அலங்காநல்லூர் மலையாள வெல்லம்!உலக அளவில் பல்வேறு பண்டிகைகள், விழாக்கள், கலாசார நிகழ்வுகள் நடக்கின்றன. ஆனாலும், தமிழர்களுக்காக, தமிழர்களின் பாரம்பரியப் பெருமையை உலகம் முழுக்க காட்டும் வகையில் நடக்கும் ஓர் உன்னத விழாவே பொங்கல் பண்டிகை. உலகிற்கே ஒளி கொடுக்கும் சூரியப்பெருமானை, உலக மக்களுக்கே வாழ்வளிக்கும் விவசாயிகளை, விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் கால்நடைகளைப் போற்றும் ஓர் உயரிய விழாதான் பொங்கல். உழைப்பில் விளைந்த விளைபொருட்களுக்கு மரியாதை செலுத்தும் முத்தாய்ப்பான விழாவாக இப்பொங்கல் திருநாள் இருக்கிறது.
 
தமிழ் மாதத்தின் முதல் மாதமாகவும், மாதங்களில் சிறந்ததுமான தை மாதத்தை, தை மகளே வா, தமிழ் மகளே வா என்று தமிழர்கள் வாய் நிறைய அழைக்கும் ஒரு அற்புதப் பெருவிழாதான் பொங்கல்.பொங்கல் பண்டிகையின்போது எத்தனையோ பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், பொங்கலின்போது புத்தரிசியுடன் கலந்திடும் வெல்லம் முக்கிய இடம்பிடிக்கிறது.

ஆதிகாலத்தில் வெள்ளைச்சர்க்கரை உருவாகும் முன்பு மண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரையே இனிப்புத் தேவைக்கென இருந்தது. நவீன சர்க்கரை ஆலைகள் வருவதற்கு முன்பு விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விளைந்த கரும்புகளை வெட்டி அரைப்பதற்கும் காளைகளையே பயன்படுத்தினர்.எண்ணெய் ஆட்டுவதற்கு எவ்வாறு செக்கில் காளைகளைப் பயன்படுத்தினரோ, அதைப்போலவே கரும்புகளை செக்கிலிட்டு அரைக்கவும், சாறு பிழிவதற்கும் காளைகள் உதவின. பிற்காலத்தில் டீசல் மோட்டார்களைப் பயன்படுத்தி அதில் இரும்புச் சக்கரங்கள் கொண்டு கரும்பு அரைக்கப்பட்டது.

இப்படி பெறப்பட்ட கரும்புச் சாற்றை ராட்சதக் கொப்பரையில் ஊற்றி, மிஞ்சிய கரும்புச் சக்கைகளையே இதற்கு எரிபொருளாகப் பயன்படுத்தினர். சமைத்த சாப்பாட்டை வாழை இலையில் உண்டு மகிழ்ந்து, கரும்புச்சாற்றில் எடுக்கப்பட்ட வெல்லத்தில் சுவையான பொங்கல் தயார் செய்து மஞ்சள் கிழங்குகளை அந்தப் பானைகளில் கட்டி, மங்களகரமாக இறைவனுக்கும், தங்களது விவசாயத்திற்கு உதவிய சூரியபகவானுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தினர்.

இப்போதும் மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர் பகுதிகளில் குறைந்தது ஐந்து ஏக்கர் நிலப்பகுதிக்கு ஒரு கரும்பு அரவைப் ஆலை அமைத்துக் கொள்கின்றனர். விளைநிலத்திற்குள்ளேயே சிறிய அளவிலான இந்த கரும்பு வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலை அரவை பகுதியும் இருக்கிறது.

ஆண்டுக்கு ஒரு முறை, தைப்பொங்கல் ஆரம்பிக்க ஒரு மாதம் முன்னதாகவே, மார்கழி மாதத்தில் இருந்து இப்பகுதியில் விளைந்த கரும்புகளை வெட்டி எந்திரங்களில் கொடுத்து அரவை செய்து அதிலிருந்து வெளியேறும் கரும்புச்சாற்றிலிருந்து வெல்லம் தயார் செய்கின்றனர். அலங்காநல்லூர், கோட்டைமேடு, கொண்டையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தனியார் கரும்பு ஆலைகள் அதிகமிருக்கின்றன.

இந்த ஆலைகளில் மண்டை வெல்லம் துவங்கி அச்சு வெல்லம், சர்க்கரை வரையிலும் பலவகையில் இந்த இனிப்பு தயாரானாலும், அதிகளவில் இப்பகுதிகளில் ‘மலையாள வெல்லமே’ தயாராகிறது. ஒவ்வொரு உருண்டையாகத் தயாராகும் இந்த வெல்லம் மலையாள வெல்லமாகப் பெயர் பெற ஒரு காரணம்உண்டு.

கேரள மாநிலத்தின் உச்சவிழாவான ஓணம் பண்டிகைக்கென அலங்காநல்லூர் பகுதிகளில் இந்த உருண்டை வெல்லம் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான வரவேற்பு எகிறியதால், இந்த உருண்டை வெல்லமானது, ‘மலையாள வெல்லம்’ என்பதையே தன் பெயராக்கிக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்த மலையாள வெல்லமானது இப்போதும், மதுரை வெல்ல மண்டி மூலம் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இதே பெயரில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.வெல்ல உற்பத்தியாளர் வலசையைச் சேர்ந்த கண்ணன் உற்சாகத்துடன் பேசுகிறார்: ‘‘கரும்பு நடவு செய்தது முதல் குறைந்தது 9 மாதங்கள் வரை நன்கு விளைந்த கரும்புகளைத் தரம் பிரித்து, சாறு எடுத்து அதில் வெல்லம் தயார் செய்கிறோம். எவ்வித நச்சுப்பொருட்களுக்கும் இடம்தராமல் இயற்கையாகத் தயாரிப்பதால் அலங்காநல்லூர் வெல்லத்திற்கு, அதுவும் இந்த மலையாள வெல்லத்திற்கு மவுசு அதிகம்.

துவக்கத்தில் ஓணம் பண்டிகையின்போது அதிக அளவில் கேரளாவிற்கு இந்த வெல்லம் அனுப்பி வைக்கப்பட்டு, இப்போது பலரும் இதனையே விரும்புவதால் பல இடங்களிலும் இந்த வெல்லத்திற்கே வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக அதிகளவில் சுண்ணாம்பு பவுடர், பிளீச்சிங், சோடா உப்பு உள்ளிட்ட ரசாயனக் கலவைகளைச் சேர்ப்பதால் மற்ற இடங்களில் வெல்லம் ‘பளிச்’சென நல்ல கலரில் இருக்கும். ஆனால், அந்த வெல்லத்தைச் சுவைத்தால் உப்புச் சுவையே மேலோங்கியிருக்கும்.

அலங்காநல்லூரின் மலையாள வெல்லத்தைக் காய்ச்சும்போது திரிந்துபோகாதிருக்க தேங்காய், விளக்கெண்ணெய் சிறிதளவு சேர்ப்பது தவிர வேறு வேதிப்பொருட்களைச் சேர்ப்பதில்லை. இதனால் இந்த வெல்லத்திற்கு பளிச்சென்ற நிறம் இருக்காது. ஆனால் சுவையில் மிரட்டிவிடும்...’’ என்கிறார் கண்ணன்.

எம்.ஆர்.திருமலை சீனிவாசன்