கண்களுக்கு விருந்தளிக்கும் காரங்காடு!



ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ளது காரங்காடு. இந்த கடற்கரைக்கிராமத்தில் மாங்குரோவ் (அலையாத்தி) காடுகள் சுமார் 73 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இவை பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாகவும், எழில்மிகு தோற்றமுடன் காட்சியளிக்கின்றன. இவ்வகை காடுகள் சுனாமி, புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் சக்திகொண்டவை. இக்காடுகளுக்கு அருகிலேயே பக்கவாட்டில் கடற்கரையும் தீவுகளும் அமைந்திருப்பதால் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக வனத்துறை கண்டறிந்துள்ளது.

தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் மற்றும் பசுமையாக்கல் திட்டம் மூலம், பொதுமக்கள் தீவுகளையும், இயற்கை அழகையும் கண்டு ரசிக்கும் விதமாக வெறும் மாங்குரோவ் காடுகளாக இருந்த இப்பகுதியில் வனத்துறையினர், கடந்த 2016 - 2017ல் ரூ.9 லட்சம் செலவில் ‘வாட்ச் டவர்’ என்ற ‘காட்சிக் கோபுரம்’ கட்டியுள்ளனர். இந்த காட்சிக் கோபுரத்தின் மேல் ஏறி நின்று பார்த்தால் கடல் பகுதி, தீவுகள், மாங்குரோவ் காடுகள் உள்ளிட்டவற்றின் அழகை ரசித்து மகிழலாம்.

*படகோட்ட ரெடியா..?

சிறப்பு அம்சமாக இந்தியாவிலேயே அந்தமான், கோவா ஆகிய இடங்களில் மட்டுமே இருக்கும் கடலுக்குள் மூழ்கி மீன்களைப் பார்க்கும் வசதியும் இங்கு இருக்கிறது. இங்குள்ள மாங்குரோவ் காடுகளுக்கு இடையே கடலுக்குள் படகில் பயணித்து அழகை ரசிப்பதுடன், கடலுக்குள் மூழ்கியும் கடல் உள்ளழகைக் காண முடிகிறது.
இதற்கென, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து போக மறப்பதில்லை. முக்கிய அம்சமாகப் படகோட்டி மூலமாக படகு சவாரி செய்யலாம். சுற்றுலாப்பயணிகள் விரும்பினால் பயணிகளே பதுகாப்பு உடைகள் அணிந்துகொண்டு படகைத் துடுப்பு மூலமாக இயக்கியும், இயற்கை அழகை ரசித்து திரும்பலாம்.

*படகு சவாரி செய்யலாமா?

கடலில் பயணிக்கிற அனைவரும் பாதுகாப்புக் கவச உடைகள் கட்டாயம் அணிய வேண்டும். சுற்றுலாப்பயணிகள் படகில் சவாரி செல்ல நபர் ஒன்றிற்கு ரூ.150 வசூலிக்கப்படுகிறது. படகில் பயணிக்கிற தருணம், மாங்குரோவ் காடுகளின் மரங்களில் நின்று தலையசைக்கும் ஏராளமான அரிதான பறவைகளையும், தண்ணீருக்குள் துள்ளிக் குதிக்கும் விதவிதமான மீன் வகைகளையும் பார்த்து மகிழலாம். அதே போல் கடல்நீருக்குள் சுவாச உடை வசதிகளுடன் மூழ்கி கடலில் உள்ள நட்சத்திர மீன்கள், கடல் குதிரைகள், நண்டு மற்றும் மீன் வகைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களையும் சிறு கட்டண செலவில் நேருக்கு நேராகக் காணலாம்.

*ஊட்டியின் உற்சாகம்...

முன்பெல்லாம், இதுமாதிரியான சுற்றுலா செல்ல வேண்டுமானால் அந்தமான், கோவா ஆகிய இடங்களுக்குத் தான் போக வேண்டும். அங்கு எல்லோராலும் செலவு செய்து செல்ல முடியாத சூழலில் அந்த வசதி, காரங்காட்டில் கிடைப்பதால் இது கோடை வாசஸ்தலமான ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் தருகிற உற்சாகத்தைத் தருவதாகவும், குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சி கிடைப்பதாகவும் பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

*16 பேர் குழு மேற்பார்வையில்...

சிறப்புமிக்க இச்சூழல் சுற்றுலாத்தலத்தை மேம்படுத்தி காத்திடும் வகையில், காரங்காட்டில் சூழல் மேம்பாட்டுக்குழு என்று ஒன்றும் இருக்கிறது. ஒரு தலைவர், ஒரு செயலர் 14 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 16 நபர்கள் நியமிக்கப்பட்டு அதன் செயலாளராக வனத்துறை சரக அலுவலர் உள்ளார். இந்நிர்வாகத்தின் கீழ் வனத்துறையின் வழிகாட்டுதலின்
படியே இந்த சுற்றுலா மையம் நடைபெற்றுவருகிறது. இதில் வரக்கூடிய வருமானத்தில் 50 சதவீத செலவு போக சுற்றுலா மேம்பாட்டிற்காகவும், 50 சதவீதம் கிராம மக்கள் மேம்பாட்டிற்காகவும் செலவு செய்யப்படுகிறது.

*கண்களுக்கும்... வயிற்றுக்கும்...

இங்கு சுற்றுலாவிற்கு வருவோருக்குக் கண்ணிற்கு மட்டும் விருந்தல்ல... வயிற்றுக்கும் சிறந்த உணவு அளிக்கப்படுகிறது. நபர் ஒருவர் ரூ.230 செலுத்தி முன்பதிவு செய்து விட்டால் கணவாய் கட்லட், இறால், நண்டு சூப், மீன் குழம்பு உள்ளிட்ட வாய்க்கு ருசியான அனைத்து வகையான கடல் பொருட்களும் உணவாக வழங்கப்படுகிறது. இதனை மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர். கடலில் பிடித்த உடனே சமைத்து தருவதால் இந்த உணவு வகைகள் மிகுந்த சுவையாக இருக்கும். இந்த ஊரில் பிடிக்கப்படும் நண்டு மிகவும் பிரசித்தி பெற்றது அதன் சுவையே தனி சிறப்பு.

‘‘சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக வனத்துறை சார்பாக படகுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், அமர்ந்து உணவருந்தும் இட வசதி, போட்டிங் செல்வோர் காத்திருப்பு வசதிக்கான இடம், கேண்டீன் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. கழிப்பிடம், உடை மாற்றும் வசதியும் உள்ளது.

இங்கு மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பக அறக்கட்டளை மூலம் இயங்கும் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயார் செய்யப்படும் மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய், பனங்கருப்பட்டி, பனைஒலைகள் மூலம் செய்யக் கூடிய கைவினைப் பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுகிறது. இது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இங்கு மேலைநாட்டுக் குளிர்பானங்கள் விற்கப்படுவதில்லை. இயற்கை சார்ந்த நாட்டுப் புற உணவுப்  பொருட்கள் மட்டுமே விற்கப்படுகிறது என்பது கூடுதலாக சிறப்பு பெற்றுள்ளது. கடல் உயிரினங்களைக் காப்பது குறித்த விழிப்புணர்வும் வழங்கப்படுகிறது...’’ என்கிறார் வனச்சரகர் சதீஷ்.

எப்படி செல்வது?

பஸ்சில் செல்பவர்கள் ராமநாதபுரம் அல்லது தொண்டி வந்து அங்கிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் வரும் பஸ்ஸில் அ.மணக்குடி செல்ல வேண்டும். இங்கிருந்து 2 கிமீ தூரம் நடக்க வேண்டும். சில நேரங்களில் வாடகை வாகன வசதி கிடைக்கும். புதுக்காடு ஸ்டாப் நிற்கும் பஸ்களிலும் ஏறலாம். அங்கிருந்து அரை மணிநேரம்தான். வாகனங்களில் செல்பவர்கள் நேராகக் காரங்காடு செல்லலாம்.

அ.கோட்டைச்சாமி