மலையாள சினிமாவில் தொடர்ந்து நடிகைகள் பாலியல் சீண்டலால் பாதிக்கப்படுகிறார்களே..?



‘‘தாய்மொழியா மலையாளம் இருந்தாலும் தமிழ் எனக்குப் பிடிச்சிருக்கு... அதனாலதான் ‘தாமரை’ கேரக்டரில் அதர்வா நடிக்கும் ‘அட்ரஸ்’ படத்துல உற்சாகமா நடிச்சிருக்கேன்...’’ பிழைக்கத் தெரிந்த பெண்ணாக பேசத் தொடங்கினார் தியா மயூரிகா.

நடிகையாகணும்னு எப்போது முடிவு செய்தீர்கள்?

சொந்த ஊர் திருவனந்தபுரம். என்னுடைய சினிமா கேரியர் மலையாளத்தில்தான் ஆரம்பமாச்சு. ‘ஸ்கூல் டைரி’ என்னுடைய முதல் படம். அப்ப எனக்கு 15 வயசு இருக்கும். பிறகு இன்னொரு மலையாளப் படத்தில் கேமியோ ரோல் பண்ணினேன்.
தமிழில் முதல் படம் ‘அட்ரஸ்.உண்மையைச் சொல்லணும்னா முதல் சினிமா பண்ணிய பிறகுதான் என்னால் நடிகையாக வரமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுச்சு. அதுவரை எனக்கு கிரியேட்டிவ் சைட்ல டான்ஸ்  மட்டுமே தெரியும். ஆக்ச்சுவலா எனக்கு ஃபேஷன் டிசைனராகணும்னு விருப்பம். அதுக்காகத்தான் மாஸ் கம்யூனிகேஷன் ஜாயின் பண்ணினேன். ஆனா, கரியர் நடிகையா ஷிப்ட் ஆயிடிச்சு.

‘அட்ரஸ்’ படத்துல அதர்வா - இளம் நாயகன் இசக்கி பரத் என இருவருடன் நடித்த அனுபவம் எப்படி?

அதர்வா கிரேட் ஆக்டர். அவர் நடிச்ச ‘இமைக்கா நொடிகள்’ என்னுடைய ஃபேவரைட் மூவி. இசக்கி பரத்துடன் வேலை செய்தது நல்ல அனுபவம். கேரக்டருக்கு கடின உழைப்பு தருவார். அவர்தான் நான் பேசும் தமிழை திருத்தம் செய்வார். இன்னொரு ஹீரோயின் பூஜா சவேரி க்யூட்.

 படத்துல உங்க கேரக்டரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

என்னுடைய கேரக்டர் பேர் தாமரை. ஊருக்கு நல்லது பண்ணணும்னு நினைக்கக் கூடிய தியாக மனப்பான்மையுள்ள பொண்ணு. அதே சமயம் தைரியமானவள். இரண்டு ஷெட்யூல் நடக்கும்வரை எனக்கு தமிழ் தடுமாற்றமா இருந்துச்சு. பேசிப் பேசியே கத்துக்கிட்டேன். நிறைய இலக்கணப் பிழை இருக்கும்.

ஆனாலும் தப்போ, சரியோ தொடர்ந்து தமிழிலேயே பேசினேன்.
வில்லேஜ் கெட்டப் என்பதால் கேரக்டருக்காக ரெஃபரன்ஸ் எதுவும் எடுக்கல. இயக்குநர் ராஜமோகன் திறமைசாலி. சில காட்சிகள் எடுக்கும்போது புரியாது. ஆனா, அதோட அவுட்புட் ஆச்சர்யத்தைத் தரும்.

இது உண்மைச் சம்பவத்தை மையமா வெச்சி உருவாகும் கதை என்பதால் இயல்பாகவே படத்துல வர்ற ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா உட்பட எல்லாருடைய கேரக்டரும் அழுத்தமானதா இருக்கும். மறக்க முடியாத அனுபவம் என்றால், கொடைக்கானல் மலைப் பகுதியில் படப்பிடிப்பு நடந்துச்சு.

டால்பின் நோஸ் என்ற இடத்துல இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கிற கிராமத்துல படப்பிடிப்பு. வாகனத்துல செல்ல முடியாது. நடந்தே செல்ல வேண்டும். கரடுமுரடான பாதை, விலங்குகள் அச்சுறுத்தல் என்று அந்த ஷெட்யூல் த்ரில் அனுபவமா இருந்துச்சு.

இயக்குநர் ராஜமோகன்தான் படத்துக்கு ஒளிப்பதிவு செஞ்சிருக்கிறார். கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையில் பாடல்கள் அற்புதமா வந்திருக்கு. தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா சினிமா பேஷன் உள்ளவர். பிரம்மாண்டமா தயாரித்திருக்கிறார்.

தமிழ் சினிமா அனுபவம் எப்படி?

தமிழ் சினிமாவில் நடிப்பது நல்ல அனுபவம். தமிழில் நல்ல கதை அம்சங்கள் உள்ள படங்கள் வெளிவருகிறது. அந்த மாதிரி படங்களில் நடிக்கணும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.
மொழி அடிப்படையில் நான் படங்களைத் தேர்வு செய்வதில்லை. என்னுடைய தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் தமிழ் எனக்கு பிடிச்ச மொழி. மலையாளத்துல இருந்து வந்த நயன்தாரா, மீரா ஜாஸ்மின் மாதிரி நல்ல படங்கள் பண்ணணும். நல்ல பேர் வாங்கணும்.

தென்னிந்திய படங்களுக்கு இந்திய அளவில் அங்கீகாரம் கிடைப்பது குறித்து...?

ரொம்ப நல்ல விஷயம். இப்போ சினிமாவுக்கு பன்முகத்தன்மை கிடைச்சிருக்குனு சொல்லலாம். முன்பு இந்திய சினிமா என்றால் இந்தி சினிமா என்ற நிலை இருந்தது. ‘எந்திரன்’, ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘கேஜிஎஃப்’ போன்ற படங்கள் அதை மாற்றிக்காட்டி இருக்கிறது. இப்போ சவுத் இந்தியன் படங்களை நார்த்துல இருக்கிறவங்க தேடிப் பார்க்குறாங்க. சமீபத்துல மலையாளத்துல வெளியான ‘ஜனகணமன’ படத்துக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைச்சது.

சமூகவலைத்தளங்களில்  நடிகர் - நடிகைகளை வைத்து  டிரோல், மீம்ஸ் போடுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் இன்னும் பிரபலமடையாததால் என்னைப்பற்றிய மீம்ஸ் எதுவும் வரல. ஒருவேளை ‘அட்ரஸ்’ வெளிவந்த பிறகு என்னை மையமாக வைத்து மீம்ஸ் போடலாம். அப்படி வந்தாலும் அதுக்கேத்த மாதிரி என்னை தயார்படுத்தி வெச்சிருக்கேன். மீம்ஸ் போடும் சிலர் ஃபன்னுக்காக பண்ணுகிறார்கள். அதை அந்த பிரபலங்களே ரசிக்கக்கூடும். சில பதிவுகள் மனசை நோகடிக்கச் செய்யும். அப்படிப் பண்ணினால் அது தப்பு. எல்லாமே லிமிட்டில் இருக்கணும். தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வரம்பு மீறும்போதுதான் மோதல் உருவாகிறது.

கதாநாயகிகளுக்கு உடல் அழகு முக்கியம். நீங்கள் உடல் அழகை எப்படி பராமரிக்கிறீர்கள்?

பிரத்யேகமா எதுவும் பண்ணமாட்டேன். அம்மாவின் வற்புறுத்தலுக்காக யோகா பண்ணுவேன். மத்தபடி ஃபுட் விஷயத்துல எதுவும் லிமிட் கிடையாது. தண்ணீர் அதிகமா குடிப்பேன்.
மலையாள சினிமாவில் என்னதான் நடக்கிறது... தொடர்ந்து நடிகைகள் பாலியல் சீண்டலால் பாதிக்கப்படுகிறார்களே?

பாலியல் துன்புறுத்தல்கள் இப்போதுதான் பேசு பொருளாக மாறியிருக்கு. பெண்களுக்கு பாலியல் ரீதியான பிரச்னைகள் முன்பே இருக்கிறது. அது எல்லா இடத்திலும் நடந்து வருகிறது. இப்போ பெண் சமூகம் அநீதியை தைரியமாக சொல்லுமளவுக்கு முன்னேறியிருக்கு. நான் சினிமாவுக்கு வந்து  நாலைந்து வருடங்கள் ஆகிவிட்டது. எந்த கசப்பான அனுபவமும் இதுவரை இல்லை. கேரள சினிமா பெண்களுக்கு பாதுகாப்பான இடம். தவறுகள் எங்கும் நடக்கலாம். ஆனால், நம்மால் தவறு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள முடியும்.

சினிமாவில் மட்டுமல்ல, பொது வெளியிலும் இந்த மாதிரி நடக்கலாம். ஆனா, அதையே நினைத்து வாழ்க்கையைத் தொலைக்காமல், தப்பு செஞ்சவங்களை சட்டத்துக்கு முன் நிறுத்திவிட்டு லட்சியத்தை தொடர வேண்டும்.

தமிழில் யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள்?

இப்போ இருக்கிற எல்லா ஹீரோக்களும் பிடிக்கும். விஜய் சார் கொஞ்சம் ஸ்பெஷல். அவருடைய எல்லா படத்தையும் ஒண்ணுவிடாம பார்த்துடுவேன். ‘துப்பாக்கி’ மூவி என்னுடைய பேவரைட்.

தியாவுக்கு சின்ன வயது குறும்பு எதாவது ஞாபகம் இருக்கிறதா?

பெரியளவுக்கு குறும்பு பண்ணியதில்ல. ஸ்கூல் படிக்கும் போது என்னுடைய தோழி ஒருத்தியை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டிருக்கேன். நல்ல வேளை தோழிக்கு நீச்சல் தெரிந்திருந்தது. எனக்கு நீச்சல் தெரியாது.

சினிமாவில் உங்கள் ரோல் மாடல் யார்?

எல்லோரையும் கவனிக்கிறேன். மஞ்சு வாரியர், நயன்தாரா, த்ரிஷா, சமந்தா என ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதத்துல என்னுடைய ரோல் மாடல்.

சினிமாவில் உங்களுக்கு கிடைச்ச பாராட்டு?

‘அட்ரஸ்’ டீசர் பார்த்துட்டு மல்லுவுட் இண்டஸ்ட்ரியிலிருந்து நிறைய பேர் பாராட்டினாங்க.

உங்கள் மனதுக்கு நெருக்கமான விஷயம் எது?

உழைப்பே உயர்வு தரும் என்ற சிந்தனை.

தமிழில் அடுத்து?

குரு ராமானு ஜம் இயக்கத்துல ‘ரெட் சேண்டல்’. இதுல ‘8 தோட்டாக்கள்’ வெற்றி ஹீரோ.

எஸ்.ராஜா