து போன் வந்தது. ‘ஞானம், உங்க போட்டோக்களை எல்லாம் தரையில் போட்டு வைக்காதீங்க. உசரத்துல வைங்க. அத்தனையுமே பத்திரமா வச்சுக்குங்க. கவனம் கவனம்...’னு அக்கறை காட்டினார்...’’ உற்சாகமாக பேச ஆரம்பிக்கிறார் ஞானம்.

‘‘என் முழுப்பெயர் ஞானப்பிரகாசம். பூர்வீகமே சென்னைதான். அப்பா நகைத் தொழிலாளி. பிளஸ் 2 வரை படிச்சேன். பள்ளிப் படிப்பு முடிச்சதும் ராயப்பேட்டையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் வேலைக்கு சேர்ந்தேன்.

அங்கதான் சினிமா பட ஸ்டில்கள் எனக்கு அறிமுகமாச்சு. போட்டோகிராபியில ரொம்ப ஆர்வம். சிவாஜியோட பர்சனல் போட்டோகிராபர் திருச்சி அருணாசலம் சார்கிட்ட அசிஸ்டென்டானேன். அங்க போஸ்டர் டிசைன் செய்யும் வித்தையை தெரிஞ்சுக்கிட்டேன். பேனர், போஸ்டர் டிசைனர்ஸ் பலரும் அறிமுகமானாங்க. மேக்ஸ், குமார், சுந்தர், கனி, அரசு ஆர்ட்ஸ்னு இவங்களோட ஒர்க் பண்ற வாய்ப்பும் அமைஞ்சது.

அதுக்கப்புறம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பட ஸ்டில் போட்டோகிராபர் வெங்கடாச்சாரியோட உதவியாளர் அமிர்தம்கிட்ட வேலை செய்தேன். ஒரு கட்டத்தில் டிசைனர்களுடன் உள்ள பழக்கத்தினால அவங்க சொல்லும் சினிமா கம்பெனிகளுக்கு நானே நேரில் போய் போஸ்டர், பேனர்களுக்கான படங்களை நோட் பண்ணி கொடுக்க ஆரம்பிச்சேன்.

என் சின்ஸியாரிட்டியைப் பார்த்து அமிர்தம் சார், அவர் வேலை செய்த 400 படங்களின் ஸ்டில்களை எனக்குக் கொடுத்து உதவினார். அதே மாதிரி எம்ஜிஆர், சிவாஜி படங்களின் ஸ்டில் போட்டோகிராபர் செம்மை ஆனந்த் சார் முந்நூறு பட ஸ்டில்களை எனக்குக் கொடுத்தார். இன்னிக்கு இவ்வளவு படங்கள் சேகரிச்சு வைக்க, அதான் காரணம். பேனர்களுக்கு பயன்படுத்தின ஸ்டில்கள் போக, மீதமுள்ள ஸ்டில்களும் எனக்கு கிடைக்கும். அதையும் பத்திரப்படுத்த ஆரம்பிச்சேன்.

அப்போவெல்லாம் ஒரு படத்தில் இருந்து ஒரே ஒரு ஸ்டில்தான் பப்ளிசிட்டிக்குனு தனியா கொடுப்பாங்க. உதாரணத்துக்கு ‘பாவமன்னிப்பு’ படம்னா, சிவாஜி தொப்பியோடு சைக்கிளில் வரும் படம். ஏன்னா, அந்த ஒரு ஸ்டில்லைத்தான் திரும்பத் திரும்ப கொடுத்திருப்பாங்க. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ன்னா எம்ஜிஆர் மாடிப்படில கைல சாட்டையோடு நிற்கற படத்தைத்தான் கொடுத்திருப்பாங்க.

இதெல்லாம் மக்கள் மனசுல நிலைச்சு நிற்கற படங்கள்தான். ஆனாலும், நான் என் முயற்சியில அந்தப் படங்களின் வேறு வேறு ஸ்டில்களை தேடிப் பிடிச்சு, டிசைனர்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சேன். இது திரையுலகிலும் ரீச் ஆச்சு. பல டிசைனர்களும் தாங்கள் டிசைன் செய்யும் படங்களின் வேறு ஸ்டில்கள் கிடைக்குமானு என்னிடமே கேட்க ஆரம்பிச்சாங்க. நானும் அந்தந்த படங்களின் ஸ்டில் போட்டோகிராபர்களுடன் பேசி அதை வாங்கிக் கொடுத்துடுவேன்.

இதுல போட்டோகிராபர்கள் ஸ்டில் சாரதி, அமிர்தம், சங்கர் ராவ் எல்லாம் முக்கியமானவர்கள். இவங்க அத்தனை பேருமே அவங்க ஷூட் பண்ணின போட்டோஸ் மட்டுமில்ல, நெகட்டிவ்களையும் என்கிட்ட கொடுத்து உதவினதை காலத்துக்கும் மறக்க முடியாது...’’ நெகிழ்ந்து சிலிர்த்தவர், சட்டென பக்கத்து அறைக்குச் சென்று தடிமனான புத்தகங்கள் சிலவற்றை கொண்டு வந்தார்.

‘‘இது பிரேம் நசீர் புக். கேரளாவுல இருந்து கேட்டாங்க. அத்தனை படங்களும் கொடுத்ததும் அவங்களுக்கு ஆச்சரியம். முகம் மலர்ந்து என்னை கவுரவிச்சாங்க. நம்பியார் சாமியோட நூற்றாண்டு மலருக்கும் படங்கள் கொடுத்தேன். மகேந்திரா ஜீப் கம்பெனியில் இருந்து சினிமாவில் நடிகர் நடிகைகள் ஜீப்களை பயன்படுத்திய புகைப்படங்களைக் கேட்டிருந்தாங்க.

என் கலெக்‌ஷனில் அதெல்லாம் இருந்ததால எடுத்துக் கொடுத்தேன்.
கன்னடத்தில் ராஜ்குமார் சார் புக்கிற்கும் கொடுத்தேன். அடுத்து எஸ்.வி.சுப்பையா நூற்றாண்டுக்கும், தெலுங்கில் சவுகார் ஜானகி, ஜமுனா, பானுமதி இவங்களோட பயோகிராபி புக்கிற்கும் படங்கள் கேட்டு வாங்கினாங்க.

‘படையப்பா’ படத்தோட புெராமோஷனுக்காக ‘அபூர்வ ராகங்கள்’ல ரஜினி வர்ற மாதிரியான ஸ்டில்ஸ் வேணும்னு கேட்டாங்க. அந்தப் படத்துல ஸ்டில் போட்டோகிராபரா பணிபுரிந்த இ.வி.கே.நாயர் பெங்களூருல இருக்கார்னு கேள்விப்பட்டு, அங்க போயிட்டேன். அவர்கிட்டேயே ‘அபூர்வ ராகங்கள்’ படத்துல ரஜினியோட ஸ்டில் மொத்தமே பதினைஞ்சுக்குள்ளதான் இருந்தது.

அதுவும் இப்ப என் கலெக்‌ஷன்ல சேர்ந்திடுச்சு.‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’ படத்துக்கு முன்னாடி ஜெய்சங்கரோட கௌபாய் ஸ்டில்கள் கேட்டு வந்திருந்தார் சிம்புதேவன். இப்ப எல்லா ஸ்டில்ஸையும் நான் டிஜிட்டல் பண்றதுக்கு அவர்தான் ஐடியா கொடுத்தார்.  

ஆழ்வார்பேட்டையில் கமல் சார் வீட்டில் உள்ள அவரது புகைப்பட ஆல்பம் அத்தனையும் நான் கொடுத்ததுதான். அந்தக் காலத்தில் வெளியான சினிமா பத்திரிகைகளையும் சேர்த்து வச்சிருக்கேன். பழைய போட்டோ கார்டுகள் ஆயிரத்துக்கும் மேல வச்சிருக்கேன். அந்தக் கால பிளாக் அண்ட் வொயிட் சினிமா ஆல்பங்கள் பிரமாண்டமா இருக்கும். இப்ப எங்கயும் பார்க்கவே முடியாத அந்த மாதிரி ஆல்பங்கள் ஐம்பதுக்கும் மேல என்கிட்ட இருக்கு...’’ என்ற ஞானம் முழு நேரத் தொழிலாக இதையே செய்து வருகிறார்.

‘‘என் உலகம் இந்த வீடுதான். கிடைக்கிற ஓய்வுல இந்த ஸ்டில்களை காலகட்ட வாரியா பிரிச்சு ஃபைல் பண்ணி வைக்கறேன். தேடும்போது எடுக்க ஈஸியா இருக்குமே! இப்ப அஞ்சு லட்சத்துக்கும் மேலான படங்களை டிஜிட்டலாக்கி கம்ப்யூட்டர்ல ஏத்துற முயற்சியில இறங்கியிருக்கேன்.

இந்த முயற்சிக்கு என் மனைவி சுசீலா உதவியா இருக்காங்க. அதேபோல முப்பது வருஷத்துக்கு முன்னாடி வெளியான ஸ்டில்கள் அத்தனையும் அதன் ஒரிஜினல் தன்மை கெடாம பாதுகாத்து வச்சிருக்கேன். அதாவது அப்ப பிரிண்ட் போட்ட படம், இன்னமும் அப்படியே அதே குவாலிட்டியோட இருக்கு.

இதுக்கு அந்தக் காலத்தில் நெகட்டிவ்வும், பிரிண்ட் கெமிக்கல் தரமும்தான் காரணம். ஸ்டில்கள் ஒண்ணோடு ஒண்ணு ஒட்டாம இருக்க, அடிக்கடி எடுத்து தூசு துடைச்சு வைப்பேன். மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த படங்களின் புகைப்படங்கள், ஜூபிடர் பிக்சர்ஸ் புகைப்படங்கள், நாடகம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள்... இதையெல்லாம் சமீப காலத்துல சேகரிச்சேன். வெறும் ஸ்டில்களோடு நின்னுடாம, டேட்டா பேஸ்களையும் சேகரிக்கணும்னு நினைச்சிருக்கேன்.

1970லிருந்து 80 காலகட்டத்திற்கான ஸ்டில்கள்தான் என்கிட்ட போதுமானதா இல்ல. ஏன்னா, அந்தக் காலகட்டத்தில் இருந்த நெகட்டிவ்கள் எதுவும் பாதுகாத்து வைக்கப்படல. அதிர்ச்சி யாகத்தான் இருக்கு...’’ என்றவர், தன்னுடைய இந்த ரீச்சுக்கு காரணம், பத்திரிகைகள்தான் என்கிறார்.

‘‘இந்த ஸ்டில்களை எல்லாம் பத்திரிகைகளுக்குக் கொடுத்து, இதை முழுநேரத் தொழிலா எடுத்து நடத்த முடியும்னு எனக்குள்ள நம்பிக்கையை விதைச்சவர் ‘நக்கீரன்’ கோபால் சார்தான். ‘ரஜினி ரசிகன்’னு அவங்க கொண்டு வந்த தனிப் புத்தகத்துக்குதான் முதன்முதலா ஸ்டில்ஸ் கொடுத்து, சன்மானம் வாங்கினேன். அதுக்கப்புறம், சின்ன பத்திரிகை, பெரிய பத்திரிகைனு எந்தப் பாகுபாடும் பார்க்காம யார் ஸ்டில்கள் கேட்டாலும் அனுப்பி வைப்பேன்.

‘வரலாற்றுச் சுவடுகள்’ தொடரை எழுதின ஐ.சண்முக நாதன் சாரால என் வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனை கிடைச்சது. சினிமா தொடர்புகள் அதிகரிச்சது. இப்ப நான் இருக்கற இந்த அலுவலகத்தை சொந்தமா வாங்கக்கூடிய அளவுக்கு எனக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தவர் சண்முகநாதன் சார்தான்.  

என் சேகரிப்பில் விட்டுப்போன 1970 - 80 காலகட்ட படங்களும் கிடைச்சா சந்தோஷப்படு வேன். தமிழ் சினிமா மக்கள் தொடர்பாளர்கள் எல்லாருமே என் முயற்சியை பாராட்டறாங்க. அவங்க ஒர்க் பண்ற படங்களின் ஸ்டில்களை எனக்கு அனுப்பி வைச்சு உதவறாங்க. என் கனவு, லட்சியம் எல்லாம் தென்னிந்திய சினிமா ஸ்டில்களுக்கான ஆவணக் காப்பகம் அமைக்கணும் என்பதுதான்...’’ அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் ஞானம்.

படங்கள் உதவி: ஞானம்

செய்தி: மை.பாரதிராஜா

படங்கள்: ஆர்.சந்திரசேகர்