பே டே பஜார்: நெய்வேலிக்குள் ஒரு திருப்பூர்!நிலக்கரிக்காக சுரங்கம் வெட்டும்போது தோண்டியெடுக்கப்பட்ட மண், நெய்வேலியைச் சுற்றி மலைபோல் குவிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளை மலையென காட்சியளிக்கும் இந்த மண்மேடு நெய்வேலியின் ஒரு சிறப்பு அடையாளமாகவே விளங்குகிறது. நெய்வேலியைச் சுற்றியுள்ள எந்த கிராமத்தில் இருந்து பார்த்தாலும் இந்த மண்மேடு, ஒரு கைலாயம் போல தரிசனம் தரும்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக அமைக்கப்பட்ட முதல் சுரங்கம் மற்றும் 2ம் சுரங்கத்திற்கென்றே தனித்தனியாக இதுபோல் மண்மேடுகள் அமைந்துள்ளன.
இதில் முதல் சுரங்க அமைப்பின்போது உருவான மண்மேட்டின் மேற்குப்புற சரிவில், முதல் அனல்மின் நிலையத்திற்கு மிக அருகில் மரங்கள் சூழ்ந்த ஒரு இயற்கைச் சூழலில் அமைந்திருக்கிறது ‘பே டே பஜார்’ என்று அழைக்கப்படுகிற ‘சம்பள நாள் சந்தை’.

நெய்வேலியின் அனல்மின் நிலையங்களைப் போல ‘பே டே பஜாரும்’ ஒரு நெடிய வரலாற்றைக் கொண்டிருக்கிறது. 1956ல் ஜவகர்லால் நேருவால் துவக்கி வைக்கப்பட்டு சுமார் 60 வயதை கடந்த என்எல்சி நிறுவனம், ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களில் வெளிச்சத்தை பாய்ச்சி இருக்கிறது. இதேபோல என்எல்சி ஊழியர்களின் ஆடை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை சுமார் 50 ஆண்டுகளாக ‘பே டே பஜார்’ பூர்த்தி செய்து வருகிறது. ஊழியர்களுக்கு மட்டுமல்ல நெய்வேலியை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், கூலித் தொழிலாளிகள் உள்ளிட்ட பலதரப்பு மனிதர்களுக்கும் ‘பே டே பஜார்’ ப்ரியமான நண்பராக விளங்கிவருகிறது.

என்எல்சி நிறுவனம் உருவான கதையே மிக சுவாஸ்ரயம் நிரம்பியது. காடுகளும், வயல்களும், கிராமங்களும் நிரம்பிய அப்போதைய நெய்வேலியில், 1935 வாக்கில் ஜம்புலிங்க முதலியார் என்பவர் தனது வயலுக்கு நீர் பாய்ச்ச ஆழ்குழாய்க் கிணறு அமைத்துள்ளார். அப்போது வெளியேறிய நீரில் கறுப்பு நிறத்தில் ஏதோ ஒருவகை  துகள்களும் வந்திருக்கிறது.

இந்த கருப்பு துகள்தான், பின்னாளில் நெய்வேலியை உலகின் முக்கியமான ஊர்களில் ஒன்றாக மாற்றப்போகிறது என அறியாத அவர், உடனே இதுகுறித்து அரசுக்கு தெரிவித்திருக்கிறார். அரசு தரப்பில் கறுப்பு துகளை ஆய்வு செய்தபோது, அது பழுப்பு நிலக்கரி என தெரியவந்திருக்கிறது. பின்னர் அதை வெட்டி எடுத்து, மின்சாரம் தயாரிக்க நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உருவாகியிருக்கிறது.

என்எல்சி நிறுவனம் உருவானதை தொடர்ந்து, அதன் ஊழியர்கள் தங்குவதற்கு அழகிய கட்டமைப்புடன் பிரத்யேக நகரம் நிர்மாணிக்கப்பட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டது. 1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு வட்டம் (பிளாக்) என திட்டமிடப்பட்டு, 30 வட்டங்கள் அமைக்கப்பட்டது. இதில் முதல் வட்டத்தில் என்எல்சியின் நிர்வாக அலுவலகம் அமைக்கப்பட்டது. மீதி வட்டங்களில் பல்வேறு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள் என பலவும் அமைக்கப்பட்டது. ஊழியர்களை குடும்பத்துடன் தங்க வைத்தாகிவிட்டது. அவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் வேண்டுமல்லவா? அதற்கும் என்எல்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது.

இதற்காக சில பஜார்களும் அமைக்கப்பட்டன. மெயின் பஜார், செவ்வாய் சந்தை, ஞாயிறு சந்தை, வியாழன் சந்தை போன்ற சந்தைகளை போல ‘பே டே பஜாரும்’ அமைக்கப்பட்டது.
என்எல்சியில் நிரந்தர தொழிலாளர்களைப் போலவே ஒப்பந்த தொழிலாளர்களும் அதிகளவில் பணிபுரிந்து வருகிறார்கள். ஓரளவு நல்ல சம்பளம் வாங்கும் நிரந்தர தொழிலாளர்களைப் போலவே, குறைந்த அளவில் சம்பளம் வாங்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் மனதுக்கு நிறைவாக ஒரு ஷாப்பிங் அனுபவத்தை தரும் சந்தையாக ‘பே டே பஜார்’ இன்னும் தொடர்ந்து வருகிறது.

ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை இந்த சந்தை நடக்கிறது. தொழிலாளர்களின் சம்பள நாட்களையொட்டி நடத்தப்படுவதால், இதற்கு இந்த பெயரை வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் மரங்களின் கீழே தரைக்கடையாக தொடங்கிய இந்த பஜாரில் துணிமணிகள், பாத்திரங்கள், பாய், தலையணை, பெட்ஷீட், வீட்டுக்கு தேவையான பல்வேறு பொருட்கள் என பலவும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டிருக்கின்றன. இதற்கு ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. ஊழியர்கள் எல்லோரும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தானே. அவர்கள் மூலம் கிராமங்களுக்கும் இந்த தகவல் சென்றடைந்தது. இதனால் கிராமத்துவாசிகளும் பே டே பஜாருக்கு படையெடுக்க தொடங்கியிருக்கிறார்கள்.

இதனால் இப்பகுதியில் என்எல்சி சார்பில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கடைகள் கட்டிவிடப்பட்டது. 8X12 அடி அளவுகளில் கட்டப்பட்டுள்ள இந்த கடைகளில்தான் இன்றும் ‘பே டே பஜார்’ இயங்கி வருகிறது. இந்த கடைகளுக்கு தற்போது ஒருநாளைக்கு 30 ரூபாய் வாடகையும், 7 ரூபாய் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு குறைந்த விலைக்கு வாடகை வசூல் செய்யப்படுவதால், வியாபாரிகள் குறைந்த லாபத்திற்கு பொருட்களை விற்பனை செய்கிறார்கள். கடைகள் அதிகம் இருப்பதால், கஸ்டமர்கள் அடுத்த கடைக்கு போய்விட வாய்ப்புள்ளது என்பதால், அவர்கள் கேட்கும் விலையில் முதலுக்கு மோசம் வராமல் விற்பனை செய்துவிடுகிறார்கள். ஈரோடு, திருப்பூர், கரூர், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் துணிகள் உள்ளிட்ட பொருட்களை நேரடியாக மொத்தமாக கொள்முதல் செய்கிறார்கள். அந்த ஊர்களில் இருந்து மொத்தமாக லாரிகள் மூலம் ‘பே டே பஜாருக்கு’ பொருட்கள் வருவதும் உண்டு.

இங்குள்ளச் 245 கடைகளில், தற்போது 150 கடைகள் இயங்கி வருகின்றன. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும் ‘பே டே பஜாரால்’ பயன்பெறுகிறார்கள். கடை நடக்கும் 10 நாட்களும் வியாபாரிகள் இங்கு குடும்பத்துடன் தங்கி வியாபாரம் பார்க்கிறார்கள். அப்போது ‘பே டே பஜாரே’ ஒரு கிராமம் போல இயங்கும்.

காலை 7 மணிக்கு துவங்கும் சந்தை இரவு 9 மணி வரை நீடிக்கும். அதற்கு பிறகு வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு, வெளியே சென்று உணவருந்தி, மரங்கள் சூழ்ந்த நெய்வேலி நகர சாலைகளில் மகிழ்ச்சியாக ஒரு வலம் வந்துவிட்டு, கடைக்குள் துணிகளுக்கு மத்தியில் துயில்கொள்ள தொடங்கிவிடுவார்கள். 10ம் தேதி முடிந்ததும் தங்களின் உடமைகளை சந்தை வளாகத்தில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைத்துவிட்டு, சொந்த ஊர்களுக்கு திரும்பிவிடுகிறார்கள்.

‘பே டே பஜாருக்கு’ காரில் வரும் கஸ்டமர்களும் இருக்கிறார்கள். சைக்கிளில் வருபவர்களும் இருக்கிறார்கள். பெரிய கடைகளுக்குச் சென்றால் ஒருசில பொருட்களை மட்டுமே வாங்க முடியும். ஆனால் ‘பே டே பஜாருக்கு’ சென்றால் அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம் என உயர் அதிகாரிகள் கூட இங்கு வருகிறார்கள். சில வியாபாரிகளுக்கு சில கஸ்டமர்கள் ரெகுலர் கஸ்டமர்கள் ஆகிவிடுகிறார்கள். சிலர் நண்பர்களாகவே மாறிவிடுகிறார்கள். கடை நடக்கும் சமயங்களில் பலருக்கு இங்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. சிலருக்கு தேனீர், பிஸ்கட், டிபன் விற்று சம்பாதிக்க விற்பனை வாய்ப்பும் கிடைக்கிறது.

‘பே டே பஜாரில்’ உள்ள அனைத்துக் கடைகளுமே பரபரப்பாக இயங்கிய காலமெல்லாம் உண்டு. ஏர் உழுதுவிட்டு, ஆடுமாடுகள் மேய்த்துவிட்டு, விருத்தாசலம் உள்ளிட்ட நகரங்களில் கொய்யாப்பழம் விற்றுவிட்டு குறைந்த கூலியுடன் வீட்டுக்கு திரும்பும் சாமானிய குடும்பத்தினர் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்குப்  பெரிதும் நம்பியிருந்தது ‘பே டே பஜாரை’த்தான்.
 
நெய்வேலியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த, தற்போது சுமார் 30 வயதை தாண்டியிருக்கும் பலர் ‘பே டே பஜார்’ துணிகளை அணியாமல் தீபாவளி, பொங்கலை கொண்டாடியிருக்க மாட்டார்கள். ஆனால், இன்று கிராமங்களில் கூட ஜவுளி ஸ்டோர்கள் துவங்கப்பட்டிருப்பதாலும், தள்ளுவண்டிகள், டூவீலர்களில் வீடு தேடி வந்து ஆடை அணிகலன்கள் விற்கப்படுவதாலும் ‘பே டே பஜார்’ பழைய பிரகாசத்தை இழந்து தவிக்கிறது. இருந்தபோதும் ஒன்றாம் தேதி துவங்கி 10ம் தேதி வரை மாதம்தோறும் ஒரு மினி திருவிழாவைத் தனக்குத்தானே நடத்திக்கொள்கிறது பே டே
பஜார்.

மூடப்பட்ட மின்நிலையம்

முதலாம் அனல் மின்நிலையத்தின் அருகிலேயே ‘பே டே பஜார்’ இயங்குவதால் அனல் மின்நிலைய ஊழியர்களும், இங்கு வரும் பல்வேறு தரப்பினரும் நடந்தே ‘பே டே பஜாருக்கு’ வந்து பொருட்கள் வாங்கி செல்வார்கள். இந்த அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இது காலாவதியாகிவிட்டதாக கூறி சமீபத்தில் மூடிவிட்டார்கள். இதனால் மின்நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் வாழ்ந்துகெட்ட வீட்டைப்போல களையிழந்து காணப்படுகின்றன. இங்கு வருபவர்கள் வேறு இடங்களுக்கு செல்வதால் ‘பேடே பஜார்’ வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

அப்துல் கலாம் புகழ்ந்த நகர அமைப்பு

டவுன்ஷிப் என்கிற நெய்வேலி நகரம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வட்டத்திற்கும் இடையில் இரட்டை சாலைகள், அந்த சாலைகள் சந்திக்கும் இடங்களில் ரவுண்டானா, ரவுண்டானாவுக்கு மத்தியில் முக்கியமான தலைவர்களின் சிலைகள், சிலைகளைச் சுற்றி நீரூற்று, சாலைகளின் இருபுறங்களிலும் அழகிய மரங்கள் என நகரம் முழுக்க அழகியல் மிளிரும். இந்த நகர அமைப்பு தன்னைக் வெகுவாக கவர்ந்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மனம் திறந்து புகழ்ந்திருக்கிறார்.

பஸ் வசதி அவசியம் வேண்டும்

மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் ‘பே டே பஜார்’ வழியாகத்தான் மத்திய பேருந்து நிலையம் போகும். தற்போது பஸ் நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், பஸ் ரூட்டே மாறிவிட்டது. மேலும் முன்பு போல என்எல்சி பஸ்களும் இப்பகுதிக்கு இயக்கப்படுவதில்லை.

இதனால் பஸ் போக்குவரத்து இல்லாத இடமாக ‘பே டே பஜார்’ மாறிவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு என்எல்சியில் சுமார் 25 ஆயிரம் நிரந்தர ஊழியர்கள் பணியாற்றினார்கள். அதே அளவுக்கு ஒப்பந்த ஊழியர்களும் இருந்தார்கள். தற்போது வெறும் 12 ஆயிரம் நிரந்தர ஊழியர்களும், 12 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களும் மட்டுமே இருக்கிறார்கள். இதன் காரணமாகவும் முன்பு போல வியாபாரம் நடப்பதில்லை. எனவே வெளியூர்களில் இருந்து முன்புபோல மக்கள் வந்து செல்லும் வகையில் பஸ் வசதி செய்து தர வேண்டும் என்கிறார் ‘பே டே பஜார்’ வியாபாரிகள் சங்க பொருளாளர் மூர்த்தி.

பஜாரை மேம்படுத்தலாம்

‘பே டே பஜாருக்கு’ வரும் வாகனங்கள், நுழைவு வாயில் அருகிலேயே நிறுத்தப்படுகின்றன. சந்தை வளாகத்தில் பெரிய அளவுக்கு இடவசதி இருக்கிறது. இங்குள்ள புதர்களை அழித்து பார்க்கிங் அமைக்கலாம். இவ்வாறு அமைந்தால் நுழைவு வாயில் வழியாக வரும் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும். மேலும் அருகில் உள்ள ஒரு நுழைவு வாயில் மூலம் வாகனங்களை உள்ளே அனுமதித்தால் வியாபாரிகள் தங்கள் பொருட்களை வாங்கி வருவதற்கு வசதியாக இருக்கும் என்கிறார் பே டே பஜார் ஒப்பந்ததாரர் தட்சணாமூர்த்தி.

செய்தி: அ.உ.வீரமணி

படங்கள்: ச.ஸ்டீபன் எட்பர்க்