மஞ்சள்...



என்னைச் சுற்றி ஒரே இருட்டு. காரிருள் கலந்த இருட்டு. அதென்ன காரிருள் கலந்த இருட்டு? அது இருட்டுக்குள் இருட்டு. அப்படியானால் எனக்கு நினைவு திரும்புகிறது அல்லவா? ஆம். இருட்டை என்னால் பார்க்க முடிகிறதே? அப்படியென்றால் ‘நான் யார்?’

‘ஓ... நான்... நான்... ராம்... ராமநாதன். வயது 58.  எங்கிருக்கிறேன்? ஏன் என்னால் என் கண்களைத் திறக்க முடியவில்லை? மயானத்திலா? என்னைச் சுற்றி விதவிதமாக சப்தம் வருகிறதே? என்ன சப்தம் அது...?’ கண்களை சிரமப்பட்டு விரிக்க நினைத்தேன். முடியவில்லை. கண்களின் மேல் லேசான பந்து போன்ற ஏதோ ஒன்று இருக்கிறது. அதனால்தான் என்னால் கண்களைத் திறக்க முடியவில்லை. இது என்ன  வாசனை... ஏதோ ஸ்பிரிட் கலந்த வாசனை... ஹாஸ்பிட்டல் என்று உணர்ந்து கொண்டேன்.

மதியம் புவனா சாப்பாடு போட, நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது மயங்கிச் சரிந்தேன். இதோ இப்பொழுது இங்கே இருக்கிறேன். புவனா எங்கே? காரிருள் என்னைத் துரத்திக் கொண்டு இருந்தது.‘‘வாங்க டாக்டர்...’’ சில குரல்கள் ஒருவரை வரவேற்றன.‘‘பேஷன்ட் இவர்தான்... ராமநாதன். போலீஸ் இன்ஸ்பெக்டர்...’’‘‘ஹலோ ராமநாதன்... நான் டாக்டர் மனோகர். நான் பேசுவது கேட்குதா?’’ காதுக்கருகில் வந்து சொன்னார்.கேட்டது. என் நினைவுகள், ஞாபகங்கள் முன்னும் பின்னுமாக சுழன்று கொண்டிருந்தன.அன்று, புவனா மஞ்சள் நிற பட்டுப்புடவையில் இருந்தாள். ‘‘டேய் ராமநாதா, பொண்ணை நல்லா பாத்துக்கோ...’’ என் சித்தி சொன்னது ஞாபகம் வந்தது.

பஸ் பிரயாணம். நான் தனித்து சென்று கொண்டிருக்கிறேன். ‘‘வீட்டுக்கு பூ வாங்கிட்டு போ சாமி... மொழம் ரெண்டு ரூபாதான்...’’அவளும் மஞ்சள் புடவையில்தான் இருந்தாள். கூடையில் சாமந்தி. அதுவும் மஞ்சள்தான். ‘‘கண்ணா... ஆ  காட்டு...’’ புவனா தினேஷுக்கு சாதம் ஊட்டினாள். அதுவும் மஞ்சள்தான். எப்பவோ பார்த்த முகங்கள், என்னால் செதுக்கப்பட்ட முகங்கள்... எல்லாம் மஞ்சள் பூசிய முகங்களாக காரிருளில் என்முன்னே வந்து போயின.

அதில் ஒன்று தாரா... தாராவின் முகம். அதோ... தாரா... கலைந்த கூந்தல்... அழுதுவீங்கிய முகம்... ஆக்ரோஷமான கண்கள்... என்னை நெருங்கி வருகிறாள். கை நகங்கள் கத்தி போல் கூராய் இருந்தன. என்னை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளுகிறாள். ‘‘ஒழிந்து போடா... என் பாவம் உன்னை சும்மா விடாது...’’ அவள் முகம் மேலும் விகாரமாகிறது. மஞ்சள் புடவையில் அவள் வயிறு மட்டும் சற்று பூசியிருந்தது. எனக்கு மட்டும் தெரியும்... அவள் ஏன் இறந்தாள் என்று. ‘‘நான் கீழே... கீழே... கீழே... சரிந்து... சரிந்து விழுந்து கொண்டிருக்கிறேன்.

திடீரென்று என்னை யாரோ தாங்கிக் கொள்கிறார்கள். அது புவனாவின் கைகள்தான். இப்பொழுது என்னால் சீராக சுவாசிக்க முடிகிறது. முகத்தில், மூக்கில் ஏதோ கண்ணுக்குத் தெரியாத உயிர் காக்கும் கருவிகள். ‘‘ராம்... ராம்...’’ என் கன்னத்தை யாரோ தட்டுகிறார்கள். விழிகளைத் திறக்க முடியவில்லை. இப்பொழுது என் நெஞ்சில் கூராக ஏதோ உள்ளே நுழைகிறது. அது ஊசியா அல்லது நரம்பா அல்லது கத்தியா? அல்லது தாராவின் நகமா?

ஏதோ ஒன்று. ‘‘ஹ்ஹா... வலி... வலி...’’ என் இதயம் வலியில் அதிவேகமாகத் துடிக்கிறது. என்னைச் சுற்றிலும் மருந்து வாடைகள். கையை நகர்த்த முற்படுகிறேன். முடியவில்லை. கால்? அதுவும் இயலவில்லை. இப்பொழுது ரத்தத்தின் வாடை என் நாசியில் ஏறுகிறது.அன்று, ‘‘இல்ல... எனக்கு ஏதும் தெரியாது மேடம். இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல...’’ தாரா அந்த அறையில் கத்திக் கொண்டிருந்தாள்.‘‘எம்எல்ஏ வீட்ல திருடினதும் இல்லாம பொய் வேற சொல்றியா?’’ பளீர் பளீர் என்று காற்றைக் கிழித்துக்கொண்டு தாராவின் மேல் விழுந்த இசக்கியின் பிரம்படியானது அவளின் செந்நிற உடலைக் கூறுபோட்டுக் கொண்டிருந்தது.

வியர்வை பொங்க வெளியில் வந்தவள்,  ‘‘சார்... நா எவ்வளவோ அடிச்சுப் பாத்துட்டேன்... வாயே திறக்க மாட்டேங்கறா. புள்ளத்தாச்சி வேற. எனக்கென்னவோ இவ திருடியிருக்க மாட்டான்னுதான் தோணுது...’’ இசக்கியின் கண்களில் சற்று பரிதாபம் தெரிந்தது.‘‘நா பாத்துக்கறேன்... நீ போய் ஏதாவது சாப்பிட வாங்கி வா...’’ அவள் கையில் ஐநூறு ரூபாயைத் திணித்தேன்.

அறையில் தாராவின் முனகல் கேட்டது. எனக்குக் கேட்கவில்லை. சிகரெட் எடுத்து பற்றவைத்துக்கொண்டேன்.கடவுள் எப்பொழுதும் வஞ்சகக்காரன். ஆசைப்படுபவர்களுக்கு  எதுவும் கொடுப்பதில்லை.

‘உங்களுக்கு முதுகுத் தண்டுல அடிபட்டதால குழந்தைக்கான பாக்கியம் இல்லை...’ என்றோ டாக்டர் சொன்னது அன்று என் நினைவுக்கு வந்தது... அதுவும் தவறான நேரத்தில்.
சிகரெட்டை அணைத்தேன். தாராவின் அறைக்குச் சென்றேன். உடல் காயங்களுடன் முகம் வீங்கிக் காணப்பட்டாள். உதட்டோரம் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மஞ்சள் நிறத்தில் கிழிந்த புடவையில் வயிறு சற்று உப்பியிருந்தது.என்னைப் பார்த்ததும் அழுதபடி கையெடுத்துக் கும்பிட்டாள். அவளால் பேசமுடியவில்லை.

‘‘எத்தனை மாதம்?’’ குனிந்து அவளின் காதருகில் கேட்டேன் பொறாமையுடன்.‘‘ஐந்து...’’ விரல்களை நீட்டினாள்.தாங்கவில்லை எனக்கு. அவளைக் கீழே தள்ளி அவளின் கழுத்தில் எனது பூட்ஸ் காலால்... ‘‘டாக்டர், பேஷன்ட் அப்நார்மல்...’’ பதறியிருப்பார்கள் சுற்றியிருப்பவர்கள். எனக்கு பதற்றமில்லை.இப்பொழுது என் கண்களிலிருந்து நீர் தானாக வழிந்து கொண்டிருந்தது, தாராவின் வலி புரிந்ததால்.‘‘டாக்டர்... பேஷன்ட்டுக்கு அனஸ்தீஸியா பத்தலை...’’என்னைச் சுற்றியும் ஏதேதோ குரல்கள். அதையும் தாண்டி தாராவின் குரல். ‘‘உன்னை சும்மா விட மாட்டேன்...’’மறுபடி ஏதோ மஞ்சள் நிற மருந்து கை வழியாக ஏற்றப்பட்டது. வலி நின்றது. நினைவு நிற்கவில்லை.

இப்பொழுது என் கை கால்கள் உதறிக் கொண்டிருக்கின்றன, என் அனுமதியில்லாமலேயே.மறுபடி ஏதேதோ மருந்துகள் என் நரம்பின் வழியாக உடலின் உள்ளே வந்து கொண்டிருந்தன. எதுவும் பிடிக்கவில்லை எனக்கு, மஞ்சள் தவிர. புவனாவின் கைகளிலிருந்து விடுபடுகிறேன். அதோ கீழே தூரத்தில் தாரா... மஞ்சளாகவே தெரிகிறாள்.  சந்தோஷத்துடன் மறுபடி கீழே போய்க் கொண்டிருக்கிறேன். தூரத்தில் முற்றுப்புள்ளியாய் நான்.

ஜெயஸ்ரீ அனந்த்