ஆர்கானிக் நெசவு செய்ய்யும் ஐ.டி. இளைஞர்!ஐடி பணியில் பெரும் ஊதியத்தில் வேலை செய்யும் ஓர் இளைஞர் என்ன செய்வார்?

மணமாகி மனைவி, குழந்தைகள் என்று இருந்தால் சொந்த வீடு, கார், விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வெளியூர் - வெளி மாநிலம் - வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வார். அஞ்சாமல் செலவு செய்வார்.மணமாகாதவர் என்றால் வார இறுதியில் நண்பர்களுடன் உல்லாசப் பயணம் மேற்கொள்வார்.

இப்படித்தானே நினைக்கிறோம்? பெரும்பாலும் இப்படித்தானே பலரும் வாழ்கிறார்கள்?

ஆனால், சிவகுருநாதன் இதிலிருந்து மாறுபடுகிறார். ஆம். பெரும் ஊதியத்தில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இப்போது

நெசவாளியாக மாறியிருக்கிறார்! பாரம்பரிய கைத்தறியை மீட்டெடுக்கிறார். அதுவும் தனியாக அல்ல. குடும்பத்துடன் சேர்ந்து!
தூய்மையான பருத்தி நூலிலும், இயற்கைச் சாயத்திலும் கைத்தறியால் துணிகள் நெய்யப்பட வேண்டும் என்பதே இவரது நோக்கம். ஆசை. கனவு. லட்சியம். இதற்காகவே ‘நூற்பு’ எனும் பெயரில் பாரம்பரியம் மிக்க நெசவாளர்களைக் கொண்டு கைத்தறி ஆடைகளை நெய்து குறைந்த விலையில் விற்பனை செய்துவருகிறார்.

பெண்களுக்கென பிரத்யேகமாகக் கைத்தறிப் புடவைகளும்; ஆண்களுக்கென வேட்டி, சட்டைகளும் நெய்வதை பிரதானமாகக்கொண்ட சிவகுருநாதன், கோவிட் காலத்தில் குழந்தைகளுக்காக உருவாக்கிய தூய பருத்தியாலான தொட்டில் மக்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. எனவே அரசு மருத்துவ மனைகளுக்கு இலவசமாகப் பல தொட்டில்களை நெய்து கொடுத்திருக்கிறார். 

‘‘பூர்வீகம் ஈரோடு பக்கம் துடுப்பதி கிராமம். எங்க குடும்பம் நெசவுக் குடும்பம். தாத்தாவிற்குப் பிறகு  அப்பா சின்னச்சாமி நெசவுத் தொழிலை மேற்கொண்டார். விசைத்தறியின் வருகையால் பாதிக்கப்பட்ட அப்பா துணிகளை வாங்கி விற்கிற தொழிலுக்கு மாறினார். இது என்னை ரொம்பவே பாதித்தது.

தன் மகனாவது நன்றாகப் படித்து வேறு வேலைக்கு செல்ல வேண்டும் என்று அப்பா விரும்பினார். என்னையும் படிக்க வைத்தார். நானும் நன்றாகப் படித்தேன். எஞ்சினியரிங் முடித்து கேரள மாநிலத்திலுள்ள ஹார்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தேன். மனதுக்குள் சாஃப்ட்வேரையும் கற்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது. எனவே சாஃப்ட்வேர் கோர்ஸையும் முடித்து என்னை அப்டேட் செய்து கொண்டேன்...’’ என்னும் சிவகுருநாதன், அப்போது கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதே தனக்குக் கனவாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.

‘‘கல்வி முறை அப்படித்தானே நம் மனதில் பதிய வைத்திருக்கிறது?

சம்பாதிப்பதை மட்டும்தானே வாழ்க்கை என்று போதித்திருக்கிறது? அப்படித்தான் நானும் இருந்தேன். ஐடி துறையில் பணிபுரிந்தேன்.ஆனால், மெல்ல மெல்ல எனக்குள் இனம் புரியாத ஒருவித அச்சம் சூழ ஆரம்பித்தது. அது ஐடி துறைக்கே உரிய இயல்பு. வாழ்க்கை குறித்த இயலாமையை உங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக விதைக்கும்.

எப்பொழுது வேலை பறிபோகுமோ என்ற பயம் உங்களைச் சூழும். இந்த வேலை போய்விட்டால் அடுத்த வேலை கிடைக்குமா என்ற குழப்பத்துடனேயே வாழ்வோம். கூடவே இன்னொரு எண்ணமும் தலைதூக்கும். அதுதான் வேலை, தூக்கம் என்றே வாழ்க்கை கழிகிறதே... இதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கு இல்லையா என்ற எண்ணம்.

ஐடி துறையில் பணிபுரிபவர்கள் அனைவருமே ஒரு கட்டத்தில் இப்படிப்பட்ட மனநிலைக்கு ஆளாவார்கள். இதற்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன?’’ புன்னகைக்கும் சிவகுருநாதன், இந்த நேரத்தில்தான் ‘குக்கூ’ சிவராஜை சந்தித்திருக்கிறார்.‘‘அண்ணனுடனான நட்பு எனக்குள் மாறுதலை ஏற்படுத்தியது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரைச் சந்திக்க திருவண்ணாமலை செல்வேன். இலக்கியம், இயற்கை சார்ந்த வாழ்க்கை, காந்தியம்... என நிறைய பேசுவோம். வாழ்க்கை குறித்த என் பார்வை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது.

அண்ணன் வழியாக நம்மாழ்வாரை சந்தித்தது என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை. பாரம்பரிய நெசவு குறித்த தெளிவு எனக்குள் பிறந்தது. புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன். எனக்குள் அடைபட்டிருந்த கதவுகள் திறந்தன. என்னையே நான் கண்டுகொண்டேன்! எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. எவ்வளவு காலத்துக்கு இப்படி தூக்கம், வேலை, தூக்கம், வேலை... என இயந்திரத்தனமாக வாழ்வது என்ற கேள்வி பிறந்தது. வெறுமையும் சூழ்ந்தது. ஏதாவது சுயமாகச் செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

இதற்கு என் நண்பர் ஸ்டாலினும் துணை நின்றார். அவருக்குள்ளும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு இருந்தது. என்ன செய்யலாம்... இதுவா அதுவா என ஸ்டாலினும் நானும் கலந்தாலோசித்தபோதுதான் மின்னல் வெட்டியது.

என் குடும்பம் தலைமுறை தலைமுறையாக செய்து வந்த நெசவுத் தொழிலை இக்காலத்தில் நாம் ஏன் மீட்டெடுக்கக் கூடாது?

கேள்வி பிறந்த நொடியே அதற்கான பதிலும் கிடைத்தது. மீட்டெடுப்பது என முடிவு செய்தேன். நண்பர் ஸ்டாலினுக்கு மிட்டாய்கள் மீது அலாதியான விருப்பம்; ப்ரியம். அவர் கருப்பட்டி கடலை மிட்டாய் செய்யத் துவங்கினார்...’’ என்னும் சிவகுருநாதன், நெசவுத் தொழில் குறித்து தனக்கு எதுவுமே தெரியாமல்தான் இதற்குள் வந்ததாக குறிப்பிடுகிறார்.‘‘அப்பாவும், அம்மாவும் என்னை நெசவின் பக்கமே விட்டதில்லை. எங்களுடன் இது முடியட்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்கள். எனவே சிறு வயது முதலே நெசவு குறித்த நெளிவு சுளிவுகள் அறியாமல்தான் வளர்ந்தேன்.

இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்து சம்பாதிக்கத் தொடங்கியபின் நெசவின் பக்கம் பார்வையைத் திருப்புவது சரியா? அத்தொழிலை என்னால் கற்க முடியுமா... என்ன செய்யலாம்..?
இதற்கான பதிலை என்னிடம் நான் கேட்கவில்லை. மாறாக என் மனைவி ரூபாவிடம் கேட்டேன். மனம்விட்டு அவரிடம் உரையாடினேன். ஐடி துறைக்கு அப்பால் என் கனவுகள் விரிந்து வருவதை அவருக்கு புரிய வைத்தேன். இயற்கை சார்ந்த வாழ்வியலில் நாட்டம் பிறந்திருப்பதை அவருக்கு எடுத்துச் சொன்னேன்.

பொறுமையாக கேட்ட ரூபா, ‘உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்... நிச்சயம் உங்களால் முடியும். பக்கபலமாக நான் நிற்கிறேன்...’ என்றார். ஒரு கணவனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?

களத்தில் இறங்கினேன். ‘குக்கூ’ சிவராஜ் அண்ணா மூலம் கர்நாடகாவில் கைத்தறி துணிகளை உற்பத்தி செய்யும் மெல்கோட் கிராமம் குறித்து அறிந்தேன். உடனடியாக அங்கு சென்றேன். அங்கு காந்திய சிந்தனையாளரும், காதி இயக்க ஆதரவாளருமான சுரேந்திர கெளலாகி அய்யா என்னை வரவேற்றார். ‘இதற்குப் பொறுமை அவசியம். மெதுவாகத்தான் செல்ல முடியும். ஆனால், நிறைவான வாழ்க்கையைத் தரும்...’ என்று சொன்னதுடன் தன் அனுபவங்களின் வழியே, தான் கற்றதை எனக்கு எடுத்துச் சொன்னார்.

அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. வாழ்க்கை குறித்த அச்சம் விலகியது. முழு மனதுடன் ஐடி வேலையை ராஜினாமா செய்தேன்.
2016 அக்டோபர் 2ம் தேதி ‘நூற்பு’ என்னும் பெயரில் கைத்தறி நெசவு சங்கத்தைத் தொடங்கினேன். ‘நூற்பு’ என்றால் ஒரு சாதாரண பொருளில் இருந்து பயனுள்ள ஒரு பொருளை உருவாக்குதல். அதாவது, ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கு பயன்படும் வகையில் மாற்றுவது.என் வாழ்க்கையும் ‘நூற்பு’தானே?

ஐடி பணியாளனாக இருந்தவன் இப்பொழுது நெசவுத் தொழில் செய்பவனாக மாறியிருக்கிறேனே! சிவராஜ் அண்ணா, நம்மாழ்வார், நண்பன் ஸ்டாலின் என பலரால் நெய்யப்பட்டவன்தானே? அதனால்தான் ‘நூற்பு’ என்ற பெயரைத் தேர்வு செய்தேன்...’’ பெருமையுடன் குறிப்பிடும் சிவகுருநாதன், வேலையை விட்ட செய்தி அறிந்ததுமே தன் அப்பாவும் அம்மாவும் அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிடுகிறார்.  ‘‘அதுவும் நெசவுத் தொழில் செய்யப் போகிறேன் என்பதை அவர்களால் ஏற்கவே முடியவில்லை. ‘இதில் சம்பாதிக்க முடியாது’ என அறிவுரை சொன்னார்கள். ஆனால், என் முடிவில் நான் உறுதியாக நின்று கைத்தறி நெசவாளர்களைத் தேடினேன்.

அப்போது சென்னிமலை 1010 காலனி பற்றி தெரியவந்தது. கைத்தறி நெசவாளர்களுக்காக பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆயிரத்து பத்து வீடுகள் கொண்ட காலனி அது. ஒரு காலத்தில் அங்கு எப்பொழுதும் கைத்தறிச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்குமாம்.இன்று பத்து வீடுகளில்தான் அந்த சத்தம் கேட்கிறது.

பலரும் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டார்கள். அங்கு சத்தியார்த்தி என்னும் நண்பர் அறிமுகமானார். அவரிடம் என் கனவை சொன்னதும் ‘சிறப்பா செய்யுங்கள்’ என வாழ்த்தினார். அங்குள்ள நெசவாளர்களிடம் பேசினேன். முதலில் தயங்கியவர்கள் ‘தொடர்ந்து வேலை தருகிறேன்’ என்றதும் மலர்ந்தார்கள். ஆறு வீடுகள் நம்பிக்கையுடன் கைகோர்த்தன.

பருத்தி நூலை வாங்கி நெசவாளர்களிடம் கொடுப்பேன். அவர்கள் அதில் வேட்டி அல்லது சேலை நெய்து என்னிடம் தருவார்கள். ஆண்களுக்கான சட்டையை மட்டும் துணி நெய்ததும் தையல் கலைஞரிடம் கொடுத்து தைத்து வாங்குவேன்...’’ என்னும் சிவகுருநாதன் தொடக்கத்தில் ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறார். ‘‘பருத்தி நூல் வாங்கிப் பழக்கமில்லாததால் ஆரம்பத்தில் சில இடங்களில் ஏமாந்தேன். கலப்படமான நூலை அவர்கள் தந்திருக்கிறார்கள் என டெக்ஸ்டைல் படித்த என் தம்பி பாலகுருநாதன் புரிய வைத்தான். அவனே அதன் பிறகு எனக்கு உதவினான்.

இப்பொழுது நெளிவு சுளிவுகளை ஓரளவு கற்றிருக்கிறேன். தனியாக நெசவு செய்யவும், துணிக்கு சாயம் போடவும், அச்சு ஏற்றவும் தெரியும்...’’ என்கிற சிவகுருநாதன் ஆன்லைன் வழியாகவும் விற்பனை செய்கிறார்.‘‘முதலில் மதுரை, ஈரோடு போன்ற இடங்களில் நடக்கும் விழாக்களில் ஸ்டால் போட்டேன். கொரோனா காலத்தில்தான் ஆன்லைன் பக்கம் என் பார்வை திரும்பியது. ‘நூற்பு டாட் இன்’ என்ற இணையதளத்தை தொடங்கினேன்.

ஜக்கார்ட், புட்டா, அச்சு சேலைகள் என மூன்று வகையான பிராண்டில் 150 கைத்தறி பருத்திப் புடவைகள் நெய்திருக்கிறோம். போலவே ஆண்களுக்கு வெள்ளை மற்றும் கலர் வேட்டிகளும், கலர் கைத்தறி சட்டைகளும்...’’ என்னும் சிவகுருநாதனின் பேச்சு குழந்தைகளுக்கான தொட்டில் துணிகள் பக்கம் திரும்பியது.

‘‘சென்னிமலை பகுதியே போர்வைக்கு புகழ்பெற்றது. போர்வையை நெய்து உலகம் முழுவதும் அம்மக்கள் அனுப்பி வருகிறார்கள். கொரோனா காலத்தில் யாருக்குமே வேலையில்லை. அவர்களுக்கு வேலை கொடுக்க நினைத்தேன். அப்போது தோன்றிய ஐடியாதான் தொட்டில் துணி.

இன்றைய தலைமுறையினர் துணிகளில் தொட்டில் கட்டுவதில்லை. என்றாலும் இன்னமும் அம்மாவின் சேலையில் தொட்டில் கட்ட விரும்புபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்? அந்த எண்ணத்தில் நான்கு மீட்டர் கைத்தறி தொட்டில் துணியும், குழந்தைகளுக்கான துண்டும் தூய பருத்தியில நெய்தோம்.

இதனுடன் தொட்டில் கம்பும் தருகிறோம்.இதற்காக நிறைய நண்பர்களிடம் நிதி உதவி பெற்று ஈரோடு பகுதி அரசு மருத்துவமனைகளுக்கு தொட்டில் துணிகளை இலவசமா கொடுத்தேன். இச்செய்தியை சமூகவலைத்தளம் வழியே அறிந்த காஞ்சிபுரம் நண்பர்கள், நூறு தொட்டில் துணிக்கு ஆர்டர் கொடுத்து அங்குள்ள மருத்துவமனைக்கு கொடுத்தார்கள்.

இப்போது தொட்டில் துணியையும் நெய்து வருகிறோம்...’’ என்னும் சிவகுருநாதனின் லட்சியம் ஒரு நெசவுப் பள்ளி துவங்க வேண்டும் என்பது!   ‘‘இப்ப கைத்தறி நெசவு அழிஞ்சிட்டு வருது. இதை மீட்டெடுக்க வேண்டும். இதற்காகத்தான் நெசவுப் பள்ளி ஒன்றை தொடங்க வேண்டும் என விரும்புகிறேன். நிச்சயம் இதன் வழியாக போதுமான வருமானம் கிடைக்கும். நிம்மதியாக வாழலாம்.

யாரையும் கட்டாயப்படுத்துவது என் நோக்கமல்ல. ஆனால், கைத்தறி ஆடை அணியும்போது கிடைக்கும் திருப்தியும் தன்னம்பிக்கையும் மற்ற ஆடைகளை அணியும்போது கிடைக்காது என என்னால் உறுதியாக சொல்ல முடியும்.ஏனெனில் கைத்தறி ஆடைகளை அணிந்தால் நாசி மட்டுமல்ல நம் உடலே சுவாசிக்கும்! நம் தோலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் காற்றோட்டம் பாயும். மிகைப்படுத்தி சொல்லவில்லை. ஒரேயொரு முறை கைத்தறி ஆடையை அணிந்து பாருங்கள். உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்!’’ அழுத்தம்திருத்தமாக சொல்கிறார் சிவகுருநாதன்.
                    
திலீபன் புகழேந்தி