சிறுகதை-எல்லே இளங்கிளியே...



முள் மீதமர்ந்து சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியின் பேதைமைதான் எத்தனை மகத்தானது? எத்தனை வகையான அறியாமைகளால் வாழ்த்தி மண்ணுக்கு அனுப்பப்பட்டவன் மானுடன்?
காலை இந்த வரிகளை வாசித்தான். ஆனால், பசை போட்டு ஒட்டிக் கொண்டுவிட்டன. திரும்பத் திரும்ப அதே பூச்சியைப் போல வந்து அடித்துக்கொண்டேயிருக்கின்றன.
ஆனால், முழுமையாக அவற்றை உள்மனது ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் உண்மைதான். யாரும் எந்த மனிதனையும் எங்கிருந்தும் அனுப்பவில்லை.

அதெல்லாம் புராணம். அவன் அறிவியலை நம்புபவன். எல்லாம் யதேச்சையாக நிகழ்பவை. அண்டசராசரம் என்பதே பிசிக்ஸ், கெமிகல்ஸ், குவாண்டம் என்பதற்குள் அடங்கி விடுகின்றன என்பதுதான் அவனுடைய அறிவியல். 
அப்படி இருந்தும் இந்த வரிகள் ஏன் தொந்தரவு செய்கின்றன? மனிதன் அறியாமைகளால் ஆனவன்தானா? தினம் தினம் வளர்ந்துகொண்டே இருக்கும் அறியாமைகள்...வெளியில் இருந்து இசை வந்து கொண்டேயிருந்தது. சிறுவர்கள் போகி மேளம் அடிக்கிறார்கள். நல்ல அழுத்தமான ஓசை. தெருவெங்கும் புகை சூழ்ந்தே இருக்கிறது. காக்கைகள் கூட பறக்காத மார்கழியின் கடைசி தினங்களில் குளிர் எலும்புகளைத் துளைத்தெடுக்கிறது.

இப்படியாகப்பட்ட ஒரு போகிப் பொங்கல் நாளில்தான் அகிலா அவனை விட்டுப் போனாள். “மோகன்... இந்தப் பாட்டுல ஏதோ ஒரு காந்த சக்தி இருக்கு... கேளேன்...” என்று ஆனந்தி வந்தாள்.

தன் கைப்பேசியில் தேடி அவனருகில் வைத்து விட்டு கையில் வாழைப்பூவுடன் உட்கார்ந்தாள்.‘நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்...’‘இந்தக் காற்றினில் நான் கலந்தேன், உன் கண்களைத் தழுவுகிறேன்...’அவன் சட்டென எழுந்து கொண்டான். குளியலறைக்குள் நுழைந்து முகத்தில் நீரை அடித்து, அப்படியே வெளியில் வந்து ஏதோ ஒரு சட்டையை மாட்டிக் கொண்டபோது, ஆனந்தி வந்து கைகளைப் பற்றினாள்.

“சாரி... வெரி சாரி மோகன்... உன்னை தொந்தரவு பண்ணிட்டேனா? இந்தப் பாட்டு யாரையுமே கலக்கும். அதுவும் உன்னை... சே... எனக்கு சில சமயம் மூளை மழுங்கிப் போயிடுது மோகன்...”
“இல்லே... இதுல உன் தப்பு எதுவும் இல்லே... கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்...”“இன்னிக்கு போகி வேறே... அகிலாவும் நீயும் பிரிஞ்ச நாள் இல்லையா? வெளில போகி சத்தம், நெருப்பு, புகைன்னு எல்லாம் எதை எதையோ

கிளறிவிடும்... ப்ளீஸ் போகாதே...”
“இல்ல ஆனந்தி... நான் அவ்வளவு வீக் இல்லே. ஒரு பத்து நிமிஷம் நடந்துட்டு வரேன். ஜோ எழுவதற்குள்ள வரேன். அவளுக்கு இன்னிக்கு செஸ் போர்டுல ஒரு செஷன் சொல்லித் தரேன்னு பிராமிஸ் பண்ணியிருக்கேன். வரேன்...”
“சரி... ரொம்ப யோசிக்காத. போயிட்டு வா...”
அவன் படிகளில் இறங்கினான்.

குளிர் அதிகமாகவே இருந்தது. தெருமுனை பெருமாள் கோயிலில் திருமால் பெருமை படப் பாடல்கள் மெல்ல ஒலித்துக்கொண்டிருந்தன.  பறையோசைக்கும் ‘கோபியர் கொஞ்சும் ரமணா’வுக்கும் ஏதோ இணைப்பு இருப்பதாக நினைத்துக்கொண்டான். வாழையிலையில் பொங்கல் வைத்து விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள்.அகிலாவின் குரல் சட்டென காதுகளில் கேட்ட மாதிரி இருந்தது. அந்த தினங்கள் அப்படியே காலச் சக்கரத்தில் சுழன்று மேலெழுந்தன.“மோகன்... இனிமே நான் திருப்பாவை பாடப்போகிறதில்லே. பிடிக்கலே. அப்பாக்குத் தெரிஞ்சா திட்டுவா...” என்றாள் முதல் மார்கழியில்.

“ஏன்? உனக்குதான் ஆண்டாளைப் பிடிக்குமே?”
“ஆமாம் மொதல்ல பிடிச்சது. அப்புறம் சில வார்த்தைகள் எனக்கு ஒத்துக்கலே.
பேய்ப் பெண்ணேன்னு சொல்றது, காசும் பிறப்பும்னு எழுதறது, சீர்த்த முலைங்கறது, பேய்முலைங்கறது... சோ, இனிமேல் இல்லை அவள் எனக்கு...”
சிரித்தபடி அவன் அவளைப் பார்த்தான்.
“என்ன பாக்கறியா... கிண்டலா சிரிக்கறியா?”

“ரெண்டும் இல்லே. ரசிக்கறேன் அகி. குழந்தை மாதிரி இருக்கியே... நீதானே சொன்னே ரெண்டு நாள் முன்னாடி, தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்துன்னு எழுதறாளே ஆண்டாள்... வள்ளல் பெரும் பசுக்கள்னு வருதே... இதுக்கே அவளை ரொம்பப் பிடிக்குதுன்னு.. இன்னிக்கு அப்படியே மாறிட்டயே...”“ஏன் பாரதி கூடத்தான் சொன்னான், ஒரு பாட்டிலே ‘ஆயிரம் உண்டிங்கு சாதி’ன்னும், இன்னொரு பாட்டிலே ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ன்னும்...”“ஆமாம் ... அதுதான் சரி. அனுபவங்கள், படிப்பினைகள்னு கிடைக்கக் கிடைக்க நம் கருத்துகள் மாறிக்கொண்டே யிருக்கும் அகிலா. இன்னிக்கு உன்கிட்ட ஒரு புது வெளிச்சம் தெரியுது...”“என்ன? வெளிச்சமா?”

“ஆமாம். வரும்போது அங்க நின்னிட்டிருந்த ஆட்டுக்குட்டிகள் ரெண்டையும் தொட்டு வருடிக் கொடுத்தியே... பாத்தேன். அதுல இருந்து புது வெளிச்சம் தெரியுது...”
“நீ சும்மா சொல்றே. எனக்காக... கரெக்டா?”“இல்ல அகி... எனக்கு செயற்கையா பேசத் தெரியாது. நீ பொற்சித்திரம் மாதிரி இருக்கே இன்னிக்கு...”

“மோகன்... ரொம்ப பயமா இருக்குடா எனக்கு...”
“ஏன்? ஏம்மா?”
“இந்த சாதி சம்பிரதாயம்லாம்தான்...”
“நீ நம்பறியா?”
“இல்லேதான்... ஆனா, என் வீடு? அதை எப்படி மாத்த முடியும்? இல்லே விட்டு ஓடி வரத்தான் முடியுமா?”
“கவலைப்படாதே அகி... உனக்கு அன்பான வீடு... அன்பு எதையும் புரிஞ்சுக்கும்... சரியா?”
“எனக்குத் தெரியலே மோகன்... ஆனா, ஒண்ணு மட்டும் நல்லா புரியறது. அதான் ரொம்ப நடுக்கமா இருக்கு...”
“என்ன சொல்றே அகி?”

“நீ இல்லேன்னா நான் வெறும் பொணம்தான் மோகன். நாம சேர முடியாமல் போனால், சாகறதுக்கு எனக்கு தைரியம் வராது. ஆனா, சாகற வரைக்கும் வெறும் பொணமாத்தான் இருப்பேன்...”

“அய்யோ ஏன் இப்படி பேசறே அகி? என்னால கேக்க முடியலே. நம்பிக்கைதானே எல்லாம்? ஏன் இவ்வளவு குழப்பம் உனக்கு? வேண்டாம்டா... என்கிட்டே விடு எல்லாத்தையும்... நான் பாத்துக்கறேன். உன் அப்பா என் அப்பா எல்லார்கிட்டயும் நானே பேசறேன். சரியா? நீ அழாதேடா... என்னால பாக்க முடியலேடா... சத்தியமா...”
காலச்சக்கரம் சுழன்று தற்காலத்தில் கொண்டு வந்து தள்ளியது.

ஜோ காத்திருந்தாள். அவன் தோளில் தொங்கி முத்தம் கொடுத்து சிரித்தாள்.“அம்மா... இன்னிக்கு போளி பண்ணு... போகி அன்னிக்கு அதான் ஸ்வீட்டாம். கரெக்டா அப்பா?” என்று முன்பற்கள் இரண்டு விழுந்திருந்த அழகுவாயுடன் சிரித்தாள்.“இதோ இன்னும் பத்தே நிமிடம் ஜோ...” என்று ஆனந்தி பதில் சொல்லியபடியே அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
“அப்பா... இந்த செஸ்ல ஏம்பா கறுப்பு வெள்ளைன்னு வெச்சிருக்காங்க? அதுலயும் வெள்ளைதான் முதல் மூவ் பண்ணணும்னு வேற... பிடிக்கலேப்பா...” என்று ஜோ உதட்டைச் சுழித்தாள்.

அடுக்களையிலிருந்து வெல்லமும் தேங்காயும் நறுமணத்தை அனுப்பின. வாசலில் இன்னும் போகிச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.

“ஆமாம் ஜோ... உலகம் பூரா இந்த ரேசிசம் ஏதோ ஒரு வகையில மனிதனை ஆதிக்கம் செலுத்திக் கொண்டே இருக்கு. வெள்ளைதான் உயர்ந்தது, கறுப்பு தாழ்ந்ததுன்னு. பூமி இருக்கிற வரைக்கும் கறுப்பு மனிதனுக்கு போராட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். அவன் ஆசைப்பட்ட சிவப்புப் பெண்ணைக் கூட அவன் கல்யாணம் செஞ்சுக்க முடியாது...”சட்டென நிறுத்தினான். ஆனந்தி விரைந்து வந்து அவன் தோளைத் தொட்டாள்.

“ஜோ கண்ணா... போளி எடுத்து வெச்சிருக்கேன் பார். போய் சாப்பிடு...”
“சரிம்மா... தாங்க் யூ...” ஓடினாள் ஜோ.“மோகன்... என்ன இது? இவ்வளவு வெளிப்படையா அப்செட் ஆகிறவன் இல்லே நீ. ஒண்ணு சொல்றேன் கேட்கறியா?” அவன் நெற்றியை வருடினாள்.

“ஆனி... உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தறேனா?”“சீச்சீ... ஒரு மண்ணும் இல்லே. சொல்றேன் கேளு... பத்து நாள்ல உனக்கு ஓசூர்ல செமினார் இருக்கில்லே? அந்த ட்ரிப்ல மதனப்பள்ளியை சேத்துக்கோ மோகன். போய் அவளைப் பாத்துட்டு வா. எல்லாம் சரியாகும். உன் குழப்பம் அப்படியே காணாமல் போய்டும்...”‘‘என்ன... என்ன சொல்றே ஆனி? அதெல்லாம் முடிஞ்சு பத்து வருஷமாகுது. உனக்கு எல்லாம் தெரியும், நல்லா தெரியும்... என்னத்தான் நான் மாத்திக்கணுமே தவிர, வேற எதுவும் சொல்யூஷன் இல்லே...”

“மனசுக்குள்ளே முடியலே மோகன்... அதான் உன்னை பாடா படுத்துது. போய் பாத்துட்டு வா. உன்னை மாதிரியே அவளுக்கும் நல்ல துணை கிடைச்சு நல்லாத்தான் இருப்பாள். பாத்துட்டு வந்துடு. எல்லாம் நல்லா முடிஞ்ச மாதிரி ஒரு கம்ப்ளீட் ஃபீல் வந்துடும். போய்ட்டு வா... டேக் மை வேட்ஸ்...”அவன் கண்களை மூடிக் கொண்டான்.இல்லை ஆனந்தி. உன் நல்ல மனது புரிகிறதுதான். பாதி உண்மை இன்னும் இருக்கிறது உன்னிடம் சொல்லப் படாமல்.

என்ன சொன்னாய்? அவளுக்கும் நல்ல துணை கிடைத்து சந்தோஷமாகத்தான் இருப்பாள் என்றா? இல்லை ஆனி. அவள் அப்படி இல்லை. கணவன் அவளை விவாகரத்து செய்து விட்டானாம். பிறந்த வீட்டில் அனுசரணையே இல்லையாம். இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்படுகிறாள் ஆனி, என் அகிலா. ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலி போல நிரந்தரமில்லாத வேலையுடன் போராடிக் கொண்டு, அந்த எளிய தேவதை துன்பத்தில் சுழல்கிறது ஆனந்தி.

கோபால் மூலம் தெரிந்து கொண்டேன். இரண்டு துளிகள் கூடுதலாக மழைத்துளி பட்டு விட்டாலே பறக்க சிரமப்படுகிற பட்டாம்பூச்சி போல இருந்தாளே... முதுகில் குத்தப்பட்ட கத்தியுடன் அவளை துடிக்க வைத்து விட்டேனே? கையளவு தைரியமும் துணிச்சலும் இருந்திருந்தால் அவளை பிருத்வி ராஜன் போல தூக்கி வந்திருப்பேனே...“என்ன யோசனை மோகன்? நான் சைக்காலஜி ஸ்டூடண்ட்தானே? அதான் சொல்றேன்... எதையும் நேருக்கு நேராய் சந்திச்சுடணும்... பாதிக் கவலை போய்டும். அகிலாகிட்ட பேசிட்டு வா. எழுந்திரு. போளி சாப்பிடலாம்...”ஆனந்தி அவன் முதுகை இழுத்து அணைத்து முத்தமிட்டு இழுத்துப் போனாள்.

மதனபள்ளி மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருந்தது. கடைகளில் அடுத்த தலைமுறை கல்லாவில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். ஆலமரம் கூட இளைத்திருப்பதாகப் பட்டது தன் பழுதடைந்த கண்களால்தானோ என்று தோன்றியது.அவளைக் கடைசியாகப் பார்த்தது அந்த மரத்திற்குப் பின்னால்தான். அத்தனை அன்பும் அந்த மரத்திற்கு அடியிலேயே புதைந்துபோனபோது அவள் தலை குனிந்து தெருக்கோடியில் புள்ளியாய் மறைந்திருந்தாள். ‘நாசமாகப் போ’ என்று ஒரே ஒரு வாழ்த்து அவள் இதழ்களிலிருந்து வந்திருந்தாலும் நிம்மதியாக இருந்திருக்கும் என்று தோன்றியது. வாழ்க்கையில் முழுமையாக எதையும் செய்யத் தெரியாத ஒரு பேடியைக் காதலித்ததுதான் அவள் தவறு.அகிலா, வருகிறேன்.

என் குற்றங்களுக்கு ஏதோ ஒரு வகையில் பரிகாரம் செய்ய வருகிறேன். உன் கண்ணீரை சற்றே உலர்த்தமுடிய வேண்டும் என்கிற வேகத்துடன் வருகிறேன். “ஏய்... மோகன்... நீயா? என்னடா இது அதிசயம்?”திரும்பினான்.குருமூர்த்தி வண்டியை பிரேக் போட்டு நிறுத்திவிட்டு அருகில் வந்தான்.“டேய் குரு... நீயா? இந்த ஊர்லதான் வண்டி ஓட்டிகிட்டிருக்கியா? என்னடா சர்ப்ரைஸ் இது?” என்கையில் அவனுக்கும் வியப்பாகத்தான் இருந்தது.பத்து வருட சம்பவங்கள், அனுபவங்கள் என்று பேசி விட்டு சற்று இடைவெளி விட்டு குருமூர்த்தி கேட்டான்.

‘‘சந்தோஷமா இருக்கியாடா மோகன்? உன் மனைவி புரிஞ்சுகிட்டாங்களா உன்னை? இயல்புலயே நீ நல்லவண்டா...”“ஆமாம் குரு... எனக்கு கிடைத்த ஆனந்தி, இன்னொரு அம்மா டா... புது வானம், புது உலகம் காட்டி என்னை உயிர்ப்பிச்ச தெய்வப்பெண்...”“ஹப்பா... இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்குடா மோகன். அகிலாவும் நீயும் பரிசுத்தமான காதலர்கள்டா... ஷேக்ஸ்பியர் கதாபாத்திரங்கள் போல... அவளும் இப்போ மகிழ்ச்சியா, சந்தோஷமா, வசதியா இருக்கா. நல்லியல்புகள் உங்க ரெண்டு பேர் வாழ்க்கையையும் சீர் பண்ணியிருக்குடா...’’அவன் திடுக்கிட்டான்.

“என்ன என்ன சொல்றே குரு? அவளுக்கு டைவர்ஸ் ஆகிட்டது, பெண் குழந்தைகளை வெச்சுகிட்டு ரொம்ப சிரமப்படுறான்னு... இல்லையா? புரியலேடா நீ சொல்றது...”“ஆமாம்டா மோகன். அதெல்லாம் உண்மைதான். ஆனால், அவளைத் தேடி வந்து மறு கல்யாணம் பண்ணிகிட்டான் ஒருத்தன். தூரத்து அத்தை பையனாம். சின்ன வயசுல இருந்தே இவள் மேல் ஒருதலைக் காதலாம். அமெரிக்கால ஏதோ டெக்ஸ்டைல் இஞ்சினியரிங் படிச்சுட்டு வந்து இங்க பிசினஸ் பண்றான்... பிரமாதமா போகுது. நாலு ஏக்கர்ல பெரிய பங்களா கட்டி, இப்பதான் கிரகப்பிரவேசம் பண்னாங்க.

அண்ணா அண்ணா நீங்க கண்டிப்பா வரணும்னு என்னை அழைச்சா அகிலா... குடும்பத்தோட போய்ட்டு வந்தேன். அப்பதான் நினைச்சேன், மோகன் எப்படி இருக்கானோ, நல்ல லைஃப் அவனுக்கும் கிடைச்சதான்னு... இப்ப பாத்துட்டேன்... போதும்டா...”சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவன் கிளம்பினான்.உலகளந்த பெருமாள் கோயிலில் இருந்து பாடல் கேட்டது.

“எல்லே இளங்கிளியே
இன்னம் உறங்குதியோ
சில்லென்றழையேன் மின்...”
அதற்கு மேல் கேட்கப் பிடிக்கவில்லை. தரையைக் காலால் எட்டி உதைத்தான். கல் ஒன்று எம்பிப் போய் தெருநாய் மேல் விழுந்தது. வலியுடன் ஊளையிட்டபடி ஓடியது அது. வெறுமையாய் பார்த்தபடி அவன் பேருந்து நிலையம் நோக்கி நடந்தான்.

 - வி. உஷா