ஒரு கிண்ணம் வையுங்க!



வாயில்லா ஜீவன்களுக்காக சொல்கிறார்கள் நடிகை வரலட்சுமியும் அவரது அம்மா சாயாதேவியும்

சுட்டெரிக்கும் வெயில் , வெப்பம் என மனிதர்கள் நாமே கோடை வெயிலின் தாக்கத்தில் தப்பிக்க முடியவில்லை. எனில் சிறுசிறு விலங்குகள் , பறவைகள் எம்மாத்திரம்..?

இதற்குத்தான் நடிகை வரலட்சுமி மற்றும் அவரது அம்மா சாயாதேவி இருவரும் ‘Keep a Bowl’ (ஒரு கிண்ணம் வையுங்க) என்னும் விழிப்பு உணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளனர்.
“சின்ன கனமான கிண்ணம் அல்லது மண் சட்டி போதும்... உங்களைச் சுத்தி இருக்கற குட்டிக் குட்டி குழந்தைகளுக்கு பெரிய உதவி செய்யலாம். நான் குழந்தைகள்னு சொன்னது உங்க பகுதியிலே, வீட்டுப் பக்கத்திலே இருக்கற நாய்கள், பூனைகள், காக்கா, குருவிகளைத்தான் சொல்றேன்...’’ தனது ‘கீப் ஏ பௌல்’ பிரசாரம் குறித்து விளக்கமாகப் பேசினார் சாயா தேவி.

‘‘இன்று 1000 இலவசக் கிண்ணங்களுடன் இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளோம். ஆர்வமுள்ள நபர்கள் கூகுள் லிங்க் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.  எங்களது சமூக ஊடகப் பக்கங்களில் தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்படும். அவர்களுக்கு அருகில் உள்ள இடத்தில் இந்த பவுல் வழங்கும் நிகழ்வு நடக்கும் போது அவர்கள் அங்கு கிண்ணங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

முதற்கட்டமாக சென்னையில் எங்களது முயற்சியைத் தொடங்கி விரைவில் பல இடங்களுக்கும் இதனைப் பரப்பவுள்ளோம். தங்களது வீட்டு வாசல், ஜன்னல் ஓரங்கள் மற்றும் மொட்டை மாடிக்கு வெளியே ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வையுங்கள்... இத்தகைய சிறிய பங்களிப்பு இந்த உயிரினங்களுக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும்.

எங்களுடைய Save Shakthi Foundationஐ 2017ம் வருஷம் மகளிர் தின சிறப்பா ஆரம்பிச்சோம். பெண்கள் மேல் நடத்தப்படற வன்முறை, டொமெஸ்டிக் வன்முறை, பாலியல் துன்
புறுத்தல் தொடங்கி அத்தனை பிரச்சனைகளுக்கு எதிராகவும் மக்களுக்கு  உதவி செய்து வருகிறது சேவ் சக்தி. மேலும் மனநலம், அகதிகளுக்கான வாழ்வாதாரம் இப்படி நிறைய செய்துட்டு இருக்கு.

இதற்கிடையில்தான் விலங்குகளுக்கான உதவிகளையும் செய்ய ஆரம்பிச்சோம்...’’ என்னும் சாயாதேவி என்னென்ன விதமான உதவிகளை தாங்கள் செய்து வருவதாகவும் பகிர்ந்தார்.
‘‘விலங்குகள் தத்தெடுப்புக்கான எல்லா வசதிகளும் செய்து கொடுக்கறோம். சாலையோரத்திலே எங்கே நாய்கள், பூனைகள் அடிபட்டுக் கிடந்தாலும் உடனே எங்களுக்கு தகவல் கொடுத்தா அடுத்த சில நிமிடங்கள்ல எங்களுடைய விலங்குகளுக்கான பிரத்யேக ஆம்புலன்ஸ், மருத்துவக்குழு மற்றும் வாலன்டியர்கள் வந்துடுவாங்க.

மருத்துவ உதவி, தடுப்பூசிகள், ஊரடங்கு காலத்திலே உணவு சப்ளை; மேலும் தெருநாய்கள், பூனைகள் மேற்கொண்டு மேற்கொண்டு பெருகும்போது அவற்றின் உயிருக்கும், வாழ்க்கைக்கும் போதுமான எந்த கேரன்டியும் இல்லை என்பதால் கருத்தடை, உடற்குறைகளோட இருக்கற விலங்குகளுக்கு செயற்கை வண்டிகள், அமைப்புகள்... இப்படி எல்லா வகையிலும் எங்களால் முடிஞ்சதை செய்துட்டு இருக்கோம்.

இந்த உலகத்திலே வாழ்றதுக்கு நமக்கு எப்படி எல்லா உரிமைகளும் இருக்கோ அதே அளவு உரிமை அவற்றுக்கும் உண்டு. ஆனால், அந்தக் குழந்தைகளால தனியா உயிர் பிழைச்சு வாழ முடியாது எனில் நாமதான் அவங்களுக்கு அடைக்கலம் கொடுக்கணும்...’’ என்னும் சாயாதேவி தனது அமைப்பு மூலம் ஒரு மாடல் கிராம செட்டப் ஒன்று அமைத்து பள்ளிக் குழந்தைகள், குடும்பங்கள் என வரவழைத்து விலங்குகளுக்கு எப்படி நாம் நம் இருப்பிடத்தில் இருந்துகொண்டே நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யலாம் என்னும் விழிப்புணர்வும் கொடுக்கிறார்.

‘‘இந்த பவுல்... கூடவே சேர்த்து கொஞ்சம் தானியமும், அரிசியும் கூட கொடுக்கறோம். எவ்வளவோ செலவு செய்யறோம்... இந்தச் சின்ன உதவியால் பல உயிர்கள்... ஏன், நம்ம வீட்டையே நம்பி ஒரு சின்ன பல்லி கூட வாழ்ந்துட்டு இருக்கும்... அதுக்கும் உதவியா இருக்கும்.

நாங்க கொடுக்கற இந்த பவுலை சிமெண்ட் வைத்து நல்ல கனமா செய்திருக்கோம். காரணம், மாடு, நாய் மாதிரி பெரிய விலங்குகள் தட்டிவிட்டுடக் கூடாது என்கிறதால சுமார் 8 கிலோ அளவுக்கு அந்த பவுலை வடிவமைச்சிருக்கோம். இந்த பவுல் வைக்கிறதை விட ரொம்ப முக்கியம் அதை தினந்தோறும் பராமரிக்கிறது. தேங்கிய நீர்ல கொசு வர வாய்ப்புகள் அதிகம். இதை அரசாங்கமும் நமக்குத் தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருக்காங்க.

தினமும் ஒரு அஞ்சு நிமிடம் கொடுத்தாலே போதும்... அந்த கிண்ணத்தைக் கழுவி, திரும்ப புதுசா தண்ணீர் நிரப்ப. யோசிக்காம ஒரு கிண்ணத்திலே தண்ணீர் வையுங்க. உங்க வீட்டுக் குழந்தைகளுக்கும் விலங்குகளுக்கு பாதுகாப்பு  அளிப்பதுடன், உணவு, தண்ணீர் வைப்பதால் ஏற்படும் நன்மைகளை, முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுங்க...’’
அன்பான கட்டளையாகவே வைக்கிறார் சாயாதேவி.
 
ஷாலினி நியூட்டன்