நக்ஷி நகைகள்!பெங்காலியில் ‘நக்ஷி’ என்றால் செதுக்கல்கள் என்று பொருள். ‘நக்ஷா’ என்னும் வார்த்தையில் இருந்து மருவி நக்ஷியானது. கைகளால் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்ட எந்த ஒரு அரிய பொருளையும் ‘நக்ஷி காந்தா’ என்னும் பெயரில் அழைப்பதுண்டு. இந்த நக்ஷி முறைப்படி செய்யப்பட்ட நகைகள்தான் நக்ஷி டிசைன் நகைகள். தங்கம், வெள்ளி என ஆபரண சந்தைகளில் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் தனக்கென சிம்மாசனம் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கின்றன.

இப்போதும் இந்த நகைகள் எப்படி அதன் டிரெண்ட் மாறாமல் இருக்கின்றன? உற்சாகமாக பேசத் துவங்கினார் உத்தரிகா ஜுவல்லர்ஸ் உரிமையாளரான தாரிணி. ‘‘எத்தனை காலங்கள் போனாலும் முகூர்த்தத்திற்கு பட்டுப் புடவை என்பதை மாற்ற முடியுமா..? அப்படித்தான் இந்த நக்ஷி நகைகளும்.  எப்படி கைகளால் பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கு மதிப்பும் வீரியமும் அதிகமோ, அதே மாதிரி கைகளால் செதுக்கப்பட்ட இந்த நக்ஷி நகைகளுக்கும் சிறப்பும் தனித்துவமும் அதிகம். குறிப்பாக எப்பேர்ப்பட்ட பாரம்பரிய கடையாக இருந்தாலும் இந்த நக்ஷி கலெக்‌ஷன்ஸ் இருக்கும்.

காரணம், இதில் ஒரு தோடு செய்யக்கூட பார்த்துப் பார்த்து தங்கத்தை செதுக்கிச் செய்ய வேண்டும். சரியான பயிற்சியும், அனுபவமும் இல்லைன்னா முகங்கள் சரியாக அமையாது.

இந்த நகைகள் செதுக்குகிற மக்களும் இப்போ மிகக் குறைவு. அப்படியே கிடைச்சாலும் அதிக சம்பளம் கொடுக்கணும். குறிப்பா நக்ஷி நகைகளில் கஜலக்ஷ்மி, மயில், விநாயகர்... இப்படி முகங்களை அடிப்படையாகக் கொண்ட டிசைன்கள்தான் அதிகம் வரும்.
கொஞ்சம் முகப்பு லட்சணம் இல்லைன்னாலும் வாடிக்கையாளர்கள் வாங்க மாட்டாங்க. இந்த நகைகள் தங்கம், வெள்ளி, ஐம்பொன்... இப்படி மெட்டல்கள்ல வருது. ஆனால், தங்கம் எல்லோராலும் வாங்க முடியாது. ஐம்பொன் என்னதான் ஐம்பொன்னாலும் அதன் தரம் தெரிஞ்சிடும். இதனாலேயே சமீபத்தில் வெள்ளியால் செய்யப்பட்டு 24 கேரட் தங்க முலாம் பூசின நகைகளுக்கு மவுசு அதிகரிச்சிருக்கு.

இது கருக்காது. மேலும் தங்கம் போலவே லுக் கொடுக்கும். ஒரு பெரிய ஆரம் வாங்கணும்னா கூட தங்கத்தில் குறைஞ்சது நாலு பவுன் ஆகும். ரெண்டு லட்சம் வரையிலும் செலவாகலாம்.  
ஆனால், அதே வெள்ளின்னா ரூ.50,000 போதும் ஒரு கிராண்டான ஆரம் வாங்க. இதை டெம்பிள் நகைகள்னு கூட சொல்வாங்க. அரசர்கள், கோயில்களில் சாமிக்கு மட்டுமே பயன்படுத்தின நகைகள் செய்முறை இதுதான். அப்போ ஏது இந்த மெஷின் கட் நகைகள்? எல்லாம் செய்துதான் வாங்குவோம். அதே பாணிதான் இந்த நக்ஷி.

நக்ஷியைப் பொறுத்தவரை அந்தந்த ஊருகள்ல பழங்கால முறைகள்ல தங்கம், வெள்ளி நகைகள் எப்படி இருந்ததோ அதைத்தான் செய்வாங்க. இந்த நகைகள்ல சேதாரமும் கொஞ்சம் அதிகமா இருக்கும்...’’ என தாரிணி முடிக்க,  நக்ஷிக்கு என்ன உடைகள் சிறந்த தேர்வு என விளக்கினார் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட் ஆன ரேகா ராகுல்.

‘‘டெம்பிள் நகைகள் அல்லது நக்ஷி... இதுக்கு பட்டு அல்லது பட்டு மாதிரியான மெட்டீரியல் உடைகள்தான் சிறப்பா இருக்கும். உதாரணத்துக்கு கிரே நிற உடை. என்னதான் வெஸ்டர்ன் ஸ்டைல் கோல்ட் ஷோல்டர் கவுன் டைப் என்றாலும் மெட்டீரியல்கள்ல ரிஸ்க் எடுக்காம நான் சரிகை காட்டனைத்தான் பயன்படுத்தியிருக்கேன். மற்றவர்களுக்கு எப்போதுமான பாவாடை, பிளவுஸ், அடுத்து பாவாடை தாவணி, கிராண்ட் பட்டு சேலை... இப்படி.

இதெல்லாம் வேண்டாம், நகையை மட்டும் ஹைலைட் பண்ணணும்னா லேசான சரிகை வேலை அல்லது மெல்லிசா சரிகை லைன் இருக்க செட்டிநாடு காட்டன் அல்லது சில்க் காட்டன் உடைகள், புடவைகள், மேக்ஸி கூட அணியலாம்...’’ என ரேகா ராகுல் முடிக்க, இந்த நகைகளுக்கு மேக்கப் எப்படி இருக்க வேண்டும் என பகிர்ந்தார் ரம்யா அழகேந்திரன். ‘‘டிரெடிஷன் லுக்னாலே ஜொலிக்கணும். தங்க நிற நகைகள் என்கிறதால் பிரைட் கண்கள், பிரைட் லிப்ஸ்டிக் நிச்சயம் தேவை. பெரிய பொட்டும் அவசியம். இதில் மூக்குத்தி, புல்லாக்கு போன்றவை பயன்படுத்தும்போது நல்ல சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் சின்ன முத்துக்கள் கூட ஹைலைட்டாகத் தெரியும்.

கண்கள்ல ஐலைனர், காஜல் அடர்த்தியா கொடுக்கலாம், ஆனால், ஷேடோ நிறங்கள் லேசாக இருக்கணும். காரணம், லிப்ஸ்டிக்குக்கும் பிரைட் கலர் கொடுத்து, கண்களுக்கும் பிரைட்டாக கொடுக்கக் கூடாது. பெரும்பாலும் மல்லிகை அதிகம் பயன்படுத்துறதும், வழக்கமான கொண்டை, ஜடை, ரெட்டை ஜடை... இப்படி ஹேர் ஸ்டைலே நல்லது. வேண்டுமானால் பிரெஞ்ச் பிரைட் தலையின் மேல்பகுதியில் கொடுத்து ஜடையிலே டாலர்கள் வைக்கலாம்...’’ என்றார் ரம்யா அழகேந்திரன்.

மாடல்கள் : தாட்சாயிணி சாந்தசொரூபன் (மிஸ் தமிழ்நாடு 2021), சண்முகப் பிரியா (மிஸ் தமிழ்நாடு ரன்னர்), ஜெஸ்ஸி இன்ஃபன்டினா
உடைகள் & ஸ்டைலிங்: ரேகா ராகுல்
நகைகள்: உத்தரிகா ஜுவல்லர்ஸ்
மேக்கப் & ஹேர்ஸ்டைல்: ரம்யா அழகேந்திரன்
மாடல்கள் உதவி: சஃபி, சதீஷ்
சிறப்பு ஸ்பான்சர்: Gulf Street

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்