இந்தத் தமிழனை பெங்களூரில் கொண்டாடுகிறார்கள்!பெங்களூருவில் தமிழன் என்றால் வெறுக்கப்படுவான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். எவ்வளவு பெரிய ஆளாக தமிழன் இருந்தாலும் அரசியலில் உயர்ந்த பதவிக்கு தமிழர்கள் வருவதற்கான வாய்ப்பு அங்கு கிடைப்பதில்லை.இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்களையும், திறமையான தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளையும் உதாரணமாகக் கூறமுடியும்.

இதுபோன்ற சூழ்நிலையில் பெங்களூரு பேட்ராயனபுரா சட்டமன்றத் தொகுதியில் கன்னட கவிஞர் குவெம்பு பெயரில் அழைக்கப்படும் வார்டில் வி.வி.பார்த்திபராஜன் கடந்த 10 வருடங்களாக மக்கள் சேவை ஆற்றி வருகிறார். அவரின் சேவைக்கு மதிப்பளித்த அந்தப் பகுதியைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தினர், அவருக்குப் பாராட்டு விழா நடத்தியுள்ளனர்.

தமிழகத்தின் வேலூரிலுள்ள காகிதப் பட்டறை பகுதியைச் சேர்ந்த வேணுகோபால்­ - கண்ணம்மாள் தம்பதியின் மகனான பார்த்திபராஜன், பெங்களூருவில் கடந்த 1987ல் கால் பதித்தார்.அப்போது பெங்களூரு மாநக ராட்சியுடன் குவெம்பு நகர் வார்டு இணைக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பின்தங்கிய மக்களின் கூடாரமாக இந்தப் பகுதி காணப்பட்டது. 2001ல் பேட்ராயனபுரா நகரசபையில் உறுப்பினரான பார்த்திபராஜனின் சேவை அந்தப் பகுதி மக்களுள் ஒருவராக அவரை மாற்றியது.

அதைத்தொடர்ந்து கடந்த 2015ல் நடந்த பெங்களூரு பெரு மாநகராட்சி தேர்தலில் உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட அப்பகுதியில் அவர் செய்த சேவையே காரணம் என்கிறார்கள். இந்நிலையில்தான் தன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்பினரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக  அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் நினைவாக அவருக்கு சொந்தச் செலவில் சிலை அமைத்துள்ளார் பார்த்திபராஜன். மட்டுமல்ல; மக்களின் நலனிற்காக வாழ்ந்து தன் மொத்த வாழ்க்கையையும் நாட்டின் நலனிற்காக செலவிட்டு அதன்மூலம் நாட்டின் உயர்ந்த பதவியை அடைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம் நினைவாக அவரின் மார்பளவு சிலையையும் அமைத்துள்ளார்.

‘‘அம்பேத்கர் என்ற ஒரு தனி நபர் காரணமாக பல கோடி பிற்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய என்னைப் போன்றோர் அரசியலில் முகவரி பெற்றுள்ளோம். இந்தியாவின் அரசியல் அமைப்பு என்றால் அதற்கு அடிப்படை அம்பேத்கர் என்ற மாமேதைதான்.

அத்தகைய சிறப்புமிக்க அம்பேத்கருக்கு சொந்தச் செலவில் சிலை அமைக்க முடிவு செய்தேன். அதே நேரம் வாழ்நாள் முழுவதும் ஏழைகளின் பாதுகாவலன் போல் தன்னை நினைத்து அவர்களின் உயர்வுக்கு உழைத்த ‘ஏவுகணை மைந்தன்’ டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் நினைவாக அவரின் மார்பளவு சிலையையும் அமைத்தேன்.

பெங்களூரு பேட்ராயனபுரா, குவெம்பு நகர் சர்க்கிள் தற்போது அம்பேத்கர் சர்க்கிள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில்தான் இவ்விரு உன்னதத் தலைவர்களின் சிலைகளும் உண்மை, உழைப்பு, உயர்வுக்கு உதாரணமாக உள்ளன.  எனது அரசியல் குருவான மாஜி அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, இந்த சிலைகளை அமைக்க உதவியாக இருந்தார். இப்பகுதியைச் சேர்ந்த அனைவரும் இதற்கு ஆதரவு அளித்தனர்...’’ என்ற பார்த்திபராஜன், ‘தமிழன் என்றால் இங்கு வெறுப்பு காணப்படுவது உண்மைதான்’ என்கிறார்.

‘‘அதே நேரம் தன்னலமின்றி சேவை ஆற்றும் தமிழர்களை அவர்கள் ஆதரிக்கத் தவறுவதில்லை. இதற்கு நானே உதாரணம்தான். அம்பேத்கர் காலத்தில் நான் பிறக்கவில்லை. அதே நேரம் அப்துல்கலாம் வாழ்ந்தபோது நானும் வாழ்ந்தேன் என்பது எனக்குப் பெருமை. மொழி, இன வேறுபாடின்றி மக்களின் நலனுக்காக உண்மையாகப் பாடுபடவேண்டும் என்பதை அண்ணல் அம்பேத்கரும் அப்துல்கலாமும் உணர்த்தியிருக்கிறார்கள்...’’ என்ற பார்த்திபராஜன், கஷ்டப்பட்டு உயர்ந்திருப்பவர்.

‘‘பெங்களூருவில் மகாராணி அம்மையார் கல்லூரியில் பணியாற்றியபோதும் சரி, அதற்கு முன்பும் வசதி குறைவான வாழ்க்கைதான். சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். அப்போது சட்ட மேதை அம்பேத்கர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் போதனை
களும் வாழ்க்கை முறையுமே என்னை நல்வழிப்படுத்தியது...’’ நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் பார்த்திபராஜன்.

ஏரல் எஸ்.பட்டு