லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்திய கிராமம் !ஆர்டிஐ ஆர்வலர்களின் கோட்டை...

அதிகாரங்களை நோக்கி அடித்தட்டு மக்களும் கேள்வி எழுப்ப முடியுமா என்றால், முடியும் என்கிறது இந்த கிராமம். அதற்கு காரணம் இந்த ஊரின் இளைஞர்கள். இப்படி ஒரு அதிசய கிராமம் மதுரை மாவட்டத்தில்தான் உள்ளது.மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையில், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ளது கம்பூர் கிராமம்.
சுமார் 6 ஆயிரம் வாக்காளர்களையும், 10 ஆயிரம் மக்கள் தொகையையும் கொண்ட இந்த ஊராட்சியில் அ.புதூர், அலங்கம்பட்டி, அய்வத்தான்பட்டி, சின்னகற்பூரம்பட்டி, கோயில்பட்டி, பெரியகற்பூரம்பட்டி, பெருமாக்கிபுதூர், கம்பூர், தேனங்குடிப்பட்டி ஆகிய ஒன்பது கிராமங்கள் உள்ளன. வானம் பார்த்த பூமி என்றாலும், வேளாண்மைதான் இந்த ஊரின் முதன்மைத் தொழில்.

தமிழக வரைபடத்தில் சிறிய புள்ளியாக இருக்கும் இந்த கிராமத்தை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இயங்கும் ராஜீவ்காந்தி அறக்கட்டளை, முன்மாதிரி மக்கள் வாழும் ஊராட்சியாக தேர்ந்தெடுத்து பாராட்டியுள்ளது. ‘நம்ம பிரச்னையே ஆயிரம் இருக்கு... அடுத்தவன் பிரச்னை நமக்கு எதற்கு...’ என ஒதுங்கும் இக்காலத்தில், கம்பூர் கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் கிராம வளர்ச்சிக்கு எடுத்த முயற்சிதான் முன்மாதிரி மக்கள் வாழும் ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம்.வாட்ஸ்அப் என்ற சமூக ஊடகத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கும் இந்த கிராமத்தினர் பயன்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள அத்தனை குடும்பங்களையும் உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழு இயங்குகிறது. அதில் அரசு அறிவிப்புகள், திட்டங்கள், வேலை வாய்ப்புகள், கல்வி சார்ந்த தகவல்களை மட்டுமின்றி தங்கள் தெருவில் தண்ணீர் வரவில்லை, சாலை வசதி சரியில்லை என பல்வேறு பிரச்னைகளையும் சுட்டிக்காட்டுவதுடன் அதற்கான படங்களையும் பதிவு செய்கிறார்கள். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு இப்பிரச்னை கொண்டு செல்லப்பட்டு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண்கிறார்கள்.

ரேஷன் கடையில் அளவு குறைந்த செய்தியை வாட்ஸ் அப்பில் ஒருவர் பதிவிட்டவுடன் அனைவரும் அந்த கடை முன்பு கூடி கேள்வி எழுப்பவும், கடை ஊழியர் மீது நடவடிக்கை பாய்கிறது. கிராமசபை கூட்டம் என்றால், ஒரு காலத்தில் அதிகாரிகள் போகாமல் இருந்தார்கள். ஆனால், கம்பூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் யாரும் வராமல் இருக்க முடியாது.

தகவல் அறியும் சட்டத்தை இங்குள்ள சாதாரண மக்களும் அறிந்து வைத்திருப்பதால், அதன் மூலம் அதிகாரிகளைக் கேள்வி எழுப்புவதால், கிராம சபை கூட்டத்திற்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். அதன் மூலம் தங்கள் கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மூலம் தன்னிறைவு பெற்ற கிராமமாக இந்த ஊராட்சியை மாற்ற மக்களும், அங்குள்ள இளைஞர்களும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்காக ஒவ்வொரு ஊராட்சியிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஒதுக்கப்படும் நிதிகள் குறித்த மத்திய அரசின் இணையதளத்தை PRIASoft (https://accountingonline.gov.in) கம்பூர் ஊராட்சியின் பெரும்பாலான மக்கள் பார்த்து தகவல்களை அறிந்து வைத்திருக்கிறார்கள். இந்த ஊர் இளைஞர்களை மட்டுமின்றி கிராம மக்களையும் ஒன்றிணைக்கும் வேலையைச் செய்து வரும் க.செல்வராஜ், மக்கள் சேவைக்காக, தனக்கு கிடைத்த அரசு வேலையை உதறியவர். அவருடன் தங்க அடைக்கண், ராஜா, பொறியாளர் தினேஷ், குமார் என்ற இளைஞர் பட்டாளம் அன்றாடம் பரபரப்பாக இயங்கி வருகிறது.

இதுகுறித்து க.செல்வராஜிடம் பேசினோம். ‘‘ஜல்லிக்கட்டிற்கான தடை போட்டபோதுதான் ஊர் இளைஞர்கள் ஒன்று கூடி போராட ஆரம்பித்தோம். அலங்காநல்லூரில் நடைபெற்ற போராட்டத்திலும் பங்கெடுத்தோம். சமூகப் பிரச்னை மட்டுமல்லாது ஸ்தல பிரச்னையிலும் தலையிட வேண்டும் என்று இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கிராமத்திற்கு ஏதாவது செய்யலாம் என நினைத்தோம். சாதி, மதம், அரசியல் கடந்து இதற்காக அனைவரும் ஒன்றிணைந்தோம். கம்பூர் இளைஞர்கள் என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கினோம்.

மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி என்ன என்பதை அறிய தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தோம். ஆர்டிஐ ஆர்வலர் ஹக்கீம் மூலம் எங்கள் கிராம மக்களிடம் தகவல் அறியும் சட்டம் குறித்து கூட்டம் நடத்தினோம். துண்டுப் பிரசுரம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். ஆட்டோ பிரசாரம் செய்தோம். இதற்கு முதலில் ஊர் பெரிய மனுஷர்கள் சிலரின் எதிர்ப்பு இருந்தது. ஆனாலும், மக்கள் எங்களுடன் ஒன்றிணைந்ததால், எங்கள் முயற்சி வெற்றியாகியது.

எந்த வேலைக்கும் லஞ்சம் கொடுக்கக்கூடாது என்ற தகவல் அறியும் சட்டத்தை எங்கள் கிராம மக்கள் முழுமையாக பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அரசு வேலை நடக்க யாரும் லஞ்சம் கொடுக்கக்கூடாது என்று ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர். அத்துடன் கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் கூச்சமோ பயமோயின்றி அவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக எங்கள் ஊரின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க ஆரம்பித்தது.

ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டம் கொரோனா  பரவல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடத்த அரசு முயசிக்க வேண்டும்...’’ என்று க.செல்வராஜ் வேண்டுகோள் விடுக்கிறார்.தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி கம்பூர் ஊராட்சி தொடர்புடைய அரசு அலுவலகங்களில் ஆவணங்களை கள ஆய்வு செய்து, அதன் மூலம் தங்கள் கிராமத்திற்கு தேவையான திட்டங்களையும் இளைஞர்கள் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

தவறு செய்தால் தட்டிக் கேட்பார்கள் என்ற பயம் அதிகாரிகளிடம் உருவாகியிருப்பதற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் காரணம் என்று கிராம மக்கள் கூறுகின்றனர். அதிமுக ஆட்சியின்போது ஊராட்சிமன்றத் தேர்தல் நடந்தபோது கம்பூர் ஊராட்சியைச் சேர்ந்த கிராம இளைஞர்கள் ஒட்டிய சுவரொட்டி தமிழகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதில், ‘ஊராட்சி பதவிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சி வளர்ச்சிக்கு வரும் பணத்தில் எடுத்துவிடலாம் என்று யாரும் நினைத்து வரவேண்டாம். கிராமசபை கூட்டங்களில் கம்பூர் ஊராட்சி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் வரவு செலவு கணக்கு கேட்டு அறியப்படும். கேட்டு அறியப்பட்ட அனைத்து தகவல்களும் சரியானதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி சரிபார்க்கப்படும்.

ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் ஊழல் செய்தவர் பெயர், பதவி, புகைப்படம் போன்றவை சமூக வலைத்தளங்களில் மற்றும் தமிழக முதல்வர், ஊடகங்கள், மாவட்ட ஆட்சியருக்கு கம்பூர் ஊராட்சி இளைஞர்களால் பகிரப்படும்...’ என எச்சரிக்கை விடுத்து போஸ்டர் ஒட்டப்பட்டது.

சென்னை எண்ணூரிலிருந்து தூத்துக்குடி வரை பூமிக்கடியில் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளுக்கு வழியாக மேலூர் அருகே கம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட  அலங்கம்பட்டி கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதற்கு எதிராக  இந்த இளைஞர்கள் குழு நடத்திய தொடர் போராட்டம் தான், நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தந்தது.

வானம் பார்த்த தங்கள் கிராமத்திற்கு பெரியாற்றுக் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்று கம்பூர் இளைஞர்கள் எடுத்த முயற்சி அப்போது மதுரை மாவட்ட திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாய் மாறியுள்ளது என்று கம்பூர் கிராமத்து இளைஞர்கள் மகிழ்வுடன் கூறுகின்றனர். தங்கள் கிராமத்து குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக இரவுப்பாட சாலை நடத்தி வரும் இந்த ஊர் இளைஞர்கள், தமிழக இளைஞர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

செய்தி: ப.கவிதா குமார்

படங்கள்: வெற்றி