காணும் பொங்கல்: கடற்கரையில்... ஆற்றங்கரையில் அழகிய சுயம்வரம்!தமிழர் திருவிழா என அழைக்கப்படும் பொங்கல் பண்டிகைகளைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து ஒரு காலத்தில் கொண்டாடித் தீர்த்திருக்கின்றனர் தமிழர்கள்.  நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதத்துக்கும் நன்றி செலுத்தும் நாட்களாகவே பொங்கல் விழாக்கள் இருந்திருக்கின்றன. பல நாட்கள் கொண்டாடித் தீர்த்த இப்பண்டிகை, நாளடைவில் 3 நாட்களாகச் சுருங்கிவிட்டது. உறவுகளை இணைக்கும், மணப்பந்தத்தை உருவாக்கும் நிகழ்வாகவே பொங்கல் பண்டிகைகள் அன்று கொண்டாடப்பட்டிருக்கின்றன.

உழவுக்கும், நிலத்துக்கும், ஒளி தரும் சூரியனுக்கும் பெருமை சேர்க்கும் தை முதல் நாளான பொங்கல் விழாவைத் தொடர்ந்து, காளைகளைக் கொண்டாடும் மாட்டுப்பொங்கல், அடுத்ததாக நீர்நிலைகளை, உறவுகளை கொண்டாடும் காணும் பொங்கல் என வகைப்படுத்தி கொண்டாடியது ஒரு காலம். வாசலில் பொங்கல் வைத்த காலம்போய், தற்போது வீடுகளில் குக்கர் பொங்கல் வந்து விட்டது. மாடு வைத்திருந்தால் மாட்டுப்பொங்கல், நீர்நிலைகள் அருகில் இருந்தால் காணும் பொங்கல் என்றாகி விட்டது.

காணும் பொங்கல்...

முதல் 2 பொங்கலை விட, விசேஷமான ஒன்றாக ஒரு காலத்தில் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? வேறு வழியில்லை. நம்பித்தான் ஆக வேண்டும்.
காணும் பொங்கலைக் கணு பொங்கல், கன்னிப்பொங்கல் என்ற பெயர்களிலும் அழைப்பது உண்டு. ஆடிப்பட்டத்தில் விதைக்கும் விவசாயிக்கு உறவுகளை சந்திக்கும் நாட்களே அமையாது. வயல் வேலைகளிலே வாழ்வின் பெரும்பாலான நேரம் கழிந்து விடும். உறவினர்களை சந்திக்க, காண்பதற்கு நேரமே இருக்காது.

அறுவடை எல்லாம் முடித்து போகிக்குக் குப்பைக்கூளங்களை எரித்து, வண்ணம் பூசிய வீட்டில், புத்தாடைகளை உடுத்தி, உற்சாகமாக முதல்நாள் பொங்கல் முடிந்துவிடும். மறுநாள் வளர்த்த மாடுகள் கழுத்தில் மஞ்சள், கரும்பு, பணமுடிப்பு வைத்து வீதிகளில் ஓட விட்டு, ‘இளங்காளைகளான’ இளைஞர்களைப் பிடிக்க விடுவது நடக்கும்.

விதம்விதமாய்...

இரண்டு நாட்கள் கொண்டாட்டம் முடிந்ததும், 3 நாள் காணும் பொங்கலுக்கு ரெடியாகிவிடுவார்கள். இந்நாளில் அதிகாலை முதல் வீடு, வீதிகள் களைகட்டும். பெண்கள் ஒன்று சேர்ந்து தயிர்சாதம் தவிர்த்து, 7 வகையான சாதம் ரெடி செய்வார்கள். இதைக் கட்டுச்சோறாகக் கட்டி, வண்டி மாடு பூட்டி, தங்கள் செழுமையான உழவுக்கு நன்றி சொல்லும்விதமாக நீர்நிலைகளை தேடிச் செல்வார்கள். அந்நாளில் மற்ற உறவினர்களும் உணவு வகைளுடன், புத்தாடை கட்டி கிளம்பிச் செல்வார்கள்.

ஆற்றில் சுயம்வரம்...

குளம், ஆறு, கடற்கரை என அனைவரும் ஒன்றுகூடி சங்கமிக்கும் நிகழ்வாக, அந்த மாலைப்பொழுது அமையும். இங்கேதான் அந்த சுயம்வர மேட்டரே நடக்கும். சுயம்வரமா என்கிறீர்களா? அது போலத்தான்.உறவினர்கள் தங்கள் வீட்டில் கல்யாணப் பருவமுள்ள பெண்களை அழைத்து வருவார்கள். அதேபோல மாமன் முறைப்
பையன்களும் வருவார்கள்.

சுவாரஸ்யமான குடும்பப் பேச்சுக்கு பிறகு, ‘அப்படியே பையன் என்ன பண்றான்’ என்பது போல பேச்சு துவங்கும். நெருங்கிய உறவு முறை அல்லாது தூரத்துச் சொந்த உறவினர்களுக்குள்ளும் பெண் - மாப்பிள்ளை தேடல் நடக்கும்.நீண்ட ஆண்டுகள் கழித்து தனது முறைப்பெண்ணை பார்க்கும் மாமா பையன், மனதில் அளவில்லா மகிழ்ச்சி அடைவான்.

அங்கே கண்களும், சந்தர்ப்பம் கிடைத்தால் அச்சம், நாணம் கலந்த பேச்சு இருவருக்கிடையில் நிகழும். சம்பந்தம் கலப்பது என்பார்களே? அதுபோல இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்து, நாள் பார்த்து நிச்சயம் செய்து கொள்வார்கள். இதுதான் அந்தக்காலத்தில் ஆற்றங்கரையில் ஒரு சுயம்வரம் போலவே நடந்திருக்கிறது. விடிய, விடிய உற்சாகமாகக் கதை பேசி, கொண்டு வந்த உணவு வகைளை பிரித்து உண்ணும் பழக்கம் இன்றும் தென், வடமாவட்டங்களில் தொடர்கிறது.

தென்மாவட்டங்களில் இன்றும் சித்ரா பவுர்ணமி, சிவராத்திரி நாட்களில் நீர்நிலைகள் மற்றும் குலதெய்வக் கோயிலுக்கு மாட்டுவண்டி கட்டி செல்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். சிவகங்கை மாவட்டம், கோட்டையூர், வேலங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18 கிராம நாட்டார் உறவுகள், மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள குலதெய்வத்தை வணங்குவதற்காக மாட்டுவண்டியில் செல்வதைப் பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்துள்ளனர். சுமார் 4 முதல் 5 நாள் பயணமாக அவர்கள் சென்றுவருகின்றனர்.

இன்றும் சென்னை மெரினா, திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் காணும் பொங்கலன்று கடற்கரை, ஆறுகளில் கூடும் வழக்கம் இருக்கிறது. ஆனாலும், சம்பிரதாயமான, விடுமுறை கொண்டாட்டமாக நடைபெறுகிறதே தவிர, அந்தக்கால உற்சாகமான பண்டிகை தினமாக கொண்டாடப்படுவதில்லை. காணும் பொங்கலுக்கான நடைமுறைகளோடு அவற்றைக் கொண்டாடுவதில்லை. பண்டிகைகள் எப்போதுமே உறவுகளைக் கொண்டாடுவதற்காகத்தான் உருவாக்கப்பட்டவை. அது விடுமுறை தினம்போல நகர்வது வருத்தத்திற்குரியது. இனியாவது இந்த நிலை மாற வேண்டும்.

கும்மிப்பாட்டும்... கூட்டாஞ்சோறும்...

காணும் பொங்கலைக் கன்னிப்பொங்கல் என்றும் ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா? 14 வயதிற்குட்பட்ட சிறுமிகள் ஒன்றுகூடி, பட்டாடை அணிந்து தெருவில் உள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று கோலாட்டம் ஆடுவார்கள். கும்மிப்பாட்டும் பாடுவார்கள். அப்போது அரிசி, காய்கறிகளை வீட்டில் தானமாக வழங்க வேண்டும். ஓரளவு அரிசி, வெல்லம் சேர்ந்ததும் தெருமுக்கில் கல் வைத்து அடுப்பு மூட்டி, சிறிய மண் சட்டியில் அரிசியைப் போட்டு சாதம் வடிப்பார்கள். எல்லா காய்கறிகளையும் நறுக்கி ஒன்றாகச் சமைப்பார்களாம். இதற்குத்தான் ‘கூட்டாஞ்சோறு’ எனப் பெயரிடப்பட்டது. சிலர் பொங்கலும் செய்வதுண்டு. கல்யாணமாகாத சிறுமிகள் கொண்டாடும் நாள் என்பதால், ‘கன்னிப்பொங்கல்’ என அழைக்கப்பட்டது.

‘எங்க அண்ணன்... எங்க அண்ணன்...

காணும் பொங்கலைச் சிலர் வேறுவிதமாக கொண்டாடி வருகின்றனர். வீட்டுப் பெரியவர்கள் காலில் விழுந்து வணங்குதல், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், கபடி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் இந்நாளில் நடந்திருக்கிறது. மேலும், உடன் பிறந்த சகோதரி, சகோதரிகளை வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து, அன்பளிப்பு தரும் நாளாகவும் இருந்திருக்கிறது. ஒரு வருடம் சகோதரன் வீட்டில் சகோதரியை அழைத்தால், மறு ஆண்டு சகோதரி தனது வீட்டிற்குச் சகோதரனை அழைக்க வேண்டும் என்ற முறைப்படி எல்லாம் கொண்டாடி லிருக்கின்றனர் மக்களே.

காக்கை, குருவி எங்கள் சாதி

காணும் பொங்கல் நாளில் உறவுகளுக்காக உணவு படைக்கும் நாள் எனப் பொதுவாகக் கூறப்பட்டாலும், காகம், குருவி எனப் பறவைகள், பூச்சிகளுக்கு உணவிடும் நாளாகவும் கருதப்படுகிறது. வீட்டின் பின்புறம் / மொட்டை மாடி அல்லது நீர்நிலைகளில் வாழை இலைகளை வைத்து 5 வகை சாதத்தையும் அதில் வைக்க வேண்டும். இதன்மூலம் மனிதர்களுக்கு மட்டுமல்ல... மண்ணில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் நாம் விருந்து படைத்த பெருமையைப் பெறலாம்.

இயற்கையைக் கொண்டாடுவோம்

பண்டைகாலத்தில் சித்திரை மாதத்தில் இந்திர விழா எனும் இயற்கை அன்னையை குளிர்விக்கும் விழா 28 நாட்கள் வரை நடந்துவந்தது. அன்று முக்கிய துறைமுகமாக விளங்கிய பூம்புகார் கடற்கரையில் முழு நிலவு தோன்றும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சுற்றுவட்டார ஊரே கூடியிருக்கும். விரும்பிய உணவுகள், இனிப்புப் பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு மக்கள் மாட்டுவண்டியிலும், கால்நடையாகவும் வருவார்கள்.

நிலா வெளிச்சத்தில் கடற்கரையோரம் அமர்ந்து, விடிய விடிய கதைகள் பேசி பின் வீட்டுக்கு கிளம்பிச் செல்வார்களாம். காலப்போக்கில் மதுரை வைகையாறு, காவிரிப்படுகையிலும் இந்திர விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 28 நாள் விழா 7 நாட்களாக சுருங்கி, சித்ரா பவுர்ணமியன்று மட்டும் கொண்டாடும் விழாவாக மாறியது. தற்போது இதுவும் அவ்வளவாகக் கொண்டாடப்படுவதில்லை. தமிழகத்தில் ஒருசில இடங்களில் மட்டுமே பாரம்பரியம் காக்க இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

எஸ்.அறிவழகன்