பீமன்டே வழிசமீபத்தில் திரையரங்கில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுகளை அள்ளிய மலையாளப்படம், ‘பீமன்டே வழி’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது.கேரளாவில் உள்ள ஒரு ரயில்வே பாதையை ஓட்டிய சிற்றூர்.
முப்பது அல்லது நாற்பது குடும்பங்கள் வசிக்கக்கூடிய பகுதி. வாகனங்கள் செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லை. அதனால் அவசரமான காரியங்களுக்கு மெயின் ரோடு செல்ல மக்கள் திணறுகின்றனர். இந்நிலையில் பீமனின் அம்மாவுக்கு கீழே விழுந்து காலில் அடிபடுகிறது. ஒரு நாற்காலியில் அவரை உட்கார வைத்து மெயின் ரோடு வரை தூக்கி வரவேண்டிய அவல நிலை.

இந்தச் சம்பவம் பீமனை வெகுவாக பாதிக்கிறது. தான், வசிக்கும் இடத்துக்கு ஒரு சாலை அமைக்க ஊரையே திரட்டுகிறான். அதில் சிலர் பீமனுக்கு எதிராக மாறுகிறார்கள். எல்லாவற்றையும் மீறி பீமன் எப்படி சாலையை அமைக்கிறான் என்பதை நகைச்சுவையாக சொல்லிச் செல்கிறது திரைக்கதை.

மக்கள் நினைத்தால் என்ன மாதிரியான மாற்றங்களை வேண்டுமானாலும் கொண்டு வரலாம். அதற்கு அரசின் துணை கூட தேவையில்லை என்பதை எளிமையாக சித்தரிக்கிறது இந்தப் படம்.
பீமனாக குஞ்சாக்கோ போபன் கச்சிதம். செம்பன் வினோத் திரைக்கதை எழுத, அஷ்ரப் ஹம்சா இயக்கியிருக்கிறார்.