அரண்மனை குடும்பம்



புதிய தொடர் 1

ஜில்லென்றிருந்தது ஏற்காடு! சாம்பிராணி தூபம் போட்டது போல் பனிப் போர்வை. அப்போர்வைக்கு நடுவே கருப்பாய் கோடுபோட்டதுபோல வளைவான தார்ச் சாலை! அந்த சாலைமேல் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது கணேசனின் சிவப்புநிற ஆடி கார்! கணேசனே அதை ஓட்டிக்கொண்டிருந்தான்.காருக்குள் பின்சீட்டில் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள் அவன் மனைவி ரத்தி. அவள் மேல் தலைவைத்துப் படுத்திருந்தாள் கணேசன்-ரத்தியின் ஒரே செல்ல மகளான தியா. ஆறு வயதாகிறது!

பொதுவாக காரில் குழந்தைகள்  பயணிக்கும்போது  துடிப்பாக வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் வருவார்கள். ஒரு குதூகலம் இருக்கும் அவர்களிடம்! இரண்டுமே தியாவிடம் இல்லை. குளிரில் அவள் உடல் நடுங்கியதால் ஒரு ஷாலை எடுத்து அவள் மேல் போர்த்தியிருந்தாள் ரத்தி.ரத்தி என்கிற பெயரைக் கேட்கும்போது ஒரு வடநாட்டுப் பெயரைக் கேட்பதுபோல இருக்கும். உண்மைதான்! ரத்தியின் சொந்த ஊர் மகாராஷ்ட்ராவின் நாக்பூர். இந்திதான் அவள் தாய் மொழி.

கணேசன் பிசினஸ் விஷயமாக நாக்பூர் போன இடத்தில் பரிச்சயமாகி, பின் அதுவே காதலாகி இறுதியில் அது கல்யாணத்தில் முடிந்து ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது.
கல்யாணத்திற்குப் பின் கணேசனின் முயற்சியால் தட்டுத்தடுமாறி தமிழ் கற்றுக்கொண்டு இப்போது நன்றாக தமிழ் பேசுகிறாள் ரத்தி. எல்லா வீட்டு வேலைகளையும்கூட நன்றாகச் செய்வாள். கணேசன் நாக்பூரில் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுசிற்கு ஒரு வேலைக்காரியாக வேலை பார்க்க வந்த ஒருத்தி, எல்லா வேலைகளையும் பார்ப்பதில் ஆச்சரியமென்ன இருக்கமுடியும்? அப்படி வந்த இடத்தில்தான் கணேசனுக்கும் அவளுக்கும் காதல் ஏற்பட்டது. மிகவும் பக்தி உடையவளும் கூட!

ரத்தியின் இடது கையில் மணிக்கட்டுக்கு மேல் உள்ள முழங்கைப் பரப்பில் ஒரு நாகம் ஊர்வது போல் பச்சை குத்தப்பட்டிருந்தது! அதுவே ‘நாகாஸ்’ என்கிற ஒரு பரம்பரையில் அவள் வந்தவள் என்பதற்கு அடையாளம். இந்தப் பரம்பரையினர் தங்கள் ஒன்பது வயதில் இப்படி பச்சை குத்திக்கொள்வர். இது ஒரு சடங்காகவே நடக்கும். சொந்தங்கள் சூழ குலதெய்வக் கோயிலில் இந்த சடங்கு நடக்கும்.ரத்திக்கும் அப்படித்தான் நடந்தது! நாக தேவதையே இவர்கள் குலதெய்வமும் கூட. தினமும் படுக்கையில் இருந்து கண் விழிக்கும்போது நாகாஸ் தங்கள் இடக் கை நாகப்பச்சை மேல்தான் கண் விழிப்பர். வலது கையால் அந்த பச்சையைத் தொட்டு கண்ணிலும் ஒற்றிக்கொள்வர்.

ரத்தி காரில் பயணிக்கும் அந்த பகல்பொழுதில்கூட அடிக்கடி அப்படி அந்த நாகப்பச்சையைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டாள். கார் டிரைவ் செய்தபடியே கண்ணாடி வழியே ரத்தி அப்படிச் செய்வதை கணேசனும் பார்த்தான். அவன் முகமும் கலக்கத்தில்தான் இருந்தது. இடையே தியா படுத்தபடியே இருமினாள். அப்படி அவள் இருமினாலே அது ஆபத்து. இருமல் வந்தால் அது ஒரு ஐந்து நிமிடமாவது நீடிக்கும். நிச்சயம் ரத்தம் வந்து மார்பின் மேலெல்லாம் வழியத் தொடங்கிவிடும். அந்த இருமல் நிற்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்!

அந்த காருக்குள் அப்போதும் அப்படித்தான் ஆயிற்று! இருமல் தொடர்ந்தது. ரத்தம் வாய்வழியே வழிய ஆரம்பித்தது! அதற்காகவே தயாராக வைத்திருந்த துணியால் அதைத் துடைத்து நெஞ்சைத் தடவி அவளை ஆறுதல்படுத்த முனைந்தாள் ரத்தி.கணேசனும் ஒரு ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கினான். பின் சீட்டுக்குள் ஏறி தன் செல்ல மகளை தன் பங்குக்கு இழுத்து அணைத்து அவள் மார்பையும் தடவிவிட்டு அதை நிறுத்தப் பார்த்தான்.

அந்த இடைவெளியில் அருகில் தயாராக வைத்திருந்த கிட்பேக்கில் இருந்து ஒரு மருந்து பாட்டிலை எடுத்து அதில் இருந்து ஒரு மூடி மருந்தை எடுத்து, கணேசன் வசமிருந்த தியாவுக்கு மடக்கென்று ஊட்டி விட்டாள். பின் ரத்தம் வழிந்த வாயையும் துடைத்து விட்டாள் ரத்தி.ஒருவழியாக தியாவும் மெல்ல இருமுவதையும் நிறுத்தி அப்படியே சோர்ந்து கணேசன் தோள் மேல் கண்கள் செருக விழுந்தாள்.

தியா தன் தோளில் சாய்ந்திருக்கும் நிலையில் அப்படியே காரை விட்டு இறங்கி வெளியே இயற்கைச் சூழலைப் பார்த்தான் கணேசன். அழகான காபித் தோட்டம். நடு நடுவே ராட்சஸமாக வளர்ந்திருக்கும் மரங்கள். ஜில்லென்ற இதமான சூழல்... ஆனால், மனதில் மட்டும் புயல்!ரத்தியும் இறங்கி அவன் அருகே சென்று நின்றாள். அவள் முகம் சற்று வீங்கியிருந்தது. அவள் எப்போதும் அழுதபடியே இருப்பதால் இப்போதெல்லாம் எப்போதும் அப்படித்தான் இருக்கிறது. கணேசன் இவளைக் காதலித்தபோது மலர்ந்த சூரியகாந்திப் பூவைப் பார்ப்பது போல் இருந்தாள். இன்று தியாவால் இப்படி ஆகிவிட்டது.

ரத்தியின் விழிகளில் கண்ணீரும் வரத் தொடங்கியது. கணேசன் அதைப் பார்த்து தன் வலது கையால் வழக்கம் போல் அருகில் சென்று துடைத்துவிட்டான்.“ஜீ... என்னை கல்யாணம் பண்ணிகிட்டு நீங்க ரொம்பவே கஷ்டப்பட்றீங்க ஜீ...” என்று அவளும் பேச ஆரம்பித்தாள்.“பைத்யம் மாதிரி பேசாதே… நான் மட்டுமா? நீயும்தானே கஷ்டப்பட்றே... ஏன் பிரிச்சி பேசறே?” என்று காபித் தோட்டத்தைப் பார்த்தபடியே பதிலுக்கு பேசினான் கணேசன்.“நான் கஷ்டப்படறதுக்குன்னே பிறந்தவ ஜீ! நீங்க என்ன அப்படியா? அரண்மனைக் குடும்பத்துல பிறந்தவர். இந்த வேலைக்காரியைக் கட்டிகிட்டு எனக்கு சரியா கஷ்டப்பட்றீங்களே ஜீ...”

தொடக்கத்தில் அவள் கணேசனை ஜீ என்றுதான் அழைத்துப் பேசினாள். திருமணத்திற்குப் பின்பும் அதுவே அவள் வரையில் தொடரத் தொடங்கி விட்டது.“ரத்தி... இதோட நீ இப்படி பலமுறை பேசிட்டே. ஒரு வேலைக்காரிங்கற தாழ்வு மனப்பான்மை உன்னை விட்டு போகவே மாட்டேங்குது. நானும் எத்தனை தடவை சொல்றது, இப்ப நீ ஒரு அரண்மனைக் குடும்பத்து மருமகள்னு…” என்று கணேசன் அவளைப்பார்த்து திருப்பிக் கேட்டான், அதுவும் சற்று கோபமாக!

“இப்படி நீங்க சொல்றமாதிரி உங்க வீட்ல யாரும் சொல்லலியே ஜீ! என்கிட்ட பேசறத கூட அவங்கல்லாம் கேவலமாதானே நினைக்கிறாங்க?”
“எல்லாம் போகப்போக சரியாயிடும் ரத்தி... தைரியமா இரு...”“இப்படியே நீங்களும் ஆறுவருஷமா சொல்லிகிட்டு இருக்கீங்க. ஆனா, வெறுப்பும் கோபமும் அதிகமாகுதே தவிர துளி கூட குறையலியே? போதாக் குறைக்கு நமக்கு பிறந்த தியாவும் நோயாளியாயிட்டா.

இவளால எல்லாம் மாறும்னு நம்பினதும் மோசமாயிடிச்சே?”“போதும்… முதல்ல இப்படி புலம்பறத நிறுத்து. கொஞ்சமாவது நிம்மதியா இருக்கத்தான் ஏற்காட்ல இருக்கற நம்ம பங்களாவுல தங்க வந்திருக்கோம். எல்லாம் போகப் போக சரியாயிடும். புலம்பாதே! வா போகலாம்…”என்று தியாவை திரும்ப ரத்தி வசம் தந்த கணேசன் காரில் ஏறச் சென்றான். ரத்தியும் குழந்தையோடு காருக்குள் ஏறச் சென்ற சமயம் காருக்கு முன்னே தார்ச்சாலையின் குறுக்கே ஒரு நாகம் காபித் தோட்டம் ஒன்றின் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதிக்கு சென்று கொண்டிருந்தது!

அதைப் பார்த்தவுடனேயே ரத்தியிடம் ஒரு பரவசம். அதுவும் சாலை ஓரமாய் உள்ள புதருக்குள் புகுவதற்கு முன் எழும்பி படம் விரித்து காரையும் கணேசனையும் ரத்தியையும் ஒரு பார்வை பார்த்தது.

ரத்தி உடனேயே வேகமாக ஒரு காரியம் செய்யத் தொடங்கினாள். குழந்தையோடு அதை நோக்கி வேகமாகச் சென்றவள் குழந்தை தியாவை சாலை ஓரமாகவே அதன்முன் தரையில் கிடத்திவிட்டு அப்படியே அதன்முன் “நாகமாதா... எனக்கு ஆசி கொடு...” என்று சொல்லிக்கொண்டே மண்டியிட்டு விழுந்து வணங்கினாள்.  அதுவும் தரையை ஒரு கொத்து கொத்திவிட்டு விறுவிறுவென காபிச் செடிகளுக்குள் புகுந்து மறைந்தும் போனது.

கணேசனுக்கோ ஒரே படபடப்பு! ஓடி வந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டான். எழுந்து நின்ற ரத்தியையும் பார்த்து, “பைத்தியக்காரி... இப்படியா நடந்துப்பே? அது கடிச்சிருந்தா என்ன ஆயிருக்கும்?” என்று கோபமாகக் கேட்டான்.“இல்ல ஜீ! அது கடிக்காது. அது எங்க தெய்வம்! இப்ப எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நீங்க வேணா பாருங்க. இனி நமக்கு நல்லதே நடக்கும்...” என்று புதிய தெம்புடன் பேசத் தொடங்கினாள் ரத்தி. அப்போது அவர்கள் பின்னாலேயே ஒரு காரும் தொடர்ந்து வந்து அதுவும் ஒரு ஓரமாக நின்றிருந்தது. அதனுள் டிரைவிங் சீட்டில் இருந்த சதீஷ் என்பவன், கணேசனின் மாமாவிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தான்.

“நான் கணேசன் சாரை ஃபாலோ பண்ணிகிட்டுதான் சார் இருக்கேன். இப்பகூட அவங்கள பாத்துகிட்டேதான் பேசறேன்! என்னன்னு தெரியல - திடீர்னு காரை நிறுத்தி இறங்கி ரெண்டுபேரும் ஏதோ பேசிகிட்டாங்க. குழந்தை தோள்ல தூங்கிகிட்டு இருக்கு. அப்ப ரோட்டு குறுக்க ஒரு பாம்பு போகவும் அந்தப் பொண்ணு உடனே உழுந்து கும்புட்டுச்சி. எனக்கு ஏதோ சினிமா பாக்கற மாதிரியே இருக்கு...”

“அப்ப நல்லா எஞ்ஜாய் பண்ணு. ஆனா, அவளும் அந்த குழந்தையும் ஏற்காடு மலையை விட்டு உயிரோட மட்டும் கீழ இறங்கிடக் கூடாது. அதை நல்லா ஞாபகத்துல வெச்சுக்கோ…”
“ஐம்பது லட்சத்தை கேஷா கொடுக்கப் போறீங்க! நான் விடுவேனாங்க? கவலையே படாதீங்க. யாருக்கும் எந்த சந்தேகமும் வராதபடி அந்தப் பொண்ணும், குழந்தையும் பரலோகத்துக்குப் போய்ச் சேருவாங்க. கணேசன் சார் மட்டும் ரொம்ப சேஃபா திரும்பி வருவார். அதுக்குப் பிறகு உங்க விருப்பப்படியே உங்க மகளை சாருக்கு கட்டி வெச்சு, அவ்வளவு சொத்தையும் நீங்கதான் அனுபவிக்கப் போறீங்க...” என்று பேசியவன் போனை கட் செய்துவிட்டு, மும்முரமாய் கணேசனின் காரைப் பின்தொடர ஆரம்பித்தான்!

பிரம்மாண்டமான ஏற்காட்டின் அரண்மனைக் குடும்ப பங்களாவுக்குள் கணேசனின் கார் உள்புகுந்து போர்டிகோவில் தேங்கி நின்றது. காரைப் பார்க்கவுமே வேலைக்காரன் நாச்சி முத்துவும் அவன் மனைவி பங்கஜமும் ஓடிவந்தனர். குளிருக்காக நாச்சிமுத்து மஃப்ளரால் தலைப்பாகை கட்டியிருந்தான்.

பங்கஜம் புடவைக்கு மேல் ஒரு ஸ்வெட்டர் அணிந்திருந்தாள்.
இருவரும் முதல் காரியமாக கணேசன் முன்னால் அவன் காலில் விழுந்து கும்பிடத் தொடங்கினர். கணேசனுக்குள் உடனேயே கோபம் எகிறத் தொடங்கியது.“நாச்சிமுத்து என்ன இது..? இப்படியெல்லாம் கால்ல விழக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?”“இல்லீங்க... இது எங்க கடமைங்க. உங்க குடும்பத்துலயே நீங்க மட்டும்தாங்க இது தப்புன்னு சொல்றவரு. ஆனா, மத்தவங்க யாரும் சொன்னதில்லீங்க.

ஒரு தடவை இவ கால்ல உழுவ மறந்து கார்ல இருந்து சாமானை இறக்கப் போயிடிச்சு. பெரியய்யா பொரிஞ்சி தள்ளிட்டாருங்க...”நாச்சிமுத்து வெளிப்படையாகப் பேசிக்கொண்டே டிக்கியில் இருந்து சூட்கேஸ் மற்றும் பேக்குகளை இறக்கினான். பங்கஜம் அவனுக்கு உதவி செய்தாள்.கணேசன் அதைக் கேட்டபடியே தோளில் தியா தூங்கியபடி இருக்க ரத்தியோடு உள்ளே நுழைந்தான்.செருப்பை முகப்பில் கழற்றி விட்டு தரையில் கால் வைத்து நடந்தபோது ஜிலுஜிலுப்பு அப்பி எடுத்தது. ரத்தி புடவையால் இழுத்து மூடி நடுங்கிக்கொண்டேதான் கணேசன் பின்னால் சென்றாள்.

பெட்ரூம் படுக்கை விரிப்போடு ஹீட்டர் போடப்பட்டு தயாராக இருந்தது. படுக்கையில் தியாவைக் கிடத்திய கணேசன் முதல் காரியமாக பாத்ரூம் சென்று வந்தான். ரத்தி ஜன்னல் வழியாக பங்களாவை ஒட்டியிருக்கும் பூந்தோட்டத்தைப் பார்த்தாள். கலீர் என்று பூக்கள் பூத்திருக்க மேலே தேனீக்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. பார்க்கவே பரம சுகமாக இருந்தது. இயற்கை இயற்கைதான்!முதல் முறையாக நெடு நாட்களுக்குப் பிறகு ரத்தி சற்று லேசான மனநிலைக்கு வந்திருந்தாள். கணேசனும் பாத்ரூம் போய்விட்டு வந்த நிலையில் அவளை ஏறிட்டான்.முதல் தடவையாக நெடுநாட்களுக்குப்பின் அவளும் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

“என்ன ரத்தி... இங்க வரவும் உனக்கு ஒரு தெம்பு வந்துட்ட மாதிரி தெரியுதே?”

“ஆமாம் ஜீ... எப்ப எங்க குலதெய்வத்தை நான் பார்த்தேனோ அப்பவே எனக்கு நம்பிக்கை
வந்துடிச்சி...”“பாம்பை இங்கேயும் சாமியா கும்பிட்ற வழக்கம் உண்டு. ஆனா, உன்னை மாதிரி நேர்ல பாத்தா விழுந்து கும்புட்றதெல்லாம் கிடையாது. தட் ஈஸ் டூ மச். ஆமா அது கடிச்சிருந்தா என்ன பண்ணியிருப்பே?”“நிச்சயம் கடிக்காது ஜீ... நாம தப்பா இருந்தாதான் அது கடிக்கும்...”“நாம நல்லவங்க இல்ல கெட்டவங்கன்னு அதுக்கு எப்படி தெரியும்?“அது நாகதேவதை... அதுக்கு எல்லாம் தெரியும்...”அவள் அப்படிச் சொல்லவும் அவன் பதிலுக்கு சற்று ஏளனமாகச் சிரித்தான்.

“என்ன கேலியா சிரிக்கிறீங்க?”“சிரிக்காம என்ன செய்யறது? அது ஒரு விஷப் பூச்சி! அதுக்கு நம்மள மாதிரி ஆறு அறிவும் கிடையாது. ஆறு அறிவு கொண்ட நமக்கே பலநேரத்துல நல்லவன்யார்... கெட்டவன் யார்னு தெரியல. நீயோ அதையெல்லாம் யோசிக்காம பிளைண்டா நம்பறே...”“ஜீ அப்படி எல்லாம் சொல்லாதீங்க. நாகதேவதை மனுஷங்களான நமக்கெல்லாம் மேல... நாங்க நாக வம்சத்தோட தொடர்ச்சின்னு எங்க வீட்ல சொல்வாங்க.

எங்க முன்னோர்கள்ல ஒருத்தருக்கு நாகப்பாம்பே குழந்தையா பிறந்து வந்திருக்குங்க…”ரத்தி சொன்னதைக் கேட்டு கணேசன் அதிர்ந்தான். நெற்றியைச் சுருக்கிக்கொண்டு “நம்பறா மாதிரி சொல்லு ரத்தி... ஒரு மனுஷனுக்கு எங்கேயாவது பாம்பு வந்து பிறக்குமா? யாராச்சும் கேட்டா ஹாரி பாட்டர் கதை மாதிரி இருக்கும்பாங்க..!”“நான் பொய் சொல்லல... 1962ம் வருஷம்தான் இது நடந்தது. பேப்பர்ல எல்லாம்கூட வந்தது...”“நிஜமாவா?”

“உங்களால அந்த வருஷத்து நாக்பூர் எடிஷனை எடுத்து பாக்க முடிஞ்சா பாருங்க. நிச்சயமா அதுல இருக்கு... அந்த பேப்பர் எங்க வீட்ல கூட ரொம்ப நாள்வரை இருந்தது...”
ரத்தி மிக அழுத்தமாகச் சொன்னாள். இம்மட்டில் அவள் பொய் பேசத் தேவையில்லை. அறியாமையில் பேசுவதாகவும் தெரியவில்லை. எனவே சற்று குழம்பித்தான் போனான் கணேசன்.

“என்னங்க யோசிக்கிறீங்க... இன்னும் உங்களால நம்ப முடியலையா?”“உண்மையைச் சொன்னா அப்படித்தான்னு வெச்சுக்கயேன். அதுக்காக நீ பொய் சொல்றதா நிச்சயம் நான் நினைக்கல. பாம்பு வந்து பிறந்ததுங்கற விஷயம்தான் இடிக்குது. ஒரு வேளை கை கால் இல்லாம மொழுக்குன்னு குறைப் பிரசவத்துல பிறந்திருக்குமோ... அங்கங்க கொஞ்சம் பாம்பு சாயல் இருக்கப்போய் பாம்புன்னு சொல்லிட்டாங்களோ?”

“இல்ல... மூணடி நீளத்துக்கு பாம்பேதாங்க பிறந்தது... அந்த பாம்புக் குழந்தை போட்டோ கூட பேப்பர்ல வந்தது...”“அப்ப நான் என்ன நினைக்கறேன்னா குழந்தை பிறந்த இடத்துக்கு பாம்பு வந்துருக்கணும். அதே சமயம் குழந்தை பிறந்து அது செத்துப் போயிருக்கணும். இல்ல, அந்த குழந்தையை மருத்து வச்சி, தான் எடுத்துகிட்டு, வந்த பாம்பை பிடிச்சு பாம்பு பிறந்ததா சொல்லியிருக்கணும்... இப்படித்தான் எதாவது நடந்திருக்கும்.”

கணேசன் இப்படி பலமாதிரி யோசித்து பேசியது ரத்திக்கு பிடிக்கவில்லை.“என்ன ஜீ... என்னென்னமோ சொல்றீங்க. அப்படியெல்லாம் இருந்தா அதிசயம்னு பேப்பர்ல வந்திருக்குமா?”

“பேப்பர்ல வந்துட்டதால அது உண்மைன்னு நான் எடுத்துக்க தயாரில்லை. அதுவும் இந்தக் கால பேப்பர்களப் பத்தி கேக்கவே வேண்டாம். பரபரப்புக்காக அவங்க எந்த செய்தியையும் எப்படி வேணும்னாலும் போடுவாங்க. சரி விடு... இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் இனி என்கிட்ட பேசாதே என் கிட்ட மட்டுமில்ல, யார்கிட்டயும் பேசாதே. அப்புறம் உன்னை லூசுன்னு நினைப்பாங்க.

நீ அரண்மனைக் குடும்பத்து மருமக. உன்ன யாரும் தப்பாவோ, கேலியாவோ பேசிடக் கூடாது. நாம ஒரு நாலுநாள் சந்தோஷமா இருக்க மட்டும் இங்க வரலை. ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் வெங்கட்ராவைப் பார்த்து நம்ம தியாவைக் காட்டவும்தான் வந்திருக்கோம்.சேலத்துல அவரைப் பிடிக்கறது கஷ்டம். பிடிச்சாலும் மனம் விட்டு பேசமுடியல. அவர் இப்ப ரெஸ்ட் எடுக்க நம்மளப் போலவே ஏற்காடு வந்திருக்காரு. இன்னிக்கு ஈவினிங் அப்பாய்ன்ட்மென்ட்டும் வாங்கிட்டேன்.

ஞாபகத்துல வெச்சுக்கோ...”என்று சொன்னவன் சற்று விலகிப்போய் செல்போனில் தன் பிசினஸ் சம்பந்தமாய் பேசத் தொடங்கி விட - பூச்செடிகளுக்கெல்லாம் மருந்து அடிக்க வந்திருந்த ஒருவன் அந்த அறையின் ஜன்னலுக்கு வெளியே நின்று கணேசன் பேசியதைக் கேட்டுவிட்டு சற்று ஒதுங்கிச் சென்று, அவனை இதற்கென்றே அனுப்பியிருக்கும் சதீஷிடம் பேசத் தொடங்கினான்.“சதீஷ், நான் மார்ட்டின் பேசறேன். சாரும் அவர் சம்சாரமும் நாலு நாள் தங்கப் போறாங்க. சாயந்தரம் டாக்டர் அப்பாய்ன்ட்மென்ட்டுக்காக வெளியவும் போகப்போறாங்க...’’

“குட்... நீ அங்கேயே மோட்டர் ரிப்பேர், வயரிங் வேலைன்னு சுத்திகிட்டே இரு. நான் சொல்றத கச்சிதமா செய்துடு. அந்தப் பொண்ணும் குழந்தையும் பிணமாத்தான் கீழ போகணும். இது நமக்கு கிடைச்சிருக்கற பெரிய அசைன்மென்ட். ஞாபகமிருக்கட்டும்!”சதீஷின் பதில் மார்ட்டின் என்கிற அவனை “வர்றதுல சரிபாதி எனக்கு... அதை நீ மறந்துடாதே...” என்று சொல்ல வைத்தது!

- தொடரும்

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி