டோன்ட் லுக் அப்



‘டைட்டானிக்’ புகழ் லியானார்டோ டிகாப்ரியோ நடிப்பில் வெளியாகியிருக்கும் ஆங்கிலப்படம், ‘டோன்ட் லுக் அப்’. ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது. வானியல் துறையில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் தீவிரமாக இருக்கிறாள் கேட். எந்நேரமும் தொலைநோக்கியின் வழியாக விண்ணில் நடக்கும் செயல்களைக் கவனிப்பது அவளது வழக்கம். அப்படி ஒரு நாள் கவனிக்கும்போது விண்ணிலிருந்து ராட்சத வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நோக்கி வருவதைக் கண்டுபிடிக்கிறாள். அந்த வால் நட்சத்திரம் பூமியைத் தாக்கினால் மனித இனிமே அழிந்துவிடும்.

இதை உறுதிப்படுத்துகிறார் பேராசிரியர் மிண்டி. மட்டுமல்ல, வால் நட்சத்திரத்தின் வேகத்தைக் கணக்கிட்டு, இன்னும் ஆறு மாதங்களில் அது பூமியைத் தாக்கிவிடும் என்று அதிர்ச்சி தருகிறார்.
வால் நட்சத்திரத்தின் தாக்குதலிலிருந்து பூமியைக் காப்பாற்ற கேட்டும், மிண்டியும் மேற்கொள்ளும் முயற்சிகளையும், சுற்றி நடக்கும் அபத்தங்களையும் அங்கதத்துடன் சித்தரிக்கிறது திரைக்கதை. பருவநிலை மாற்றத்தைத்தான் வால் நட்சத்திரம் என்று உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை மனித இனம் சந்தித்து வந்தாலும், அதை சீராக்கும் முயற்சியில் அரசும், கார்ப்பரேட்டுகளும், மற்ற துறைகளும் எப்படி மெத்தனமாக இருக்கின்றனர் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது இப்படம். டிகாப்ரியோ, ஜெனிபர் லாரன்ஸ், மெரில் ஸ்ட்ரீப் என புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் களமிறங்கியிருக்கும் இப்படத்தை இயக்கியவர் ஆடம் மெக்கே.