வெற்றிமாறன் தயாரிக்க... வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய... பிரமிள் ஆவணப்படம்!



ஆமாம். பொதுத் தளத்தில் அதிகம் தெரியாத... ஆனால், காத்திரமான சிறுபத்திரிகை வட்டாரத்தில் இன்று வரை மகாகவியாக கொண்டாடப்படும் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட... 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த பிரமிள் குறித்த ஆவணப்படம் அவர் மறைந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு தயாராகிறது!

‘‘கவிஞரும், மெய்விழிப்பருமான பிரமிள் பத்தி ஓர் ஆவணப்படம் எடுக்கணும் என்பதும், அவருக்கு மணிமண்டபம் அமைக்கணும் என்பதும் என் நீண்டநாள் திட்டம். அவர் இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்பதான், என் நட்புகளின் கரங்கோர்ப்பினால் நிறைவேறிட்டு இருக்கு. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்...’’ உற்சாகம் பொங்கப் பேசு
கிறார் இயக்குநர் தங்கம்.

இவர், இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவின் பள்ளியில் பாடம் கற்றவர். சிறந்த சினிமா விமர்சகர். ‘காற்றின் தீராத பக்கங்களில்...’ என பிரமிள் பற்றி இவர் எடுத்து வரும் ஆவணப்படத்தை இவரின் நண்பரும் இயக்குநருமான வெற்றிமாறன் தயாரிக்க, ஒளிப்பதிவாளரும் இயக்குநருமாகிய இன்னொரு நண்பர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இதனால் இலக்கிய உலகில் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது பிரமிள் ஆவணப்படம்.

‘‘என் சொந்த ஊர் கோயம்புத்தூரில் இருக்கும் பீளமேடு. அங்கே சர்வஜன மேல்நிலைப் பள்ளியில பயிலும்போது செந்தலை கவுதமன் ஐயா எனக்குத் தமிழாசிரியர். என் பால்ய வயசுலயே பிரமிள் எழுத்துகளை வாசிக்க ஆரம்பிச்சிட்டேன். அவரின், ‘லங்காவின் தேசிய தற்கொலை’ நூல் வெளியாகிய 1985ம் ஆண்டிலேயே வாங்கிப் படிச்சிட்டேன்.  அதே ஆண்டுல ‘அறிந்ததினின்றும் விடுதலை’ வாயிலாக ஜே. கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். ஜே. கிருஷ்ணமூர்த்தியை அறிமுகப்படுத்தினவர் எனது ஞானத் தந்தையாகிய பட்டணம் புதூர் செந்தில் மணி. செந்தில் மணி எழுத வந்திருந்தால் அவர் இன்னொரு பிரமிள்.

செந்தில் மணியோடு இணைஞ்சு ‘கோயம்புத்தூர் ஃபிலிம் கிளப்’  அப்படிங்கிற பெயர்ல ஃபிலிம் சொசைட்டி நடத்திக்கிட்டிருந்த மனோகரன், ‘தமிழோசை’ விஜயகுமார் ஆகியோர் மூலமா பிரமிளின் எல்லா எழுத்துகளும் எனக்குப் படிக்கக் கெடச்சது. இன்றைய ஆவணப்பட உருவாக்கத்துக்கு இவங்கெல்லாம்தான் காரணம்.

1988ல் பிரமிள் சிங்காநல்லூருக்கு வந்திருந்தப்ப அவரைச் சந்திச்சேன். அவருடனான அந்த உரையாடல் தனித்துவமானதா இருந்துச்சு. அவரின் பார்வை எவ்வளவு தீர்க்கமானதுனு உணர்ந்தேன்.

அவருடனான சந்திப்ப முடிச்சிட்டு வீடு திரும்பும்போது எனக்கும் என் நண்பருக்கும் சண்டையே வந்திடுச்சு. அவர் பிரமிளைத் தரம் குறைத்தார். நான் சைக்கிள்ல இருந்து பாதியில் இறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டேன். பிரமிளின் மதிப்பீடுகளைக் காப்பதற்காக உயிர் நண்பனையே பகைக்கிற அளவுக்கு தீவிரத்தோட இருந்திருக்கிறேன்னு பின்னாடி புரிஞ்சது.
சினிமாவுக்காக சென்னை வந்ததும் ‘மறுபடியும்’ படத்துல இருந்து சின்னத்திரையில் வெளிவந்த ‘கதை நேரம்’ வரை பாலுமகேந்திராவோடு பயணிச்சேன். ‘கதை நேர’த்தில் வெற்றிமாறன் வந்து சேர்ந்தார். அவருக்கு என் மீது அலாதியான பிரியம்.

அவருடன் என் நட்பு இப்பவரை தொடருது.இதுக்கிடையில் பிரமிள் 1996ல் மறைந்தார். அவரின் சமாதி வேலூர் பக்கத்துல கரடிக்குடி கிராமத்துல இருக்குது. அங்கதான் டாக்டர் சிவமணி என்பவர் அவரை கடைசி வரை பராமரிச்சார். சிவமணிகிட்ட ஒரு விஷயத்தை அறிவிச்சிருந்தார் பிரமிள். அதாவது, அவர் எங்கே இறக்கிறாரோ அங்கே அடக்கம் செய்திடணும்னு சொல்லியிருந்தார். அவர் கரடிக்குடியில் இறந்ததும் பிரமிளின் ஈழத்து நண்பர் ஒருவர் அங்கே சமாதி கட்டியிருக்கிறார்.

இப்ப அமீரின் ‘இறைவன் மிகப்பெரியவன்’ பட அறிவிப்பு விழா முடிஞ்சதும் நடிகர் திலீபனுடன் வடலூர் போய் வள்ளலாரைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது பிரமிளின்  சமாதிக்கும் போயிருந்தேன். காரணம், பிரமிளுக்கும் சாது அப்பாதுரையாருக்கும் இடையிலான உறவுநிலைதான் இந்தக் கதையின் மையப் பொறி. ‘வெற்றிமாறனும் தங்கமும் இணைஞ்சு இந்தப் படத்துக்குக் கதை எழுதறாங்க’ன்னு செய்திகள் பார்த்திருப்பீங்க. இந்தக் கதைக்காக அமீர் எனக்குத் தர்ற சம்பளத்தின் ஒரு பகுதி பிரமிளுக்கானதுனு தோணுச்சு.  

‘சீசருக்கு உரியதை சீசருக்குத் தாருங்கள்’ அப்படின்னு ஜீசஸ் சொன்னத வச்சு ஒரு கட்டுரை எழுதியிருப்பார் பிரமிள். ‘குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ’ அப்படிங்கிறார் வள்ளலார். பிரமிளுக்கான சம்பளத்தை யார்கிட்ட கொடுக்குறது?

பிரமிள்தான் இல்லையே,.. என்ன செய்ய? அப்பதான் பிரமிள் சமாதி இருக்கிற இடத்தைக் கிரயம் பண்ணிடுவோம்னு நினைச்சு கரடிக்குடிக்கு போனேன். அங்க சமாதி குப்பையும் மேடுமா இருந்தது. கொஞ்ச நாள் தள்ளிப் போயிருந்தா மண்ணுள்ள பொதஞ்சு காணாமப் போயிருந்திருக்கும். மசாலாப் படங்களின் கிளைமாக்ஸில் சரியான நேரத்துல போலீஸ் ஜீப் வர்ற மாதிரி நானும் சரியான நேரத்தில் போய்ச் சேர்ந்திருக்கிறேன்.

2020ம் ஆண்டு இந்த முயற்சியை நான் மேற்கொண்டிருந்த போதும் கைகூடி வரலே. ஆனால், இந்த முறை ஊர்த்தலைவரைப் போய்ப் பாத்தேன். அவர்கிட்ட பிரமிளின் பெருமையைப் பத்திச் சொன்னேன். அவர் ஆச்சரியமாகி ‘இவ்வளவு பெரிய மேதை எங்க மண்ணுல இருக்காரா’னு வியந்தார். உடனே, ‘சமாதி கட்ட இடம் தர்றோம்’னு சொன்னார்.

இடத்திற்கான பணச் செலவு மிச்சமானது. அதனால, அந்தப் பணத்துல சமாதியை இடிச்சு நல்லாக் கட்டி சிலை வச்சிடலாம்னு யோசிச்சேன். அப்புறம், சென்னை வந்ததும் இயக்குநர் கௌதமன்கிட்ட இதைப்பற்றி பேசிட்டிருக்கும்போது அவர், சிற்பி சிவக்குமாரை அறிமுகப்படுத்தினார்.

சிவக்குமார் சிற்பக் கல்லூரியில் முதுகலை பயின்றவர். சமாதி அமைப்பு குறித்து பேசும்போது சிற்பி சிவக்குமார், சாதாரண காரைப் பூச்சில்லாமல்  கிரானைட் அடித்தளம், மார்பிள் பீடம் அப்படின்னெல்லாம் சொல்லி மாடல் ஒன்றைக் காட்டினார்.அன்றிரவு தூங்குறதுக்கு முன்னாடி  எடுத்த முடிவு என்னன்னா... ஆஸ்கார் வைல்ட்,  பாப்லோ நெருடா, தஸ்தயேவ்ஸ்கி போன்ற கலைஞர்களுக்கு அமைச்சிருக்கறது போல சர்வதேசத் தரத்தில் இந்த நினைவிடத்தை அமைக்கணும் என்பது.  

பன்னாடுகளிலும் பரவிக் கிடக்கிற ஈழத்தமிழர் இங்கு வேலூருக்கு வருகை தந்தால், பன்னாட்டுத் தரத்தில் தங்களது திரிகோணமலைக் கவிஞனின் நினைவிடம் அமைஞ்சிருக்குனு நெகிழணும்.

அதனால் சிற்பி சிவக்குமாரின் கைவண்ணத்துல மணிமண்டபம் எழுப்பும் பணிகள் போயிட்டு இருக்கு. பிரமிள்  சிலையை அம்பாசமுத்திரத்தில் உள்ள தன்னுடைய குருவனத்தில் அய்யா ஓவியர் சந்ரு உருவாக்கித் தந்திருக்கிறார். அந்தச் சிலை பிரமிளை நேர்ல பார்க்கிற மாதிரியே இருந்தது. கண் கலங்கிட்டேன்...’’ என நெகிழ்ந்தபடி தொடர்ந்தார் தங்கம்.

‘‘இந்த மணிமண்டபம் செய்யலாம்னு முடிவெடுத்ததும் வெற்றிமாறன்கிட்ட இதை ஒரு ஆவணப்படமா எடுத்திடலாம்னு சொன்னேன். உடனே வெற்றி, ‘ஐடியா ரொம்ப நல்லாயிருக்கு. நீங்க வேலைகளை ஆரம்பிங்க’ன்னு பச்சைக்கொடி காட்டினார்.

அப்புறம், வேல்ராஜ் கிட்ட போய், ‘வேல்ராஜ், உங்க உதவியாளர் ஒருவரை கேமராமேன் ஆக்கிடலாம். அனுப்புங்க’னு கேட்டேன். ஆனா அவர், ‘சார் உங்க மேல எனக்கு மிகுந்த மரியாதை இருக்கு. நானே இந்த டாக்குமெண்டரியை முடிச்சுத் தரேன்’னார். என்னுடைய முதல் படத்துக்கு வேல்ராஜ்தான் கேமரானு நான் முன்னாடியே முடிவெடுத்திருந்தேன். ஆனா, அவரே என் ஆவணப்படத்துக்கும் பண்ணுவார் என்பது எதிர்பாராதது...’’ என ஆச்சரியமாகப் பேசும் தங்கம், ஆவணப்படம் பற்றித் தொடர்ந்தார்.

‘‘இப்ப பழைய சமாதிய இடிச்சு சுற்றுச்சுவர் எழுப்பி கிரில் ஒர்க் பண்ணி கிரானைட் பதிச்சு, மார்பிள்ல பீடம் எழுப்பி, அதுமேல சிலையை நிறுவுவது வரை எல்லாமே கலைநயத்துடன் விவரணக் காட்சியா  மாறிட்டிருக்கு. திருநெல்வேலியில் மயன் ரமேஷ் நடத்திவரும் ‘பிரமிள் நூலக’த்தில் நடைபெற்ற பிரமிள்  பிறந்தநாள் நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டிருக்கு. அப்புறம், பிரமிளைப் பற்றிய கருத்துகளை வெளியிட்டு வருகிற இலக்கியவாதிகளிடமும் அறிவினத்தாரிடமும் நேர்காணல் நடத்தப்பட இருக்கு.

‘பிரமிள் வெறும் கவிஞர் அல்ல; மெய்விழிப்பர்’ என்கிற உண்மையும், ஓவியம், சிற்பம் போன்ற கலைப் பிரிவுகளில் அவர் கொண்டிருந்த பாண்டித்யமும்,  பிரமிளுக்கு வாய்த்திருந்த சமூக - அரசியல் - வரலாற்றுப் பார்வையும் இந்த விவரணப் படத்தில் இடம்பெறும். இது எவ்வளவு நேர விவரணப்படமா வரும்னு தெரியல. பொதுவில் ஒரு திரைப்
படம் போரடிச்சா ‘டாக்குமெண்டரி போலிருக்கு’னு சொல்வாங்க. ஆனா, இந்த டாக்குமெண்டரி திரைப்படம் போல இருக்கும்.

‘காற்றின் தீராத பக்கங்களில்...’ ஆவணப்படம் அல்ல; விவரணப்படம். ‘ஒரு கலைப்படைப்பு வியப்புகளை உண்டாக்க வேண்டும்’ அப்படிம்பாரு பிரமிள். படைப்பைத்  துய்ப்போரிடம் உண்டாவது புது மலர்ச்சி நிலை அப்படின்னு வர்ணிக்கிறார்.

இந்த விவரணப்படத்தை நான் உருவாக்கல. உண்மையில் பிரமிளின் அழகியல் கோட்பாடுகளும், விமர்சனக் கோட்பாடுகளும்தான் ஒரு மெய்யறிவுப் பறவையின் வாழ்வை எழுதிச் சென்று கொண்டிருக்கின்றன காற்றின் தீராத பக்கங்களில்...’’ மகிழ்ச்சியோடு சொல்கிறார் தங்கம்.

பேராச்சி கண்ணன்